கோவக்காய் வறுவல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. கோவக்காய் - 1/4 கிலோ
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு - 4 பற்கள்
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
5. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
8. கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. கோவக்காயை நன்றாகக் கழுவி, அதன் இரு முனைகளையும் வெட்டிவிட்டு, வட்டம் அல்லது நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
3. அதனுடன் தட்டிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வதங்கிய வெங்காயத்துடன் நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து மிதமான நெருப்பில் சில நிமிடங்கள் எண்ணெயிலேயே வதங்க விடவும்.
5. பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
6. மசாலா காயில் நன்கு ஒட்டியதும், இலேசாகத் தண்ணீர் தெளித்துக் கடாயை மூடி போட்டு மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
7. அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடவும்.
8. கோவக்காய் வெந்து சுருங்கி, மசாலா வாசம் நீங்கி சுருள வறுபட்டு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.