தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
8.
வேட்டையாடு விளையாடு...

பெரியகுளம் பன்னீர்ப்புகையிலை நம்ம பாண்டித்துரை வேட்டைப் பிரியர். வீட்டின்
நடுவறையில் ஆணியில் இன்றும் அவரது துப்பாக்கி மாட்டியிருக்கிறது.
அருகே ஒரு இடுப்புயரப் படம். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அட, நம்ம
அண்ணாச்சிதான் அது. இப்ப ஊத்தப்பமா ஆயிட்டாரு. அப்ப ஸ்பெசல் சாதா தோசை போல...
புதுமாவுக்கு தோசை வார்க்கலாம். மாவு ஒரு மாதிரி புளிச்சி முத்திட்டா? ஊத்தப்பம்!
கையில் என்ன அது? அட துப்பாக்கி. தோசை சுடுறதுக்கில்லய்யா, மிருகங்களைச் சுட.
குறி பார்த்த வாக்கில் நெஞ்சுக்கு நேரா உயர்த்திய பார்வை...அதை அவர்
சுட்டிருந்தா என்னாயிருக்கும்?
ஃபோட்டோகிராபர் செத்திருப்பான்.
திரைப்படத்தில் அதைப் பார்க்கிறவனுக்கு, படத்தின் கிளைமாக்ஸில் இந்தத்
துப்பாக்கி பயன்படும்.... அதைப் பாண்டித்துரையோ, அவர் சம்சாரம் பாகீஸ்வரி
அம்மாவோ அல்லது திடுக்கிடும் திருப்பம் போல நம்ம கொழுக்கட்டையோ எடுத்து
டுப்பென்று வில்லனை சுட்டு வீழ்த்துவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படக்கூடும்.
சினிமா பல வினோதங்கள் உள்ளடக்கியது. அதில் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
சுடும் பயிற்சி கண்ட வில்லன்கள் குறிதவறி விடுகிறது. கதாநாயகனோ அல்லது
கிளைமாக்ஸில் மாத்திரமே பயன்படுத்தும் நாரிமணிகளோ சுடும் குறி தவறுவதேயில்லை.
பாண்டித்துரையின் பால்ய காலங்கள் காட்டு வளாகங்களில் அமைந்தன. பெரியகுளத்தில்
இருந்து மேம்பக்கம் அண்ணாமலை தம்பிமலை. குளுந்த காத்தை ஊருக்குத் திருப்பிவிடும்
மலைகள்.
அதிகாலைப் பனியில் உப்புக் குவியல் போல பனி ஒளிர அதுகளைப் பார்க்கவே கொள்ளை அழகு.
படகோட்டி எம்ஜியார் தொப்பி அண்ணாமலை என்றால் நாகேஷ் தொப்பி சின்னமலை.
எந்த வெயிலும் தெரியாதபடிக்கு அத்தனை குளுமை. கீழடிவாரத்தின் மாந்தோப்பு...
ஆக்சிடெண்ட் ஆன ஆளை வேடிக்கை பார்க்கிறாப் போல நெருக்கியடித்து மாமரங்கள்.
சரியாகப் பார்க்க முடியாத மரங்கள் குனிந்தும் எட்டியும் அடுத்தாள் முதுகில்
கையால் அழுத்தியும் கிடக்கும். மாந்தோப்பு பாண்டித்துரையின் வம்சாவளி சொந்தம்.
வம்சாவளி ஆளுகள் டிக்கெட் எடுத்து இடத்தைக் காலி செய்து போன பின் இப்போது
பாண்டித்துரையின் அனுபவ பாத்யதைக்கு வந்திருக்கிறது. எப்ப வந்தாலும் தோப்பு
நடுவில் அவர் தங்கிக் கொள்ள மூங்கில் சார்ப்பு போட்ட குடில் ஓர் ஓரத்தில்
இன்றும் உருண்டு கிடக்கிற காலி விச்கி பாட்டில்கள்.
பாண்டித்துரை வந்திருந்தா மறு ஓரத்தில் அவரு உருண்டு கெடப்பாரு. நடுப்புற பாய்
கிடக்கும். பக்கத்தில் அவரது வேட்டி பாம்புச் சட்டை போல.
தொந்தியா அது? குழாய் வைத்த மண்பானை
தோப்புக் காவலாளி நல்லான் தங்க தனியே வெளியே சிறு குடிசை இருக்கிறது என்றாலும்
முதலாளி இல்லாத நாட்களில் அவன் உள்ளதான் படுக்கிறது. மாம்பழங்களை உதிர்த்துப்
பெறக்கி அடுக்கி சைஸ் வாரியாப் பிரிச்சி வண்டில ஏத்தியனுப்ப கொள்ள என
நித்தியப்படி வேலைகளில் அவன் மேற்பார்வை உண்டு.
யார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போனாலும் பிஸ்கட்டோ பழமோ வாங்கிப் போகிறாப்
போல, அவனைப் பார்க்க வர்றாளுங்கள் பீடிக்கட்டுடன் வருகிறார்கல். ஓட்டல்
சர்வருக்குப் பென்சில் போல அவன் காதில எப்பவும் பீடி.
பாண்டித்துரையின் வேட்டைத்துணை அவன்தான். பண்டித்துரைக்குச் சுடப்பயிற்சி
தந்தவன் அவன்தான். அவன்குறி தப்பவே தப்பாது...என மத்தவரை விட பாண்டித்துரை
அபாரமாய் நம்பினார். அதனால்தான் அவனைக் கூட அழைத்துப் போனார்.
இன்ன வேட்டை என்று வேட்டையாடக் கிளம்பும் முன்தான் முடிவெடுப்பார். அடிவார
வளாகத்தில் கரடிகள் வரத்து அதிகம். கரடிகள் ஏனோ தலையை ஆட்டியாட்டி வருகின்றன.
சைஸ் சின்னதாய் மட்டும் இருந்தால் அவை குழந்தையின் பாட்டரி பொம்மை போலிருக்கும்.
குழந்தையின் பொம்மைக் கரடிகள் ஜால்ரா அல்லது பேண்டு அடிக்கும். ஏலே இது
நெசக்கரடி. மனுசாளையே அடிச்சிரும்.
இரவுகளில் தோப்பின் எல்லைகளில் இப்பவும் கரடி நடமாட்டம் உண்டு. எத்தனை
வேலிக்கும் கரடிகள் அசருவதேயில்லை. பாண்டித்துரை இரவுகளில் அங்கே வந்தால்
தீவட்டி ஏத்தி வெச்சித்தான் படுக்கறது. திடீர்னு கரடி உள்ள புகுந்திட்டா என்ன
செய்யிறது...?
நல்லான் சுடுவான். அவன் குறி தப்பாது... என்றாலும் அந்த அரைகுறை இருட்டுல எது
கரடி எது அண்ணாச்சின்னு தெரியனுமே?
யார்ட்ட எந்த அகராதித்தனம் கொண்டாடினாலும் நல்லான்கிட்ட மாத்திரம் அண்ணாச்சி
வெவகாரம் செய்ய மாட்டாரு. அவன் குறி தப்பாது.
இருட்டில் காட்டில் நடந்து போகிறதே தனி அனுபவம். கைக்கடிகாரச் சத்தம் போல மார்பு
அடிக்கிற சத்தமே துல்லியமாகக் கேட்கிற இருள். ஓட்டம் எடுக்கத் துடிப்பான கால்கள்.
முன்னே நல்லான். காட்டின் எல்லைகள் அறிந்தவன் அவன். சின்ன வயதில் அடிக்கடி அவனை
மிருகங்கள் துரத்தி எல்லைவரை விரட்டியடித்திருக்கும் போல...
அது பரவாயில்லையே? வழி தவறிட்டா என்னா செய்யிறது?
வேட்டையாட முக்கியமா விலங்குகள் பத்திய சூட்சும அறிவு வேண்டியிருக்கிறது. சாதா
அறிவே பத்தாத அண்ணாச்சிகளுக்குச் சூட்சும அறிவுக்கு எங்க போக...
கரடிகள் நல்லா மரமேறும். கரடி துரத்திட்டதென்னு அவசரமா மரம் ஏறப்படாது.
கீழிருந்து கரடி கூடவே ஏறும். எப்டி இறங்கறது... இறங்கும் வழியில அது இருக்குதே?
கரடிகளும் மரம் ஏறுமேயொழிய இறங்கத் தெரியாது பொத்னு குதிச்சிரும்.
பாம்புகள் ஜோராய் மரம் ஏறும். பார்த்து மலைத்திருக்கிறார். மரப்பொந்துகளில் பறவை
முட்டைகளைத் தேடி பாம்புகள் மரமேறுகின்றன.
ராப்பொழுதுகளில் காட்டின் விநோத வாசனை. அதன் பிரத்யேக சத்தங்கள்...ஆஸ்துமா
கிழடுகள் போல மிருக உருமல்கள். ஆளுயுர கோரைப் புற்களைப் பற்றி வளைத்து இழுத்து
யானைகள் கூட்டமாய் வந்து உண்ணும் காட்சிகள்.
மனுசாளை விட மிருகங்களுக்கு ராத்திரிக் கொண்டாட்டம் அதிகம். பார்வை உக்கிரமும்
அதிகம். ராத்திரி பூனைக் கண்ணைப் பார்த்தாலே பயமாய் இருக்கும். மிருகக் கண்களை
நேருக்கு நேர் பார்க்க முடியுமா? அதுக்கு செயற்கைக் கண் வெச்சிருக்காப்டி மனுசன்.
பாண்டித்துரை ஆத்திர அவசரத்துக்கு டார்ச் எடுத்துப் போவார். ஆறுசெல் பேட்டரி.
எட்டுசெல் பேட்டரி. தட்டினம்னா சும்மா ஒன் எச்பி மோட்டார் போல வெளிச்சத்தைப்
பீய்ச்சியடிக்கும்.
கைக்காவலுக்கு டார்ச் என்றாலும் அணைத்துவிட்டு நடந்து போவார்கள். திடுதிப்னு
ஏதாவது மிருகம் வழி மறிச்சா. அது எதிர்பாராம, அதும் முகத்துக்கு நேர டார்ச்சை
அடிச்சா...குபீர்னு பதறி ஓட்டம் எடுக்கும் பாரு. ஆசுவாசப்பட்ட பின் அதை நினைச்சு
நினைச்சுச் சிரிப்பு வரும்.
காட்டில் அவருக்கு முன்னால நல்லான் போவான். அதைத் தனியா சொல்ல வேண்டியதில்லை.
அவனுக்கு டார்ச் தேவையில்லை. அட பயமுங் கிடையாது. நால்டி மூணடி கிட்டத்ல கரடியை
சந்தித்திருக்கிறான். தப்பிக்கிற நேக் தெரிந்தவன் அவன்.
வெறுங்கையோட அதிகபட்சம் துப்பாக்கியோட போனாத் தாவலை. துப்பாக்கி, அப்புறம்
நீளக்கத்தி. பத்தும் பத்தாதுக்கு டார்ச், குடிக்கத் தண்ணி, பைனாகுலர்,
கேமரா..ன்னு போனா இவுக வேட்டையாடப் போறாகளா பிக்னிக் போறாகளான்னே
சந்தேகமாயிருக்குதுல்லா? நம்ம வத்தியார் பாடல் என்ன? "வேட்டையாடு
விளையாடு"ன்றாப்ல
மான் வேட்டைன்னா கொஞ்சம் உள்ளாறப் போகணும். மான் கூட்டம் ரொம்ப உஷார்ப் பார்ட்டி.
எப்பவும் கூட்டங்கூட்டமாத்தான் திரியும். இரையெடுக்கும்... அப்பப்ப தலையைத்
தூக்கிப் பார்த்துக்கும். சிறிய சத்தத்துக்கும் காது விரைக்க நிமிர்ந்து
மருட்சியுடன் சுத்துமுத்தும் பார்க்கிறதே அழகு.
ஆனால என்ன ஒரு சௌகரியம். ஒரு மானைச் சுடப் பாத்தால், அடுத்த மான் சாகலாம்.
நாம்ளும் இதைத்தான் குறி பார்த்தோம்னு சமாளிக்கலாம்.
அய்யோ மான் மாமிசம் என்ன ருசி. நினைக்கவே இப்பவும் நீர் ஊறி விடுகிறது
அண்ணாச்சிக்கு. மான்கால் சூப்- அதைத்தான் ஆங்கிலத்தில் சூப்பர்ப் என்கிறார்கள்.
வேட்டைக்காரர்கள் இப்பவும் செத்த மான் உடலைத் தோளில் போட்டபடி ஊருக்குள் விற்று
வருகிறார்கள். மானும் தேனும் விற்பனைக்குறுதி...ஆலும் வேலும் பல்லுக்குறுதி...
என்கிறாப் போல.
அடடா, நிலா வெளிச்சத்தில் காட்டுக்குள் நடமாடுகிறதே கொள்ளையான அனுபவம். போனாப்
போகட்டும் என்று அம்மணிகள் குழந்தையை வெளியே விளையாட அனுமதித்தாற் போல ஒளி
கசியும் கானகம். சில சமயம் நடுவில் புல் இல்லாத வெளிகள் கிடக்கும். புற்கள்
வெட்டப்பட்டோ அல்லது இடுப்புயர அளவில் வளர்ந்தோ கிடக்கும். அந்த அமைதியில் அங்கே
நின்று வானத்தைப் பார்க்கனும்யா... ஆமாமாம், பக்கத்துல நல்லான் இருந்தாதான்
ரசிக்க முடியும்.
சில சமயம் சத்தமில்லாம... நல்லானுக்குப் பதிலா கரடி வந்து நின்னாலும் நின்னுரும்.
நல்லான் கொஞ்சம் நில்லுன்னு நிக்கச் சொல்லிட்டு அவரும் நிப்பாரு. காட்டின் நல்
வாசனை. லேசான குளிர். நல் வெளிச்சம், ரொட்டியில் வெண்ணெய்யைத் தடவினாப் போல
என்ன இதமான வெளிச்சம். அதைச் சாப்பிட ஆசையாக் கெடக்கும். வேட்டையாட வந்தம்னே
மறந்துரும்.
ஏதாவது மிருகத்தின் உருமலே அதை ஞாபகப்படுதிரும்னு வெய்யி.
பொங்கல் வெச்ச பானையா நிலா. பொங்கிய பாலாய் வெளிச்சம். டாப் ஆங்கிள் ஷாட்!
அந்தப் பால் குடிச்சம்னா சுட்டுப் பொள்ளீரும். இது குளுமையோ குளுமை. இதையெல்லாம்
அனுபவிக்கக் கொள்ள நல்லானுக்குத் தெரியாது...
வேட்டையாட நல்ல நிலா வெளிச்சப் பொழுதாய்க் கிளம்பறது நல்லது. தப்பி
ஓடியாறதுக்காவது வெளிச்சம் வேணும்ல? எங்கியோ கேட்கிற மிருகச் சத்தத்துக்குப்
பயந்தலறி திக்கு திசை தெரியாம முட்டி மோதி அவசர அவசரமா ஓடி...நேரா கரடி
கிட்டத்லியே போயி நின்னம்னா?
வேட்டையாடுவது ஒரு ருசி. மிருகத்தின் மாமிசம் ஒரு ருசி. அதை விட ராத்திரியில்
காட்டுக்குள்ளான அனுபவம்...அதன் ருசி தனி.
நல்லான்தான் அவருக்கு மரம் ஏறச் சொல்லிக் கொடுத்தான். ஆமாமா, ஏர்றது என்னத்த
ஏர்றது? இருக்க பயத்துக்கு விழுந்து கூட்டியாவது, கொடியும் செடியும்
பிடிச்சுக்கிட்டு ஏறிப்பிடலாம். விரட்டி வந்த மிருகங்கள் ஓடிரும். பெறகு
எறங்கணும்லா? வசம் பாத்து இறங்கறதே தனி டெக்னிக். தெரிஞ்சாளுகதான் செய்ய
முடியும்.
அவுக போன சென்மத்துக் குரங்கு வம்சாவளிகளா இருக்கலாம்.
குரங்குன்னு கிண்டலெல்லாம் வேணாம். நம்ம ஆஞ்சனேய ஸ்வாமி சஞ்சீவி மலையையே கூம்பா
மடிச்ச பேப்பர் ரோஸ்ட் போலத் தூக்கலியா?
சிலர் வேட்டையாடாட்டியும் ராத்திரிக் காட்டைப் பார்க்க, படம் எடுக்கப்
பிரியப்பட்டு வருவார்கள். உள்நாட்டு வெளிநாட்டு பார்ட்டிகள். அப்படி சில ஆட்கள்
ஃபோட்டாவும் பாண்டித்துரை வீட்டு நடுவறையில் இருக்கு. தோளில் மாலை சுமந்த
உற்சாகச் சிரிப்பாய் வெளிநாட்டுக் காரியும் கூட பாகீஸ்வரியும். என்ன காம்பினேசன்!
டிகாசன் அருகே பால்!
பெரும்பாலும் வெயில் தாழ அடிவாரத்தில் இருந்து கிளம்பினால் வெயில் உள்வாங்க
வாங்க காட்டுக்குள் முன்னேறலாம். நல்லான் டூரிங் டாக்கீசில் பாதிப்படம்
ஓடுகையில் இடையில் எழுந்து போகிறவனைப் போல இடப்புறம் வலப்புறம் இலைதழைகளை
ஒதுக்கிக்கிட்டே முன்னே போவான். ரொம்ப அடர்த்தியா உள்ள போகனுன்னா மாத்திரம்
பயன்படுத்த பெரிய சைஸ் கத்தரிக்கோல் வெச்சிருக்கான்.
பின்னாடியே தடம் பார்த்துக் கொண்டு போகலாம். போதும் என்று தோணுகிற அளவில் - அது
என்ன அளவு அது? நம்ம தேவைப்படி அதை அவனே முடிவெடுப்பான்.
நல்ல வசமான மரமா அவனே தேர்வு செய்வான். யானைகள் முட்டித் தூக்கித் தருவதைப் போல
மரத்தில் முண்டுமுண்டாய் இருக்கும். பொம்பளையாளுகள் கொண்டை போட்டாப் போல.
பிடித்துக் கொள்ள, காலால் மிதித்து ஏற சவுகரியம்.
நல்லா ரெண்டாள் மட்டம் மூணாள் மட்டம் ஏற மரம் வளைவாய்ச் சற்று நீட்டி திரும்ப
ஏறியிருக்கும். நாலைந்து மனுச மக்கள் உக்காரலாம் போல. இருட்டும்வரை
காத்திருப்பார்கள்.
அன்னப் பறவையின் சிறகு கொண்டு வானத்தில் மேகங்களை வரையும் காலம். அட அது வேற
உலகம்யா. நம்ம அண்ணாச்சி அந்த அனுபவத்துக்குக் கிறுக்கு பிடிச்சித் திரிஞ்சாப்ல...
எப்படா பௌர்ணமி வரும்னு காத்திருப்பார். நிலாவும் அந்த வெளிச்சத்தைக் கிழித்து
விடாத கவனமுடன் நடமாடும் குளுந்த காத்தும்...ஆ, அந்த அமைதியும். அவரது சின்ன
மூச்சுக்கும் மரத்தில் ஏதாவது பறவை கல்வரப்படலாம். எழும்பிப் பறந்து தவிக்கலாம்.
உடனே காட்டின் முகமே மாறிரும். சினிமால கிளைமாக்ஸ் போல காட்டில் பரபரப்பு.
மான்களும் காட்டெருமைகளும் அலைபாயும். குரங்குகள் தவிச்சித் தடுமாறும்.
மரம் ஏறி உக்காந்தம்னா சத்தமே வரப்படாது. மூச்சு விடப்படாது. அப்ப உனக்கே காடு
தட்டுப்படும். ஒயிலாய் நடை பழகும் மான்கள் அஜீரணத்துடன் திண்டாடுகிறாப் போல
வயிறை எக்கி எக்கி சத்தங் கொடுத்தபடி ஓநாய்கள் நரிகள் கழுதைப்புலிகள்...அட
ஒண்ணுமில்ல புதருக்குள் காட்டுச் சேவல்கள் நடமாடும் அழகு. காட்டுப் பன்றிகள்
முள்ளம் பன்றிகள். நம்ம பண்ணையார் வீட்டுப் பொம்பளைகள் பெரிய "டியார் ராஜகுமாரி"
வம்சம் போல டிரஸ் பண்ணி அலட்டுவதைப் போல... முள்ளம் பன்றிகள். மயில்னு
நினைப்புடன் முள் விரைக்க நடமாடும்.
பாண்டித்துரையின் முதல் வேட்டை அனுபவம் வித்தியாசமானது. நல்லான்தான் யோசனை
சொன்னது. நடந்து விரட்டி ஓடி கீடி...இதெல்லாம் இப்ப சத்தைக்கு வேணாம். மரத்துல
ஏறி உக்காந்துகிட்டு குறியெடுத்துச் சுடலாம்.
அப்படியே ஆகட்டும்னாரு பாண்டித்துரை.
சுடும்போது குண்டுபாயும் அந்த ஃபோர்சுக்கு எதிர்விசை உருவாகி தோளில் முட்டித்
தள்ளும்.
மான்வேட்டை. வசமான மரத்தில் ஏறிக்காந்திருந்தார்கள். புது அனுபவம். மனம்
பூரித்துப் பரபரத்துக் கிடந்தது. நெஞ்சு திக் திக் என்றது.
மான்கள் மெல்ல நடமாட ஆரம்பித்த ஜோர். நிலாப் புல்வெளி நடுவே தலை நீட்டியபடி மான்
கூட்டம். மாமன் மச்சான் மருமகப்பிள்ளை பேரன் பேத்தி சம்பந்தி சித்தப்பா
பெரியப்பா. சிநேகித வட்டாரம். வாயைப் பிளந்தபடி அந்த அழகில் சொக்கிப் போனார்.
நல்லான்தான் உசுப்பினான்.
குறி பார்த்தார். டமார்! எந்த மான் கீழே விழுந்ததோ தெரியாது. அவர் விழுந்தார்.
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-7 தொடர்கதை
பகுதி-9


|