குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்

மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா
10. பழங்காலப்
பண்டரிபாய்

விஷ்ணு அவளுடைய தோள்களை இறுகப் பற்றி அவளது
கண்களை சந்தித்தான். "நீ என்ன சொல்கிறாய்?"
"அட்சரம்பிசகாமல் நீங்கள் எண்ணுவதே."
விஷ்ணு அவளுடைய கூந்தலின் வாசனையை நுகர்ந்தபடி ஒரு கணம் கண்களை இறுக மூடினான்.
"உன்னுடைய லட்சியம் என்ன? மற்ற எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது,
நினைவிருக்கும் நேரமெல்லாம் அடைய வேண்டுமென்று நினைக்கும் ஒன்று?"
ஜோதி விழுங்கினாள். பார்வையைத் தாழ்த்தினாள். அவளால் அதை கூற முடியாது. அவளது
நெருங்கிய
தோழி கூட - இதுவரை அவள் ஒருத்தியிடம் மட்டுமே கூறியிருக்கிறாள் - அவளை
கிண்டலாய்ப் பார்த்தாள்.
ஒருவேளை குடும்பப் பாங்கான படங்களும் கதைகளும் அதிகம் பார்ப்பததாலே சற்று
பழங்காலமாகவே மாறிவிட்டாள் போல. வேலைக்குச் செல்லும் புதுமைப் பெண் ஸ்தானம்
ஏற்பதற்கு முன், ஒரு நல்ல மனைவியாகவும், தாயாகவும் மாறி இனிய இல்லறம் நடத்தி
குழந்தைகள் சிறப்பாக வளர்வதை பார்த்து அனுபவிக்கவே ஆசைப் பட்டாள். இதை அறிந்த
நிக்கி கூட அவளை பழங்காலப் பண்டரிபாய் என்று கிண்டல் செய்தாள்.
அவள் விரும்பிய எதுவும் அப்படியே பூமியில் முளைத்து விடாது என்பதால், இத்தனை
ஆண்டுகளும்
வேலையிலே கவனத்தை செலுத்தினாள்.
"ஆமாம், அடைய முடியாத சில ஆசைகள் எனக்குண்டு." என்றாள் விஷ்ணுவிடம்.
"அடைய முடியாதா," அவன் சவால் விட்டான், "அல்லது தேடிச் சென்று அடைவதற்கு பயமா?"
அவள் வெடுக்கென்று நிமிர்ந்தாள்.
அவள் வரமாய் கருதுவதை அடைவதற்கு அவளுக்கு பயமா, அவள் மீண்டும் மீண்டும் கிடைக்க
வேண்டிக் கொண்ட வரம்?
"வேண்டியது கிடைக்கும் வரை வேண்டிக் கொண்டே இரு" என்று உஷா சித்தி அடிக்கடி
கூறுவாள்.
அவன் - விஷ்ணு முகேஷ் - தான் அந்த வேண்டுதலா?
விஷ்ணு முகேஷ் தான் அவளுக்கு பொருத்தமான வாழ்க்கை துணை என்ற அனுமானமே
சாத்தியமற்றது. அதன் உள் அர்த்தங்களும் அப்படியே. ஒருவேளை அவன் சொன்னதன்
அர்த்தத்தை அவள் சரியாக விளங்கியிருக்க மாட்டாளோ.
"உங்கள் கேள்வியை திரும்பக் கேட்க முடியுமா?"
"அது கேள்வி என்பதில்லை, ஜோதி, சாதாரண வாத்தைகள். சில நேரங்களில் மனிதர்கள்
தங்களுடைய லட்சியத்தை அடைய அஞ்சுவார்கள். வெற்றிப் பாதையின் ஆரம்பத்தில் தடையாய்
அமைவதே அவர்களின் இந்த பயம்தான்."
ஜோதி கண்மூடித்தனமானவள் இல்லை. அவள் எப்போதும் பட்டியல், திட்டங்களுடன் மாற்றுத்
திட்டங்களும் வைத்திருக்கும் பெண். ஆனால் அடுத்து அவள் கூறிய வார்த்தைகள் அவளையே
அதிரச் செய்தது.
"என்னை முத்தமிடுங்கள், விஷ்ணு."
இப்போது விழிப்பது அவன் முறையாயிற்று. அவன் விழுங்கினான். பிறகு அவளைப்
அதிர்ச்சியோடு பார்பதைக் கண்டாள். அவன் ஒரு அடி பின்னே வைத்தான். அவள் இரண்டடி
முன்னே வைத்தாள்.
"என்னை முத்தமிடுங்கள், விஷ்ணு."
"இதோ பார் ஜோதி. இது ஒன்றும்..."
அவனது கரத்தைப் பற்றி, முன்னே சென்று அவளுடைய இதழ்களை அவனது உதடுகளில் பதித்தாள்.
ஒரு கணம் கழித்து, அவனது கரங்கள் அவளது இடுப்பைச் சுற்றி இறுக அணைத்தன.
அவனோ அவளோ முத்ததில் ஆழ்ந்துவிடு முன் ஜோதி விலகினாள். இதயம் படப்படக்க அவனை
ஏறிட்டுப் பார்த்தாள். அவனும் அவளைப் போலவே மலைத்துப் போயிருந்தான்.
"எதற்காக அப்படி செய்தாய்?" என்று வினவினான்.
"எனக்கு வேண்டியதை தேடிப் போகுமளவு தைரியம் இருக்கிறதா என்று பார்த்தேன்."
**********************
வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், தன்னுடைய கண்மூடித்தனமான செயலுக்கு தன்னைத் தானே
திட்டிக் கொண்டே வந்தாள். அவளாகவே அவன் மடியில் போய் விழுந்து கௌரவத்தை
குறைத்துக் கொண்டாளே. இந்த மாதிரி விஷயங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சில
சட்டதிட்டங்கள் உள்ளன.
ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்படி நடந்ததில் அவளுக்கு சந்தோஷமே.
இருவரும் முத்தமிட்டுக் கொண்ட அந்த சில விநாடிகளில், தன் கனவுகளெல்லாம்
மெய்ப்பட போகிறதென்ற தெம்பு வந்திருந்தது.
அவளுக்கு கிடைத்ததைக் கொண்டு முயற்சி செய்து
சொந்தக் காலில் நிற்கப் போகிறாள். அவளுக்கு கிடைத்ததாக சொன்னது அலுவலகத்து புது
வேலையை அல்ல மாறாக அவளது லட்சியத்தை நோக்கி பயணிக்க - அதுவும் இப்போதே -
கிடைத்த சந்தர்ப்பத்தை. கதவுகள் திறந்தாகிவிட்டன. அவள் செய்ய வேண்டியதெல்லாம்
உள்ளே சென்று அவளது வரங்களைப் பெறுவதே.
அன்று இரவு, அவள் போட்டு வைத்திருந்த தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்தாள்.
அவள் செயல்படுத்த தயங்கியத் திட்டங்கள்.
"இதை என்னால் செய்ய முடியும்." என்று சொல்லிக் கொண்டாள்.
கல்லூரியில் பட்டம் பெற்ற பின், ஒரு சிறு நிறுவனத்தில் ஆறு மாதகாலம் பயிற்சி
மேற்கொண்டாள். அதன் அனுபவங்களை எல்லாம் தனது முழு நேர வேலைகளில் கொட்டி
முன்னுக்கு வந்தாள். தன்னுடைய திறமைகளை செதுக்கிக் கொள்ள வாய்ப்புக் கொடுத்த
முகேஷ் நிறுவனத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு வருடம் வேறொறு கம்பனியில் வேலைப்
பார்த்தாள்.
இப்போது, அவள் செய்ய வேண்டியது எல்லாம் தனது உள்ளுணர்வையும், தன்னையும் நம்பி
அவள் சத்தியமாக அடைய விரும்பிய லட்சியத்தில் - சொந்தத் தொழில் தொடங்குவது -
அத்தனை திறமைகளையும் காட்ட வேண்டும்.
முகேஷ் நிறுவன மாற்றமைப்பு திட்டம் அவளது தொழிலைத் தொடங்க தேவையான ஒரு ஊக்கமே.
ஆனால் ஏன் அது தவறான செய்கைப் போல் தோன்ற வேண்டும்.
( தொடரும்)

பகுதி-9
பகுதி-11

|