குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்

மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா
1.கனவு நாயகன்

ஜோதியைப் பொறுத்தவரை காலம் வேகமாக
ஓடிக்கொண்டிருந்தது.
தொழிலாளர் ஊக்கத் திருநாள். அதோ அடுத்த வாரம்.
இன்னும் தன்னுடைய வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்தபாடில்லை.
முகேஷ் பன்னாட்டு நிறுவனம் அந்த சுற்று வட்டாரத்திலேயே மிகப்பெரிய தயாரிப்பு
நிறுவனம். நவீனம் அதன் தொழில் யுக்தியிலும், செயல்பாட்டிலும் இருந்தாலும் அதன்
தலைமை முற்றிலும் சம்பிரதாயம் மிக்கது.அதன் நிறுவனர் குடும்ப அமைப்பில் ஆழ்ந்த
நம்பிக்கையுடையவர். அவருடைய எண்ணப்படி அலுவலகத்தின் மேலதிகார பொறுப்பில்
இருக்கும் ஒவ்வொரு நபரும் குடும்ப அமைப்பைச் சார்ந்தவராய் இருக்க வேண்டும்.
அதாவது, திருமணமாகியோ திருமணமாகி குழந்தைகளுடனோ.
பெரியவர் எப்போதும் சொல்லுவார் திறமை மிக்கவர்களுக்கு பதவி உயர்வு போதுமான அளவு
உண்டு. ஆனால் அந்த மலையேற்றத்திற்கு ஒரே நேர்ப்பாதை தான் குறுக்குவழி எதுவும்
கிடையாது என்று.
ஜோதிக்கும் காலத்தால் திருமணம் குழந்தை என்று வாழ ஆசையுண்டு. ஆனால் அதை
தன்னுடைய பதவி உயர்வுக்காக செய்து கொள்வதில் உடன்பாடில்லை.பகிர்ந்து கொள்ள
அவளிடம் எக்கச்சக்கமான அன்புண்டு, அவளுடைய வேலை நிலையால் அதையெல்லாம்
உள்ளுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டியிருந்தது. நடப்பதை வைத்து பார்த்தால்,
இன்றுவரை சரியான ஜோடியை அவள் வழி அனுப்பாதது கடவுளின் திட்டம் என்றே தோன்றியது.
ஒரு காலத்தில் அவளிடம் பட்டியலே இருந்தது. அவளுடைய கனவு நாயகன் ஆறடி இரண்டு
அங்குலத்துக்கு மிகாமலும் ஆறடிக்கு குறையாமலும் கருத்தடர்ந்த
கூந்தலுடனும்,கூரிய கருவிழிகளுடனும் இருப்பான். முழுக்கை சட்டை அணிந்து அதில்
பட்டை பித்தான்கள் வரை போட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட வகை கார், ஐந்து பேர்
உள்ள குடும்பத்தை வைத்து நடத்தக் கூடியளவு வருமானம் - ஒரு வேளை குழந்தைகள்
பிறந்த பிறகு அவள் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்தால். நகைச்சுவை
உணர்வுடன், எப்போதும் சிரித்த முகமாக, அப்பப்ப இனிய சிறு சிறு
செய்கைகள் மூலம் ஆச்சரியம் மூட்டி, என்றும் மங்காத காதலுடன் இருக்க வேண்டும்.
தம்பதியராய் சேர்ந்து ஆன்மீகத்தோடும், சமுதாய அக்கறையோடும் வாழ்ந்து காலமெல்லாம்
சந்தோஷமாய் இருக்க வேண்டும்.
ஆம்...சற்று பழையதுதான் என்றாலும் இனிய கற்பனை இன்றைய நிலையில்
சாத்தியமில்லாததும் கூட.
ஜோதி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி பெருமூச்சு விட்டாள்.
அவளும் கொஞ்ச காலமாகவே கனவு நாயகனைத் தேடி வருகிறாள். மேலும் அவளுக்கும் வயது
ஏறிக்கொண்டே போகிறது, இருபத்தி நான்கை நெருங்குகிறாள். வேலை வேலை என்று அதிலே
மூழ்கியிருப்பதால் பிறரை சந்தித்து பேசி பழகி என்பதெல்லாம் அரிதாகி விட்டது தான்
உண்மை, தயக்கத்துடன் ஒத்துக் கொண்டாள். இந்த வழக்கமும், கசப்புடன் எண்ணினாள்,
பழைய பழக்கமாயிற்று.
"ஜோதி, சந்திப்புக்கு வரவில்லையா?"
திடுக்கிட்டு எழுந்து தன்னுடைய குறிப்புகளை எடுத்தாள்.
குமரவேல், அவளுடைய மேலதிகாரியின் எரிச்சல் மிக்க குரலே அது.
"இதோ கிளம்பி விட்டேன்." என்றவள் மெல்ல, "சார், இது சரி என்று.."
அவளை நிறுத்தி, "போதும். அதைப் பற்றி முன்பே பேசி முடித்தாயிற்று. இனி பேச்சை
என்னிடம் விடு."
ஜோதி முகம் சுழித்தாள். இந்த மாதிரி அதிகாரப் போக்கு தான் இங்கிருந்து செல்வதை
பற்றி யோசிக்க
வைத்தது. அவளுக்கு சாதிக்க வேண்டும். அதுக்கு இங்கே வாய்ப்பிருக்கும் என்று
நம்பினாள்.
ஒரு காலத்தில், குமரவேல் அலுவலகத்தின் நெளிவு சுளிவுகளை அவளுக்குச் சொல்லிக்
கொடுப்பதில் சிறந்த வழிக்காட்டியாக இருந்தார். பிறகு, முன் கோபியாக மாறிவிட்டார்.
இந்த ஆறு மாத காலத்தில் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற சந்தேகம் அவளுக்கு.
அவரிடம் மாற்றம் தெரிகிறது அதுவும் மோசமானதொரு மாற்றம்.
இன்றைய அலுவலக சந்திப்பில் அவர் வழங்கயிருக்கும் அறிக்கையில் அவளுக்கு திருப்தி
இல்லை. அவருடைய முடிவுகள் சட்டப்படி செல்லாது. அவளை அதிகாரத்தால் மடக்கியதோடு
மட்டுமல்லாமல், அவளுடைய எதிர்ப்புகளையும், அக்கறைகளையும் அலட்சியப்படுத்தி
விட்டார்.
இது மட்டும் அவளுடைய நிறுவனமாக இருந்திருந்தால், அவளுடைய முடிவுகள்
வித்தியாசமாக இருந்திருக்கும்.
அந்த வார இறுதிக்குள் இதற்கொரு முடிவு கட்டுவதாக உள்ளுக்குள் உறுதி செய்து
கொண்டே அலுவலக சந்திப்பு அறைக்குள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். அனைத்து
உபதலைவர்களும் பெரிய முட்டை வடிவமுள்ள மேஜையைச் சுற்றி அமர, கீழ்நிலை அதிகாரிகளோ
சுழலும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவளுக்கு மேஜையைச் சுற்றி அமர வேண்டும்.
அந்த நிறுவனத்தில் அவளுக்கேற்ற சவால்கள் நிறைய இருந்தன, விற்பனைத் துறை
உதவியாளராய் பொறுப்பேற்ற நொடியிலிருந்தே அந்த சவால்களை அவள் ஏற்றுக்கொண்டாள்.
முன்னேறும் ஆவலுடன் கற்பூரபுத்தியும் சேர்ந்து கொள்ள துறையிலுள்ள மேற்பதவிகளை
எளிதில் அடைந்தாள். மூன்று உயர்வுகளுக்கு பின், தன் தலை கூரையில் முட்டுவதாய்
உணர்ந்தாள். காரணம் இனி வரும் உயர்வுகள் எல்லாம் திறமையை அல்ல திருமண அந்தஸ்தை
பொறுத்தது. யாரும் அதை திட்டவட்டமாகக் கூறவில்லை என்றாலும் விஷயம் இது தான்
என்பது தெளிவாக விளங்கியது.
ஜோதி வெளியேற முயன்ற பெருமூச்சை அடக்கினாள்.
அவள் திருமணம் செய்வதற்கு முன், அதற்கு தகுந்த துணையைத் தேடவேண்டும்.
சில நொடிகள் கழித்து நீண்ட காலடிகளுடன் விஷ்ணு முகேஷ் அறைக்குள் நுழைந்தான்.
எப்போதும் போல அவனை கண்டவுடன் ஜோதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.
எல்லோராலும் 'பெரியவர்' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சி.பி.முகேஷ் தான்
அந்த நிறுவனத்தின் தலைவர் என்றாலும், செயலாற்றும் அதிகாரம் முழுவதும் அவருடைய
கவர்ச்சிமிக்க பேரனுடைய கையில்.
ஏறிட்டுப் பார்க்கும் உயரம், நவீன உடை, நேரே விளம்பரத்தில் இருந்து குதித்தது
போல் விஷ்ணு போகும் இடமெல்லாம் தலையைத் திருப்பி பார்க்க வைக்கும் தோற்றம்.
அவனுடைய அலுவலகத்திலும் கூட. அவனுடைய கருத்தடர்ந்த கேசம் பார்ப்பதற்கு எப்போதும்
சற்று நீளமாகவே தோன்றியது. அந்த பகுதியின் நூறு மைல் சுற்றளவில் தகுதி மிக்க
பிரம்மச்சாரி அவன் ஒருவனே என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இருபத்தெட்டு வயதில், ஜோதி எதிர்பார்க்கும் அனைத்தும் அவனிடம் இருந்தது. என்ன
ஆறு அடி நான்கு அங்குலத்தில், அவள் எதிர்ப்பார்த்ததை விட உயரம், அளவுக்கு
அதிகமான பணம். அவளுடைய அந்தஸ்தை மறந்து விட்டு பார்த்தாலும் கூட, முகேஷ்
குடும்பத்தால் ஆளப்படும் பணத்தின் பூஜ்ஜியங்களை எண்ணினாலே அவளுக்கு தலை
சுற்றியது.
ஜோதிக்கு வேண்டியது சௌகரியமே அன்றி சுமையில்லை. அதுவும் அவளுடைய ஐந்தடி நான்கு
அங்குல உயரத்தில் அவளுடைய ஆண்மகனை கஷ்டப்பட்டு கழுத்தை வளைத்துப் பார்க்க அவள்
விரும்பவில்லை.
விஷ்ணு முகேஷ் விஷயத்தில், ஆனாலும், அவளிடம் விதிவிலக்குகள் உண்டு - அந்த இரண்டு
விஷயத்திலும்.
ஜோதி, மற்றவர்களைப் போல், அறையே அவனுடைய அதிகாரத்தின் கீழ் வருவதைக் கண்டாள்.
"என்னவொரு அழகன் இல்லடி!" என்று ஜோதியின் பக்கம் மெல்ல சாய்ந்து ரகசியமாய்
முணுமுணுத்தாள் அவள் தோழி நிக்கி.
மெல்ல ஆம் என்பது போல் தலையசைத்து முகம் மாறாமல் காத்தாள்.
கடவுளே, இவனுடைய அந்தஸ்த்துக்கு என்றாவது அவள் பொருந்துவாளா? அவள் ஒருத்தி
இருப்பதையே அவன் அறிந்திருக்க மாட்டான் உம்... வருத்தமான விஷயம் தான்.
( தொடரும்)

பகுதி-2

|