தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
4.
மனோன்மணியை அறியாதவர் யார்?

காரின் வரவுக்கு வீடே அலையெடுத்துக் கொந்தளிக்கிறது. பாண்டித்துரை அண்ணாச்சியே இத்தகைய கோலாகலத்தை எதிர்பார்க்கவில்லை. கார் அவரின் பயன்பாடு, போக்குவரத்துக்கு...சொந்த உபயோகத்துக்கு என்று நினைத்திருந்தார். ஆளுக்காள் பெரும் பட்டியல் வைத்திருந்தார்கள். யோசனை கேட்க என்று அவர்கள் அண்ணாச்சி பக்கம் திரும்புகிற மாதிரியே இல்லை.
வீட்டுக் கிழவி, பண்ணையாரின் அம்மா மூட்டு வலிக்காரி. தடித்த உடம்பு, கை அல்ல அது உலக்கை. அதிகம் நடந்தால் ஆளையே உருட்டித் தள்ளிவிடும். உடற்கட்டு. வெள்ளைச் சீலைக்குள் கொழுகொழுவென்று கொழுக்கட்டை போலிருப்பாள்.
கிழவிக்கு விட்டுப் போன பிரார்த்தனைகள்
நினைவுக்கு வந்தன. அவள் வாயில் இருந்து திருப்பதி என்கிறாப் போலக் கேட்ட மாத்திரத்தில் தலை கிர்ரென்றது அய்யத்துக்கு. சாதா ரோடே ஒம்பாடு எம்பாடாக் கெடக்கு. திருப்பதியில் எட்டெட்டாப் போட்டு மலையேறவா? சர்த்தான்...கிழவியின் சாவு என் கையாலதான் போலிருக்கிறது...
திருப்பதியில சாகனும்னு ஒரு பிரார்த்தனையா...
ஒரு வேளை என் சாவு கிழவி கையிலா? தெர்யல...
கிழவியாவது "டிக்கெட்" எடுக்கறதாவது. இருக்கற ஆளுகளையெல்லாம் கரையேத்திட்டுத்தான் அவ வாயைப் பெளப்பா. நல்ல கிழங்கு கிழங்காக் கெடக்கு ஒஅடம்பு. முன் நெற்றிப் புடைப்பே உரிக்காத தேங்கா அம்சம். ரெண்டு காதிலும் தொங்கும் பாம்படம் எப்ப அறுந்து விழும் என்கிறாப் போல காதுத் துளைகள் ஏழு குட்டி போட்ட பால்க் காம்புகளாய்த் தொங்கின. கழுத்துப் பக்கம் கழலை வந்து தனித் தொங்கல். நடக்கும் போது உடம்பே பாகங்கள் தனித்தனியே யானை மணியாய் ஆடியது.
இந்த வம்சத்துக்கே கார் சரிப்படாது. ஆள் ஒவ்வொண்ணும் ரோடு போடுகிற தார்ப் பீப்பாய். பெரிய லாரி எடுத்து அத்தனை பேரையும் வாரிப் போட்டுக்கிட்டுப் போகலாம். என்ன, ஊர்விட்டு ஊர் எருமைகளை ஏற்றிப் போகிறாப் போல இருக்கும். அதுக்கென்ன பண்றது...
பாண்டித்துரையின் சம்சாரம் பாகீஸ்வரி அம்மாள். கொள்ளிக்கட்டையைப் பாதில வெளிய இழுத்து அமத்தினாப்ல...அப்டி ஒரு நிறம். புஸ்ஸென்று அப்டியொரு மூச்சு. வெளிச்சத்திலேயே அவளைப் பார்க்க அய்யம் பெருமாளுக்குப் பதறும். இருட்டில் அந்தாக்ல மூச்சே நின்னுரும். கழுத்திலும் மூக்கிலும் அவ போட்ட நகையில் வெங்கிடாசலபதியாய்...நெடுமாலமாய் நின்றாள். கொஞ்சம் வேகமாக நடந்தால் அவளுக்கு மூச்சிறைக்கிறது. மூக்கில் இத்தாம் பெரிய மூக்குத்தி. காத்தை உள்ளிழுக்கத் துளை வேணாமா? மூச்சிறைக்காம என்ன செய்யும்?
ரொம்பக் கிண்டலெல்லா வேணா தம்பி. இனி இவகதான் உனக்குப் படியளக்கிற மவராசி. பண்ணையார்க் கணக்கு தனி. நேரத்துக்குச் சாப்பாடு. அவசர உதவி என்று வந்தால் 100க்குப் போன் செய்யப்படாது. எசமானியைத் தனியே அணுகவும். அவ அம்மன் சன்னிதி ஜலதாரைப் போல இருந்தா உனக்கென்ன?
நீ சிட்டு மாதிரி சம்சாரம் வெச்சிருக்க...ஏன் பேசமாட்டே?
கழுத்தில் காதில் நகைகள் இல்லை. ஆனாலும் என்ன?
பத்மினி கொள்ளை அழகுதான். அழகுன்னா என்ன முகம் நிறைய பவுடரும் உடம்பு நிறைய நகையும் பளபளப்பான டிரஸ்சுமா? யார் சொன்னா? நாள் கிழமைகள் நம்மாளு...பத்மினி...எண்ணெய்த் தேச்சிக் குளிச்சிட்டு...ஒரு மேக்-அப் கிடையாது-ஒரு
நகை கிடையாது-லேசான் ஈரம். சீயக்காய் வாசனையோட வருமே, தலையில ஈரத்துணியைச் சுத்திட்டு. அதில்லடே அழகு.
குளிச்சதுக்கும் அதுக்கும் கும்முன்னு இருப்பா...
என்னாத்தச் சொல்றது? இதுக அமர்க்களம் எப்ப ஓய? எப்பப் போயி நான் குடும்பத்தப் பாக்க...?பெருமூச்சு விட்டான்.
வயிறு பசித்தது. சரி பண்ணையார் வீட்ல சாப்பிட்டுக்குவம்னு ஒரு இதுல அலட்சியமா வந்தாச்சு. உள்ளயிருந்து காய்கறிகள் வேகும் வாசனை... மசாலா தூக்குது, கோழி, ஆடா இருக்குமா...?
எவண்டாவன், சோத்துக்கே வழியக் காணம். கோழி வேற மச்சானுக்கு...
குளித்துவிட்டு வந்திருப்பாள். நான் ஊரோடு வந்த சேதியும், வேலை கிடைத்த சேதியும் அவளை எட்டியிருக்கும். அவ சிரிப்பும் அழுகையுமாய் மெலே சாய்ந்து கட்டிக் கொள்கிறாப் போல ஒரு காட்சி வந்தது. ஏல நீ எப்ப கனவு காணறியோ, உடனே ஏடாகூடமா ஏதாவது ஆயிருது... பார்த்து. தலையை உதறிக் கொண்டான்.
இது உன் முதலாளி வீடு. அவங்களப் பத்தி நல்ல விதமா நாலு வார்த்தை நினைக்காண்டமா?
இளசுகள் சிட்டுக்களாய் அலை பாய்கின்றன. பாண்டித்துரைக்கு ஒரு பொம்பளைப் பிள்ளை. ஒரு பையன். பையனிடம் அம்ம ஜாடை.லீக்கோ உடம்புக்கும் அதுக்கும் சிரிச்சா டியூப் லைட் போட்டாப் போலிருந்தது. ஆளும் டியூப் லைட்டா என்னனு தெரியலை.
அவர்களை எல்லாம் ஊர்க் கோயில் திருவிழாக்களில் பாண்டித்துரையுடன் தூரப்பார்வையில் பார்த்திருக்கிறான். இத்தனை கிட்டத்தில் அறிந்து கொள்வது தனி அனுபவமாய் இருந்தது.
பத்மினிக்கும் ஆண்டாள் வாசனைப் பொடி வாங்கித்தர அப்போதே முடிவு செய்துவிட்டான்.
என்ன செய்ய எதுவும் பிடிபடவில்லை. இந்தமாதிரி சமயங்களில் அவனை மாதிரி டிரைவர்கள் காரில் சாய்ந்து கொண்டு சிகரெட் பிடிக்கிறார்கள். அல்லது நக்கீரனோ, தினத்தந்தியோ படிக்கிறார்கள். தினத்தந்திக்கு சிந்துபாத். நக்கீரனுக்கு வீரப்பன்
குழாயில் தண்ணீர் பாட்டிலை செக் செய்து நிரப்பிக் கொண்டான். நல்ல ருசியாய் இருந்தது தண்ணீர். இருந்த பசிக்குக் குளிரக் குளிரக் குடித்தான். வேற வழி?
கேட் தாண்டி உள்பக்கம் நல்ல விஸ்தீரணம். திண்ணையெடுத்த உள்ப் பகுதியில் முன்னோர் படம். மீசையும் நூலாம்படையுமாய், எது மீசை, எது நூலாம்பட தெரியாத குழப்பத்தில் இருந்தது. ஓரத்தில் நெல் மூட்டைகள் ஒரு புறம். உரம், தவிடு என்று உள்ளிரும்புகளிலும் நெடுக அடுக்கிக் கிடந்தன. ஒரு புறம் கோத்ரெஜ் பீரோ...பேன் கீழே ஒரு சாய்வு நாற்காலிகள். ஓரத்தில் மண்பானைத் தண்ணீர். சுத்திவர நாற்புறமும் இடைவெளி விட்டு பின்கட்டுக்கு வழி. தென்னை மரங்கள், தெரு விளக்குகள் போல விட்டுவிட்டு நிற்கின்றன்.
உள்ளேயே நெல்லடிக்கலமாய் இருந்தது. ஒரு ஓரத்தில் உரல்கள் இரண்டும், பக்கத்தில் யானையின் அஞ்சாம்கால் என உலக்கைகளும்(துதிக்கை சேர்த்தா ஆறு காலப்போவ்)
சதா யாராவது உள்ளே வருவதும் வெளியே போவதுமாய் இருக்கிறார்கள். இருந்தாலும் எவனாவது அவனைக் கண்டுக்கிட்டாத்தானே? குருவியிரைச்சலாய்க் கிடந்தது உள்ளே. தானியங்களுக்குக் குருவிகள் உத்திரத்தில் கூடு கட்டி அமர்க்களமாய்க் குடும்பம் நடத்துகின்றன. ஆ, அதுங்களுக்குப் பசிப் பிரச்சனையில்லை.
குருவியிரைச்சலை மீறிவிட்டு சொந்தக்காரர்கள் சத்தம்...
நீர் வசதி, நில வசதி என்று சும்மாவா சொல்கிறார்கள்...
வீட்டு வாசலில் பார். எப்பவோ அண்ணாச்சிக்கு யாரோ போட்ட ஆளுயர மாலை சருகாகிக் கிடக்கிறது. அவரே துட்டு கொடுத்து வாங்கி, ஆளை செட்டப் பண்ணிப் போடச் சொல்லியிருப்பாரு... எப்ப? தேர்தல் சமயத்தில்...தோத்துப் போச்சு.
எப்பவும் அவர் பயணம் போகும் வண்டி எங்கே தெரியவில்லை. வெளியே போயிருக்கலாம். நல்ல கம்பீரமான மாடுகள். கிட்ட போகவே பயந்து கிடக்கும். தலை சிலிர்த்துக் கண் விரித்துப் பெரிய பெரிய மூச்சுக்களாய் வெளியேற்றும். வண்டி கட்டுகிற வேலுச்சாமிதான் அன்னிக்குப் பட்டணத்துக்கு முதலாளி கூட வந்தது.
கார் வாங்க அவரு முடிவு செஞ்ச அந்தச் சமயத்தில் முதலாளி அறியாமல் ஒரு முறை இவனை முறைத்தான் பார்...அய்யத்துக்கு பாத்ரூம் அவசரமாயிட்டது. நல்லவேளை அவன் ஆளைக் காணவில்லை இப்போது.
தன் உடைகளைப் பார்த்துத் திருப்தி பட்டுக் கொண்டான். ரியர் வியூ கண்ணாடி பார்த்து இன்னொருமுறை தலை சீவிக் கொண்டான். மணியென்ன என்று தெரிந்து கொள்ள நினைத்தான். அதற்குள் ஆ, அந்த மகத்தான கணம் நிகழ்ந்தது.
"ஏம்ப்பா சாப்ட்டியா ஏதாச்சும்?" என்று கேட்டாள் எசமானி. இல்ல- என்ரு அவ்சரமாய்த் தலையாட்டினான். சம்பிரதாயத்துக்குக் கேட்டுவிட்டு உள்ள போயிருவாளோ, என்று ஒரு பயந்தான்...
அடடா, கேணப் பொடி மட்டை... இப்ப பாத்துத் தண்ணி குடிச்சியே...
அந்த அம்மாளின் சிரிப்பு எத்தனி இதமாய் இருந்தது அந்தக் கணத்தில், ஈரமனசுக்கரி...ஸ்பெல்லிங் மிஸ்டேக் மன்னிக்க - ஈர மனசுக்காரி
தனியே உட்கார வைத்து தயல் இலையில் சோறு பரிமாறினாள். சிரித்த அரிசிச் சோறு. மேலே பல்லின் ஈறெடுத்தாப் போல குழம்பு. ஆவி மணக்க ஒரு வாசனை உள்ளே குளித்துக் குளமெடுத்தான்.தொட்டுக் கொள்ள வெஞ்சனம் வேறு.
"நல்லாச் சாப்பிடு" என்றாள் பாகீஸ்வரி.
மவராசியுடன் நாலுவார்த்தை பேச ஆசையாய் இருந்தது. அருகில் இன்னமும் இதமாய் இருந்தாள். "நான் பக்கத்தூருதாம்மா. மேலப்புதூர்..." தலையாட்டிச் சிரித்தாள். "எம்பேரு அய்யம் பெருமாள்." அதற்கும் புன்னகையுடன் தலையாட்டினாள்.
திடீரென்று புரையேறியது. சட்டென்று வித்தியாசம் பார்க்காமல் தலையைத் தட்டினாள். "யாரோ நினைக்கிறாக" என்றாள்.
ஆ.பத்மினி! படத்தில் என்னைக் காட்டி"ப்-பா" எனும் என் குழந்தை தனலட்சுமி. பாவம் என்ன சாப்பிட்டார்களோ? கண்ணீர் வந்தது.
"என்னப்பா பதில எழுந்திட்டே?"
"போதுந்தாயி" என்று கை கழுவினான்.
********
பக்கத்து தருமன் கோவில் வரை போக ஒரு வழியாய் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். தருமன் மலை சிறு மேடு. ரெண்டு பக்கமும் மரமெடுத்த நிழல்சாலை. குளுமை. குரங்குகளின் ஆனந்த பூமி. பெரும் மலங்காட்டின் துவக்கம் அது.
அங்கே அவர்கள் பலமுறை போயிருந்தாலும் அது வண்டி கட்டிப் போன நாட்கள். கூட்டு வண்டியில் சைடுல பார்க்க முடியாது. இருந்த மரக்கூட்டத்துக்கு உள்ளயிருந்து பார்க்க இன்னும் இருட்டிக் கிடக்கும். பாண்டித்துரை வம்சம் தொறந்தாப்ல வண்டி கட்டிப் போக முடியுமா?
மூடிய வண்டில தலை இடிக்க இடிக்கப் போகனும். போறவுக வாறவுக பார்க்க முடியாதபடிக்கு பின் வாச வேற திரைச்சீலைத் துணியால் மூடிக் கிடக்கும். நெல் அவிச்ச சருவத்தைச் சரிச்சாப் போல. வைக்கல் பரப்பி இடம் தோது பண்ணி, அடைகாக்கிற கோழியாட்டம் உட்கார்ந்து கிட்டே போகலாம். இறங்கு முன்னால் பின்பக்கமெல்லாம் சூடாயி புண்ணாயிரும்.
முதல் கார்ப்பயணம். இருந்த கூட்டம் பார்த்து பாண்டித்துரை ஒதுங்கிக் கொண்டார். அவனிடம் வந்து "தம்பி பாத்துக் கோளாறாக் குட்டுப் போயி, கொண்டு விடனும்..." என்றார் புகையிலையை எடுத்துக் கொண்டே. லேசான புன்னகையுடன் தலையாட்டினான். மனுஷன் எப்படியாள்த் தெரியவில்லை...பணக்காரனே எப்ப என்ன நிலவரத்திலே இருப்பான்னு சொல்ல முடியறதில்லை...
முதலாளியின் பையன் பெயர் புபதி. அவந்தான் முன் இருக்கையில் அமர்ந்தபடி கூட வந்தது.
"இதுல ஸ்டீரியோ இருக்கா?"
"உங்கய்யாட்டச் சொல்லி வாங்கிப் போடு" என்றான் அய்யம்பெருமாள்.
"என்னண்ணே கொரங்கையேக் காணோம்...?"
அதான் நீ வாரியே, என்று நினைத்துக் கொண்டான்.
பூபதி என்னென்னமோ பேசிக் கொண்டே வருகிறான். இவனுக்கானால் அலுப்பு ஒரு பக்கம். இராப்பூராவும் வண்டியெடுத்து வந்திருக்கிறான். இன்னும் வீட்டைப் பார்க்கவில்லை. பத்மினியைப் பார்க்க ஏக்கமாய்க் கிடந்தது. அட, முந்திதான் அத்தனி தூரத்தில் இருந்தம். இப்ப இத்தனை கிட்டத்தில் இருந்தும் பார்க்க முடியாதது துக்கமாய் இருந்தது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை...என்பார்கள். இது கைக்கே எட்டவில்லை. பிறகுதானே வாய்க்கு எட்ட!
பின்பக்கம் முழுக்க பொம்பளையாளுகள். என்னென்னமோ கதை பேச அவர்களுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன. பாகீஸ்வரி சின்னஞ்சிறுசுகளின் இரைச்சலைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டே வருகிறாள்.
எதிரே இன்னொரு வில் வண்டி வந்தது. ஒதுங்கி வழியொதுக்கிக் கொடுத்தான். அதைப் பார்க்கப் பெண்டுகள் ஆளாளுக்குச் சிரிப்பு. மூடிய திரைச்சீலை உள்ளே யார் என்று அவர்களுக்குத் தெரியும்...
அவனுக்குத் தெரியும். அது மனோன்மனியின் வண்டி. ஊரே பேர் கேட்கவே பரபரத்துச் சிலிர்த்துக் கொள்கிற மனோன்மணி. ஆண்களில் அவளை அறியாதவர் யார்? அவனாலேயே ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வண்டி தாண்டிச் செல்கையில் சற்றே திரைச் சீலை...
ஆஹாவென்றிருந்தது அந்தக் கணம்!
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-3 தொடர்கதை
பகுதி-5


|