........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

9. யார் அந்த மிஸ்டர் புரூட்டஸ்?

ராஜவம்ச பெருச்சாளிகளோ பெரும் மீசைப் பண்ணைகளோ ஆய கலைகள் அறுபத்து நாலிலும் தேர்ச்சிப் பெற்றதாகச் சரித்திரம் பொய் சொல்கிறது என்பதால், அவர்கள் அதையெல்லாம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுமில்லை. ஒன்றில் விவரம் பத்தாது என்றாகிற போது அடடா என்று தேள்கடிக்குப் போல உதறிவிட்டு இன்னொன்றில், ஆபத்தில்லாத ஒன்றில் கை மாத்திக்கிர்றதுதான். நமக்கு எது லாயக்படுமோ அது!

அப்ப பாண்டித்துரையிடம் ஒரு நாய் இருந்தது. வேட்டை நாய், உயரமானா சரியுயரம். ராஜபாளையம் வெரைட்டி. நாக்கைத் தொங்கப் போட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சுத்துமுத்தும் பாக்கும். ஒரு மாதிஒரி பழுப்புப் பாசியின் வெல்வெட்- பளபளப்பு மிக்க தோல். கண்ணருகே சிறிது வெளிர் வாங்கிய தேமல். அதிகம் குரைத்து அவர் பார்த்ததேயில்லை. குறைத்தே குரைக்கும்!

ஆகா வேட்டையில் சூரன். நீளக்கால்கள். அது ஓடும் வேகத்தை சினிமாவில் ஸ்லோமோசனில் எடுப்பார்கள். நம்மூர் நாய்கள் ஓடுவதைப் படம் எடுத்தம்னா கல்லெறிக்குப் பயந்து ஓடுவதே ஸ்லோமோசன் போலிருக்கும்.

மான் என்ன வேகம் ஓடும். மானின் வேகத்துக்குச் சமதையாய்க் கூட ஓடும் புரூட்டஸ். நாய்களுக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது சுதந்திர காலத்தில் ஒரு வேடிக்கை போல ஆரம்பித்திருக்கலாம். நாய்கள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன. ஏனோ? ஆனா வெள்ளைக்காரனை, ஓடறதா? நகர்த்தவே வம்பாடு பட வேண்டியதாப் போச்சு. பஸ்ஸில் பக்கத்து சீட் போல, கொஞ்சம் தள்ளி உட்காருன்னாக் கூட, என்ன முறை முறைச்சான். கடேசியா காந்தி சொன்னாரு. சரி வயசாளி, அதும் ஒல்லி ஆத்மான்னு வழி விட்டான்...காந்தி உக்கார்ந்து அவனை எழுப்பி விட்டுட்டாப்ல.

நம்ம காங்கிரஸ்காரன் காந்திக்கு முன்ன "மியூசிக்கல்-சேர் அவசரம் போல" அவம் போயி உட்கார்ந்தது தனிக்கதை.

அப்ப வெள்ளைக்காரன் பேசினான்யா. அதான் வசனம்- "நீயும் புரூட்டஸ்?"

மாந்தோப்பிலேயே புரூட்டஸ் வளர்ந்தது. பாத்துப் போகனும். புது ஆளு வாசமே அதைத் தலை நிமிரச் செய்யும். நம்ம பாண்டித்துரை ஒரு மூடுக்கு செண்ட்கிண்ட் பவுடர்னு அடிச்சாக்கூட சிலிர்த்து ஆர்றா அதுன்னு ஒரு பார்வை. அந்தக்கால பாண்டித்துரைக்கு வேர்த்துரும். "கியா நல்லான்? நாயக் கட்டிருக்கியா?" ம்பாரு சந்தேகமா. (முதல் கியா- அது இந்தில்லா) அசந்தா அவர் தொடைக்கறி காலி. அப்பறம் அவரே அந்த வசனம் பேசறாப்ல ஆயிருமே?

"நீயுமா புரூட்டஸ்?"

நாய் நல்ல இசை ஞானம் மிக்கது. அதன் கோபத்தை அனுசரித்து புரூட்டஸ் குரலெடுக்க ஆரம்பிக்குமுன் மெல்ல சுருதி சேர்க்கும்.

நம்ம தெரு நாய்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறதிலேயே ஒரு பணிவு. பயம் தெரியும். கீச்சென்று பொம்பளையாள் குரல்.

கருப்புக் குதிரை ஒன்று வைத்திருந்தார். அம்சவேணி. அதென்னமோ தெர்ல. நாய்களுக்கு இங்லீஷ் பெயர். குதிரைன்னா பொம்பளையாள் பெயர். யாரும் நாய் மேல ஏறி உட்கார்ந்து சவாரி செய்கிறதில்லை. அதனாலயோ?

நாய்க்கும் குதிரைக்கும் நல்லான் நல்லா எண்ணெய் தடவி மாலிஷ் பண்ணி வைத்திருந்தான். பாக்கவே நகைப்பெட்டியைத் திறந்தாப்போல கண் கூசும். வேட்டைக்குக் கிளம்பும் முன் அதன் கால்களைத் தடவித் தருவான். முட்டிகளையெல்லாம் நீவி விடுவான். உதறிவிடுவான். புரூட்டஸ் எப்பவும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையுது. குதிரைகள் இளைத்தால் ஒழிய நாக்கை நீட்டுவதில்லை. மனுசாளெல்லாம் ஜீரம் வந்தால் டாக்டரிடம் போய் நாக்கை நீட்டுகிறார்கள்...ஒருமுறை பாகீஸ்வரி தர்மாஸ்பத்திரியில் நாக்கை நீட்டிக் காண்பித்ததைப் பார்த்திருக்கிறார். துர்க்கையம்மன் போல இருந்தாள்.

*****

பௌர்ணமி தினம். அறுவடைக் காலம் முடிந்த சோம்பேறித்தன பகல்கள் அல்லது விருந்தினர் வந்த தினங்கள். அவர்களுக்கு வேட்டையாடிய மாமிச உணவைப் பரிமாறலாம் அல்லவா? அப்படி நாட்களைத் தேர்ந்தெடுத்து பாண்டித்துரை வேட்டைக்குக் கிளம்புவார்.

மாந்தோப்பு வரை வில்வண்டி. வேலுச்சாமி தேவையில்லைன்னு தனியே அவரே ஓட்டிப் போவார். பழகிய மாடுகள். வழி தானே தெரிய, போய்ச் சேர்ந்து விடுகின்றன. இந்த மிருகங்கள் ஒவ்வொன்றும் எப்படி சம்யோசித அறிவுடன் இயங்குகின்றன...என வியப்பாய் இருந்தது அவருக்கு. சர்த்தான், அவர் அறிவை வெச்சி அதுகளை மதிக்காரு!

குடிலின் முன் வளாகத்தில் குதிரையை ஓட்டி ஒரு வெள்ளோட்டம் பாத்துக்குவார். சிறு துள்ளலில் அது ஓடி வட்டம் போடும். நீச்சல் பந்தய்க்காரன் குதிக்குங்குள்ளாறா உடம்பையெல்லாம் உதறி உருவிக்குவான். அதைப் போல குதிரையும் காலை மாத்தி மாத்தி உதறிப் பாத்துக்கிடும். நல்ல உயரமான குதிரை. போலீஸ்காரன் போடற விலங்கு மாதிரி பக்கவாட்டில் இரும்பு அரை வளையம். அதை மிதித்து முதலில் நல்லான், அவர் அடுத்ததாக முன்னால் உக்காருவார்.

யானை அங்குசத்துக்குக் கட்டுப்பட்டாப் போல. அம்சவேணி அவன் விசிலுக்குக் கட்டுப்பட்டது. நீள ஊளை. வாய்க்குள்ள விரலைக் குடுத்து முள்ளுமீன் சாப்பிடுறாப்ல நல்லான் ஒரு இழு இழுத்தான்னா சும்மா தோப்பே, காடே அதிரும். அது ஒரு கலை. பீடாவுக்கு வெத்திலை மடக்கினாப்ல நாக்கை மடக்கு. விரலைப் பாக்கு வெட்டி போல உள்ளே செலுத்து. ஒரு விஷ். பக்கத்தில் புலி மேய்ந்து கொண்டிருக்கும். குதிரை பாய்ந்து ஓடிவரும்.

ஆயகலை அறுபத்து நாலும் கத்துக் கொண்ட பண்ணையாருக்கு விசிலடிக்க வரவில்லை. தனியே அவர் ஏக்கத்துடன் வயக்காட்டுப் பக்கம் மலங்காட்டுப் பக்கம் பல முறை முயன்று பார்த்தாரு. சரி, நமக்கு இது லாயக்படாதுன்னு விட்டுட்டாரு.

மனுசாள் போகும் வழி வேற. குதிரௌ வழி வேற. பாதைச் சிறுகச் சிறுக, குதிரையோட்டம் நடையாகி பிறகு அதும் தடையாகி விடும். இறங்கி நடத்திக் கூட்டிட்டுப் போவார்கள். சரித்திரக் கதை போல எங்காவது ராஜகுமாரிகள் முண்டக்கட்டையாக் குளிக்க மாட்டாளுகளா என்று ஏக்கமாயிருக்கும். மூடு வந்தா அவரு இறங்கிக் குளிப்பாரு. எங்கயிருந்து வருமோ? காட்டுத் தண்ணி அத்தனை ருசி. அத்தனை தெளிவு. சிற்றருவி. தரையில் வழிஞ்சோடும் நீரில் அப்படியொரு தெளிவு. மீனும் நண்டும் தரையும் கண்ணாடி போல தெரியும். சட்டென்று பலமுறை அந்த மீன்குட்டிகளைப் பிடித்திருக்கிறார்.

காட்டின் ஊடாடி உட்புகும் பச்சை வாசனை. சில சமயம் தேன்கூடு தேன் சொட்டச்சொட்ட பளபளத்துக் கிடக்கும். தூக்கணாங் குருவிக் கூடுகள். ஒரு பறவை பின்னியதுன்னா நம்பவா முடியுது?

ஒருமுறை மழையில் மாட்டிக் கொண்ட அனுபவம். பெருமரமொன்றில் அவரும் நாயும் குதிரையும் நல்லானும். மரம் அகலமானா நம்ம பட்டணத்தில் வீராணம் திட்டக் குடிநீர்க்குழாய் அகலம். என்ன மழை. என்ன இருட்டு.

காட்டு மழை எப்ப எடுக்கும். எப்ப விடும்னு சொல்லவே முடியாது. மழைவிடக் காத்திருந்தார்கள். அவர் குதிரையை ஒரு வெதுவெதுப்பு வேண்டித் தொட்டார். குதிரை உடம்பெங்கும் ஒரு சிலிர்ப்பு அலையோடியது.

என்ன ஆச்சர்யம்னா, நல்லானுக்கு வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதுன்னு நினைத்திருந்தார். மழையை அவன் எவ்வளவு ரசித்தான். மர அடிவாரத்தில் குத்திட்டு உட்கார்ந்து காதில் இருந்து ஒரு மாஜிக் நிபுணன் போல பீடியெடுத்து அந்த இருட்டில் இடுப்பு மூடியில் வைத்திருந்த தீப்பெட்டியிலிருந்து குபீரென்று நெருப்பு பற்ற வைத்தான். என்ன அழகு.

"ஒரு பீடி குடு நல்லான்"

"அய்யா நீங்களா?"

"சுருட்டு எடுத்தாறல. அதனாலென்ன பரவால்ல.குடு"

அவர் எப்பவாவது சுருட்டு பிடிப்பார். வேட்டையாடச்சிலே இருட்டுக்கும் குளிருக்கும் ஒரு துணை போல உள்க் கதகதப்பளிக்கிறதைப் போலிருந்தது...

ஜோக் ஒண்ணுமில்லை... நிஜம். ஒருமுறை கரடி வித்தைக்காரன் ஒருவனை வேடிக்கை பார்த்தான் நல்லான். கரடி சர்க்கஸ் ரொம்ப சுவாரஸ்யம். கரடியை டான்சாடப் பழக்கியிருந்தான். அவன் சொன்னா அது குட்டிக்கரணம் போடுது. அட, சைக்கிள் கூட ஓட்டுது. சுருட்டுப் பிடிச்சி புகையை வெளிய ஊதுதுய்யா. எப்படிக் கத்துக் கொடுத்தான் இந்த வித்தைக்காரன்.

திடீர்னு சரசரன்னு சத்தம். "ஷ்"ன்னு எச்சரிச்சான் நல்லான்.

"அசையாதீங்க. பயப்பட வேணாம்" பாத்தா பாம்பு. அப்பதான் பாம்பு மரமேர்றதைப் பார்க்கிறார். என்ன சுறுசுறுப்பு. என்ன வேகம். நல்லா ஒராள் ஒண்ணரையாள் நீளம். கறுப்பும் வெள்ளையுமா பாசிமணிபர்சாய் உடம்பு. அவர்களைச் சட்டை செய்யாமல் அவர்களையிட்டுப் பயப்படாமல் மரத்தில் ஏறி மறைந்தது. கடுமையான விஷம் இருக்கும்.

அந்த மழைக்கும் இதமான சிறு வெளிச்சத்துக்கும் யானைகள் இரண்டு தூரத்தில் தும்பிக்கைகளை இணைத்துக் கொண்டு நடன இசைக்கு மண்டையாட்டுவது போல ஆட்டிக் கொண்டிருந்தன.

இன்னொரு முறை சாரைப் பாம்புகள் இப்படி நடனமாடுகிறதைப் பார்த்திருக்கிறார். காட்டில்தான் எத்தனை அழகுகள் ரகசியங்கள். தைரியத்துக்கு நல்லான். கூட புரூட்டஸ். பயண அலுப்பு தெரியாமல் இருக்க குதிரை அம்சவேணி. வாழ்க்கை அமர்க்களமாய் இருந்தது.

இரவு வேட்டை ஒன்றில் காட்டெருமை ஒன்று தனியே வெளியே வந்ததைப் பார்த்தார்கள். பயமாய்த்தான் இருந்தது. நல்லான்தான் தோளமுக்கி அவரை அமைதிப்படுத்தியது. எருமையின் முனகல் பாஷை அவனுக்குத் தெரிகிறது. அது சீற்ற முனகல் அல்ல. என்னவோ உபத்திரவம் அதற்கு...

நிலா. யானை முதுகெனத் தெரியும் பாறைக் கற்கள் எருமைபோய் முனகி முனகி மடுவைத் தேய்க்கிறது. பால் கொழித்த கெட்டியான மடு. ஒவ்வொரு தேய்ப்புக்கும் பாறையில் பீச்சியடிக்கிறது பால். குட்டிக்குத் தந்தது போக மீதமா, குட்டி இறந்து விட்டதா தெரியவில்லை.

பாவம். அதும் வேதனை அதுக்கு. சலூனில் கத்தியத் தீட்றாப்ல பாறையில் உரசோ உரசுன்னு கீழபடுத்து அந்தப் பாலைப் பீய்ச்சிக் குடிக்கலாம் போல ஆசையாயிருந்தது. கிட்ட நெருங்க முடியுமா? நம்ப உள்ளூர் எருமை மிதிச்சாலே கால்சதைக் குதறி சாணியாக் கொழகொழத்திரும். இது காட்டெருமை!

எருமை போன பிறகு மெல்ல அங்கே போய்ப் பார்த்தார்கள். பால் இப்போது கொட்டிக் காய்ந்திருந்தது. தொட்டெடுத்தால் சாக்லெட் போல உடைந்து கையோடு வந்தது. வாயில் கரையக் கரைய என்ன ருசி...

அதெல்லாம் அனுபவிக்கணும்யா. திரும்பி எருமை வந்திருமோன்னு பயந்து பயந்து சாப்பிட்டார்...! வீட்டுக்கும் எடுத்து வந்தார்.

புரூட்டஸ் இருந்தால் மான் வேட்டை சுலபம். மான்கள் திரளக் காத்திருப்பார்கள். இதுவரை எங்க இருந்ததோ? திடீரென்று பள்ளிக்கூடம் விட்டாப் போல ஒரு கலகலப்பு. மானின் வரத்து கம்மாயில் புதுத்தண்ணி வருகிறாப் போல. அதும் கலைமான்கள் வினோதமான கொம்புக் கொண்டைகளுடன் நடமாடும் அழகு. நிலா வெளிச்சத்தில் அப்டியே சொக்கும். ஒருமுறை மாட்டிய கலைமானைத் தலை சிதைக்காமல் பாடம் பண்ணி சுவரில் மாட்டி வைத்திருக்கிறார். அதைப் பார்க்கையில் கை தானாக மீசைக்குப் போகிறது. ஏன்? அட, அவருக்கு அது இத்தாம் பெருசா இருக்கு. அதான் பண்ணையார்னா அது ஒரு கெத்து! பந்தா! மைனரிச மேனரிசம்...

*****

நல்லான். புரூட்டஸ். அம்சவேணி. பாண்டித்துரை குரூப் போட்டோவுக்குப் போல காத்திருக்கையில் கானகம் தன் ரகசியங்களில் ஒரு அத்தியாயத்தைத் துவக்குகிறது.

விலங்குகள்...ஜீபூம்பா...! சத்தத்துக்குக் கட்டுப்பட்டாப் போல மெல்ல உருவங் கொண்டு அந்தப் புல்வெளியில் உலா வருகின்றன.

மான்கள் மகா மகா சந்தெகப் பிராணிகள். காதை என்ன பாடுபடுத்துகின்றன. யாக குண்டத்தில் நெய்யூத்த அரசயிலை மடிச்சாப் போல காதுகள். சிறு காற்றின் சிணுக்கத்துக்கும் நுணுக்கமாய் அவை விரைத்து விரிகின்றன. ஒரே ஒரு மான் பதறினாலும் போச்சு அத்தனையும் பறந்துரும். ரேக்ளா ரேஸ் போல...

எல்லாம் அமைதி எங்கும் அமைதி. மான்கள் நடமாட்டத்தைப் பார்க்கிறார் அண்ணாச்சி. நல்லானும் பார்க்கிறான். அவன் கை மெல்ல புரூட்டஸைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது அதுவே கதாநாயகன். ஆகவே அது மிஸ்டர் புரூட்டஸ்!

புரூட்டஸ் அடுத்து நல்லான். அடுத்து பாண்டித்துரை. குதிரை தப்பு பண்ணி விட்டாப் போல தலை குனிந்து அருகே நிற்கிறது. இல்லை இல்லை. கயிறு தணிவாய் இழுத்துப் பிடிக்கப் பட்டிருக்கிறது.

எந்த மான் சிக்குமோ? அது மிஸ்டர் புரூட்டஸின் தேர்வு. அவர் தலையிட முடியாது.

யாரும் இல்லை. தொந்தரவு இல்லை என்கிறாப் போல மான்கள் சமாதானமுறுகின்றன. நல்லான் இன்னும் காத்திருக்கான். அந்த மான்கள் அவர்கள் பக்கம் ஓரளவு கிட்டத்தில் வரட்டும்... இன்னுங் கூட... அருகில் பக்கத்தில் நெருக்கத்தில் கிட்டத்தில் சமீபத்தில்... இன்னும் ம்...னு..ன்.இ...

கை மெல்ல மிஸ்டர் புரூட்டஸைத் தட்டி விடுகிறது. அமைதியாக, ஆனால் உட்பரப்புடன் காத்திருந்த மிஸ்டர் புரூட்டஸ் சுவிட்சைத் தட்டினாப் போல மெல்ல ரகசியமாய் அந்தப் புற்புதருக்குள் பச்சைப் பாம்பாட்டம் பதுங்கி ஆனால் வேகமாய் நகர்கிறதே...அந்த அழகு...அந்த சாமார்த்தியம்...

நிச்சயமா பாண்டி அண்ணாச்சிக்கு இல்லை.

திடீரென்று அந்தப் புல்வெளியில் எழுந்து கொள்கிறது மிஸ்டர் புரூட்டஸ். காடே சிலிர்க்கிற உருமாற்றம். புழுதிப் படலம். அந்த வினாடியில் அவர் குதிரயேறி - நல்லான் இல்லை - மான் வேட்டைதானே? பாய்ந்து முன்னேறுகிறார். மான்கள் பதறி விலகிச் சிதறுகின்றன. குதிரையைத் தட்டி விடனும். அது கிளம்புற ஜோருக்குத் தாவியேறனும். படாத எடத்துல பட்டுக்கிறப்படாது. ஏறின ஜோருக்குத் துப்பாக்கியப் போட்றப்டாது.

நாய் ஒரு மானைக் கணக்கு வைத்து ஓடும். இளைய மான்கள் பதறி வழி பிரியும். ஆனா எடுக்கிற ஓட்டம் இருக்கே. நம்மால விரட்டிப் போக ஏலாது. பெரிய மான்களோவெனில் பலம் ஜாஸ்தி கொண்டவை. ஓடற வரை ஓடும். முடியலியா சட்டுனு நின்னுரும். திரும்பி சண்டைக்கு வந்துரும். கொம்பால ஒரு கிழி கிழிச்சா கிழிஞ்ச சதயோட அது காட்டுக்குள்ள ஓடறதைப் பார்க்க வேண்டிதான். அத்தனை மூர்க்கம் இருக்கும் அந்த மோதலில்.

மிஸ்டர் புரூட்டஸ் துரத்திப் போகிற வேகம் அலாதியானது. பயம் சிறிதுமற்ற துரத்தல். தாக்க வரும் மானிடம் கூட பதுங்குமே தவிர பின் வாங்காது என்பதுதான் விசேஷம். கவனமெல்லாம் குறியெல்லாம் மானின் கழுத்துதான். வசம் பார்த்து நேரம் பார்த்து, முகூர்த்தம் நெருங்க சந்தர்ப்பம் கூடிவர...முழு வேகப் பாய்ச்சலில் துள்ளி... மானின் கழுத்தோடு தொங்கும்.

மான் அதை உதற வம்பாடுபடும். தரையெங்கும் நாயை உதறி அறையும் துணி துவைக்கிறாப் போல. மிஸ்டர் புரூட்டஸின் பற்களுக்கு சவால். சவாலில் அவர் தோற்றதெயில்லை.

குதிரையில் புயல் போலத் துரத்தி வரும். அண்ணாச்சியின் முறை இப்போது. குறி தவறிறப்படாது. நாம விழுந்திறப்படாது. டமார்!

மான் அப்படியே சுருண்டாற் போல சர்ர்னு புல்தரையில் வழுகிப் போகும். நல்லா நெத்திப் பொட்டுக்கு அடிச்சா அது அடி. அமைஞ்சா சரி. இல்லாட்டி கெடச்ச எடத்தில அடிக்கறதுதான் இன்னொரு டமார். எதுவரை...மான் தலையைக் கீழே போடும்வரை...அதுக்குப் பின்னரும் கூட மிஸ்டர் புரூட்டஸ் கழுத்துப் பிடியை விடாது. அண்ணாச்சி இறங்கிப் போய் மிஸ்டர் புரூட்டஸைத் தொடுவார். அதன் பின்தான் அது வாய்ப்பிடியை விடுவிக்கும்.

எதுவுமே நடவாதது போல நின்று சாதுவாய் அவரைப் பார்க்கும். அப்படியே நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீருடன் அவர் நாயை அணைத்துக் கொள்வார். நாய் அந்தக் காலக் கடிகாரம் போல நாக்குப் பெண்டுலம் தொங்க அவரைப் பார்க்கும். அதன் உடம்பெலாம் புழுதி. இரத்தக் கீறல்கள். தரையோடு இழுபட்ட காயங்கள். பரிசுத்த வீரன் அல்லவா? என்ன அமைதியாய் நிற்கிறது. அதன் கூட நிற்கவே எனக்குத் தகுதி இல்லை. என்பதாய் நினைத்துக் கொள்வார்.

மான்கறி சரியான கனம் இருக்கும். அதைக் குதிரை மெல் போட்டுக் கட்டியெடுத்துக் கொண்டு திரும்புவார்கள். மானின் உடம்பில் இருந்து இரத்தம் ஒழுகும். வாசனை அந்த வளாகத்தையே நிரப்பும். ரத்த வாசனைக்குக் கழுதைப் புலிகள் சுற்றி வரும். ஓநாய்கள் படையெடுக்கும். புலி கிலி வந்துறக் கூடாதே என்று பயமாய் இருக்கும். திரும்பி புரூட்டஸைப் பார்க்கிறார் அவர்.

கவலையே இல்லை அதற்கு. பயமே இல்லை. சகஜமாய்க் கூட வந்தது.

அந்த புரூட்டஸ் இப்போது இல்லை. இறந்து விட்டது. அவரே சுட்டு விட்டார்.

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-8                                                                                                தொடர்கதை பகுதி-10

 
                                                                                                                                                                                                                 முகப்பு