........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

11. கட்டை பிரம்மச்சாரி. 

"நான் ராஜினாமா செய்கிறேன்?" என்றாள் அடுத்த நாள் காலையில்.

காலை வாழ்த்து அவனது உதட்டோடு உறைந்தது. "ராஜினாமாவா அப்படி என்றால்?"

ஜோதி தனது பையையும் காபி கோப்பையையும் மேஜை மீது வைத்தாள். "அப்படியே கடிதத்தில் இருப்பதைப் போல. விலகிக் கொள்கிறேன்." அவளது பையிலிருந்து ஒரு உறையை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"முறையான கடிதம். இதை கொடுக்க வேண்டியது குமரவேல் சாரிடமா உங்களிடமா என்று சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் நிறுவனத்தின் தலைவர் நீங்கள் தானே," என தோளைக் குலுக்கினாள்.

விஷ்ணுவிற்குள் அதிர்ச்சிப் பரவியது. அவள் இந்த வேளையில் அவனை விட்டு விலக முடியாது. அதுவும் அவன் தேடி வந்த லட்சியப் பெண் அவள் தான் என்று கண்டு கொண்ட இந்த வேளையில். மேலும் அவன் மனதை முழுதாய் திறப்பதற்கான சந்தர்ப்பம் அமைவதற்கு முன்னால்.

ஆக நடப்பு இது தான் என யூகித்தான்.

"நேற்று நம் இருவருக்குள் நடந்ததைக் கண்டு பயந்துவிட்டாய்."

அவள் ஏறிட்டுப் பார்த்து இல்லை என்பது போல் தலையசைத்தாள். "சில விஷயங்களில் நான் வெகுளியாக இருக்கலாம், விஷ்ணு. ஆனால் நிச்சயமாக இது முத்தத்தினால் ஏற்பட்ட முடிவல்ல."

"பிறகு ஏன் விலகுகிறாய்?"

"காலம் கூடி விட்டது," என்றாள் எளிதாக. "சில சமயம் நமக்கு வேண்டியதை அடைய கண்ணை மூடிக்கொண்டு இதயம் சொல்லும் பாதையில் போகத்தான் வேண்டும்."

"உன் இதயம் சொல்லும் பாதை எது?"

அவள் புன்னகைத்தாள், அந்த மயக்கும் மாயப் புன்னகை விஷ்ணுவின் முட்டிகளை வலுவிழக்கச் செய்தது. அவன் கீழே விழாமல் நிற்பதற்காக என தோன்றாமல், எத்தேச்சை செயல் போல் தோன்றும் என நம்பி, கைகளால் துலாவி இருக்கையின் பின்புறத்தைப் பற்றினான்.

"இது உங்களைப் பற்றி அல்ல," என்றாள் அவனிடம். " நேற்று நடந்ததைப் பற்றியும் அல்ல. நான் ராஜினாமா செய்வது எனக்காக. சில காலமாகவே நான் ஒன்று செய்ய எண்ணி வருகிறேன்."

"அது?"

"'ஜஸ்ட் ரைட் ·பார் யூ' என்ற விற்பனை நிறுவனம் ஒன்று தொடங்குவது."

அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தினான். "முகேஷோடு போட்டிப் போடப் போகிறாயா?"

அவனது குரல் கிட்டதட்ட அதிகாரத் தொனியில் ஒலிக்கவும் அவள் சிரித்து விட்டாள். "ஒரு பெண் ஆரம்பிக்க நினைக்கும் சிறு தொழில் எந்த வகையில் அறுபது வருட முதிர்ச்சியுடைய பெரிய நிறுவனத்துக்கு போட்டியாகும் என்று எனக்கு தோன்றவில்லை."

நாடியில் விரல் வைத்து அவள் சொன்னதை அசைப் போட்டான்.

சட்டென்று அவன் கண்கள் பளிச்சிடவும் சற்று தயங்கினாள். "என்ன?" என்று வினவினாள்.

"நீ ராஜினாமா செய்து விட்டதால் - இதை நான் அங்கீகரிக்கிறேன்," என்றான் உறையை தனது ஜாக்கட்டின் உள் பையில் செருகியபடி, "நமக்குள் இந்த முதலாளி-தொழிலாளி சங்கடங்கள் இனி இல்லை. இனி நாம் சுதந்திரமாகச் சுற்றலாம்."

***********************

சில நாட்களில் ஏற்பட்ட வித்தியாசம் ரொம்ப வேடிக்கையாய் இருந்தது. அதே வாரம் ஆரம்பத்தில், விழாவில் அறிமுகப்படுத்த ஒரு துணை இல்லையே என்று கவலைப்பட்டாள். ஆனால் சில நாட்களிலேயே பதவி உயர்வும் பெற்று, அதை ராஜினாமாவும் செய்து, தனக்கென்று ஒரு தொழிலும் ஆரம்பித்துவிட்டாள்.

ஆனால் இப்போதைக்கு தொழில் திட்டங்கள், லாப நஷ்ட விகிதங்கள் எல்லாம் மனதை விட்டு மறைந்திருந்தன.

வெள்ளை டக்சீடோவில் அதிக பிரகாசத்தோடு, கோப்பை நிறைய திண்பண்டங்களோடு விஷ்ணு திரும்பி வந்தான். இருவரும் நிஜமாகவே காதலர்கள் ஆகிவிட்டார்கள் என்ற எண்ணம் இன்னமும் அவளை மூச்சடைக்கச் செய்தது.

"உனக்கு தெரியுமா, அங்கே பைனான்ஸ் துறையிலுள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இன்று விழாவிற்கு அழைத்து வர மனைவியோ, காதலியோ இல்லாததால் பெரும் கவலையில் இருப்பதாகச் சொன்னார். கேட்பதற்கே வித்தியாசமாக இல்லை?"

அவன் தந்த சிறு தம்ளரை வாங்கிக் கொண்டு தலையை ஆட்டினாள். "நான் கூட முன்பு அதே காரணத்துக்காக ரொம்ப கவலையிலிருந்தேன்."

விஷ்ணு அதிர்ந்தான். "ஏன்?"

"கம்பனியின் கொள்கையினால்."

"அது என்ன கம்பனியின் கொள்கை?"

"முன்னேற்றமடைய இருக்கும் ஒரே வழி குடும்பஸ்தனாய் இருப்பதே."

விஷ்ணுவின் முகத்தில் குழப்பம் மேலும் அதிகரித்தது. "நீ என்ன சொல்கிறாய்?"

"விஷ்ணு, சி.பி.முகேஷ் சார் தெளிவாகச் சொல்லிவிட்டார், கம்பனியின் உயர்மட்டத்திற்கு முன்னேற வேண்டுமானால் குடும்பம் குழந்தை என்ற நிலையில் இருக்க வேண்டும் என்று. அதனால் தான் பலர் வாய்ப்பிருந்தும் மேல் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்யாமலே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் நான் அங்கே இருந்த காலத்தில் இதுதான் நடப்பு."

விஷ்ணு கன்னத்தின் பொறியை அழுத்திவிட்டு மூக்குத்தண்டை கிள்ளினான். "என்னால் இதை நம்பமுடியவில்லை. இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்."

அவன் கூட்டத்தில் மறைவதை ஜோதி பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கணம் கழித்து, மேடையில் கையில் ஒயரில்லா சிறு ஒலிப் பெருக்கியுடன் நின்றிருந்தான்.

"அன்பர்களே," அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இரு நிமிடங்கள் ஆயிற்று. அறை அமைதியாகி அனைவரின் பார்வையும் விஷ்ணுவை நோக்கியது. " நமது கம்பனியில் வேலை பார்ப்போரிடம் திருமண அந்தஸ்த்தை வைத்தே சில பதவி உயர்வுகள் நிர்ணயிக்கப்படுவதாக சில தவறான அபிப்பிராயங்கள் பரவிக் கிடப்பது இப்போது தான் எனது கவனத்துக்கு வந்தது."

விஷ்ணு சிலர் தலையாட்டுவதை கண்டு விஷயம் பரவலாக நம்பப்படுவதை உணர்ந்தான். "சி.பி.? எங்கே இருக்கிறீர்கள்?"

"கத்துவதை நிறுத்து. எனக்கு வேண்டுமானால் வயதாகி இருக்கலாம், செவிடாகி விடவில்லை." என்றபடி சி.பி.முகேஷ் உதவியுடன் அந்த சிறு படிக்கட்டில் ஏறி வந்தார். விஷ்ணு நின்றிருந்த இடத்தை அடைந்து, பேரனின் கையிலிருந்த ஒலிப்பெறுக்கியை வாங்கினார்.

"பல வருடங்களுக்கு முன்னால் நான் இந்த கம்பனியை ஆரம்பித்த போது, இந்த சிறிய ஊரில் மக்களை தங்கியிருக்கச் செய்வது ரொம்பவும் கடினம். அரிமலையும் அப்போது இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை.எல்லோரும் பட்டணத்தில் வாழ்வதையே பெரிதும் விரும்பினர். அவர்களை தங்க வைப்பதற்காக, தங்களது வேர்களோடு இங்கே தங்கியிருந்த குடும்பஸ்தர்களுக்கு கம்பனியில் பதவி உயர்வுகள் அளித்து வந்தேன்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த அந்த கிறுக்குத் தனத்தை நம்பி நீங்கள் பல வாய்ப்புகளை இழந்திருப்பீர்கள்."

பார்வையாளர்கள் பக்கம் சிரிப்பொலி பரவியது.

விஷ்ணு குனிந்து ஒலிப்பெறுக்கியில் பேசினான். "அதனால் அனைவரும் கவலையை விட்டு விழாவை கொண்டாடி மகிழுங்கள். அத்தோடு கவலையே படாதீர்கள் பதவி உயர்வு வேண்டி உடனடியாக திருமண ஏற்பாட்டில் இறங்க வேண்டியதில்லை."

சி.பி. ஒலிப்பெறுக்கியைப் பிடுங்கி பெரு விரலால் பேரனைக் காட்டி, "ஆமாம், இவனைப் பாருங்கள். நிறுவனத்தையே எடுத்து நடத்துகிறான் ஆனாலும் கட்டை பிரம்மச்சாரி. எனக்கு ஒரு கொள்ளுப் பேரப்பிள்ளை பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நாகரீகமில்லை."

விஷ்ணுவின் பார்வை ஜோதியின் பார்வையோடு கலந்தது. "இனி நீண்டநாள் பிரம்மச்சாரியாகவே
இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்."

  ( தொடரும்)

பகுதி-10                                                                                                                                                               பகுதி-12

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு