தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
7.
தொட்டதுக்கெல்லாம் சிரிப்பு!

பஸ்ஸை நம்ப முடியாத சூழலிலும் காலை சீக்கிரமே கிளம்பி வந்துவிடலாம் என்ற
யோசனையிலும் அய்யம்பெருமாள் சைக்கிளில் மேலப்புதூர் வரை போவது நல்லது என
நினைத்தான். சும்மா இல்லை, எட்டு ஒன்பது கிலோமீட்டர். அதும் சைக்கிளில். அந்தப்
பக்கங்களில் காத்தும் மேலிருந்து கீழ்வாக்கில் வலித்து வாங்கியது. நல்ல
எதிர்காத்தில் அவன் மாட்டிக் கொண்டான்.
தொடை விட்டுப்போனது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாகம். தாகம்னா அப்டியொரு
தாகம். சைக்கிள்ல சீட்டு வேற சரியில்லை. ஸ்பாஞ்சே இல்லை. கழுதையின் மண்டையோடாய்
இருந்தது. தவிரவும் அடிக்கடி கழுத்தைச் சொறிந்துவிடச் சொல்லி நீட்டுகிற பசுமாடு
போல முகத்தைத் தூக்கியது சீட். கீழே ஸ்க்ரூ டைட் பத்தாது. அது பாதகமில்லை. ஆனால்
அதன் ஊக்குக் கொண்டை போன்ற முன்வட்ட இரும்பு வளையத்தின் இடுக்கில் அவ்வப்போது
அவன் தொடை மாட்டிக் கொண்டு, திடீர் திடீரென வலி... ஆவெனத் துடித்து டான்சாட
வைத்தது.
மோசமான ரஸ்தா. தெருவில் விளக்கு கிடையாது. ஒழுங்கா பஸ் பார்த்து வந்திருக்கலாம்.
இத்தனை அவஸ்தைகளின் நடுவே முதலாளி காலையில் என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.
வீடு வந்து சேருமுன் மயங்கி விழாத குறைதான். ஒன்பது கிலோமீட்டர்லாம் சைக்கிளில்...ஆதும்
தூக்கங்கெட்ட சமயத்தில் வரலாமா...அட ஆக்கங்கெட்ட மூதேவி என்று தன்னையே திட்டிக்
கொண்டான். சைக்கிளை விட்டு இறங்குங்குள்ள இடுப்பு கடுத்து எலும்பெல்லாம்
கலகலத்து தொடையில் வீக்கம் வந்திருந்தது. அட இத்தோடு... வீட்டில் பத்மினி
இருக்கனுமே என்று ஒரு கவலை. அதைவிடக் கலவரமான விஷயம்...காலை சீக்கிரம் வந்து
சேரணும்.
வாழ்வில் இத்தனை சோதனைகள் வந்தால் என்ன பண்ணுவான் மனுசன்?
வந்து வீட்டு வாசலில் இறங்குகையில் இறங்கவே தெம்பு இல்லை. நிற்க முடியல்ல.
கால்கள் வெடவெடவென்று நடுங்கின. அட, ஹேண்ட்பாரில் இருந்து காலைத் தூக்கிப்
போட்டு இறங்கவே திகைத்துப் போனது.
தெருவில் இருட்டு நன்றாய் இறங்கி ஊறியிருந்தது. படுத்திருந்த தெருநாய் ஒன்றின்
மேல் ஏத்தத் தெரிந்தான்...காலைக் குதறியிருக்கும்... நல்லவேளை! வீட்டு வாசல்
வளாகமே தெரியவில்லை. பார்வையில் ஓர் இருட்டு அப்பி மீண்டது. இவள்
உறங்கியிருப்பாளோ என்று தோணியது. மணி எப்படியும் ஒம்பதரை பத்து இருக்கும்.
பசியான பசி. தள்ளாடி இறங்கி கண் மயங்க நின்றபடி கதவைத் தட்டிவிட்டுத் தள்ளாடிக்
காத்திருந்தான்.
*********
காலையில் அவனிடமிருந்து சேதி வந்ததுமே அவளுக்கு மிதக்கிறாப் போலிருந்தது.
மனசெங்கும் பரபரப்பு. இனி விடிவுகாலம் ஆரம்பிச்சாச்சு என ஒரு உள்த்தித்திப்பு.
"அப்பா வராகடி ஒன்னியப் பாக்க" என்று குழந்தையைக் கொஞ்சுகிறாள்.
"ப்-பா" என்று தனம் படத்தைத் தேடியது.
"அடி என் சில்லுக் கருப்பட்டியே...இங்கன எங்கருக்கு...நம்பூர்லல்ல இருக்கு..."
என்று அவள் குழந்தைக்கு முத்தம் வைத்தாள். "எய்யா நான் ஊருக்கு இப்பமே போயாவணும்...அவுக
எப்ப வராகளோத் தெர்லியே...அவக வரச்சில நான் இருக்கண்டாமா?"
"சரி" என்று அய்யா துட்டுக் கொடுத்து பஸ் ஸ்டாண்டு வரை வந்து ஏத்தி விட்டார்.
அவருக்கும் வந்து மாப்பிள்ளையைப் பார்க்கலாம்னு ஒரு இதுதான்..."ஏளா தனியாப்
போயிருவியா மகளே? காசு கொஞ்சம் இடிக்கும் போலுக்கே..." என்றார் தயங்கி.
இந்நேரம் அவரு எதுக்கு அங்க என வெட்கத்துடன் நினைத்துக் கொண்டாள். சிரிப்பு
வந்து விட்டது. "அதெல்லாம் பரவால்ல, அவுக ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாக" என்று
அவசர அவசரமாய்க் குழந்தைக்கு ஜட்டி கூடப் போடாமல் தூக்கி இடுப்பில் ஏத்திக்
கொண்டாள். விறைப்பு காட்டிய மயிரை வலிக்க வலிக்க, குழந்தை அழ அழ உச்சியெடுத்து
தென்னைமரம் போல ஓர் அமைப்பில் ரப்பர் பேண்டால் முடி போட்டு பவுடர் அடித்து,
ஒழுகும் மூக்கை "சிந்துட்டீ மூதேவி" என்று அவசரப்படுத்திக் கிளம்பினாள்.
பஸ் கிளம்பும் வரை அவபட்ட பாடு. ஏதோ மாப்பிள்ளை மகராசன் அங்கே பாய் விரித்துக்
காத்துக் கிடக்க மாதிரி!
முதலில் ஒத்துழைக்க மறுத்த தனம் பிற்பாடு வெளியே கிளம்புகிற உற்சாகத்துக்கு
வந்து விட்டது. மாடும் ஆடும் மனிதர்களும் என்று உலகத்தில் எத்தனை சமாச்சாரங்கள்...
அது அப்பாவையே மறந்திருந்தது! தெருவில் அம்மா முகத்தைத் திருப்பித் திருப்பி அது
ஓராயிரம் பேச்சு பேச முயல்கிறது. அம்மாவின் பாராட்டை எதிர்பார்க்கிறது. அவளுக்கோ
ஆயிரம் யோசனை. தனத்தை அவள் கவனிக்கவேயில்லை.
பஸ்ஸில் நல்ல கூட்டம். வியர்வைக் கவிச்சி. சுவாசிக்கத் திணறியது அதற்கு. மூக்கு
ஒழுக ஒழுக அலறி விறைத்தது. மார்பைத் திறந்துவிட்டு அடக்கப் பார்த்தாள். அவள்
சீட் பக்கம் ஆம்பளையாள் ஜனம் கூடிட்டது. கூச்சமாய்க் கோபமாய் வந்தது... இருந்த
ஆத்திரத்தில் குழந்தை முதுகில் நாலு சாத்து சாத்தினாள். கடைசியில் விசும்பி
விசும்பி விரல் சூப்பியபடியே அது உறங்கி விட்டது.
காலை அவள் கிளம்பி அப்படி வருகிறாள் பரபரப்புடன். அதுவரை வீட்டில் இருந்த மாப்ளை
அப்பதான் கிளம்பிப் போயிருக்கிறான்... அடடா, என்றிருந்தது.
"அட ஆமான்றேன். கார்ல வந்தாரு!" என்றாள் கிழவி.
காரிலேயே திரும்ப வரபடாதா? காலையில் இருந்து காத்துக் கிடந்தால் அவன் ஆள்
அட்ரசையேக் காணொம். வாழைப்பூ வீட்டுத் தோட்டத்தில் பறித்துக் கொண்டு
வந்திருந்தாள். வாழைப்பூத் துவையல் அவனுக்குப் பிடிக்கும். சமைத்து வைத்துக்
காத்திருந்தாள்...
படத்தில் அவனைப் பார்க்கப் பார்க்க மனசுக்குள் பொங்கியது. மனதுக்குள் ஆயிரம்
யோசனை. சிரிப்புக்குக் குறைவில்லை. இனி கஷ்டமேயில்லை. துயரமேயில்லை...என்கிறாப்
போல ஒரு மெத்தென்ற மிதப்பு.
அட கஷ்டம் வந்தா சேந்து அதை அனுபவிப்பம்...அதுவே தெம்புதானே?
மனசில் கனவுகள் அலை புரட்டின. சீச்சீ, என வெட்கப்பட வைத்தன. வெளியே வெறைப்பு
காட்டும் ஆண்கள் வீட்ல நாலு சுவத்துக்குள்ள, அதும் இருட்டுல எத்தனை குழந்தையா
மாறிர்றாங்க...?
சிலுப்பி விரைத்த தலையைத் தண்ணி போட்டு வாரி, முடிந்தவரை படியச் செய்த அவன் படம்.
அருகே அவள். அவள் தாண்டிப் போகும் தோறும் அவன் அந்தப் படத்தில் இருந்து கையை
நீட்டி அவளை பிடித்து இழுக்கிறாப் போல... என்னென்னெமோ பைத்தியாரக் கற்பனைகள்.
மதியம் ஆச்சி. சாயந்திரமாச்சி. அவுக ஆளே வரவில்லை. இதில் இசக்கி வேற அடிக்கடி
வந்து "அவன் வந்தானா? அவன் வந்தானா?" என்று வெறுப்பேத்திக் கொண்டிருந்தாள்.
வந்து இறங்கினான் அய்யம் பெருமாள்... காரில் அல்ல சைக்கிளில், இறங்கி நிற்க
இயலாமல் ஒரு குடிகாரத் தள்ளாட்டமாய் இருந்தது. இறங்கிய போது ஒரு மோசமான
விளையாட்டைப் போல - கடைசியா ஒரு தடவைத் தொட்டுக்கறேன் - என்று சீட்டின் ஊக்கு
வேறு தொடையைப் பதம் பார்த்தது. சின்ன வயதில் துரைச்சாமி வாத்தியார் ஆள் காட்டி
விரலாலும் பாம்பு விரலாலும் இடுக்கி போலச் செய்து கொண்டு அப்படித்தான்
கிள்ளுவார்...
"ஆரது?" என்று உள்ளிருந்து கேட்ட அவள் குரல் பெரும் ஆறுதல் அளிக்கிறது. தயங்கித்
தயங்கிக் கதவைத் திறந்தால் காத்துப் போன பலூனாய் அவன்.
அப்படியே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் ஆன மாதிரி அவள் தோளைப் பிடித்துக்
கொண்டே தள்ளாடி உள்ளே வருகிறான். பேண்ட்டைக் காலில் இருந்து உருவி எடுக்கவே
தெம்பு கிடையாது. காலே வீங்கித் துப்பாக்கி உறையாய் ஒட்டிக் கிடந்த்தௌ பேண்ட்.
அவளே உதவி செய்ய வேண்டியிருந்தது. மாத்துத் துணி கூட வேணாம்... காத்தாட அப்படியே
விட்டுட்டா நல்லது.
"பசிக்குதுடி எதுனாச்சிம் குடு"
"இப்பதான் இசக்கி கிட்டக் கொடுத்தேன்"
"அதும் போச்சா? சரி, பாலாவது எடுத்திட்டு வா?"
"அய்ய... பிள்ளைக்கு வேணுல்லா?" என்று சிரித்தாள்.
"நீ சாப்டியா?" என்றான் தலையை மாத்திரம் திருப்பி.
"இல்ல" என்றாள்.
"ஏன்?"
அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
வா, என அருகே அழைத்தான் சைகையாய். கிட்ட வந்ததும் கையைத் தூக்கி அவளை இழுத்து
நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
அப்படியே சாய்ந்து அவன் மேல் அப்டுத்துக் கொண்டாள்.
மெலிதான் வியர்வை வாசனை. ஹாவென உள்ளிழுத்தான்.
"என்னா இப்படி வீங்கிக் கெடக்கு?" என்றாள்.
இருந்த வீக்கத்துக்கும் அதுக்கும் அவள் வருடல் சுகமோ சுகம்.
அதை அனுபவிக்க முடியாமல் அவள் அடுத்து ஒரு கேள்வி கேட்டாள்.
"இந்த வீக்கத்தோட இதே வண்டில காலைல நீங்க திருப்பிப் பெரியகுளம் போணுமே?"
"அய்யோ" என்றான்.
*********
இரவெல்லாம் உடம்பு வலியில் முனகிக் கொண்டு கிடந்தான் போல. திரும்பிப் திரும்பிப்
புரண்டிருக்கிறான். நல்ல தூக்கம், அசதி, லேசான ஜீரம் இருந்தது. அவள் அவனைத்
தொந்தரவு செய்யவே இல்லை.
முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாறியிருந்தாள் பத்மினி. காலம் கற்றுத் தந்த
பாடங்கள். தவிர வயதின் முதிர்ச்சி. இல்லாட்டியும் அவள் இப்ப சிறு பெண்ணா என்ன?
அம்மையில்லா...?
அவனிடம் யோசனை கேட்காமலேயே நிறையக் காரியம் பண்ணியிருந்தாள். தபாலாபீஸ் போய்
பெரியகுளத்துக்குக் கால் போட்டு பி.பி.பி.க்கு "அவுகளுக்கு மேலு சொகமில்லை.
ஒருநா ரெஸ்ட் எடுத்திட்டு வரட்டும். தயவு செஞ்சு அனுமதிங்க" என்று ஏற்பாடு
செய்தாள். பி.பி.பி.தான் போனை எடுத்தது. பொம்பளைக் குரல் அடிக்கடி வரும்
அவருக்கு. பாத்தா இது விஷயம் வேறாயிருந்தது!
அவளே பேசியதால் "அய்ய அதுக்கென்ன" என்றது வாய் தன்னைப் போல. உண்மையில் அவன்
பேசியிருந்தால் போனிலேயே போட்டு வாட்டியிருப்பாரு...!
மறுநா மதியம் போலத்தான் அய்யம் எழுந்தான். தலை பாரம் அடங்கவில்லை. அவள்
ஒருபக்கமாய் அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். மெல்ல
கிட்டே போய் அவளையும் குழந்தையையும் ஒருசேர அணைத்துக் கொள்கிறான். மனசில் தனி
ஆனந்தத் திகட்டல்.
மார்பில் இருந்து தலையை எடுத்து "ப்-பா" என்கிறாள் தனம்.
"ஆமாண்டி செல்லம்" என்று குனிந்து அதன் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான்.
"அய்யோ நேரமாச்சிடி" எனப் பதறி எழுந்தவனை நிதானப்படுத்தினாள். "இன்னைக்கு
வரமாட்டீகன்னு தாக்கல் சொல்லியாச்சு" என்கிறாள் புன்னகையுடன்.
போய் ஒண்ணுக்கிருந்தபோது மஞ்சளான மஞ்சள். சூடு கிளம்பி வலியெடுத்தது. ஆவி
பறந்தது. அவள் சுடுசோறு எடுத்துப் போட்டு மஞ்சளாகிறதா என்று பார்த்தாள். இல்லை.
நல்லவேளை! காமாலையில்லை...
சூடான வீட்டுக் காப்பி. இன்று பூரா ஓய்வுதான் என்றபடி குப்புறப் படுத்துக்
கொண்டான். முதுகில் குழந்தை ஏறி யானை விளையாட்டு விளையாடியது. இதமாய் இருந்தது.
டர்பண்டைன் வாங்கி வந்து அரக்கப் பரக்கத் தேய்த்து விட்டாள் பத்மினி. பின்
கழுத்தை விறைத்துக் கொள்ளச் சொல்லி கழுத்து நரம்புகளை அழுத்தி நீவி விட்டாள்.
உடம்பு வலிக்கும் அதுக்கும் சூப்பர்...!
வெந்நீர் விளாவி வைத்திருந்தாள். அவன் குளிக்கப் போக, பின்னாடியே வந்து முதுகு
தேய்த்து விட்டாள். என்ன அனுசரணையாய்ப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்...
"ரொம்பத் திண்டாடிட்டியாடி?" என்று கேட்கும்போதே அழுகை வந்தது. அவள் புன்னகை
செய்கிறாள். அக்குளில் அவன் சோப்பு தேய்த்துக் கொள்கையில் கிச்சுகிச்சு
மூட்டுகிறாள். சிரிப்பு தாளவில்லை. தொட்டதுக்கெல்லாம் சிரிப்பு!- என்பது இதுதானா?
இடையிடயே இசக்கி வந்து என்னென்னமோ பேசுகிறது. அவள் பேச்சை யார் கவனித்தார்கள்.
அவர்கள் குழந்தை தூங்கக் காத்திருந்தார்கள்.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மா(ந்)தர்க்குக் கற்றனைத் தூறும் (செக்ஸ்?) அறிவு -
ஜொள்ளுவர்.
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-6 தொடர்கதை
பகுதி-8


|