மட்டன் பெப்பர் ஃப்ரை
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. மட்டன் - 1/4 கிலோ
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. புதினா - 2 கொத்து
5. இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
6. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/2 தேக்கரண்டி
9. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
10. மல்லித்தூள் - 1/2 மேசைக்கரண்டி
11. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
12. கல் உப்பு - தேவையான அளவு
13. நல்லெண்ணெய் - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.
2. மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் மிக்சியில் ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. மட்டனை நன்கு சுத்தம் செய்து, குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 8 விசில் வரை வேக வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கறிவேப்பிலையைப் போட்டுத் தாளிக்க வேண்டும்.
5. தாளிசத்துடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், அதில் புதினா மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
7. பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
8. அதன் பிறகு, வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியைப் போட்டுக் கிளறி விடவும்.
9. பின்னர், அதில் அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு மிளகாய் வாசனை போகும் வரை கிளறிவிடவும்.
10. அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விட வேண்டும்.
11. சிறிது நேரம் கழித்து மட்டன் கெட்டியாக ஆனதும் ஒரு முறை கிளறி விடவும்.
12. தேவைப்பட்டால் எண்ணெயை ஒரு தாளிப்பு கரண்டியில் கொதிக்க வைத்து, அதில் கருவேப்பிலை மற்றும் மல்லித்தழையைப் போட்டு மட்டன் பெப்பர் ஃப்ரையில் ஊற்றவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.