........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

6. நான் அப்படி இல்லை.

 விஷ்ணு ஜோதியிடம் உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே கூற எண்ணினான்.

ஆனால் அவன் எதிலும் முழுமையை எதிர்பார்ப்பவன், இந்த விஷயத்திலும் முழுமை இருக்க வேண்டுமென்றால், அவன் ஏன் எதனால் முகேஷ் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்றான் என்ற முழுக் கதையும் கூறியாக வேண்டும்.

பொதுவாக விளக்கம் கிடைக்க அவனை  வலியுறுத்த வேண்டியிருக்கும், ஆனால் ஏனோ ஜோதியின் கருத்து அவனுக்கு முக்கியமாகப் பட்டது. அதுவும் ரெம்பவே. அதனாலே, நிறுவனத்தில் வெகு சிலருக்கு மட்டும் தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்தினான்.

"நான் ஒரு சாத்தியமில்லாத சிஇஓ." என்றான் அவன், "இந்த நிறுவனத்தை எடுத்து நடத்துவதென்பது எனது விருப்பதுக்கு எதிரானது."

அவனது வெளிப்படையான பேச்சு அவளை ஆச்சிரியப் படுத்தியிருந்தாலும் அவள் அதை வெளிக் காட்டவில்லை.

"உங்களால் எப்படி இதையல்லாம் விரும்பாதிருக்க முடியும்?" அந்த வசதியான அறையை கையால் சாடை காட்டி வினவினாள். "எத்தனையோ பேர் வாழ்நாள் முழுவதும் உழைத்தும் இந்த இடத்தை எட்ட முடிவதில்லை."

அவன் தரப்பு கருத்தை அவள் புரிந்து கொள்ளவில்லை என்ற விரக்தியில் விஷ்ணு விரல்களால் முடியை கோதி விட்டான். "நீ வெற்றி வலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் என்று நான் நினைக்கவில்லை."

"நான் அப்படி இல்லை." என்று வெடித்தாள். "அதே சமயம் உண்மையான உழைப்புக்கு கிடைக்கும் வெற்றியை மதிப்பவள் நான். உங்களுடன் இடம் மாற்றிக் கொள்ள நொடிப் பொழுதும் தயங்காதோர் எத்தனை பேர்."

"நீயும் கூடவா?"

அந்த கேள்விக்கு பதில் சொல்லி அவள் தன் கௌரவத்தை குறைத்துக் கொள்ளாததால், அவன் தொடர்ந்தான்.

"நான் மற்றவரோ பெரும்பாலானோரோ இல்லை." என்றான் அவளிடம்.

"இதில் நான் சௌகரியமாக இல்லை. இது எனக்கானது அல்ல" என்றவனின் கை அவளுக்கு அருகேயிருந்த விலையுயர்ந்த பூஜாடியை தட்டியது.

ஜோதி அதை பிடிக்க எத்தனித்தாள், ஆனால் விஷ்ணு அதில் கவனமின்றி நிலைப்படுத்தினான்.

"யாரிடம் அதிகம் கொடுக்கப் படுகிறதோ அவரிடம் அதிகம் எதிர் பார்க்கப்படுகிறது," என்றாள் ஜோதி.

ஒரே சுழற்சியில் திரும்பியவன், "சரியாகச் சொன்னாய். மேலும் எனக்கு அருளப்பட்ட மற்ற திறமைகள் இதனால் வீணாகிறது." என்றான்.

ஜோதி தலையத்தாள். "உங்களுக்கு சலித்து விட்டது என்பதற்காக அத்தனை பேரின் வாழ்க்கையிலும் குழப்பத்தை உண்டு பண்ண நினைப்பதில் கொஞ்சம் கூட நியாயமில்லை." என்றாள்.

"உன்னுடைய கோணத்திலிருந்து மட்டுமே இதை பார்க்கிறாய். என்னுடைய இருக்கையிலிருந்து பார்த்தால் இதெல்லாம் அவ்வளவு பயங்கரமாகத் தெரியாது."

நீண்ட நேரம் மௌனமாய் இருந்தான். அவனது மௌனம் அவளது கருத்தை மாற்றவில்லை. சொல்லப் போனால், அவனுக்கு சரிசமமாய் வாதிட்டுக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள். இந்த மாதிரி அவனோடு சமமாய் அமர்ந்து பேசுவாள் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அவள் குடிப்பதற்கு குளிர்பானம் வழங்கினான். அவள் பானத்தோடு அமரவும், விஷ்ணு ஜன்னலை அடைந்தான். அவளோடு பேசினாலும், வெளிப்புறக் காட்சியிலிருந்து அவன் பார்வையை திருப்பவில்லை.

"உண்மை என்னவென்றால், சில காலமாகவே நாம் லாபங்களை இழந்து கொண்டிருக்கிறோம். பொருள் விற்பனையால் அல்ல, ஆனால் வளர்ச்சிக்கு வேண்டிய வாய்ப்புகளை தவற விடுவதால். அதில் மாற்றம் கொண்டு வர முடியும்." என்றபடி அவள் புறம் திரும்பினான்.

பிறகு தலையை ஆட்டி அவளது கருத்தை ஒப்பினான்.

"எனக்கு சலிப்பு தட்டியது நிஜம் தான். அத்தோடு என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை சரிவர நிர்வகிக்க வேண்டிய கடமையும் இருக்கிறதே."

"கடவுளை நம்பி செய்யும் எந்த காரியத்துக்கும் கை மேல் பலன் கிடைக்கும். நான் உணர்ந்திருக்கிறேன்."

ஒருகணம் ஆச்சரியமாய் பார்த்தவன், பிறகு மெல்ல முகம் மலர சிரித்தான். "கடவுள் பக்தி அதிகம் போல."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தொழிலும் பக்தியும் ஒன்று சேராது போல."

"இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையக் கூடியதே. அதற்கு உதாரணமே நான்."

கடைசியில் இருவருக்கும் இடையில் இருந்த ஒருமித்த கருத்தை அறிந்த பின், கிட்டதட்ட முக்கால் மணி நேரம் முகேஷ் நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான வழிகளைப் பற்றி பேசுவது எளிதாய் இருந்தது.

ஜோதியின் இதர வேலைகளைப் பற்றி விஷ்ணு விளக்கிக் கொண்டிருக்கையில், அவனது மேசையில் இருந்து இதமான மெல்லிசை ஒலித்தது.

"ஓ..." என்று குதித்தெழுந்தான். "எனது அலாரம்."

"அலாரக் கடிகாரத்தில் சாக்சாபோன் இசையா?"

ஆம் என்று தலையசைத்தபடி அதை நிறுத்தினான். "தனிப்பட்ட தயாரிப்பு."

அவன் கைக்கடிகாரத்தை நோக்குவதைக் கண்டாள்.

"முடிக்க வேண்டியது வேறெதுவும் இருக்கிறதா?"

"இப்போதைக்கு இல்லை," என்றவன், அவளிடம், "இத்தோடு இன்றைய தினத்தை நாம் ஏன் முடித்துக் கொள்ளக் கூடாது?" வினவினான்.

"மணி 3.30 கூட ஆகவில்லை. விற்பனைத் துறையில் நான் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகள் எனக்கு இருக்கிறது."

கதவு வரை சென்று சம்பிரதாயத்துடன் கை குலுக்கி அவளை வாழ்த்தி விடை கொடுத்தான்.

"குமரவேலை பற்றிய கவலை வேண்டாம். ஏதாவது தொந்தரவு கொடுத்தால், எனக்கு தெரியப்படுத்து."

அப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவள் நம்பவில்லை.

( தொடரும்)

பகுதி-5                                                                                                                                                                பகுதி-7

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு