குறுந்தொடர் கதை
ஒரு இனிய கானம்

மூலக்கதை:
FELICIA MASON (பெலிசியா மேசன்)
தமிழாக்கம்:
இஷாரா
5. சுய சந்தோசத்துக்காக

அறையே அமைதியானது. அனைவரின் பார்வையும் ஜோதியை
நோக்க, அவளது பதிலுக்காக காத்திருந்தார்கள்.
விஷ்ணுவின் உதவியாளராக வேண்டி அவள் மனதை தயார் படுத்துவதாக அனைவரும் எண்ணுவது
அவளுக்கு தெரியும்.
உண்மையில், வாக்குறுதிக்கும் கடவுள் வழங்கிய வாய்ப்புக்கும் நடுவில் மாட்டிக்
கொண்டு நின்றாள். கடவுள் அவளுக்கென்று வழங்கிய வாழ்க்கை என்ன என்பது தெரியும்.
இது தான் அதை அடையக் கூடிய வழியா என்பதில் தான் நிச்சயமில்லை. பார்ப்பதற்கு
சுற்று வழிபோல் தெரிந்தாலும், சரியான வழி என்றே உள்மனம் கூறியது.
ஒரு வேளை இது விஷ்ணுவின் மேல் அவளுக்கிருக்கும் ஈடுபாட்டினாலா அல்லது இது தான்
சரியான முடிவா?
அவள் கவனிக்கவில்லை என்றெண்ணி சில சமயம் அவளைப் பார்க்கும் அவனது பார்வைகளை
கவனித்திருக்கிறாள்.
மேலும் அந்த கண் சிமிட்டலுக்கு என்ன அர்த்தம்? புதிய வேலை வாய்ப்பை நோக்கி
போகிறாளா அல்லது ஏதாவது கூத்தில் சிக்கப் போகிறாளா?
இதை அறிந்து கொள்ள ஒரே வழிதான். கத்தி முனையில் நடப்பது போன்ற சூழல் தான், ஜோதி
தன்னுடைய குறிப்பேடு மற்றும் குழு விவரமடங்கிய காகிதம் சகிதமாக இருக்கையை விட்டு
எழுந்தாள்.
விஷ்ணுவை நோக்கி, நிச்சமில்லாத எதிர்காலத்தை நோக்கி நடந்தாள்.
"நான் இந்த வேலையை ஏற்றுக் கொள்கிறேன்."
"சபாஷ்," என்று விஷ்ணு புன்னகைத்தான்.
கதவைத் திறந்து அவளுக்கு வழி விட்டான்.
இருவரும் வெளியே நடக்கையில் சேர்ந்து ஜோதியின் இதயம் பந்தக்
குதிரையின் வேகத்தில் துடித்தது. இறக்கை கட்டி பறந்தது.
அவர்களுக்கு பின்னால், எதிர்ப்புக் குரல்களின் இரைச்சல் கிளம்பியது.
"என்ன குழப்பமா?" சிறிது நேரம் கழித்து விஷ்ணு கேட்டான்.
"உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு சரியாகத் தெரியவில்லை. பெரும்பாலும்
என்னிடம்
நல்லபடியாகவே நடந்து கொண்ட பாஸிடமிருந்து விலகிவிட்டேன்."
"அந்த 'பெரும்பாலும்' பகுதிதான் என்னை கவலைக்குள்ளாக்கியது."
பள்ளத்தாக்கின் பசுமையான காட்சியிலிருந்து பார்வையை திருப்பினாள்.
விஷ்ணுவுடைய அலுவலகம் முகேஷ் நிறுவன கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்திருந்தது.
கட்டிடம் பெரியது என்றாலும் சுற்றுச்சூழலின் அழகை அது பாதிக்கவில்லை. அலுவலகமும்
அவள் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. நவீன மயமாக இருப்பதற்கு பதில், வசதியான
இருக்கைகள், பச்சை பசீரென்ற செடிகள், ஓவியங்களிலும் இசைக்கலைஞர்கள், கடவுள்கள்
என அவனுடைய அறை பார்ப்பதற்கே வீட்டு அறையை போன்றிருந்தது.
"உங்களுடைய அறை இப்படி இருக்கும் என நான் நினைக்கவில்லை."
புரிந்துக் கொண்டவனாய் சிறு சிரிப்புடன், "நவீன மயம் அடுத்த அறையில். அதை
சந்திப்புகளுக்கு மட்டுமே நான் பயன்படுத்துவது. வேலை நடத்த இது தான் சரி."
"இந்த மாதிரி பெரிய நிறுவனத்தின் தலைமையகம் அரிமலையில் போன்ற சிற்றூரில்
அமைந்திருப்பதே ஆச்சரியம் தான்."
விஷ்ணு பற்கள் பளீரிட புன்னகைத்தான். "இந்த காரணத்துக்காக தான் உன்னை என்
செயலாளராக தேர்வு செய்தேன்."
ஜோதி அவனைப் புரியாமல் நோக்கினாள். அவளுக்கும் அதை அறிந்து கொள்ளும் ஆர்வம்
இருந்தது. ஆனால், அவனது தோற்றத்தில் அவளது கேள்வியும், மூச்சும் தொண்டையிலேயே
சிக்கிக் கொண்டது. மேஜையில் சாய்ந்து கொண்டு இரு கால்களையும் நீட்டி, குறுக்கே
போட்டு விளம்பர மாடலை போல காட்சியளித்தான்.
அவளையே உற்று நோக்கினான்.
"என்ன...?"
"புது பாஸிடம்
நிறுவன தலைமைச் செயலகம் பாதாளத்தில் அமைந்திருப்பதாக சொல்லும்
தைரியம் எல்லோருக்கும் வந்து விடாது."
அரண்டு போய், அவனை நோக்கி கையை நீட்டியவள், பின்பு கீழே போட்டாள்.
"நான் அப்படி சொல்ல..."
"தெரியும்." என்றவன் அவளை வெறிப்பதை தொடர்ந்தான்.
ஆடை நலுங்கியிருக்கிறதோ, உள்ளாடை வெளியில் தெரிகிறதோ, தலை களைந்துள்ளதோ என்று
அறிய கைகள் குறுகுறுத்தன.
ஏற்கெனவே இந்த சந்திப்பை கெடுத்துக் கொண்ட
உண்மையை உள்ளுக்குள் ஒத்துக் கொண்டு, நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
"என்னிடம் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"
"இல்லை," என்றவன், "நன்றாகவே இருக்கிறாய்." தொண்டையை செருமி நிமிர்ந்தவன்
அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான்.
"உன்னை செயலாளராக்கும் எனது முடிவு திடீரென்று எடுக்கப்பட்டதல்ல. உன்னுடைய
வேலைத் திறன் திருப்திகரமாகவே இங்கு பதிவாகியுள்ளது."
மென்மையான அவனது குரலில் சற்று கடுமையேற அவள் என்ன செய்தாள் என்பது விளங்கவில்லை.
ஜோதி அவளது செயலாளர் தோற்றத்தை வரவழைத்துக்
கொண்டாள்.
"நன்றி, சார்."
ஒற்றை விரலை உயர்த்தி, "விஷ்ணு, ப்ளீஸ். என் தாத்தா தான் 'சார்'." என்றான்.
"ஆனால் அலுவலக சந்திப்புகளில் எல்லோரையும் 'சார்' என்று கூப்பிட வைத்தீர்களே."
அவளை பார்த்து திரும்பியவன், ஒரு கன்னத்தில் குழி விழ சிரித்தான்.
அவனோடு வேலை பார்ப்பதென்பது பெரும் சவால் என்பதை உணர்ந்தாள்.
"நான் மாற்ற எண்ணும் நிறுவன சம்பிரதாயங்களில் அதுவும் ஒன்று. உன்னிடமும்
யோசனைகள் இருக்கின்றன."
அவனது வாக்கியத்தை கேள்வி என்று தவறாக நினையாமல், "ம்... இருக்கிறது." என்றாள்.
வசதியான இருக்கைகளில் ஒன்றில் அமருமாறு அவளை அழைத்தான்.
"இதற்கு முன்னால் எப்போதாவது இந்த நிறுவனம் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறதா?"
என்று ஜோதி வினவினாள்.
விஷ்ணு தலையசைத்து, "முன்பு ஒரு தரம். எழுபதுகளில், பெரியவருக்கு சலிப்பேற்பட்ட
சமயம் தன்னுடைய சந்தோசத்துக்காக சுற்றியிருக்கும் அனைத்தையும் மாற்றினார்."
"உங்களுடைய குறிக்கோளும் அது தானா, அத்தனை பேரின் வேலையையும், வாழ்வின்
ஆதரத்தையும் மாற்ற எண்ணுவது சுய சந்தோசத்துக்காகவா?"
அவளுடைய குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல் சிரித்தவன், இருக்கையில் சாய்ந்து
அமர்ந்து, "சொல்லப் போனால், அது தான் உண்மை." என்றான்.
( தொடரும்)

பகுதி-4
பகுதி-6

|