குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்

மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா
9. உன்னை விரும்புகிறேன்.

தங்களது ஒத்திகை முடிந்து,
நீலனுடன் விஷ்ணு அந்த காபி விடுதியில் அமர்ந்திருந்தான். இருவரின் முன்னாலும்
இரு நீண்ட தம்ளர்களில் குளிர்ந்த நீர் அமர்ந்திருந்தது.
"அதிகக் கவலையுடன் தெரிகிறாய். விட்டால் சோக கீதமே வசிப்பாய் போல. என்ன ஆச்சு?
"
விஷ்ணு தம்ளரின் ஒரத்தை சுற்றி விரலால் வருடி, அதில் வளைந்தோடும் நீர்த் துளிகளை
கவனித்தான். "எனது கனவு நாயகியை சந்தித்தேன்."
"ஆனால் அது சரியில்லை காரணம்?"
"அவள் எனக்கு கீழ் வேலை பார்ப்பவள்."
"ஹீம்..ம். அது சரியில்லை தான்," என்ற நீலன், "அவளை வேலையிலிருந்து நீக்கி விடு."
என்றான் எளிதாக.
விஷ்ணு தலையசைத்தான். "அவள் திறமையானவள். மிகவும் திறமையானவள். "
நீலன் ஒரு கணம் தனது நண்பனை கூர்ந்து நோக்கினான். "அதனால் மீண்டும் தியாகி
பாத்திரத்தை ஏற்கத் தயாராகி விட்டாய் போல. உனக்கு அந்த பாத்திரம் பழகி விட்டது. "
அவனது வார்த்தைகள் குத்தினாலும் அதுதான் உண்மை. அதற்காக விஷ்ணு வெட்கப்படவோ
ஒப்புக் கொள்ளவோ வேண்டுமென்றில்லை. "நான் தியாகி இல்லை."
"ஹூம்," என்று மட்டும் சொன்னான் நீலன் அட்டவணையைப் படித்த படி. அந்த விடுதியில்
பணிபுரிபவள் அவர்களின் தம்ளர்களை மீண்டும் நிரப்பி, பலவகை பிஸ்கட்டுகள் அடங்கிய
சிறு கூடையும் வைக்க வந்தாள். நீலன் காய்கறி சான்விச் ஒன்று சொல்லிவிட்டு
விஷ்ணுவின் பக்கம் திரும்பினான்.
"ஏதாவது வேண்டுமா? "
விஷ்ணு மறுப்பாய் தலையசைத்தான்.
"அவனுக்கு வழக்கமானது " என்று அவளிடம் நீலன் கூறினான்.
"ஒத்திகை நன்றாகப் போனது, ஆனால் நீங்கள் டல்லாக தெரிகிறீர்களே, உடம்புக்கு
ஒன்றுமில்லையே? " என்று அவள் வினவினாள்.
கவனம் சிதறியவனாய் விஷ்ணு தலையசைத்தான்.
மீண்டும் தனிமையில், விஷ்ணு ஆழ்ந்த யோசனையோடு நண்பனை நோக்கினான். "இதையே எல்லா
நேரமும் செய்ய முடியாதா என்று ஏங்குகிறேன். இசை தான் என் முதல் காதல்."
"உன்னால் முடியும்," என்றான் நீலன் பிஸ்கட்டை சுவைத்தபடி. "அதாவது நீ உண்மையில்
விரும்பினால். ஆனால் அனுதாபத்துக்குரிய வாரிசாய் இருக்கவே விரும்புகிறாய். என்
ஒருவனால் மட்டுமே அன்றைய தினத்தை காக்க முடிவது போல. "
விஷ்ணு விளங்கிக் கொள்ளும் ஆவலோடு அவனை நோக்கி, "அப்படி என்றால்?" என்று
வினவினான்.
"பெரியவர் முகேஷ் தன்னுடைய கண்ணுக்கு கண்ணான கம்பனியின் பொறுப்பை யார் வந்து
கதவை தட்டினாலும் கொடுத்து விடுவார் என்று நினைக்கிறாயா? அவர் எதிர்பார்த்தது
போல் நீ வராமல் போனாலும் அவரிடம் சரியான பின்புலத் திட்டம் ஒன்று கண்டிப்பாக
இருந்திருக்கும் என்னை நம்பு. "
சிறிது நேரம் அதைப் பற்றி அசை போட்டான். நீலன் சொல்வது சரி - மீண்டும்.
தாத்தாவின் அழைப்புகளை மற்றவர்களைப் போல் அவனாலும் அலட்சியப் படுத்தி இருக்க
முடியும். ஆனால் அவன் விரும்பியபடி தொழில் உலகில் முத்திரை பதிக்க கூடிய
வாய்ப்பு என உணர்ந்திருந்தான்.
பொறுப்பேற்ற இத்தனை மாதங்களில் அவன் செய்து
வந்ததெல்லாம் நேரத்தைக் கடத்தியது மட்டுமே. இப்போது, கம்பனி மாற்று அமைப்பின்
கீழ், நல்லதொரு புதிய மாறுதல்களை ஏற்படுத்த ஆவலோடு காத்திருந்தான்.
துரதிஷ்டவசமாக கீழே வேலை பார்க்கும் ஒருத்தியைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையால்
அதுவும் கஷ்டமே.
அடுத்த நாள் ஜோதி, முந்திய நாள் பேச்சுக்களால் சங்கடம் ஏற்படுமோ என்ற கவலையோடு
வேலைக்கு வந்தாள்.
ஆனால் விஷ்ணுவோ வேலையில் மூழ்கியிருந்தான்.
என்ன வேலை செய்ய வேண்டுமென்ற அவசர விளக்கத்தோடு
அவளை தனித் துறை சந்திப்புகளுக்கு அனுப்பி வைத்தான்.
அவனது பெரிய அறைக்கு அடுத்திருந்த அவளது புதிய அலுவலக அறைக்குள் அவன் தலையை
நீட்டிய போது மணி நான்கு.
"ஒரு நிமிடம் வந்து போக முடியுமா?"
அவள் குறிப்பேட்டையும் பேனாவையும் எடுக்கக் கை நீட்டினாள்.
"அதற்கு அவசியமிருக்காது" என்றான் அவன்.
ஜோதி அவனைப் பின் தொடர்ந்து சென்று , நவீன மயமான அறைக்குள், அவன் காட்டிய
இருக்கையில்
அமர்ந்தாள்.
"நேற்று நடந்ததைப் பற்றிப் பேச வேண்டும்," என்று ஆரம்பித்தான். பின் தலைக்குள்
கையை விட்டு முடியைக் கோரி விட்டான். எப்போதும் அமைதியானவனின் சற்றுக் கவலையான
தோற்றம் ஜோதியை தாக்கியது.
"நேற்று நான் முழு உண்மையையும் உன்னிடம் கூறவில்லை. " என்றான் அவளிடம்.
"எதைப் பற்றி?"
"நான் உன்னைத் தேர்ந்தெடுத்தது பற்றி. "
ஜோதி இருக்கையின் கைகளை இறுகப் பற்றினாள். தந்த வேலையை வாபஸ் பெற போகிறானா?
"நான் உன்னை என் முக்கிய உதவியாளராக அறிவித்ததன் காரணம் உன் வேலைத் திறமை,"
என்றவன், "ஆனால் இன்னுமொரு காரணமும் இருக்கிறது. நான் பெருமைப்பட முடியாத ஒரு
காரணம்." என்றான் விஷ்ணு.
அவன் தொடர காத்திருந்தாள்.
"நான் உன்னை விரும்புகிறேன், ஜோதி. உன்னை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே
விரும்புகிறேன்."
என்றான்.
அவளும் அவனை விரும்புவதாகச் சொல்ல வாயைத் திறந்தாள், ஆனால் கையை உயர்த்தி அவளை
நிறுத்தினான்.
"சில சட்டங்கள் இருக்கின்றன அவற்றை மீறுவதாக உணர்கிறேன். நமக்குள் எந்த விதமான
தர்ம சங்கடமும் நிலவ நான் விரும்பவில்லை."
அவளும் அதைப் பற்றி தான் கவலைப் பட்டாள். அதுவும் அதே காரணத்துக்காக.
"சமீபத்தில் தான் உனக்கு வேலை அளித்தேன் என்பதை அறிவேன், இருந்தாலும் நீ வேறு
எங்காவது வேலை பார்க்க விரும்பினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
நியாயப்படி, இங்கிருந்து செல்ல வேண்டியது நான்தான் என்று நினைக்கிறேன்."
"அதற்கு அவசியமே இல்லை," என்றாள் அவனிடம். அவள் எழுந்தாள் கவனத்தோடு அவனை
அணுகினாள்.
"உங்களிடம் இருக்கும் அதே உணர்வுகள் பரஸ்பரம்
என்னிடமும் உள்ளதாக நான் சொன்னால் உங்களின் பதில் என்ன?"
( தொடரும்)

பகுதி-8
பகுதி-10

|