........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

                                                                           8. உஷா சித்தி 

ஜோதிக்கு விஷ்ணு முகேஷ் குடும்ப தொழிலுக்கு வந்த காரணம் விளங்கியது. ஆனால் அரிமலை போன்ற சிறிய ஊரில் வாழ வந்தது தான் ஏன் என்று விளங்கவில்லை.

கிராமங்களுக்கே உரிய சுகம் அந்த டவுனில் இருக்கவே செய்தது. தினமும் காலையில் நாற்பது நிமிடங்கள் பிரயாணம் செய்து அரிமலையை அடைவதில் அவளுக்கு ஒன்றும் கஷ்டமில்லை என்றாலும், அங்கேயே வாழ்வதென்பதை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உஷா சித்தி மற்றும் சிலரைத் தவிர அவளது குடும்பக் கிளையில் உள்ள அனைவரும் சுற்றியுள்ள பெரிய பெரிய ஊர்களுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள்.

உஷா, ஜோதிக்கு மிகவும் பிடித்த சித்தி, அந்த ஊரின் சமூகக் கூடத்தின் பொதுச் செயலாளர். எல்லா வகையிலும் ஆனந்தமான அந்த சிறிய ஊரில் தனக்கென்று இல்லம் அமைத்துக் கொண்டு, பெரிய இடங்களுக்கு மாறக்கூடிய வாய்ப்புகளை நிராகரித்து விட்டார்.

அங்கே என்னவெல்லாம் இல்லை என்பதை விட என்ன இருக்கிறது என கவனித்தாள்.

ஒரு ஐஸ்கிரீம் கடை, சில கலைக் கூடங்கள், அழகான சிறிய கபே. பப்ளிக் பார்க்கில் ஒரு பெரிய வெள்ளை கூரையிட்ட மேடை நின்றது. கோடையில் பிக்னிக் போவதற்கு சரியான இடம். மேடையில் இசைக் கச்சேரி நடந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

"அது சரி, பிக்னிக் போவதற்கெல்லாம் உனக்கு நேரம் இருக்கிறது பார்." என்று தனக்கு தானே சொல்லியபடி முக்கியச் சாலையிலிருந்து சித்தி வீட்டுக்கு போகும் பாதையில் வண்டியைத் திருப்பினாள்.

அவள் விழித்தாள், பின் முகம் சுழித்தாள். பிக்னிக் போவதற்கு அவளுக்கு ஏன் நேரமில்லை? மற்றவர்கள் போகவில்லை? வாழ்க்கையில் ஒய்வும் இருக்க வேண்டும்.

சித்தி வீட்டின் போர்ட்டிகோவில் வண்டியை செலுத்திய நேரம், வாழ்க்கை தன்னை விட்டு நழுவிக் கொண்டிருப்பதை ஜோதி உணர்ந்தாள். பட்டம் பெற்றதிலிருந்து வேலையில் வேகமாக இருந்து விட்டாள். பின்னே வாழ்க்கையில் சந்தோசம் எப்போது ஆரம்பிக்கும்? இப்படியே போனால் அவளது வாழ்வில் காதலுக்கு ஏது நேரம்?

வேலையுடன் வாழ்வையும் அனுபவிக்கத் தெரிவதே இரகசியம்.

மல்டி மில்லியன் டாலர் கம்பனிக்கு பொறுப்பு என்றாலும், விஷ்ணு முகேஷ் வேலையோடு வாழ்க்கையையும் அனுபவிக்கக் கற்றிருந்தான். சாக்சாபோன் அலாரம் , அவளுடைய மண்டையைக் குடையும் தேனீக்குரல் அலாரம் போலில்லை - செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு அடுத்ததற்கு செல்ல நினைவூட்டியது.

"சித்தி."

"சமையலறையில் இருக்கிறேன்," உஷா கூப்பிட்டாள். 

" பின்புறம் வா. "

உஷாவின் அந்த பெரிய சமையலறையில் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விருந்துகள் நடந்து விட்டன. இப்போது கூட, பார்க்கும் இடமெல்லாம் குக்கீஸ் நிரம்பிய தட்டுகளாய் காட்சியளித்தது.

"ஆ..ஆ!" என்றபடி உஷா இரு கைகளிலும் இரு தட்டுகளை ஏந்தியபடி ஓவனின் கதவை மூட முயன்றாள்.

"நான் பிடித்துக் கொள்கிறேன்." என்று ஜோதி ஓவனை கவனிக்க உஷா சின்கின் ஓரத்தில் தட்டுக்களை வைத்தாள்.

"பிஸ்கட் பாக்டரி போல் காட்சியளிக்கிறது. "

உஷா சிரித்தபடி கையுறைகளைக் கழற்றினாள். "ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கொடுக்கவென்று ஆரம்பித்தேன். பிறகு தான் பெரியவர்களும் விரும்புவார்கள் என்று தோன்றியது. "

பேச்சின் போக்கு அவள் விரும்பிய மாதிரி இருக்கவே, "சமூகக் கூடத்திலா?" என்று ஆவலோடு கேட்டாள்.

"உம்," என்றாள் உஷா ஆறிவிட்ட தின்பண்டங்களை சரி பார்த்தப்படி.

"விஷ்ணு முகேஷை தெரியுமா? "

புன்னகையுடன், "தெரியுமாவா? கிட்டத்தட்ட அவனை வளர்த்ததே நான் தான். சிறப்பாக வளர்ந்திருக்கிறான். என்னதான் வேலையால் நேரமில்லாமல் இருந்தாலும், சமூகக் கூட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவறுவதில்லை." என்றாள் உஷா.

ஏற்கெனவே தன் மேல் தவறிருப்பதாய் உணர்ந்திருந்த வேளையில், அந்த வார்த்தைகள் அவளைக் கண்டிப்பது போல் இருந்தது. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்தில் உஷா சொல்லவில்லை என்பது ஜோதிக்குத் தெரியும்.

"இவ்வளவு காலத்திற்கு அப்புறம் நீ அவனுடைய வேலையில் மாட்டிக் கொள்ளவில்லையே?"

"சொல்லப் போனால் மாட்டிக் கொண்டு விட்டேன்," என்றாள் ஜோதி. "இன்று எனக்கு முக்கியமான பதவி உயர்வு கொடுத்தார். "

உஷா இரு கரங்களையும் தட்டி, "ஜோதி, சந்தோஷமான விஷயம் அது." என்றாள்.

"அப்படியா நினைக்கிறீர்கள்."

"அதில் என்ன  தப்பு ஜோதி?"

அவள் தோளைக் குலுக்கி, "தெரியவில்லை. எனக்கு வாழ்க்கையில் இதை விட மேலான ஒன்று வேண்டும். பதவி உயர்வு பெரிது தான், ஆனால்..." மீண்டும் தோளைக் குலுக்கி, "எதையோ தொலைத்த உணர்வு இருக்கு. இது எனக்கு திருப்புமுனை மாதிரி. சிறப்பாக செயல்பட ஒரு வாய்ப்பு."

"அதாவது 'ஜஸ்ட் ரைட் பார் யூ' ஆரம்பிப்பது மாதிரி, சமீப காலமாக நீ பேசி வருகிறாயே அந்த தொழில் மாதிரி?".

( தொடரும்)


பகுதி-7                                                                                                                                                                பகுதி-9

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு