........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -3

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

3. திருஷ்டி பொம்மை மாதிரி...

வேலை இருந்த நாளிலேயே நித்தியப்பாடுகள் சிரமந்தான். ஊர் ஞாபகமும், தனிமையும் வெயிலாக உள்ளே வாட்டும் அவனை, அன்பான, அவன்மேல் உயிரான மனவி. சட்டென்று உணர்ச்சி காட்டிவிடும் முகம். அழும். உடனே குழந்தையாய் மலர்ந்து சிரிக்கும் முகம். சிற்றுடம்பு. கவிதை. தொட்டணைத்தால் கொடியென வளைவாள். கூச்சசுபாவம் கடைசிவரை அவளுக்கு மாறவே இல்லை என்பதே சுவாரஸ்யமாய் இருந்தது.

கிளர்ச்சியும் பரபரப்புமாய் வந்திருந்தான் அய்யம்பெருமாள். அவள வாசனை பிடித்து யப்பா, எத்தனை காலமாயிற்று. மனசில் அவளது பெண்மையும் உதட்டு சூடும் கற்பன லகரியைக் கிளறிப் பரத்தியிருந்தன. உடலெங்கும்ஒரு முறுக்கம், ஜிவ்வென்று ஒரு சூடு வந்திருந்தது. திருவிழாவுக்கு முன் அம்மன் கோவிலில் கொடியேத்தினாப் போல. ஊர் நெருங்கவே தன்னைப்போல பாட்டுக்குக் குறையவில்லை.

எல்லை வரும்வரை தத்துவப் பாடல்கள் - மயக்கமா, தயக்கமா... மனதிலே குழப்பமா? - நிலவே என்னிடம் நெருங்காதே.. ஊர் நெருங்க நெருங்க தானறியாமல் காதல் பாடல்கள். சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ? - ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை... இடையே டக்கர டக்கர என்று தாளத்தை வேறு வாயிலேயே...

வீட்டுக்கு வந்தால், ஆ... பூட்டிக் கிடந்தது. சாவி பக்கத்து வீட்டுக் கிழவியிடம் தந்துவிட்டுப் போயிருந்தாள். இருந்தும், அவள் இல்லாத வீடா? அது ஒரு கேடா? உள்ளே நுழைந்த போது மனசில் சோககீதம்... நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார்... காதலுக்கு வாத்தியார். சோகம்னா சிவாஜி! “அடச்சீ!” என்று தும்மலாய்ப் பாட்டை உதறினான். உள்க்கொடியில் அவளது புடவை. ஜம்பர். உள்ளாடை. ஒரு கொடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா, மலர்ந்ததம்மா.. குழந்தையின் ஜெட்டி.... என்று உலர்ந்து கிடந்தன. பைத்தியக்காரன் மாதிரி உள்ளே அவன் பெண்டாட்டியைத் தேடினான்.

சாப்பாட்டுக்கு என மூணு மாசமாய்ப் பணம் அனுப்ப முடியவேயில்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தனியே அவள் எப்படிச் சமாளித்தாளோ.. அழுகை வந்தது. உனக்கெல்லாம் குடும்பமே லாயக்படாது நாயே...

ரொம்ப நேரம் தங்க முடியாது. திரும்பப் பெரியகுளம் போய்விட்டு - வண்டியை ஒப்படைத்து விட்டு, தபாலாபீஸ் போய் பத்மினிக்கு ஒரு தந்தி அடிச்சி வரச் சொல்லணும். எப்படியோ பத்தைந்நூறு தேத்திக்கொண்டு வந்திருந்தான். சாயல்குடியில் மூனாபானா கடையில் போன் இருக்கிறது. சரக்கு எப்பிடியோ, ஆள் தன்மையான மனுசன். கூப்ட்டு விடுவாரு. அட, பரவால்லன்னு டிரங்க்கால் போட்டுப் பேசுவம்.

அட, சொன்னாப்ல இங்கருந்தே பேசலாம்ல? ஆளைப் பார்க்கத்தான் முடியாது. ரெண்டு வார்த்தை ஆசையாப் பேசுவம்...

மழை விழுந்த செடியாக மனசு சிலிர்த்தது... காதோடுதான் நான் பேசுவேன்!

பலசரக்குக் கடையில் இருந்து நாலாவது, அஞ்சாவது வீடு மாமனார் வீடு. கால் எடுத்தான்.

“அலோ மூனா பானா...” என்று செட்டியார் பரமசிவத்தன் குரல். நெற்றியில் சிமென்ட்டு ரோடு போட்டாப்ல செமத்தியான விபூதி குங்குமம் எப்பவும் அணிந்திருப்பார். குரலிலேயே விபூதி மணத்தது.

“அண்ணாச்சி, நான் பெருமாள். அய்யம்பெருமாள்...”

“எலேய், எங்கருந்து பட்டணத்லேர்ந்தா..?”

“இல்லண்ணே, நம்பூர்லேந்துதான்... மேலப்புதூர்.”

“மூணு நாலுமாசமா ஒன்ட்டேர்ந்து தகவலே இல்லைன்னு மவராசி இங்க வந்து கண்ணக் கசக்கிட்டுக் கெடக்கா... என்ன நெலவரம் ஏதுன்னு எழுதறதில்லையா?”

சட்டென்று கண்ணீர் வந்தது. “எல்லாம் சரியா வந்துரும்.. அண்ணாச்சி. நம்ப பாண்டித்துரை அண்ணாச்சி இல்ல? பெரியகுளம்? தேர்தல்ல நின்னு தோத்துப் போனாரோ... அவுக கார் வாங்கீர்க்காங்க.. நானே டிரைவரா அவர்ட்டச் சேந்தாச்சி...”

“ரொம்ப சந்தோசம். உங்க மாமனார் ஒரு ஆயிரம் ரூவாக்கு மேல் கணக்கை நிப்பாட்டியிருக்கார். வந்து முடிச்சிட்டுப் போ. வெச்சிறவா..” என்றார். பகீரென்றது.

“நம்ம வீட்ல... கூப்ட முடியுங்களா?” என்று எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.

“இப்பதான் சரோஜாவோட குளிக்கப் போறதைப் பாத்தேன்...” என்றார் அவர்.

“சரிங்கண்ணாச்சி, வந்தா தகவல் சொல்லுங்க. நான் வண்டிய ஒப்படைச்சிட்டு, மறுபடியும் மேலப்புதூர் வரேன். அவளையும், குழந்தையையும் மாமாவக் கொண்டுவந்து விடச் சொல்லுங்க” என்று போனை வைத்தான்.

இன்னிக்கு அவளைப் பார்க்க வாய்க்குமா என்றே தெரியலியேடா? இருந்த ஆத்திரத்தில் தலையை வறட் வறட்டென்று சொறிந்தான். விளக்குப் பிறைப் பக்கம் அவளும், அவனுமாய் எடுத்துக் கொண்ட படம். கல்யாண சமயத்தில் திருவிழாவில் எடுத்தது. கலர்ப்படம். அதென்னமோ இங்க கலர்ப்படம் எடுத்துக் கழுவினா ஒரு சாயப் பொடிக்கலர்தான் வருது. பட்டணத்துல படம் எடுத்தா அதன் அம்சமே தனிதான்...

மஞ்சள் பூசியிருந்தாள். படத்திலும் தனியே அது தெரிந்தது. முகத்துப் பவுடருக்கும் அவ உடம்புக் கருப்புக்கும் மஞ்சளுக்கும் ஒரு இளம்பச்சை, மாம்பழக்கலர். காலை வெயிலின் மினுமினுப்பு. ஹ... என்று மூச்சு விட்டான். தாபம் வாட்டியது. ரெண்டு வரி எழுதிப் போடாததுக்கு இத்தாம்பெரிய தண்டனயா? பசி பொறுக்காத பெண் அவள். கைக்குழந்தை தனம் வேறு சுமையாய். பணம் இல்லாவிட்டால் அதற்கு எப்படிப் பாடு பார்ப்பது? தனம் கைக்கு கனம் என்றாகி விடும்.

எத்தனை கஷ்டப்பட்டாளோ? இப்பக்கூட வண்டியெடுத்தான்... நேராகக் கிளம்பி வந்தாச்சி. அவளுக்கு ஒரு வளைவி (வளையல்) வாங்கி வரலாம்னு கூடத் தோணல்லியே.. புத்திக்கு எட்டவேயில்லையே? குழந்தை பத்தி ஞாபகமேயில்லை!

போன கடிதத்தில் எழுதியிருந்தாள். குழந்தை நிறையப் பேசுகிறாள். முன்ன நீ¢ங்க போனப்ப அம்மாதானே பேசினாள். இப்ப அ-ப்-பா... என்று நிறுத்தி நிதானித்து வருகிறது. போட்டோவைக் காட்டி என் முகத்தைத் திருப்பித் திருப்பி “-ப் பா” என்கிறாள்.

இருந்த உற்சாகத்துக்குத் தன்னை மறந்து வண்டியோட்டி... வண்டி ஒன்வேயில் நுழைந்து போலிசில் மாட்டியது. இவன்ட்ட துட்டு கிடையாது. முதலாளி மவராசன் தெண்டங் கட்டினார்... “ஏண்டா, அவசரம். ஒன்வேல புகுருன்னு நான் சொன்னனா?” என்றார் கடுப்பாக. அவர் தொழிலில் நொடித்துக் கிரெடிட் கார்டில் ஏகப்பட்ட கடன். ஆளைப் போனில் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரன்கள் கிரெடிட் கார்டில் லஞ்சம் வாங்கினால்தான் என்ன?

நேரமாகிவிட்டது. குளித்துக் கிளம்புவம், என்று வண்டியை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டுக் குளிக்கப் போனான். பக்கத்து வீட்டு இசக்கிக் கிழவிதான் கேட்டது. “என்னல, வண்டில வந்ததுதான் வந்தே, ஒன் சம்சாரத்தயும் ஒரு எட்டு அழைத்க்கிட்டு வந்திருக்கலாம்ல?”

“ஐய மரமண்டைல உறைக்கலியே ஆத்தா?” என்றான் ஆத்தமாட்டாமல். உண்மையில் மாமாவை அவன் எட்டிப் பார்த்திருக்க வேண்டும். தனியே இவள் சமாளிக்க முடியாமல் அங்கே இருப்பாள் என்பதை ஏன் யூகிக்க முடியவில்லை அவனால்? அட, அங்க அவ இல்லன்னாக்கூட வாற வழிதானே சாயல்குடி? அவன் கார் எடுத் வருகிறத மாமா பாப்பாருல்ல?

“ஏல என்னிய ஓர் ரவுண்டு கூட்டிட்டுப் போயேன்..” என்று கொஞ்சினாள் கிழவி. அதும் இவளைக் கூட்டிட்டுப் போயி ஆலமரத்து இட்லிக் கடையில் விட்டா, ஒரு இட்லி கடன் வாங்கித் தின்னும்... அதுக்கு ஓசிச்சவாரி வேற ஊர் மெச்ச...

காது கேளாத மாதிரி குளிக்கப் போனான். பம்பு செட் குளியல் என்றாலே தனி எடுப்புதான். கிணற்றில் இறங்கிக் குளிக்க பயம். எட்டிப் பார்க்கவே உதறும் அவனுக்கு. தண்ணியக் கண்டால் பத்மினிக்கு உற்சாகம் கண்டுவிடும். சுற்றிலும் யாருமில்லை என்று பார்த்துக் கொண்டு புடவையை ஏற்றிக் கட்டிக் கொண்டு பிளவுசை அவிழ்ப்பாள். பளீரென்ற வெண்தோள்கள். மஞ்சள் மாம்பழம். “யாராவது வந்தா தாக்கல் சொல்லணும் நீங்க..” என்றபடியே கிணற்றில் ஆனந்தமாய் உள்ளே நீஞ்சுவாள். நீர்த்தேவதை. மச்சக்கன்னி.

“அத்தான் கீழ வரீகளா?” என்பாள் வாயில் நீர ஊற்றுப் போலக் கொப்பளித்தபடியே.

“நான் கீழவந்தா ஆளுக வாரத போறத யார் பாக்கறது?” என்று சமாளிப்பான். கண்ணை எடுக்காமல் அவளையே பார்ப்பான். அக்குள் முடிகளில் பனித்துளியாய் நீர் ஜாலம். சே, நீச்சல் கத்துக்கிட்டிருக்கலாம். சினிமாவில் முங்கு நீச்சலில் போய் என்னவெல்லாம் செய்கிறார்கள்.

“மாப்ளோய், என்ன வீட்டுப்பக்கம் கார் நிக்குது?” என்று உற்சாகக்குரல் கேட்டது. சிவனாண்டி. “ஆமாமா” என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“கார் சூப்பரா இருக்கே பெருமாளு...பெரியாளாயிட்டே”

“அதெல்லா இல்ல” என்றான் அடக்கத்துடன். அவனுக்கு சிவனாண்டி மீது அன்பு பெருக்கெடுத்தோடியது.

“இத நாம அவசியம் கொண்டாடணும் மாப்ள. சாராயம் வாங்கிக்குடு” என்றான் சிவனாண்டி. கபடில கிடுக்கிப்பிடி போட்டாப்ல அய்யம்பெருமாளுக்குக் கண் இருண்டது. எந்த சாமி எந்தப் பல்லக்கில் ஏறினால் என்ன... சிவனாண்டிக்கு யாராவது சாராயம் வாங்கிக் குடுத்தாச் சரி

அவனிடமிருந்து பிரிந்து வருவதற்குள் வம்பாடு பட வேண்டியதாப் போச்சு!

பட்டணத்தில் அசட்டு நிறத்தில் ஒரு தண்ணீர். தினப்படி ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். ரேஷன் கடை மண்ணெண்ணெய் போல. தினப்படி ஒவ்வொரு வாடை வேறு. அதும் அரைப் பக்கெட்டில் குளியல். ஆசைதீர, ஜெட்டிக்குள் கைவிட்டு நல்லா சோப் போட்டு நுரைக்க நுரைக்கக் குளித்தான். இருந்த அழுக்குக்கு உடம்பு வெளிர் வாங்கி சோப்பே கருப்பாகி விட்டது.

அலுப்பு சற்று அடங்கினாப் போலிருந்தது. கண்கள் எரிந்தன. அது பாதகமில்லை. டிரைவர் வேலையில் இராப்பூராவும் வண்டியோட்டி வர்றதுதான். பாட்டு வந்த வாயில். எலேய் நேரமாயிட்டது....

***********

மீண்டும் காரை எடுத்தபோது காருக்கடியில் இருந்து நாய் ஒன்று எழுந்து ஓடியது. அம்மணமாய்க் குழந்தைகள் வேடிக்கை பார்த்தன. “மாமா பொப்பாய்ங் அடிங்க..” நேயர் விருப்பம். புஸ்ஸென்றதே தவிர, அமுங்கிச் சப்பளிந்து அப்படியே நின்றது. ஹாரன் ரப்பரில் கீறல்.

அதை இந்த மணி புதுசாய் மாற்றியிருக்ககக் கூடாதா?

ஒரு நம்பிக்கையுடன் இப்ப சப்தம் வராதா என்று ஹாரனை அமுக்கினான். 

பெரியகுளம் எட்டு ஒம்பது கிலோ மீட்டர். முதலாளி வீட்டில் காத்திருப்பார்கள். அதிகாலை எப்படியும் வருவதாய்ச் சொல்லியிருந்தான். காலையிலேயே எதிர்பார்த்துக் காத்திருக்கலாம் அவர்கள்...

பாண்டித்துரை பெரிய மனுசன். சட்டுன்னு கோவம் வந்துட்டா என்ன பண்றது? மணி எப்படியும் ஒம்பது, பத்து இருக்கும். பத்மினியைப் பார்க்காததில் கொஞ்சம் ஆடித்தான் போனான். நாய் ஒன்று புழுதி எழும்புதலைப் பார்த்து திட்டியபடி கூட ஓடி வந்தது. சின்ன ஊர். எசகு பிசகான வழித்தடங்கள். வண்டிப் பாதைகள். நடுவே மேடும் ரெண்டு பக்கமும் பள்ளமெடுத்த சீரற்ற சாலைகள். வண்டி சாமி-சப்பரமாய் ஆடியது.

ஆச்சி.. இன்னும் ஒரு பர்லாங் எட்டினா பஸ்சுகள் நடமாட்டம் உள்ள பெரிய ரஸ்தாவை எட்டிறலாம். ஒரு மணிக்கு ஒரு பஸ் என்கிறாப்போல இப்பவும் ஊருக்குள்ள பஸ் வருதுதான். இந்தப் புழுதிக்காடுல எப்பிடித்தான் வர்றானோ, பொறுமைசாலிதான் டிரைவர் மவராசன். கீழ இறங்கும் போது மாட்டுக்குத் தவிடு வெச்சாப்போல புழுதில குளிச்சிருப்பான்...!

அறுவடைச் சமயத்துக்கு வைக்கோல் பாரம் ஏற்றிய வண்டிகள் ரஸ்தாவில் நடமாட்டம் இருந்தாலும், மாடுகள் விலாத்தெரிய சோனியாய்த்தான் இருந்தன. வண்டியோட்டிகள் நல்ல சண்டியராய்க் கிங்கரர்களாய் இருந்தார்கள். ஒவ்வொருத்தனின் மீசை வளைவும் ஒவ்வொரு விதம். மீசையும், கிருதாவையும் சேர்த்து வளர்த்து ஒரு ரகம் வேறு இந்த லெச்சணத்தில். பேரும் ஊர்ச்சாமி பேரு... அய்யனார். சொடலைமாடன். பேராடா இதெல்லாம்?.. அய்யம்பெருமாள்! சூப்பர்லா?

ஸ்டீரியங் நடவே ஹாரன் ஒலி அழுத்தமாய் இருந்தது. ஒதுங்கி வழிவிட்ட வண்டியிலிருந்து ஒரு குரல். “ஆரு, நம்ப பெருமாளா?” என்று கேட்டது. அவன் கூடப்படிச்ச சிகாமணியா? வெளியே எட்டிப் பார்த்தான். அவன்தான். கைகாட்டி விட்டுப் போனான்.

சிகாமணி எட்டாங்கிளாசில் அவனை விட நல்ல மார்க். என்ன பிரயோஜனம். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு வாங்கினான். ஆனாலும் என்ன?... நம்ம அய்யம் இப்ப சூப்பர் ஸ்டாருல்லா?

பாண்டித்துரை வீட்டில் தெரு முக்கில் கார் வரும்போதே கண்டுபிடித்து விட்டார்கள். வீட்டுக் குழந்தைகள் கும்மாளமிட்டுக் கொக்கரித்தன. பொம்பளையாளுகள் புதுசு அணிந்து தயாராய் நின்றிருந்தார்கள். அமோகமாய் வரவேற்கப்படுவதைப் பார்க்கத் தனி உற்சாகம் அவனுக்கு.

புது மாப்பிள்ளையாய்த் தன்னை உணர்ந்தான். ஆரத்தி எடுக்கிற அமர்க்களம் வேறு. இறங்கினான் புன்னகையுடன். நான் கேட்டனா? இதெல்லாம் எனக்குப் பிடிக்காது....

“தள்ளி நில்லு. காரை மறைச்சிக்கிட்டு நிக்கிறியே, திருஷ்டி பொம்மை மாதிரி...” என்றார் பாண்டித்துரை.

பதறி ஒதுங்கி நின்றான். காருக்கு மாத்திரம் ஆரத்தி எடுத்தார்கள்!

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-2                                                                                                    தொடர்கதை பகுதி-4

 
                                                                                                                                                                                                                 முகப்பு