........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
தொடர் கதை -2 முத்த
-எஸ். ஷங்கரநாராயணன். 5. மனைவிங்க கோவிச்சுக்கிறாதீங்க...
சில முகங்களை மறக்க முடிகிறதேயில்லை. நினைவில் கனவில் என பாகுபாடற்று அவை நினைவு வெளிக்குள்ளே நித்ய சஞ்சாரம் செய்கின்றன. உள்ளேயே கரைந்து நிறைந்து போகின்றன. பிரிதல் அல்லது மறத்தல் பிறகு சாத்தியமே இல்லை. மனோன்மணி என்பவள் தேவதை. மனத் தடாகத்து மலர்த் தாமரை. மேலே நீர் முத்துக்கள். பனித்துளிகள் சிந்தினாலும் தாமரை நனைந்தும் நனையாமலும் அந்தத் துளிகளைத் தாங்கிச் சிரிக்கின்றன. மனோன்மணி மாசு மருவற்றவள். மாடத்து வெண்புறா. பெண் பொம்மைகளைக் கொலுவில் அடுக்கினால் நடுவில் நாயகியாக அமர, ஆண்கள் மத்தியில் வேறு யோசனையே கிடையாது... வேறு தேர்வே கிடையாது. மனைவிகள் மன்னிக்க. உலகில் ஒரெயொரு மனோன்மணி. பெண்மணிகள் ஆயிரம். அம்மணிகள் ஆயிரம். ஒரேயொரு மனோன்மணி. அழகி. அது ஆளை வாரியணைக்கிற அழகா? மிரட்டுகிற அழகா? இரவில் துக்கத்தை மறந்து அவளைச் சுமக்க வைக்கிற அல்லது மலர்த்தி மல்லாத்துகிற ஆவேசத்தைத் தூண்டுகிற அழகா? அழகில் எத்தனை தினுசுகள் இருக்கின்றன. ஆ, விஷயம் அதுதான், எல்லாமாய் இருந்தாள் அவள். இது சாத்தியமா? அவளுக்கு சாத்தியம். அதுதான் மனோன்மணி. உலகில் ஒரேயொரு மனோன்மணி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாய்... ஒவ்வொரு இதமாய்த் தோற்றம் தந்தாள். ஆனால் எல்லாருக்குமான சிநேகக் காற்றாய் இருந்தாள். இணக்கமான மிருதுவான புன்னகை சிந்துகிற முகத்தின் அமைதி, பொலிவு. என்னமோ ஒரு... கவர்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் உட்பட்ட, அதெ சமயம் அப்பாற்பட்ட...மேற்பட்ட, மேம்பட்ட...அதைத் தாண்டிய பெருவெளிப் பேரொளி. சொரூபராணி. மனோன்மணி பெண்கள் பற்றிய பாடநூல். இலக்கணநூல். காவியங்கள் இலக்கணத்தைத் தன்னகத்தேக் கொண்டவைதாமே? வைரத்தை உரச வெளிச்சம் வரும். ஊர்க் காவியங்களின் உலாராணி. உப்பரிகைக் காரிகை. மனோன்மணி, சிரோன்மணி. அவளது கடைக்கண் நோக்கில் வாய்ச்சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. சொற்களின் அழிக்கும் படை அவள் நோக்கில் உண்டு. மனைவிகள் மன்னிக்க. நீங்கள் சொற்களை உருவாக்க வல்லவர்கள். பார்த்த கணத்தைப் பிட்டுக் கொள்ள வகையற்று காலமே அவள் காலடியில் கட்டுப்பட்டது. கட்டுண்டு கிடந்தது என்றால் பாவம், மனிதர்கள் எம்மாத்திரம். பார்த்த விழி பிறகு வேறெதையும் பார்க்கத் திரணியற்று, வேறெதையும் பதிய பிரக்ஞையற்று...பிரமித்து ஸ்தம்பித்து உறைந்து போவதைப் பற்றி என்ன சொல்ல? இது குறித்து நாம் எதுவுமே செய்வதற்கில்லை. கண் வழி உட்புகுந்து, கவனத்தை உறிஞ்சிக் கொண்டு, இதயத்தில் கையெழுத்திட்டாள். இதயம் இரத்தத்துடன் ஒவ்வொரு அணுவுக்கும் அவள் பெயரை எடுத்துச் சென்றது. கனவுக்கும் நினைவுக்குமான பூமத்திய ரேகை. இருளில் வெளிச்சமாயும், வெளிச்சத்தில் இதமான இருளாயும் இருந்தாள். கோடைகாலக் குளுமை. குளிர்காலக் கதகதப்பு. இப்படி எப்படி சாத்தியம்? அதுதான் மனோன்மணி. ஒவ்வொரு ஆணுக்குள்ளுமான சிம்மாசன மேடை அவள். அடிமைப்படுத்துதல் அல்ல. அது ஓர் கனவுலக வசிய வசீகரம். அடிமைப்படுத்துதல் என்றால் என்ன? உன்னை வீழ்த்தி வெற்றி கொள்வதல்லவா? அது அல்ல இது. அல்லவே அல்ல. ஆ, பெண்ணே...உன் முன்னால் நான் என்னை ஆணாக உணர்ந்தேன். நெஞ்சாற மார்பு விரிய சுவாசித்து, நில் என நிமிர்ந்தேன் என்றால் அது எப்படி அடிமை கொள்ளுதல் ஆகும். நீங்களே சொல்லுங்கள்? எப்படி? காதலில் மட்டும் புறமுதுகு இட்டவர்கள் ஜெயிக்கிறார்கள். பூரண நிலவு. பூ பூத்த நந்தவனம். அதில் அழைப்பு என்று தனியே... தனித்தனியே எதற்கு? தேவைதான் என்ன? வயல் மணந்தால் மயில் வரவே செய்யும். சிறுகுளத்தில் குளிர்ந்த தோப்புகள் மிகுதி. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம், வாசனை தன்னைப் போல அமைந்து விடுகிறதில்லையா? சிறுகுளத்தில் மயில்களைச் சுட, வேட்டையாட அனுமதியில்லை. சுதந்திரமாய் வயல்வெளிகளில் மேய்ந்து திரிய விட்டு விடுகிறார்கள். மகா ரசிகர்களாய் இருக்க வேண்டும் அவர்கள். மானுடம் அவர்களைப் போற்றுதும்! கொண்டை சிலிர்க்க அவை நிமிர்ந்து ஜனங்களை ஓரக் கண்ணால் ஒருக்களித்துப் பார்த்துவிட்டு ஜிவ்வென்று மேலெழும்பிப் பறக்கையில்... நீல வளாகத்தில் நீச்சலடிக்கையில், ஆஹா அதுவல்லவோ காட்சி. கண்டவர் கண் விண்டிலர். அப்போது வயல் பறிபோவதை யார் அறிகிறார்கள்? அட, யார் கவலைப்படுகிறார்கள்...! பிறவிப் பெரும்பயன் எய்துவர் எய்தார் மனோன்மணி காணாதவர். வயல்வெளிப் பாம்புகள் என்றால் மயில்களுக்கு உற்சாகத்துக்குக் குறைவில்லை. ஆ, பாம்புகளைப் பற்றிப் பயங்கொள்ள என்ன இருக்கிறது என்று அலட்சியமாய் வயலில் இறங்கி, அந்தப் பாம்புகளைக் கொத்தி வாரியெடுத்தபடி அவை பறக்கிறதைச் சிறுகுளத்தில் பார்க்க முடிகிறது. ஆச்சர்யம். மயில்கள் மெல்லிய உருவங்கள் அல்லவா... அழகோவியங்கள். அவற்றின் நிமிர்ந்த பார்வை. கழுத்துச் சாய்வு...ஆ, அந்த நடை...அகமெல்லாம் நிறைகிற அகவல் ஓசை. எதுவுமே அழகு.எல்லாம் அழகு. அழகைத் தவிர வேறில்லை. அவை பாம்புகளுக்குப் பயம் கொள்வதேயில்லை! ஆண்களோ பாம்பைப் பார்த்த கணம் தூக்கம் இழக்கிறார்கள். அதை வீழ்த்த நினைக்கிறார்கள். பரபரக்கிறார்கள். பயப்படுகிறார்கள். மயில்கள் மழையை முன்னறிவிக்கின்றன. விரும்பி வரவேற்கின்றன. தொகை விரித்து எதிர் கொண்டு அழைக்கின்றன. சிறுகுளம் மனோன்மணியின் வாசஸ்தலம். எங்குமான அவள் வாசம். ஊரிலேயே காற்றிலேயே அவள் வாசம் கலந்து கிடக்கிறதாக ஆண்கள் எல்லோருமே உணர்கிறார்களே அது எப்படி? மண்ணை மிதித்தவர்கள், மிதித்த கணம், ஆ என உள்ளிழுக்கிறார்கள். மனோன்மணி அந்தக் கணம் அவள் உள் நிறைகிறாள். ஏற்கனவே உள்ளே உறைந்த பனியாய் இருந்தவள். உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. மனோன்மணி சிறுகுளத்து மயில். உலவும் கலாபம். சல்லாப உல்லாசம். நாட்டியக்காரி வம்சம். அதற்கேற்ற குழைவும் நெகிழ்வுமான தேக்கட்டு. பளீரென்று தாக்குகிற சிவப்பு உடல். குளிர்ந்த உடல். ஒரு தென்றலாய் ஆண்களை அவளது சிறு புன்னகையே தீண்டி விடுகிறது. ஆ, குளிர்ந்த பார்வையே...ஆனால், ஆண்களோவெனில் அதில் கதகதப்பானார்கள். அதெப்படி? மகோன்னதமணி. ஆண்களின் உள்ளோ துழாவி நரம்புகளைச் சுண்டி இசையென இயங்கி, சூட்சுமங்களை உசுப்பி விட்டாள். மனோன்மணி என்கிற இசை இம்சை. ஆண்கள் மழைக் கடவுள்கள். மழை உக்கிரப்பட்டால் பாம்புகள் வெளிக் கிளம்பவே செய்கின்றன. மழையை வரவேற்று மயில்கள் தோகை விரித்து எதிர்கொண்டு அழைக்கின்றன. மனோன்மணி ஆண்களை எதிர் கொண்டழைக்கிறவளாய் இருந்தாள். அவளது பீலிகை எத்தனை நளின நெடும்பரப்பு கொண்டது. செறிவானது. கண்சிமிட்டி அழைக்க வல்லவை அப்பீலிகைகள். கொடியசையக் காற்று வரும். காற்றசைக்க கொடி இசைவதும் உண்டு. எது முதல் எது பின்? ஏனிந்த ஆராய்ச்சி? ஆராய்ச்சி செய்கிற நேரமா அது? கவிதை நேரம். மழை வர தோகை விரியும். தோகை விரிய மழை ஓடோடி வருகிறதும் சகஜம்தானே? மழை மூட்டத்தின் உக்கிரம் மயிலுக்குக் கொண்டாட்டம். பீலிபெய் சாகாட, மயில் விரித்த தோகையாட்டச் சதிரில்... ஆண்களின் அச்சு இறிந்தது. முறிந்தது. அவளது கைவளை ஒலியே காவியத்திற்குக் கால்கோள் விழா எடுத்தது. அவளது சிலம்பொலித் தளும்பல் கேட்டவர்கள் கனவிலும் புலம்ப ஆரம்பித்தார்கள். ஓரப் பார்வையல்ல அது. பிரசாதப் பரிமாற்றம். ******** அய்யம் பெருமாள் மனோன்மணியை இத்தனை கிட்டத்தில் பார்த்ததில்லை. கேள்விப்பட்டிருந்தான். தினசரி வாய்ப்பாட்டைக் கழுவுகிறதே பெரும்பாடு அவனுக்கு. எனினும் என்ன, நிலா வெளிச்சம் எல்லாருக்கும் பொதுவானதுதானே? சிறுககுளம் பக்கத்தில் பெரியகோவில் கும்பாபிசேகம் என்றோ சிறப்பு வழிபாடுகள் என்றோ விஷேச நாட்களில் அவளது சதிர்க் கச்சேரி இருக்கும். வாய்ப்பாட்டு தேசிகாச்சாரி. அவரை தேசிகாச்சரி என்பதே சரி... கையில் பஜனை கோவில் ஜால்ரா! தட்டித்தட்டித் தலையை ஆட்டி ஆட்டிப் பாடுவார். அவளது பம்பர ஆட்டத்தில் தனை மறந்து தலையாட்டுகிறாப் போல... அவளே அவர் தலையைத் தோசை மாவாட்டுக் கல்லைப் போல ஆட்டுகிற மாதிரி தோணியது அவனுக்கு. அவளே அவரது நட்டுவனார் ஆயிட்டாப்ல! தத்தரிகிட தமி ததிங்கிடதோம்...அட எதோ ஒரு தாளம். அதைப் பத்தி என்ன? தித்திளாங்குதமி தகதிமி தகதை... அட சரிய்யா! தாளத்தைப் பாட்டை ஆரு கவனிச்சா? அரங்கத்தை அவள் ஆளும் அழகு. எல்லைகளை எட்டித் தொட்டும் அழகு. அரங்கம்னா எது? எலேய், மேடையெல்லாம் ஜோராப் போட்டு லைட் லைட்டா மாத்தறாங்களே அதாடா? என்ன நீ வெவரங் கெட்ட ஆளாயிருக்கியே... மனசுய்யா! இங்க ஆடுதா பாரும். கவனமா என்னை உத்துப் பாரும். என் மனசே உடம்பே திடும்திடும்னு அதிருதே பாரும்... அந்தாக்ல மனசோட இந்த ஓரத்துக்கு அவ வந்தா யம்மாடி-ங்குது மனசு. குனிஞ்சி நிமிந்தா யப்பாடிங்குது. அப்படி ஒரு துள்ளு துள்ளினா இதயம் எகிறி நுரையீரலை இடிக்குதேய்யா... இம்சை... அந்த இன்ப இம்சையைத் தாள முடியல்லியேய்யா. அப்டிக் கையைக் குவிச்சி இந்தப் பக்கம் சாய்ஞ்சா காத்து தள்ளாட்டினாப்ல ஒரு ஒயில். நம்மாளுக்கு குடிபோதை ஆட்டறாப்ல ஒரு லகரி. அந்தாக்ல ஒரு கிளுகிளுப்பான கிறுகிறுப்பு. உலகம் சுத்துதடி ஒரு ரவுண்டு...ஒரு புலவன் பாடினானே? அதை விடவா நான் சொல்லிறப் போறேன்... ஒரு துள்ளலில் அவ இடது பக்கம் வந்தா...ஆத்தா, என் மனசு ஓரத்துக்கு வந்திட்டே. பாத்து, வெளியே விழுந்துறாதே... ஆட்டம்னா அது ஆட்டம். ஆட்டமா அது தேரோட்டம்! பார்த்தவன் வாயைப் பொளந்தா பொளந்ததுதான். ஈ போனா என்ன யானை போனா என்ன? -த்தூன்னு துப்பிட்டு, அவனவன் கண்ணெடுக்காம அவளையே பாக்கான். மனோன்மணி கச்சேரின்னா, ராத்திரி ஒரு ஒம்பது மணி பத்து மணிப் போல ஆரம்பிக்கும். அதுக்கு முன்ன எதாவது வெட்டியாளுக கூத்து வைப்பாங்க... அன்னிக்கு எத்தாம் பெரிய கூத்துப் பார்ட்டியா இருக்கட்டுமே... போணியாவது. டெபாசிட் காலி. அட, கூட்டமெல்லாம் இருக்கும். அரங்கம் நெறைஞ்சிதான் இருக்கும். ஆனா கதை வேற... பைத்தாரப் பயல். கூட்டமெல்லாம் அவன் கூத்துப் பார்க்கன்னு அவனுக்கு ஏக உற்சாகமா இருக்கும். எல்லாம் மனோன்மணிக்கு வந்த கூட்டம்னு அவன் கண்டானா? லேட்டா வந்தா முன்வரிசைல இடங் கிடையாது. அட பார்க்கவே இடங் கிடைக்காதுன்னு அவனவனுக்குப் பதட்டம். போயி சிநேகிதனுக்குத் துண்டு வேற விரிச்சிருப்பாங்க. அன்னிக்கு ஒருத்தன் துண்டு விரிச்சிருக்கறதைப் பாத்திட்டு, சர்த்தான் யாரோ பிச்சைக்காரன் தான்னி, அதுல சில்லரை போட்டுட்டான். ரகளையாயிட்டது. கூத்து எப்படா முடியும்னு காத்திருப்பாங்க. எத்தனை பெரிய சோக முடிவுன்னாலும் ஜனங்க சிரிச்சுக்கிட்டே பாப்பாங்களா, அவனுக்கே கன்பியூஸ் ஆயிரும். மூஞ்சி பியூஸ் போன பல்பா ஆயிரும்! அந்தா அன்னிக்கு ஒருத்தன் தூக்கு மேடையில கிளைமேக்ஸ் வெச்ச கூத்து நடத்தினாம் பாரு. அதான் வேடிக்கை... உணர்ச்சியின் உச்ச கட்டம். தூக்குக் கயித்தைக் கழுத்துல மாட்டிக்கிட்டே வசனம் பேசறான் பேசறான் பேசிக்கிட்டே கிடக்கான். ஜனங்க கொட்டாவி விட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சிலர் சம்பந்தா சம்பந்தம் இல்லாத எடத்துலல்லாம் கை தட்டினாங்க. அப்பவும் அவன் வசனத்தை முடிக்கிறாப்ல இல்லை. ஓராள் எழுந்திருச்சி. "சரி. மாப்ள நீ கயித்தை மாட்டிக்க. முகூர்த்த நேரம் தவறிறப் போவுது"ன்றான்.-என்னவோ தாலி கட்டறது தட்டு கெட்டுப் போனாப்ல! அவன் கதை இப்ப என்னத்துக்கு. ஆம்பளையாளுக கூட்டம்தா இப்படி டியூப்லைட்டுல பூச்சியப்பினா மாதிரி அவளைப் பார்க்க அப்புதுன்னில்லப்போவ். பொம்பளைங்க பக்கமும் எள்ளுப் போட எடம் இராது. எல்லாம் வயித்தெரிச்சல் பார்ட்டிங்க.
என்ன இருக்கு இந்த பொம்பளை கிட்ட...ஆம்பளைங்க
அப்டி விழுந்து வார்றாகளேன்னு பாக்கற கூட்டம். பொறாமைக் கூட்டம்.
வீட்டுக்காரருக்கு முன்ன அவங்க படையெடுப்பு நடத்தியாச்சி.
என்னத்த ஆடறது? குனிஞ்சி நிமிரவே
அங்க பிடிக்குது, இங்க பிடிக்குதுன்றாளுங்க. வெறுமன பல்லப் பல்லக் கடிச்சா ஆச்சா?
அதுல்லா தனி அம்சம்டி. எல்லாருக்கும் அமைஞ்சிருமா என்ன.
தகிட திகிட தா தை தகதைன்னு சும்மா
உருட்டிட்டுக் கெடக்காம் பாரு. ராத்திரி சமையக்கட்டுல பூனை புகுந்த மாதிரி...
கீழ இருக்கற அத்தனை ஆம்பளைங்களும் அவனை மாதிரிதான்... ( தொடரும்...)
|
முகப்பு |