........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

6. பொங்கல் வைக்கப் போனால்...!

அய்யம்பெருமாளுக்கென்றே ஒரு இராசி போல... அவன் கடன் கேட்டுப் பொகும்போது அநேகமாக, "அட, இப்பதான் நம்ம பார்த்தசாரதி கேட்டான்னு குடுத்துட்டு வந்தேன்." என்பார்கள் அல்லது காபி குடித்த தம்ளரைக் கீழே வைத்துவிட்டு "ஏய் வாடே...எப்படியிருக்கே" என்பார்கள். என்னாத்தச் சொல்றது என்றிருக்கும். தம்ளரைப் பார்த்தபடியே பேசிவிட்டுத் திரும்புவான்.

அடடா, கொன்சம் முன்னாடி வந்திருந்தால் மனோன்மணி தரிசனம் செடச்சிருக்குமே என்று நினைத்துக் கொண்டான். அவன் தருமன் கோவிலுக்குள் நுழைய, அவள் வெலியேறிப் போகிறாள்.

காலி தம்ளராய் தருமன் மலை வளாகம். அந்த முகம்... என்ன முகம் அது. அவளைச் செதுக்கிய பின் பிரம்மன் கட்டை விரலை வெட்டிக் கொண்டானாமே?

அதுவரை காரில் வந்த சிறு பெண்களும் அவர்களின் சிரிப்பும் கும்மாளக் கலகலப்பும் ஓரளவு பிடித்துத்தான் இருந்தது. மனோன்மணி கடந்து போனாள்... காருக்குள் இதுகள்... பெண்களா இதுகெல்லாம்? குரங்குக் கூட்டம் - என்கிறாப் போல ஆகிவிட்டது. நம்ம பி.பி.பி. யோட உறவுக்காரப் பொண்ணு. அந்தக் காரில் இருந்த பெண்களிலேயே சுமார் அதுதான் என்று அதுவரை ரிய்ர்வியூவில் பார்த்துக் கொண்டே வந்தான். அது முகரையும் இப்போ பாக்க விளங்கலை...

இதுகளைப் பூரா எத்தி வெளியேத்தி மாட்டு வண்டிக்கு அனுப்பிட்டு, அந்த ஒயில்க் குயிலை மயில் மகராசியைக் காரில ஏத்திக்கிடுவோமா... மாட்டு வண்டி மாத்திரம் இன்னும் கொஞ்ச நேரம் நின்னிருந்தது - அது நடந்திருக்கும்.

அவன் வேலை பொயிருக்கும்!

பக்கத்தில் மனோன்மணி உட்கார்ந்து அவன் வண்டியோட்டிப் போகிற கலையழகை வியந்தபடி கூட வருகிறாள்... கற்பனை ஜோராகத்தான் இருந்தது. அதே போதையுடன் திரும்பிப் பார்த்தால் கூட அந்த பூபதி. சனி திசையில் பிறந்தவன். அடுப்புக் கரி, ஆப்பக்குழி கரி.

அந்தக் காரிலேயே சிவப்பு...அழகு யார்? சந்தேகமென்ன... நம்ம அய்யம்பெருமாள்தான், சிவலிங்கத்துக்குப் போட்ட திருநீற்றுப் பட்டைபோல...

பெண்கள் பொதுவாக பிரார்த்தனை என ஏதாவது நேர்ந்து கொண்டு அந்தக் கோவில் வளாகத்தில் சந்நிதிக்கு வெளியே கல்லடுக்கிப் பொங்கல் வைத்துக் காணிக்கை செலுத்துகிற வழக்கம்.

கல்மூட்டி விறகெரித்த அடையாளங்கள் இருந்தன. ஒரு கவிதையின் கடைசி வரி போல. மீதிவரிகள் எங்கே? அவை எரிக்கப்பட்டு விட்டனவா? என்று தன் கற்பனையின் வளத்தில் சிலிர்த்துக் கொண்டான். என்ன ஒரு அலங்கார துக்கம் அது! மத்த வரிகளைக் காணாமல் கடசி வரியை வாசிச்சி என்ன செய்ய? மர்மக்கதைலே கடேசில போலீஸ்காரங்க வந்தாப்ல.

தெனாலிராமன் யானை வரைஞ்ச கதையால்ல ஆயிட்டது?

தெனாலிராமனை யானை படம் வரையச் சொன்னாராம் ராசா. போட்டாப் போச்சு என்றபடியே, மட்டமா ஒரு நீளக் கோடிழுத்து அதுக்கு மேல் நீள் சதுரமா ஒசரத்துக்கு ஒரு கட்டம் வரைஞ்சான். இது சுவரய்யா. அந்தா யானையோட அம்பாரி. சுவருக்கு அந்தாண்ட யானை போகுதுன்னானாம்.

பெண் சிட்டுக்கள் மனோன்மணியை மறந்து விட்டிருந்தார்கள். அவர்கள் உற்சாகமாகப் பொங்கலிடுவதில் இறங்கினார்கள். அவர்கள் அதிகாலையிலேயே நம்ம அய்யத்தின் வரவுக்காய்க் காத்திருந்தார்கள். முந்தைய இரவே முடிவெடுத்து கொழுக்கட்டையிடம் அவர்கள் முகூர்த்த நேரத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பைச் செய்திருக்கலாம் என்ரு தோன்றுகிறது.

தருமன் மலை அடிவாரத்துப் பிள்ளையாருக்கு வேண்டுதல் என்றால் கிழவியையே உட்கார வைத்துப் படைச்சிருப்பாங்க.

கோவில் குருக்கள் மனோன்மணி போனதுமே கிளம்பியிருப்பார்னு தோணுது. மாமியைப் பார்க்கிற அவசரம்.

கோவில் வளாகம் பூட்டிக் கிடந்தது. அதைப் பத்தி என்ன? பெண்களுக்கு கோவில், வெளியே கிளம்பறது எல்லாம் ஒரு சாக்குதான். புதுத்துணி கட்டிட்டு தன் அழகைத்தானே மெச்சிக்கிட்டு மாரை நிமிர்த்திக்கிட்டு அலையனும் அவ்ளதான் விசயம். பாதிப் பொண்ணுகளுக்கு "எடுப்பாவே" அமையறதில்லை - அது வேற விசயம்.

தருமன் மலை அருமையான இடம். நல்ல நிழல்.யானைக்கால் வியாதிக் கண்டாப் போல பெத்தம் பெரிய மரங்கள். நல்ல குளுமை.காத்து அந்தாக்ல வேட்டிய ஒரு தூக்கு தூக்கி உள்ளெல்லாம் தடவும். பொமபளையாளுங்கள் புஸ்ஸென்று கொதித்த பாலாய்ப் பொங்கும் பாவாடையைத் தொடை நடுவே கையால் அமுக்கிக் கொடுத்தபடியே தடுக்கத் தடுக்க சிரித்தபடி நடமாடினார்கள். என்னத்துக்கு அத்தனை சிரிப்பு...தெரியல...

எப்படியும் ஒரு அவர் ஒன்ற அவர் இங்க ஆவும். கொஞ்சம் அப்டி ஓரமாப் படுக்கலாம்னு இருந்தது.

கோவில் வளாகத்திலேயே பின்னால் ஒரு ஊத்து. ஜலதாரை வழியே எங்கிருந்தோ வரும் தண்ணி. என்ன குளிராக் கெடக்கும். கைலே வாங்கிக் குடிச்சம்னா ஆகா, என்ன ருசி. எந்தக் கோடைக்கும் அந்த ஜலதாரைக்குத் தண்னி வரத்து நிக்காது என்கிறார்கல். தெர்ல. பள்ளமாய்க் குளம் எடுத்துக் கிடக்கிறது.

என்னமோ ஒரு நல்ல நாள்ல ஜனங்க ஒரே கூட்டமா அங்க அந்தாக்ல அப்பும். அப்ப திடீர்னு அங்க நாவிதர்கள் கத்தியும் கிண்ணமுமா முளைப்பார்கள். சர்ர்ரக் சர்ர்ரக்னு பளிங்குக் கல்லில் கத்தி தீட்டுகிற சத்தம். வர்ற ஜனங்க பூராவும் மொட்டை போடும். நாலு மொட்டை அடிச்சா ஒரு மொட்டை இலவசம்னு பண்டிகைக் காலச் சலுகை இருக்கோ? எல்லாம் அந்த ஊத்தில் குளிச்சிட்டு ஈரவேட்டி அல்லது ஈரப்புடவை சரசரக்க, குளிர் உதட்டை நடுக்கி உடலையே ஆட்ட ஆட்ட, புதுநடையில் தருமனை நினைத்தபடி கைகுவித்து வணங்கியபடியே பிரகாரம் சுத்தி வருவார்கள். பெரும் பொம்பளைகளை நீண்ட காதுத்துளைகளுடன் மொட்டையாய்ப் பார்க்க இளன்கோவடிகள் போலிருக்கும்.

மலையேத்தத்தில் மரத்தடி தோறும் பிச்சைக்காரர்கள் முளைத்திருந்தார்கள். பூராவும் மொட்டைகள். மலையேற்றப்படிகளில் சீரியல் பல்ப் போட்டாப்ல இருக்கும் ஒரு பார்வைக்கு. விசேசநாள்னா அவுக எல்லாத்துக்கும் தனியே தண்டோரா அறிவிப்பு யார் தர்றாங்களோ? எப்டித்தான் தெரியுதோ? என்கருந்துதான் வராகளோ? அத்தனை பேர் முன்னாலு வெளிநாட்டுக் கக்கூஸ் போல ஒரு பாத்திரம். அது எங்க அப்டியொரு பாத்திரம் விக்குதோ? இத்தனை சனியனுக்கும் அந்தக்கடை எப்படித் தெரிஞ்சதோ, தெர்ல. இந்தியாவில் பிச்சையெடுக்கிறது நல்ல தொழில். அட அதைவிட இந்தப் பாத்திரம் தயார் செய்றது சூப்பர் தொழிலாயிருக்கும் போல.

தருமன் ஊத்துக்குப் பின்புறமா கொஞ்சம் தள்ளிப் புதரை ஒழுங்குபடுத்தி பொம்பளையாளுக ஈரௌடை மாத்தும் ரூம் மாதிரி ஒரு ஏற்பாடு. நிறைய இளவட்டப் பயலுகள் கேமராவுங்கையுமா அந்தப்பக்கம் திரிவார்கள். அவ்சர கிளிக்குகள். அவுட் ஆப் ஃபோகஸ் ஷாட்டுகள். பெரிய மொட்டைத்தலை மாத்திரம் டாப் ஆங்கிளில் விழுந்திருக்கும். அதையேத் தப்பா எடுத்துக்கிட்டு உணர்ச்சிவசப்படுகிற சென்மங்களும் உண்டு.

உடம்பே அலுத்துக் கிடந்தது அவனுக்கு. பட்டணத்தில் இருந்து முழுசா ஒரு இராப்பயணம். வந்தா ஓய்வே கிடையாது. இதுங்க கிளம்பி இங்க கூட்டுட்டு வந்திட்டதுங்க...கூத்தடிக்க.

பண்டபாத்திரங்கள், அரிசி...மத்த அய்ட்டங்களை எடுத்து வைக்கிறார்கள். புதுக்கல் அடுக்கியாகிறது. அக்கண்ணா அடுப்பு. பூபதி விறகு பெறக்கிக் கொண்டு வந்தான். "டிரைவர்" என்று கூப்பிட்ட போது கண்ணை மூடிக் கொண்டு தூங்குவது போல் கிடந்தான் அய்யம். விட்டா அந்த புபதி எல்லா உபரி வேலையும் இவன் தலைல கட்டிருவான்.

உடம்பு என்னா வலியெடுக்கிறது அவனுக்கில்லை தெரியும். முதுகைச் சாய்த்த கணம் ஆகாவென்றிருந்தது. நல்ல தூக்கம். தானறியாத அசத்தல் அசத்திட்டது. பேச்சுச் சத்தம் தூரத்து இரைச்சல் போல் கேட்கிறது. அட, பெண் சிட்டுக்கள் ஊத்தில் குளிப்பாளுகளே என்று சட்டென்று மூளை சுறுசுறுப்பானது.வேற மனுச மக்கள் யாருமில்லை. அவர்கள் உடை பற்றி அஜாக்கிரதையாகக் கூட குளிப்பார்கள்... உடம்பு பரபரக்க சிவந்த கண்னைத் திறந்து பார்த்தான்.

அவர்கள் குளித்து முடித்து, ஆ-வேறுடைகள் மாற்றி, ஈரத்தலையைச் சிக்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மனோன்மணி... என்ரு குப்புறப் படுத்துக் கொண்டான்.

வீட்டு ஞாபகம் வந்தது...ம். குருக்கள் கொடுத்து வைத்தவர்!

எப்படியும் அழுகையும் சிரிப்புமாக நம்மாளு, பத்மினி...மேலப்புதூர் வந்து சேர்ந்திருக்கும். என்னைப்போல அவளும் ஏங்கிக் கெடக்காளோ என்னமோ...தெர்ல எவுட்டி மவராசிகளா? என்ன துட்டு இருந்தென்ன? நகி நட்டு, நாகரீகப் பட்டு பகட்டு, அலங்காரம் இருந்தென்ன? துடைப்பக்கட்டைக் குஞ்சலம்.

பத்மினி குடங்கழுத்துபோல இடுப்பு. எலும்புத் தூக்கல் இடுப்பு அல்ல அது எடுப்பு. ஒரு மடிப்பு கிடையாது. சும்மா வழுவழுன்னு கிடக்கும். சோளிக்கும் புடவைக்கும் நடுவே ஆம்பளைங்க கிள்ளுவதற்கென்றே இடம் விட்டாப் போல...ஒரு கிள்ளு கிள்ளுவான். ஸ்ஸென்பாள். சைக்கிள் பஞ்சரானாப் போல. வலிக்கா? சரின்னு தடவிக் கொடுப்பான். அதுக்கும் ஸ்ஸ்-தான்.

பொம்பளையாளுகள் ஒரு விசயத்தை ரசிச்சா சின்ன -ஸ். அதில் கொஞ்சல் இருக்கிறது. கடுப்பாயிட்டா பெரிய -ஸ்ஸ்ஸ்! அது பாம்புச் சீறல்லா...

ஆ, மனோன்மணி...ச்சீ, பத்மினி...

பூபதி மணியடிக்கிற ஓசை கேட்கிறது. ஓசையல்ல அது பூசை. நாசி விழித்து பொங்கல் வாடையைத் தேடியது. நல்லா நெய் ஊத்துங்கடியோ. சாமி காரியம்லா...!

சாமி பிரசாதம்னு வாங்கி ஊருக்கு எடுத்திட்டுப் போணும்.

போய் தருமன் ஊத்தில் முகங் கழுவினான். சற்று தள்லி புதரின் நீட்சிக்கு ஒரு ஈரப்புடவை மற்றும் புதர்கள் மேல் பொம்பளைத் துணிகள். கொண்டு வந்த இலையைச் சிறிதுசிறிதாய் சச்சதுரமாய்க் கிழித்துப் பொங்கல் எடுத்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே பசிக்கிறது.

முதலாளி வீட்டில் பரவாயில்லை. நல்ல சாப்பாட்டிற்கு காரண்டி. நெய், பால், தயிர் எதற்கும் அஞ்சாத செழிப்பு உள்ளவர்தானே?

பொங்கல் ருசியாய் இருந்தது. அட வீட்டுச் சாப்பாடு. பிரியமான கைமணச் சமிஅயல்னே அனுபவிச்சு நாளாச்சில்லே? மெஸ் சோறு. அதும் கடனில். தினசரி போய் நிற்கவே கூசும். வேற வழியுங் கிடையாது. அரை மனசா முதலாளி வெறுப்புடன் உள்ளே அனுப்புவார். மூணு மணிக்கு அவன் போவான். அவரும் மிச்சச் சோறு வெச்சிட்டு என்ன செய்றது...வெஞ்சனமோ கூட்டோ ரெண்டாந்தரம் கேட்க முடியாது. முறைப்பான்கள். சர்வர்கள் அடுத்து சாப்பிடனும்.

பண்ணையார் வீட்டுப் பின் வளாகம் பெரியது. மாட்டுக் கொட்டகைக்குள் வாலை உதறியபடி எருமைகள்... பூபதி ரேவதி என்று பிள்ளைகளுக்குச் சளைக்காத வண்ணத்தில். மூதிரமும் சானியுமான கலவை வாசனை.ஏற்றக் கிணறு. உயரமான வைக்கோற் போர். மொட்டை மாடியில் இருந்து வைக்கோற் போர் பார்த்தால் அநேக சுவாரஸ்யங்கள். கள்ளக்காதல். பெரிய வீட்டில் திருடிய சாமான்களைப் பதுக்கும் வேலைக்காரிகள்...காரர்கள்.

ஆ, பத்மினி. இதோ வருகிறேன்...உடனே நேரே மனைவியைப் போய்ப் பார்க்கிறாப் போல அவசர அவசரமாய்ச் சாப்பிட்டான்.

பத்மினியோடு இங்க வந்து சாமி கும்பிட ஆசையாய் இருந்தது.

*********

வீடு வந்து சேர இருடி விட்டது. நல்ல வேகத்தில் வந்தான். புழுதி எழுப்பிப் பின்னாடியே பேய் விரட்டுவது போல் வந்தது. எல்லோருமே அழுத்திருந்தார்கள். அந்த பூபதி நாய்...முன் சீட்டில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொட்டாவி விட்டான். கொஞ்ச நேரத்தில் கரகாட்ட மேளப் பார்ட்டி போல தலையை ஆட்டி ஆட்டித் தூங்கியே விட்டான். தானும் தூங்கி விடுவோமோ என்று அய்யத்துக்குப் பயமாய் இருந்தது.

பெண்கள் அலுத்திருந்தார்கள். வந்த போதான கலகலப்பு இப்போது யாரிடமும் இல்லை. கண் இடுங்க பாகீஸ்வரி ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி வந்தாள். மத்ததுகள் ஒன்றின் மடியில் மற்றது என்று, கன்னாபின்னாவென்று அவிழ்த்துப் போட்ட உடைகளைப் போல உடம்பையே அவிழ்த்துப் போட்டிருந்தார்கள்.

இதில் நான் மட்டும் அக்கறையாய் வண்டி ஓட்டிப் போகிறேன். ரேடியோ, ஸ்டீரியோ என்று இருந்தா ஒரு பேச்சுத் துணை போல இருக்கும். சில ஓட்டல்களில் அல்லது டீக்கடைகளில் சாயந்திர விவித்பாரதியில் இந்தியில் பேசி, டண்டண்ண டண்டண் டண்டண் டண்டண் மியூசிக்குடன், எதாவது மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல் வைப்பான். லோக் சங்கீத். கர்ண பாடாவதி புரோகிராம். ர்ர்ர்ர்ர்ன்னு ஒரு பின்னணிச் சத்தத்தோட அதுபட்டுக்குக் கெட்டிருக்கும். டீக்கடைக்கும் ஒரு அடையாளம் வேணும்ல...

எவங் கேட்கப் போறான்? ரேடியோக்காரன் விடாம வைக்கான். அதும் தினசரி.

பாகீஸ்வரி முகத்தில் நல்ல அருள் இருந்தது. பொறுமைசாலி என்று பார்த்தாலே தெரிகிறது. திருத்தமான முகத்தில் திருநீறும் கீழே அளவான குங்குமப் பொட்டின் நிதானமே அங்கத்திய ஆளுகளில் ஆச்சர்யம். அதது குங்குமத்தைப் பார்த்த ஜோரில் காணாததைக் கண்டாப்ல அதிரச சைசுக்கு அப்பிருதுங்க... பத்தும் பத்தாததுக்குக் கல்யாணமான பொம்பளைங்களுக்கும் ஆகாதவளுக்கும் என்ன வித்தியாசன்றே? தலைவகிட்டுல குங்குமம் ஒரு அடையாளம். டேன்ஜர் ஸோன். இரத்தப் பலி வாங்கிரும் புருஷன்காரன் அருவா எடுத்திருவான்னு அர்த்தம்.

இப்டி அப்பி அப்பி ஊர்ல பாதிப் பொம்பளைங்க நெத்தி வெந்து புண்ணாக் கெடக்கு.

பத்மினியை ஸ்டிக்கர் பொட்டு வைக்கச் சொன்னான். சின்ன சைஸ். உச்சில வகிட்டுக் குங்குமம்? வேற வழியில்லைல்லா...

வீடடைய லேசாய் இருட்டி விட்டது. முதலாளி இல்லை. யப்பா... என்றிருந்தது. மாட்டு வணியும் இல்லை. உடனே பயமாப் போச்சு. காத்திருந்து அலுத்து, வண்டியில் கிளம்பியிருப்பாரோ? அவன் போனாப் போறான். அதப்பத்தி என்ன?

வேலை போயிருமோ?

முதலாளியிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதா...வீட்டில் சொல்லிவிட்டு கிடைத்த பஸ்சில் மேலப்புதூர் கிளம்புவதா புரியவில்லை. அவனால் நிற்கவே முடியவில்லை. உடம்பில் தெம்பே இல்லை.

பாகீஸ்வரி புரிந்து கொண்டாள். பெண்ணா அவள்? மகாலெட்சுமில்லா... நீ எத்தாம் பெரிய குங்குமமும் வையி தாயி. உன் இஷ்டம்...

"அவுக வந்தா நான் சொல்லிக்கறேன். நீ கிளம்பு. மொகம் வீங்கிக் கெடக்கே" என்றான். தேன் வந்து காதில் பாய்ந்தாற் போலிருந்தது. எறும்பு பிடுங்காமல் இருக்கனும்.

நம்ம வீட்டு சைக்கிள் எடுத்திட்டுப் போ. காலைல சீக்கிரம் வந்திரு. பஸ்சுக்கு நிக்க வேணாம்ல?" என்று யோசனையும் சொன்னாள்.

பப்பப்பப்பாங்க், விடுதலை! விடுதலை! விடுதலை!... என்று பாலச்சந்தர் படத்து பாரதியார் பாட்டு வந்தது மனசில்.

ஆனால்...?

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-5                                                                                                    தொடர்கதை பகுதி-7

 
                                                                                                                                                                                                                 முகப்பு