........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

1. சார் டிரைவர் வேணுங்களா?

அய்யம்பெருமாள் அவங்காளுகளில் கொஞ்சம் அதிகம் படிச்சவன்... தமிழ்ப்புலமையும் உண்டு. கொஞ்சம் ஆங்கிலமும் தன்னப்போல கூடச் சேர்த்துக் கொண்டு வெளுத்துக் கட்டுவான். ஆனா, படிச்சவனையும், அவனைப் போல அப்பிராணிகளையும் உலகம் எப்படி நடத்கிறது? அடிமையாக நடத்துகிறது. காவடியெடுத்து அலய வைக்கிறது. தொழுதுண்டு பின்செல்ல வைக்கிறது.

பரோட்டா மாவுபோல அமுக்கி உருட்டி நீட்டிப் பிசைகிற... இது நியாயமாகுமா?

வாட் வள்ளுவர் ஹேஸ் டோல்ட் யு நோ? டோன்ட் நோ? பிறவிப் பெருங்கடல் இன்றிருக்கார். வாழ்க்கை என்பது உப்புக்கடலில் நீந்துவது... அதாவது கண்ணீர்க்கடல். அதிலும் அவனைப் போல நீச்சல் தெரியாத ஆட்கள் என்ன செய்வார்கள்?

அய்யம்பெருமாள் இப்படி யார்க்கிட்டியாவது தத்துவார்த்த ரீதியாய் ஆரம்பித்தால், முதல் கேள்வியே “மாப்ள.. தண்ணியா?” என்று மேலும், கீழும் பார்க்கிறார்கள். கண்ணதாசனுக்குப் பிறகு ஜனங்கள், தண்ணி போட்டால்தான் தத்துவமே பிறக்கும் என்று கணக்கு பண்ணிட்டாப்ல இருக்கு. தப்புல்ல அது?

அவன் கொஞ்சநாள் பட்டணத்தில் வேலை பார்த்தான். நாகரிகத் தொட்டிலில் புதிய குழந்தையானான்... நல்ல டிரைவர் அவன். டிரைவிங்னா என்ன? வார்த்தைலயே இருக்கு... விங் என்றால் சிறகு. அம்பாசடரோ, பியட்டோ, புத்தம்புதிய காபியில் டயோட்டாவோ, அய்யம் ஸ்டீயரிங் பிடிச்சான்னா, வண்டி சும்மா ஸ்வங்னு ஒரு துள்ளல் துள்ளிப் பாட்டுக் கச்சேரி சூடு பிடிச்சாப்போல ஒரு எடுப்பு எடுக்கும். தூங்கிட்டே போலாம். சவாரி அத்தனை சுகம்.

இந்த சுகத்தைத் தாள மாட்டாமல் அவனுக்கு வேலை போய்விட்ட. காரணம் சவாரி சுகத்தில் அவனே ஒரு தடவைத் தூங்கி விட்டான்.

கண்விழித்துப் பார்த்த போது ஒண்ணுமே புரியல அவனுக்கு. சினிமாவில் வர்றாப்ல “நான் எங்கேருக்கேன்?” என்று கேள்வி கேட்டுக் கொள்ள நேர்ந்தது. அதுவும் மேனேஜரிடம்.

ஸ்டீயரிங் ஏரியாவில் உள்ளே அவனே பொறியில் எலிபோல மாட்டிக் கொண்டிருந்தான். அவங்க மேனேஜர்தான் முதலில் மயக்கம் தெளிந்தது, கொப்பரயில் இருந்து இட்லி எடுப்பது போலத் தண்ணீர் தெளித்து அவனை எழுப்பியது.

“நல்லவேளை... நான் யார்னு கேக்காம விட்டியே... நாயே எழுந்திருடா..."

நான் யார் என்பது எத்தனை தத்துவார்த்தக் கேள்வி... அத ஒரு மனுசன் அலட்சியம் செய்தால் உருப்படுவானா?

அவன் வெளியே வந்து காரைப் பார்த்தான். சதையச் சப்பி வீசிய மாங்கொட்டை... புத்தம் புதிய காபி இன்றே கடைசி என்று கிராமத்து சினிமா வண்டி வாசகம் ஞாபகம் வந்தது.

***************

தமிழ் ஆளுகைளில் ஆக்சிடென்ட் செய்த முதல் டிரைவர் யார்? முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி. (பாவி சோமபானக்கூத்தில் தேரை முட்டிட்டு முட்டியாச்சின்னு துவன்ட்டான்... இதான் முடியாட்சி. யார் துட்டுய்யா...) நம்ப அய்யம் பாரி வம்சம். முட்டு சரியில்லாமல் சாய்ந்த எந்த மரத்தைப் பார்த்தாலும் அவனுக்குத் தன் வண்டியைக் கொடுக்கத் தோணி விடுகிறது... வாகான இடம் பார்த்ததும் தன்னைப் போல நாய் ஒரு காலை மாத்திரம் தூக்கி, சலூன் தெளிப்பு தெளிக்கிறதே... அதைப்போல.
நாயால் அடக்க முடியுமா? அவனாலும் முடியவில்லை.

அத்தோடு அந்த வேலை போய்விட்டது. கார் காராய்க் காயலான் கடைக்கு அனுப்புவதில் நிபுணன் ஆனான் அவன். காயலான் கடை வளாகத்தில் வண்டியின் பெண்டைப் பார்த்தே “இது நம்ப அய்யம் பெருமாள் எடுத்த வண்டி” என்று சொல்லுமளவு அவன் பிரபலமாகியிருந்தான்.

ஒரு நபர் பிரபலமாவது இன்று சாதாரண விஷயமா என்ன?

அவன் என்ன செய்யட்டும்... மரத்தில் வண்டி மோதக்கூடாது என அவன் நினத்தால் மனிதர்மேல் மோதி நின்றது வண்டி. மனிதரை விட்டு விடலாம் என முடிவு பண்ணினால் மரத்தில் மோதித்தான் நிற்கிறது.

பிரேக்கையும், ஆக்சிலேட்டரையும் காலுக்குப் பக்கத்தில் அருகருகே வைத்தவன் யார் தெரியவில்லை. மடையன். சில சமயம் பிரேக்குக்கு பதிலாக அவன் ஆக்சிலேட்டரை அழுத்தி விடுகிறான். ஆக்சிலேட்டருக்குப் பதிலாக பிரேக்கையும்...

இதில் ஒரு நல்ல விஷயம். நாட்டில் ஆங்காங்கே அய்யம் பெருமாள் போல நிறைய டிரைவர்கள் உலாவுகிறார்கள் என்பதே. அய்யம் பெருமாள் கம்பெனி மாற்றி கம்பெனி டிரைவரானதில் ரகசியம் இதுதான்.

***************

அய்யம் பெருமாள் டிரைவிங் பத்தி முன்னே பின்னே பேசலாம். அறிவைக் குறை சொல்லவே முடியாது. தெருவோரம் செருப்பு தைக்க உக்காந்திருக்கிறவன் போறவன் வர்றவன் முகத்தையே பார்ப்பதில்ல. காலையே பார்ப்பான். ஏன்? ஏனென்றால் யாரும் முகத்தில் செருப்பு அணிவதில்லை.

எங்காவது சப்பையான வண்டியைக் கண்டால் உடனே அந்த வீட்டுக்கதவை அல்லது கம்பெனிக் கதவைத் தட்டி விடுவான்.

“வணக்கம் சார். நான் ஒரு நல்ல டிரைவர். உங்களுக்குத் தேவை இருக்குமா?” என்பான் நம்பிக்கையான புன்னகையுடன்.

“முதலாளி ஆஸ்பத்திரில இருக்காரு...” என்பார்கள்.

“எப்ப வருவாரு?”

“டாக்டரே ஒண்ணும் முடிவாச் சொல்லல...”

டாக்டர் முடிவு சொல்ல முடியாத விஷயங்களுக்குக் கூட அவன் முடிவு சொல்கிறவனாய் இருந்தான்.

அய்யம் கடற்கரையில் உலா போய்க் கொண்டிருந்தான். உலகத்து வெட்டி வீரமணிகளின், காதலர்களின், கிழடு கட்டைகளின் வளாகம் அது.

நீரின்றி அமையாது உலகம் என்பார் வள்ளுவர். அவன் உலகம் காரின்றி அமையாது.

மாதாமாதம் ஊருக்குப் பணம் அனுப்புவான் அவன். என்ன பாடுபட்டாலும் ஊருக்குப் பணம் அனுப்புவது தவறாது. பத்மினி பாவம், என்று நினைத்துக் கொண்டான். ஒரு குழந்தை. கைக்குழந்தை. வைத்துக் கொண்டு அவள் திண்டாடுவாள்.

இந்த மாதம் முடியாது போலிருந்தது. தன் பாட்டை ஓட்டவே திகைப்பாய் இருந்தது. தாடியைச் சொறிந்தபடி அலைந்தான்.

செருப்பு தைக்கிறவன் டெக்னிக்கில் மரம் மரமாய்ப் பார்த்தபடி அலைகிறான். எந்தக் காரும் நசுங்கிக் கிடக்கவில்லை. காதலர்கள் தான் உட்கார இடமே இல்லை போல நெருக்கியடித்து உட்கார்ந்திக்கிறார்கள்.

விபத்தாகி பாலத்தில் இருந்து விழுந்த வண்டிபோல் சூரியன் மெல்லக் கடலில் இறங்கிக் கொண்டிருந்தது.

அவனுக்கு முன்னே பெரியவர் ஒருவர் காலை விந்தி விந்தி வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். வசதியுள்ள பணக்காரர் போலத்தான் தெரிந்தது.

அதுதானே? - சட்டென்று அவன் மூளையில் பல்ப் பற்றி எரிந்தது.

அவன் விறுவிறுவென்று அவரிடம் போனான். “சார், உங்களுக்கு டிரைவர் தேவைப்படுமா?” என்று அவரிடம் கேட்டான்.

யாரை, என்பது போல் அவர் திரும்பிப் பார்த்து... அதிர்ந்தார். நான்கு மாதம் முன்பு அவர் காலை ஒடித்த அதே மனிதன். “ச்சீ, சனியனே” என்று ஆத்திரத்டன் வாக்கிங் ஸ்டிக்கை ஓங்கினார்.

“பாத்து... விழுந்துறாதீங்க” என்றபடி அய்யம் எடுத்தான் ஜூட்.

***************

இல்லை, உலகம் சிறிதும் வேடிக்கையாய் இல்லை. அது சோகமயமானது. எந்த மரத்தடியிலாவது அவன் படுத்தாலும் கூட நேராய் அவன் மேல் எதோ பறவை எச்சமிட்டு விடுகிறது. அவன் ஆத்திரத்டன் மேலே எறிந்த கல் திரும்ப அவன் மேலேயே மண்டயிலேயே விழுகிறது.

பத்மினியிடமிருந்து கடிதம் வேறு வந்திருந்தது - இங்கே ரொம்ப பணக்கஷ்டம். நானும் குழந்தையும் திண்டாடுகிறோம். நீங்க சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை. உடனே பணம் அனுப்பி வைக்கவும்...

ஆயிரம்பேரைக் கொன்னா அரை வைத்தியன் என்பார்கள். அந்தக்கணக்கில் அவன் பாதி டிரைவர். நகரத்தில் பாதிப்பேர் காலை அவன் ஒடித்தாயிற்று. அந்த மட்டுக்கு அவன் ஒழுங்காக நடமாடுகிறான். அவனுக்கே அது ஆச்சரியம்.

திடீரென்று அவன் மூளையில் பல்ப் எரிந்தது. விறுவிறுவென்று கூவம் சாலைப்பக்கம் போனான். ஆஹா... இந்த ஐடியா ஏன் முன்னாலேயே தோணவில்லை?

கூவக்கரை இடிபாடுகளின் உலகம். பூகம்பம் வந்து அப்போதுதான் ஓய்ந்தாற்போல எப்போதும் ஒரு தோற்றம் தந்தது. ஒரு பக்கம் மரச்சட்டங்கள். பிரித்தெடுத்த தேக்கு, வேம்பு, கோங்கு, ஜன்னல்கள், வாசல்கள், மொசைக் கல் குவியல். மாநகராட்சி என்று பொரித்த இரும்பு அயிட்டங்கள்.

ஆட்டின், மாட்டின் விலா எலும்புகள் தலை, மூளை.. என்பது போல் தொங்கும் வாகன உதிரி பாகங்கள். (எப்போது உதிர்ந்ததோ?)

இதன் இடையே இடம் கண்டுபிடித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்களும், நிர்வாணக் குழந்தைகளுமான சோம்பேரி, சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி வர்க்கம். நடுவே எதையாவது வெல்டிங் செய்து கொண்டு தீபாவளி கொண்டாடும், ழி லி ளி உச்சரிக்க வராத, தொழிலாளி வர்க்கம்.

பொம்பளை ஒருத்தி நடுத்தெரு பார்க்காமல் குளித்துக் கொண்டிருந்தாள். பய ஏதோ துணி. ஈரத்தில் கிளி மூக்கு மாம்பழம் காட்டியது. அய்யம் பெருமாளுக்கு நின்று பார்க்க ஆசை. முதுகில் டின்னு கட்டிருவாங்கப்போவ். சிலிர்த்தெழுந்த பயத்துடன் சாவி பொம்மையாய்க் கடந்து போனான்!

நடுநடுவே எகிறி வெளிப்பாயும் சாக்கடைத் தண்ணீர். தூய வெள்ளாடையுடன் அதனருகே, சாமிக்கு நேர்ந்து கொண்டாற்போல, அங்கப்பிரதட்சிணம் செய்தபடி புரண்டு கொண்டு யாரோ.

அங்கப்பிரதட்சணம் எங்க ஆரமபிச்சானோ? தேர் இதுவரை வந்திருக்கிறது!

டங் டங்கென்று கடக்கும் ரிக்ஷாக்கள், மீன்பாடி வண்டிகள்.

அய்யம் பெருமாள் மணியைத் தேடிக் கொண்டு போயிருந்தான். மணி அவங்க ஊர்க்காரன். இருவரும் ஒண்ணாய்ப் பட்டணத்துக்கு வந்தவர்கள். அய்யம் டிரைவர் ஆனான். அவன் டிரைவர் ஆனதும் மணி காயலான் கடை போட்டான்.

சுருக்கில் மணி தன் காயலான் கடையப் பெரிதாக்கி விட்டான். மணி வித்தைக்காரன். சப்பிப்போட்ட மாங்கொட்டையில் இருந்து பழத்தை உருவாக்க முடியுமா? மணியால் முடியும்.

ஆக்சிடெண்ட் ஆகி நொறுங்கி.... எந்த நிலையில் வந்த காரையும் பெண்டு நிமிர்த்தி மணி நேராக்கிச் சீராக்கினான். பெயிண்ட் தெளித்து மழைக் கீறல் விழுந்த இடங்களைப் புத்தம் புதிய காபி திரைப்படம் போலாக்கினான்.

அவன் போனபோது மணி அப்போதுதான் டீ குடித்து டம்ளரைக் கீழே வைத்தான். அடடா, கொஞ்ச நேரம் முன்னால் வந்திருக்கலாமே என்றிருந்தது பெருமாளுக்கு.

அம்பாசடர் காருக்கு அடியில் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. காயடிக்கப்பட்ட மாடுபோல.

“என்ன மணி, எப்படியிருக்கே?” என்று கேட்டான் பெருமாள்.

“ ஏது வா மச்சான்” என்று திரும்பினான் மணி. “ உம், மூணு மாசமா ஒண்ணும் ஓட்டம் சரியில்லப்பா...”

“ஏன்?”

“தெர்ல. நீ எப்பிடி இருக்க?”

“மூணு மாசமா வேலை கிடைக்கல...”

“அதான். என் தொழில் டல்லடிக்குது” என்றான் மணி.

அதெல்லாம் சும்மா. வெள்ளையும், சொள்ளையுமா எப்படி நிற்கிறான். எப்ப ஒரு வண்டி விபத்தாகுதோ, அது ராசியில்லாத வண்டி, என்று ‘தள்ளி’ விடத்தான் பார்க்கிறார்கள். மணி காட்டில் இரும்பு மழை!

அய்யம் பெருமாள் வந்த கோலத்தைப் பார்த்ததுமே மணி யூகித்து விட்டான்... ஒருவேளை கடன், கிடன் வாங்கக்கூடும் என்று. அதனாலேயே தொழில் சுகமில்லை என்று அடக்கி வாசிக்கிறான்.

அவனைப் பட்டணத்க்கு இழுத்து வந்ததே நான்தான்... எனக்கே தண்ணி காட்டுகிறான். அய்யம்பெருமாள் பெருமூச்சு விட்டான்.

பணம் கடன் கிடைக்காதது இருக்கட்டும். குறைந்த பட்சம் டீ கூடக் கிடைக்காது போலிருந்தது. கொஞ்ச நேரம் வெட்டியாய்த் தாடையச் சொறிந்தான். சொறிந்து, சொறிந்து தாடையே புண்ணாகிவிடும் போலிருந்தது.

சரி, இன்னிக்கு முழிச்ச முகம் சரியில்லை. என்று கிளம்ப நினைத்த நேரம் அது நடந்தது...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

***************

அவங்க ஊருக்குப் பக்கத்துக் கிராமம் பெரியகுளம் ‘பெரியபுள்ளி’ பாண்டித்துரை தடபுடலாக அந்தப் பக்கம் வந்தார். பன்னீர்ப் புகையிலை பாண்டித்துரை. அந்த மணத்தை அனுபவித்தவுடன் தனி உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் அய்யம் திரும்பிப் பார்த்தான்.

“வணக்கம் ஐயா” என்றான் மணி எழுந்து நின்றபடி.

பரபரப்பாகி, பிச்சைக்காரனுக்கு முன்னால் எட்டி வந்து வீட்டுக்குள் நோட்டம் விடும் நாய்போல, மணிக்கு முன்னால் வந்து “வணக்கம் சார்” என்றான் பெருமாள் சிரிப்புடன்.

“ஆர்றா?”

“நாந்தாங்க பெருமாள். அய்யம்பெருமாள். மேலப்புதூர்...”

“பேரைக் கேட்டா நெளியறான்” என்றார் அவர்.

ஆளும், மண்டையும், அவன் நெளிஞ்சி அவனே ஆக்சிடென்டான காராட்டம் ஆயிர்றான்.

பாண்டித்துரையென்றால் ஊரில் பிரசித்தமானவை ரெண்டு விஷயம். ஒன்று அவரது பன்னீர் புகையிலை வாசம். ரெண்டாவது அவரது வில் வண்டி.

“எப்டிப் போயிட்ருக்கு மணி?”

“எல்லாம் ஐயா தயவுதாங்க” என்றான் மணி.

அடப்பாவி என் தயவு எதுவும் இல்லையா... என்று நினத்துக் கொண்டான் பெருமாள்.

“எங்க ஐயா இந்தப் பக்கம்?”

“கொஞ்சம் ஜவுளி எடுக்கலாம்னு.. என்ன வண்டி இது? புதுப் பெண்ணாட்டம் ஜிலுஜிலுப்பாக்கிட்டிருக்கே?”

“புதுவண்டிதான். நல்ல கண்டிஷன்” என்கிறவன், திடீரென்று யோசித்துச் சொன்ன மாதிரி, “அதுதானே, ஐயாவுக்கு மாத்தி முடிச்சிறலாங்க... என்ன சொல்றீங்க?” என்றான்.

“ஐய வேணாம்பா. நம்மூருக்கு லாயக் படாது...”

“அப்பிடிச் சொல்லாதீங்க. எத்தனை நாள் மாட்டு வண்டில போவிங்க? பழைய பொண்ணு அது. இது புதுப்பொண்ணு..”

பன்னீர்ப் புகையிலை மணக்கச் சிரித்தார். கொஞ்சம் யோசித்தார். வண்டி இருந்தா அதுக்கு டிரைவர் வேணும். நல்ல நம்பிக்கையான ஆள் கிடைக்கணும்...” என்ற போது அய்யம் பெருமாள் சிலிர்த்தெழுந்தான்.

“சார் டிரைவர் வேணுங்களா?” என்று கேட்டான் அய்யம் பெருமாள்.

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-2

 
                                                                                                                                                                                                                 முகப்பு