........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

2. பத்மினியைப் பார்க்கனும்!

பெரியகுளம் பன்னீர்ப்புகையிலை பாண்டித்துரை ஒருமுறை அவனை நன்றாகப் பார்த்தார். அவர் பார்வையில் இருந்த, வேலை கிடைக்கும்-கிடைக்காது என்று சொல்ல முடியாதிருந்தது. அவனுக்கு உள்ளூர வியர்த்தது. அவன் வாழ்க்கையே அவர் நாக்கில் வெளவால் போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொத்தென்று கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாய் இருந்தது அவனுக்கு. எதற்கு இந்த சஸ்பென்ஸ், ஏன் இந்த மௌனம் புரியவில்லை. கட்டுப்பாட்டை மீறி ஓடும் கார் போல அவன் இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது.

"வேணாம்" என்றார் பி.பி.பி. பொத்தென்று விழுந்தது வெளவால்.

"வேணாமா?" என்று எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

"கார் வேணாம்" என்றார் அவர்.

அப்ப டிரைவர் மட்டுமாவது வெச்சிக்கப்படாதா...!

"அட, இத விட்டா உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் அமையாது முதலாளி..." (அவருக்கா, அவனுக்கா?) என்றான் மணி பதறி. "புத்தம் புது வண்டி. விட்டா இதுமாதிரி உங்களுக்கு...”

அய்யம் வண்டியைப் பார்த்தான். பதிவு எண்ணைப் பார்த்தாலே பாடாவதி என்று தெரிந்தது. ஆனா மாட்டு வண்டிக்கு இது எவ்வளவோ மேல்தான். (புது எடுப்பில், ஆனால், அதே வேகந்தான் போகும்.) வண்டியைப் பத்தி எதுவும் தெரியாதே, வண்டியின் தேவை பத்தி எதுவும் தெரியாதே... துட்டு வெச்சிட்டே என்ன பண்றதுன்னு தெரியாது அலையிற பார்ட்டி இது. புத்தியும் வாழை மட்டம். எப்பவும் இது மாதிரி மாட்டி விடுமா என்ன?

மெல்ல மூச்சு வந்தது அய்யத்க்கு. அவன் மணி பேசுவதைப் பார்த்தான். புன்னகை பூத்த உற்சாக முகம். நம்பிக்கை... ஆ, அது ரொம்ப முக்கியமானதாச்சே! வில்லாதி வில்லனையும் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை.

வெளவால் எழுந்து வந்து மணியின் நாக்கில் அமர்ந்து கொண்டது...

என்ன பெரிய பட்டணம். அது போட்டி பொறாமை நிறைந்தது. தெரு நடுவே நிறுத்திக் கொண்டு வழியும் சாக்கடைத் தண்ணீர் போல அது டிரைவர்களால் நிரம்பி வழிகிறது. நம்மூரானால் சுத்து வட்டாரத்தில் வேறு கார் கிடையாது. கார் டிரைவர்னா ஒரு தனி எடுப்பு, தனி அந்தஸ்து. அதன் கம்பீரம் தனிதானே? வெளவாலுக்கு இதயமே படபடக்க ஆரம்பித்து விட்டது.

"அதுக்கு வேளை வரணுங்க முதலாளி. பாருங்க நல்ல சகுனம். இந்தக் காருக்கே வந்தாப்ல நீங்களும் வந்து சேந்துருக்கீங்க" என்றான் மணி.

"நானும்..." என்றான் அய்யம் பெருமாள்.

அவர் இப்போது திரும்பி அய்யத்தைப் பார்த்தார். அய்யத்தை ஐயத்துடன் பார்த்தார். திரும்ப அவரது யோசனை உள்ளே உருள ஆரம்பித்தது. உருளைக்கு அடியில் அவன். அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது.

பொதுவா யார் இப்படிப் பார்த்தாலும் அவனுக்கு ஒண்ணுக்கு நெருக்கி விடுகிறது.

மணி அவனைப் பார்த்தான். மணியின் எதிர்காலம் வெளவால் போல இப்போது நம்ப அய்யம்பெருமாள் தோள் மேல். நாய்ப்பயல். ஆனால் டிரைவர்.

மணியை விட அவனுக்குக் காரின் நுணுக்கம் எல்லாம் தெரியும். அதிக விவரம் விவகாரந் தெரியும், என இந்த நாய் பி.பி.பி நம்புகிறாப் போலப்பட்டது. அது மணிக்குப் பிடிக்கவில்லை.

பி.பி.பி., "ச்-" என்று தலையாட்டி இரண்டு வெளவால்களயும் உதறினார், பெண்கள் தொங்கட்டான்களை உதறுகிறது போல..

"என்ன சார்?" என்றன வெளவால்கள்.

"சின்ன ஊரு. எட்டினாப்ல எல்லை. தொட்டாப்ல சுத்தி வளைச்சி கிராமம். தோட்டம், துரவு. நல்ல ரோடு கூடக் கிடையாது... அவனவன் அங்க பஸ்சு விடவே அஞ்சறான்” என்றார் பி.பி.பி.

"ஆமங்க முதலாளி" என்று மணி ஆமோதித்தான். வாட்டிஸ் திஸ்? அய்யத்துக்கு ஆச்சரியமாய் இருந்தது. "ஆனா, அப்படியாப்பட்ட ஊர்ல ஒரு அமையஞ்சமயம்னா நீங்க என்ன பண்ண முடியும்? நீங்க நினைப்பாப்ல ஒரு இடம் கிளம்ப முடியுமா? பஸ்சுக்குக் காத்திருக்கணும். அது எதுக்கு? உங்க மாதிரி ஆளுங்க காத்திருக்கறதா?” என்று மணி ஸ்டீரியங்கைத் திருப்பினான்.

"ஆமங்க" என்று இளித்தான் அய்யம். அவர் முகத்தைப் பார்த்தால் பேரம் படியும் போல்த்தான் இருந்தது. அட, அவசரப்பட்டு இந்தாளை அறிவாளின்னு தப்பா எடை போட இருந்தேன்! "வண்டில டங்கு டங்குனு தலை இடிக்கப் போகணும். எப்ப மாட்டப் பூட்டி எப்ப போயிச் சேர? வீட்லயே ஒரு எமர்ஜென்சி... ஆசுபத்திரின்னு கிளம்பறீங்க..."

"என்னப்பா வண்டி வாங்கு முன்னயே ஆஸ்பத்திரிங்கறே?" என்றார் பண்ணை இடக்காக. அதை வெகுவாக ரசித்துச் சிரித்தான் மணி.

"நல்லா கண்டிஷன் பண்ணி வெச்சிருக்கேன். ஒரு ரவுண்டு எடுங்க. பெருமாளு, சாரக்கூட்டி உக்கார வெச்சிக்கிட்டு எட்டு போட்டுக் காமி...”

பெருமாள் எச்சிலைக் கூட்டி விழுங்கினான். அவன் கணக்கில் வீக்.

நல்ல வேளை அதை அவர் சட்டை பண்ணவில்லை. "மணி, டிரைவர் எப்படி?" என்று கேட்டார். இப்போது மணி ஒரு தோரணையுடன் பார்த்தான் இவனை. பன்னாட, குளிச்சிட்டு துன்னூரு, கின்னூரு பூசி, கொஞ்சம் அம்சமா வந்திருக்கப் படாதா?

மீண்டும் அய்யத்துக்கு ஒண்ணுக்கு நெருக்கியது.

"நம்ம பக்கத்து ஊர் ஆளு. சீட்டு சிகரெட்டுனு பிடிக்காத கை... தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்குங்க..." என்று அவன் வயிற்றில் பாலை வார்த்தான் மணி. டீ தரவில்லை. வெறும் வார்த்தைப்பால்!

இந்த வேலை அமைஞ்சால் துரத்தி வந்து கமிஷன் கேப்பான் குடுக்கணும். அவன் ஜாதக விசேஷம் அது. சில பேருக்கு எந்தப் பக்கம் பார்த்தாலும் காசு படியும். வண்டிய மோதினது நான்னு அய்யம் வந்து கமிஷன் கேக்க முடியுமா?

"என்னடா?" என்றார் பாண்டி கூட வந்த சகாவிடம். "உங்க இஷ்டங்க" என்றான் அவன். 

***********

ஆக, அவனுக்கு வேலை படிஞ்சிட்டது. நல்ல நாள் பார்த்து அவனே வண்டியோட்டி பெரியகுளம் வரணும்... என்று ஏற்பாடு. அவனுக்கு வேலை கொடுத்த மகாத்மாவின் கட்டளை அது. அப்படி ஏற்பாடு செய்து விட்டவன் மணி. முதலாளி தலை மறைந்ததும் கமிஷனைத் தா, வண்டிச் சாவியைப் பிடி, என்பான். பிசாசு. சமாளிக்க வேண்டும்.

வீட்டு வாடகை தரவில்லை. மெஸ்சுல சாப்பாட்டுக் கடன். அயர்ன்காரனுக்கு மற்றும் சில்லரைக் கடன்கள் இருந்தன. யார் கண்ணிலும் படாமல் காலி செய்து விட்டு ஓடிவிட வேண்டும்.

ஊர் வரை வண்டியெடுக்க பெட்ரோல் காசு, டிரைவர் பேட்டா என்ற மணி அக்கறையாய் வாங்கிக் கொண்டான். சரியா பெட்ரோல் அளந்து ஊத்துவான். டிரைவர் பேட்டாவுக்கு டாட்டா... வழிச் செலவுக்கு என்று தன் பாட்டைப் பார்த்துக் கொள்ளணும். அது வேறு.

என்னடா அது வேறு, இது வேறு... மொதல்ல வேலை கெடச்சதே, அதப்பாரு- என்ற மனசு. “அம் கிட்டத்து ஊர்ல” என்று மறு பக்கம் இருந்து பந்தடிக்கிறான் மணி. கை நிறையத் துட்டு. அவனுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை.

நம்ம ஊர் ஆட்கள் என்கிற அடையாளம் பெரிய விசயந்தான். முதலாளி நம்பிப் பொறுப்பை விட்டு விட்டுப் போயிட்டாரே...

ஒரு நல்ல நாள் பார்த்து வண்டியில் அமர்ந்து சாவியைத் திருகினான். ஆண் நாயிடம் வாலை உள்ளடுக்கி ர்ர்ர்ர் என்னும் பெட்ட போல உருமிய வண்டி. நல்ல சகுனம் பார்த்து, புது வண்டியில் முதல் ஆக்சிடெண்ட். எலுமிச்சம் பழத்தை அமுக்கிக் கொண்டு கிளம்பிச் சென்றான்.

பாடாவதி வண்டி அநியாயத்துக்குக் குலுங்கிய, அசல்... ஒரிஜினல் மாட்டு வண்டி போல.. ஹாரனைத் தவிர எல்லாத்தில் இருந்தும் சத்தம் வந்தது. கியர் மாத்தும் போதெல்லாம் பருவப் பெண் கூச்சப்பட்டாப் போல ஒரு தளுக்கு. ஒரு குலுக்கு.

"என்னா மணி வண்டி இது?"

"ஒரு தராதரத்துக்கு இது நந்தவனத் தேருடா” என்றான் மணி. வாயை மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று.

என்ன இருந்தாலும் பட்டணத்தை அவன் குறை சொல்லிருக்கப் படாது. அது தப்பு. அவனுக்கு வேலை தந்தது அம்மையில்லாது, என்று நினத்துக் கொண்டான் அய்யம். பட்டணம் நல்ல மனிதர்களால் 

ஆனது. அங்கே ஏராளமானோர் ஏமாறக் காத்திருக்கிறார்கள். எத்தனை பேர் அவனுக்குக் கடன் கொடுத்தார்கள் எத்தனை பேர் அவனுக்கு வேலை கொடுத்துக் கால் கொடுத்தார்கள்! அல்லது கால் இழந்தார்கள்...

சில பேர் தூங்கவே மாட்டான். ஆனா சலூனுக்குப் போய் மண்டையைக் கொடுத்ததும் சும்மா அப்டி சொக்கும் தூக்கம். பிஸ்ஸ் பிஸ்ஸ்ன்னு அப்பப்ப தலைல முகத்துல தண்ணி விழும் நாய் ஒண்ணுக்கப் போல... விறுக் விறுக்னு கத்திரிக்கோல் குறுகுறுப்பு. மண்டையில் கரப்பான் ஊர்றாப்ல... இருந்தாலும் தூக்கம் அம்பாட்டுக்கு... தர்மம் தலை காக்கும்னு தூங்கிருவாங்க. அதப் போல அய்யத்துக்கு டிரைவர் சீட்டில், வராத தூக்கமெல்லாம் வந்தது.

அதிலும் ராப்பயணம் வேறு. சரி ஓடிப்போக ராத்திரிதான் சௌகரியம். விடிஞ்சா ஊர் எல்லை மிதித்து விடலாம்... என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.

பத்மினிக்கு உற்சாகமாய் எழுதினான். ஆ அருமை பத்மினி.... நமக்கு நல்ல காலம் பிறந்தாகி விட்டது. (பாண்டித்துரைக்கு கேடு காலமா?) எனக்குப் பக்கத்து ஊரீலேயே வேலை... காரை எடுத்துக் கொண்டு அதிகாலை நம்ப வீட்டை எட்டிப் பார்த்து விட்டுத்தான் முதலாளியப் பார்க்கப் போவேன். நம்மூர் ஆளுங்க மத்தியில் ஒரு ராஜாவாய் அறிமுகம் செய்துக்குவோம்.

நீயும் தனக்குட்டியும் ஏறிக்கங்க. ஓர் ரவுண்டு அடிப்பம். என்ன சொல்றே?

ஜோரான கனவுகள்.

எல்லாம் எழுதி கடைசியில் கடிதத்தைக் கிழித்துப் போட்டான். அதான் அய்யம். திடீர்னு ஒரு காரியத்துல பாதில குழம்பி... விளைவு? ஆக்சிடென்ட்! சஸ்பென்சாய்ப் போய் எறங்குவம். அவ அசந்துற மாட்டாளா? அய்யம் புன்னகையுடன் தன்னையே அங்கீகரித்துக் கொண்டான்...

*************

பகலில் நெருப்பாய்க் கொட்டிய வெப்பத்துக்கு இராப்பயணம் சுகம். நல்லா அடங்கிய காத்து... சட்டையைக் கழற்றி பனியனை மாத்திரம் போட்டுக் கொண்டு போனான். "ஏ மாப்ள தூங்கிறாத" என்ற மனசை ஆயிரம் முறை வேண்டிக் கொண்டான். எதாவது பாடலாம் போலிருந்தது. அய்யம் கொஞ்சம் சுமாராய்ப் பாடுவான். எல்லாம் அந்தக்காலப் பாடல். நல்ல நல்ல கருத்துள்ள... (பாட்டி காலத்துப் பாட்டு அது பாட்டு!) இந்தக் காலப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா? பாடறதே புரிய மாட்டேங்குது. புரிஞ்சாலும் ஒண்ணும் விசயம் இல்ல. என்னமோ ஓ போடுன்றான். எனக்கு ஓ போடணும் தெர்யல... டங் டங்னு ஒரு ஆட்டம் வேற. அந்த ஆட்டத்தைப் பார்த்தாலே உடம்பு வலிக்கிறது.

சில பேர் சிகரெட் பிடிச்சான்னா ஒண்ணோட நிறுத்த மாட்டான். ஒண்ணு தீர அடுத்ததைப் பொருத்திக்குவான். கல் சிவப்புக் கல் மோதிரம் போல சிகரெட். சாம்பல் பூத்துப் பூத்து ஆயுசைக் குறைக்கும். அதன் தலையை அப்டியொரு சுண்டு சுண்டிட்டு ஒரு ஸ்டாலில் குலுக்கினா ஒரு தோரணை. திரும்ப வாய்ல வெச்சி இழுத்தா டிராபிக் சிக்னல்ல சிவப்பு விழுந்தாப்ல கங்கு எரியும். சிவப்பு மாற அடுத்த சிகரெட். .. அதைப் போல ராப்பயணத்துக்கும் அதுக்கும் பயமில்லாம வெக்கமில்லாம பாட்டு மாத்தப் பாட்டு கிளம்பியது.

மனசில் என்னென்னமோ யோசனை. அடிக்கடி பத்மினியப் பத்தி. பத்மினியின் முத்தம் பத்தி. உடம்பு வாசனை பத்தி... அவ சிரிப்பு. தளுக்கு.. பார்த்தே எத்தனை நாள் ஆச்சு மெலிந்த கீரைத் தண்டுக் கால்கள். அந்தக் கால்களை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருக்கும் போது எடுத்து மடியில் வெச்சிக்குவான். காலுக்கு மஞ்சள் பூசிக் குளிப்பாள். என்ன வழுவழு. முடியே இராது. மேலே ஏற ஏற சூரியன் பார்க்காத ஒரு பளீர். அப்படியே தடவிக் கொடுக்கக் கொடுக்க வெட்கப்பட்டு நெளிவாளே தவிர அவளுக்கும் பிடித்தமான விசயந்தான் அது. ஒரு கொலுசு வாங்கிப் போடலாம். வசதி வேணுமே?...

மாப்ள தூங்கிறாதே, என்று குரல் கொடுத்துக் கொண்டான். நல்ல சாலை. போக்குவரத்து மட்டாய் இருந்தது. விளக்குகள் சீராய் ஊரெல்லை தொடத் தொட எரிந்த வண்ணமிருந்தன. ஊர் எல்லைகளில் டீக்கடையில் பெட்ரோ மாக்ஸ் விளக்கு தான் மாத்திரம் விழித்திருக்கிறதைப் பலமாய் ஆட்சேபித்தது தஸ்புஸ்சென்று டிக்ஷனரி அறியாத பாஷையில் சீறியது. வெள்ளை வெளேர் மாண்டில், ஆண் குழந்தையின் விதக் கொட்ட.

மூணு மாசம் திண்டாடிட்டதே என்றிருந்தது. தினம் ஒரு வேளை நல்ல சாப்பாடுன்னாக்கூடப் பரவால்ல. மீதிப் பொழுதைச் சமாளிச்சிக்கிறலாம். அதுக்கே திகைப்பாய்ப் போச்சு. ஏறியிறங்காத கம்பெனி இல்ல. கம்பெனி வேலைன்னா கறாரா பகல் வேலை. எட்டு மணி நேர வேலை. கொஞ்சம் அதிகமானாலும் காம்பன்சேஷன் உண்டு. பேட்டா என்றோ, ஓவர் டைம் என்றோ கிடைக்கும். மறுநாள் தாமதித்து வேலைக்கு வரலாம்.

வீட்டோட டிரைவர்னா அது ஒரு மாதிரி. நச்சு பிடிச்ச வேலை. அந்தம்மா காய்கறி வாங்கப் போகும். பசங்களை ஸ்கூல்ல விடச் சொல்லுவாங்க. புருசம் பொண்டாட்டி சண்டையின்னா உடனே "டிரைவர் வண்டியெடு!"ம்பாங்க. ஆனா, கிளம்பி வர மாட்டாங்க. குழப்பமா இருக்கும். அவங்க சண்டைய வாயப் பொளந்துக்கிட்டே வேடிக்கை பார்த்து நிற்பான். நம்ப என்ன செய்யணும்னே தெரியாது. திடீர்னு கெடச்சதெல்லாம் பறக்கலாம். படிச்சவங்கதானா இங்கன்றாப்ல வார்த்தைங்கல்லாம் வரலாம். செருப்படி வெளக்குமாத்து அடிகூட விழும். சிரிச்சிறப்படாது. அப்பறமா அவங்க ரெண்டு பேரும் சமாதாமானமான பிறகு நம்மள வீட்டுக்கு அனுப்ச்சிருவாகல்ல!...

சரி, சண்டை இப்ப முடிஞ்சிரும், முடிஞ்சிரும்னு பாத்தா, அது இடைவேளயா இருக்கும்... பெரும்பாலான சண்டைங்க ஆம்பளைங்க விட்டுக் கொடுக்கறாப்லயே முடிஞ்சிருது. ஏன்? தெர்யல...

தெருவில் வெளிச்சம் ஆங்காங்கே தலையணை  போலவும் இருட்டு பாய் போலவும் கிடந்தன. அவனுக்கு அந்த நினப்பே தூக்கம் வந்தது. உடம்பு ஒரே மாதிரி கிடந்ததில அயர்ச்சியாய் இருந்தது. தெருவோரம் நிறுத்தி விட்டு வெளியே வந்தான். நல்லா தண்டி தண்டியாய் மரங்கள். இருட்டைப் பாட்டிலில் போட்டு வைத்தாப்போல. கார் முன்பக்கத்தைத் திறக்க நல்ல ஆவி பறந்தது. இட்லிக் கொப்பரையைத் திறந்தாப்ல. போய் தரைக்கு நுரைக்க ஒதுங்கினான். பரமானந்தம். தூக்கக் கலக்கம் வேறு. 

உடம்பை நெளித்து முறுக்கிச் சொடக்கு எடுத்தான். உள்ளே பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்தான். குடிக்கக் குடிக்க உள்ளக் கடலில் குளிர். வாயைக் கொப்பளித்தான். கிளம்பலாம்...

இனி எங்கயும் தங்கிவிடக் கூடாது. நேரா நம்மூர்தான்...

திடுதிப்பென்று பத்மினி முன் போய் நிற்கப் போகிறேன். மஞ்சப் பூசும் பத்மினி. பெரிய பெரிய வைக்கோல் கட்டுகள்.. சாய்பாபா! இந்த பாரம் தாளுமா வண்டி? குடசாய்-பாபா ஆயிறப்போவுது.

பயண உற்சாகத்துக்குக் குறைவில்ல. நம்ம ஊர், நம்ம சாதி சனங்களப் பார்க்கப் போகிறேன். பத்மினி... இதோ வருகிறேன். உன் சிறிய உதடுகள்... ஆ! பல் தேய்த்திருந்தால் நல்லது.

ஊர்! அவனது ஊர்! உற்சாகமாய் இருந்தது. அவன் தெரு. அவன் வீடு... ஆனால், பூட்டியிருந்தது. பத்மினி குழந்தையுடன் அவள் அப்பா வீட்டுக்குப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள்.

"என்னல கார்... ஏது?" என்றார்கள்.

"நம்மதுதான்!" என்றான் உற்சாகமாய்த் திரும்பி.

“நம்மது தான்னா? ஒன்ட்ட ஏதுல அவ்ள துட்டு? எலேய், அரவமில்லாம எவனிதையாவது தள்ளிட்டு வந்துட்டியா?” என்றவனை முறைத்தான். 

என் முகராசிக்கு இப்பிடித்தான் கேள்வி அமையும் போலும்....

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-1                                                                                                    தொடர்கதை பகுதி-3

 
                                                                                                                                                                                                                 முகப்பு