........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

4. ஜோதியின் முடிவு

ஜோதி வாயைப் பிளந்தாள்.

நிக்கி லேசாக அவளை இடித்து, "நீ தான், பெண்ணே." என்று வாயசைத்தாள். அரை மணிக்குள் வெடித்த இரண்டு பூகம்பங்களில், அன்று எழுந்து தயாராகி வேலைக்கு கிளம்பியதே தவறு என்று தோன்றத் தொடங்கிவிட்டது. சில விநாடி வித்தியாசத்தில் ஏற்பட்டிருந்த வேலை மாற்றம் அவளை அசரச் செய்தது.

கண்டிப்பாக, கம்பனி சிஇஓவிற்கு நெருக்கமாக வேலைப் பார்ப்பதென்பதே பலரின் லட்சியக் கனவு. குமரவேலின் கீழ் வேலை பார்ப்பதின் சிறப்பே இந்த மாதிரி மேல்மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்ளமுடியும் என்பதே. இதை விட சிறப்பாக அந்த நிறுவனத்தை எப்படி நடத்தலாம் என்ற யோசனைகளும் திட்டங்களும் அவளிடம் உண்டு. அவற்றில் சிலதைப் பற்றி குமரவேலிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் இருக்கிறாள், ஆனால் பயன்தான் இல்லை.

ஆனால் பிரச்சினை அதுவல்ல. விஷ்ணுவுடன் நெருக்கமாக வேலைப் பார்ப்பதால் தவறான ஆசைகள் வளரக்கூடுமே. மனது இவ்வளவு தூரம் மயங்கிக் கிடக்கும் ஒருவனின் கீழ் எப்படி அவளால் வேலை பார்க்க முடியும்?

அவளுக்கு முன்னேற்றம் வேண்டும். ஆனால் இது? அவன் ஒரு பார்வை பார்த்தாலே நொறுங்கிப் போகிறவள் எப்படி தன் வேலையை சிறப்பாக செய்யப் போகிறாள்? ம்... அவள் இருக்கும் இடத்தில் இருப்பதே சிறந்தது.

விஷ்ணு அவளுடைய மலைத்த பார்வையை சந்தித்தான்.

கையில் இருந்த தாள்களை விநியோகம் செய்தபடி அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.

"தொழில் நடத்தும் முறையையே மாற்றியமைப்பது என்றால் என்ன அர்த்தம்?" யாரோ கேட்டார்கள்.

"முற்றிலும் மாற்றுவதென்று அர்த்தம்." என்றான் விஷ்ணு.

தாள்களில் பார்வையை செலுத்தியவர்களின் பலர் மூச்சுத் திணறுவது கேட்டது.

நிக்கியிடமிருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்ட ஜோதி தலையெது வாலெது என்று பிரித்தறிய முயன்றாள். அவளுடைய மனம் விஷ்ணுவின் அறிவிப்பிலேயே சுழன்றது.

"ஏய், மூச்சுவிடுடி." என்று கிசுகிசுத்தாள் நிக்கி.

தோழியை நோக்கி லேசாக தலையசைத்தவள் மூச்சை இழுத்து விட்டாள்.

எழுத்துக்கள் கருத்தில் பதிய ஆரம்பித்த போது தான் அறையில் நிலவிய குழப்பத்தின் காரணம் புரிந்தது.

என்ன மாதிரி யோசனைகளை வெளிப்படுத்துவார்கள் என்றறிந்து கொள்ள குழுக்களில் பழமைவாதிகள், புதியவர்களோடு எதிர்ப்பாளர்களையும் கலந்து பிரித்திருக்கிறான்.

முணு முணுப்புகள் மூத்த அதிகாரிகளிடம் இருந்தே அதிகம் கிளம்பியது. "இது ஒழுங்கீனத்தின் மொத்த உரு."

யாரோ ஆத்திரத்தில் கிசுகிசுப்பது கேட்டது.

"கவனியுங்கள்," என்றான் விஷ்ணு சூட் ஜாக்கட்டை அகற்றியபடி. சூட் அவனுக்கென்றே அளவெடுத்து தைத்தது போல் இருந்தாலும், ஏனோ அவனது இயல்புக்கு அது பொருந்தாத மாதிரி தோன்றியது. ஜாக்கட்டை இருக்கையின் மீது வீசிவிட்டு சட்டைக் கைகளை மடித்து விட்டான்.

"எல்லாமே, இவை எல்லாவற்றையுமே நிச்சயமாக செயல்படுத்த முடியுசெய்து விட்டேன். உங்கள் அனைவரிடமும் நிறுவனத்தின் அமைப்பு பற்றிய வரைபடம் உள்ளது. அதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமையுங்கள். இன்றைய வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தக் கூடியதாய் இருக்கட்டும்."

"ஒரு வேளை சி.பி. இந்த கம்பனியை நடத்திக் கொண்டிருந்தால்..."

விஷ்ணு அந்த எதிர்ப்பாளரை நேர்ப்பார்வையாய் பார்த்தான். "கம்பனியை நடத்திக் கொண்டிருப்பது தாத்தா இல்லை, நான்."

"யாருக்கு வேண்டுமோ," என்றபடி தன் தோல் பையிலிருந்து மற்றுமொரு கற்றை தாள்களை வெளியில் எடுத்தான்.

"இப்போதே வெளியேறலாம். ஒரு வருட உழைப்புக்கு ஒரு மாதம் ஓய்வளிக்க நான் தயார். இந்த ஒப்பந்தம் இங்குள்ள அனைவருக்கும் பொருந்தும். வேண்டுமென்பவர்கள் படிவங்கள் அடங்கியிருக்கும் இந்த பாக்கட்டுகளில் ஒன்றை எடுத்து நிறைவு செய்து இன்று வேலை நேரம் முடிவதற்குள் எனது மேசையில் வைக்கவும். மற்றவர்கள், இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுடைய திட்டங்களை பரிசீலிக்க நாம் இங்கே கூடுவோம். நான் என்னுடைய கருத்துக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்."

அவன் அமர்ந்திருந்தவர்களை நோக்கி "கேள்வி எதுவும்?" என்று வினவினான்.

ஒருவரும் ஒரு வார்த்தையும் கூறவில்லை.

"பிரமாதம்." என்று புன்னகைத்தான், ஆனால் அதில் தோழமையோ வரவேற்கும் தொனியோ இல்லை.

"நல்லது. இத்துடன் இந்த கூட்டம் களைகிறது."

ஜோதி மூச்சுவிட்டாள். அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்ததை உணராமல்.

தனது தோல் பையையும், கோட்டையும் எடுத்தபடி, "மிஸ் ஜோதி, எனது முடிவை பற்றி யோசிக்க உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைத்திருக்கும். புதிய வேலையை ஏற்றுக்கொள்ள தயாரென்றால் என்னோடு வாருங்கள். வேலை இருக்கிறது. இல்லை என்றால், நான்காவது குழுவில் சேர்ந்து கொள்ளலாம்."

ஜோதி விழுங்கினாள். கையிலிருந்த காகிதத்தில் பார்வையை பதித்தாள். குழுவில் குமரவேல் இடம்பெறவில்லை. அவர் புறம் நிச்சயமில்லாத பார்வை ஒன்றை வீசினாள். இதெல்லாம் அவளின் வேண்டுதலுக்கு கிடைத்த விடைகளா? அவளது எதிர்காலத்தையே மாற்றக் கூடிய முடிவை இக்கட்டான சூழலில் நொடிப் பொழுதில் எடுக்கும் நிலை?

"மிஸ் ஜோதி?"

அந்த விநாடியில், தேர்வு செய்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒன்று முன்னேறலாம் அல்லது பின்னேற்றம் தான். இரண்டு வகையிலும் நிச்சயமில்லாத தோற்றம் இருக்கவே செய்தது.

நடுவில் மாட்டிக் கொண்டவள், மனதிற்குள் கடவுளிடம் உதவி கோரினாள். உடனே அவளது பழைய  மன்றாடல்கள் காதில் எதிரொலித்தது. கடவுளே, எனக்கு வேலை மாற்றம் வேண்டும். கடவுளே, அவன் என்னை கண்டு  கொள்ள வேண்டும்.

வீட்டிலும் கோயிலிலும் மாற்றம் கோரி மன்றாடினாள். இதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், விஷ்ணு அவளை கவனிக்க வேண்டினாள். ஆனால் இப்போது ஏன்டா வேண்டிக் கொண்டோம் என்பது போல் தோன்றியது.

ஆரம்பத்தில் குமரவேலும் அவளிடம் நல்ல மாதிரியாகத்தான் நடந்து கொண்டார். அவருக்கு கீழ் அவளுக்கு இடமளித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். அதற்காக வேண்டும் அவள் அவரிடம் கடன்பட்டிருந்தாள்.

அவளால் அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை. அவளது வயதுக்கு யாருமே கொடுக்கத் தயங்கும் வாய்ப்பை அளித்த அவளது வழிகாட்டியை திரும்பிப் பார்த்தாள்.

கதவருகே காத்திருந்தவன், "முடிவெடுங்கள், மிஸ் ஜோதி." என்று அவசரப்படுத்தினான்.

குமரவேலை பார்த்தாள். பிறகு விஷ்ணுவை நோக்கி, "என்னை மன்னியுங்கள்," என்றாள், அர்த்தத்துடன் அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையுடன். 

( தொடரும்)

பகுதி-3                                                                                                                                                                பகுதி-5

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு