........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

10. எருமையிடம் தப்பிக்கப்பட்ட பாடு?

அண்ணாமலைப் பகுதிகளில் அதிகம் புழங்கும் மிருகங்கள் என்றால் மான்கள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள்...என்று உடனே சொல்லத் தோணுகிறது. மனுசனுக்கு நிகரா சோம்பேறிப் பிராணி என்றால் அது கரடிதான். இசையொலிகளின் நளினம் சிறிதுமற்ற அவற்றின் கனைப்புகள். உருமல்கள். அட மனுசாளைப் போல குறட்டை விட்டுத் தூங்குகிற வேறு மிருகம் உண்டா? காபிய உறிஞ்சறாப்ல. சில ஆளுகள் தூங்கும் போது பக்கத்துல படுக்கிறவன் செத்தான். எப்ப இவன் குறட்டை பதட்டப்படுத்தி ஆளை உசுப்பிவிடும் சொல்லேலாது. மெதுவாத்தான் காத்தை உள்ளிழுப்பான். ஆனா வெளிய விடறதுலதான் கோளாறே. என்னா அவசரமோ, கண்டதைத் தின்னுட்டு கக்கூஸை நோக்கி ஓடுறாப் போல, காத்து உள்ளயிருந்து சீறிப் பாய்ந்து உடலையே உலுக்கி வெளிப்பாயுது.பாதியாளுகள் அவனவன் குறட்டைல அவனவனே எழுந்தர்றதும் உண்டு. ரொம்ப அறிவாளியா, பக்கத்தாளை எழுப்புவான். "மாப்ள, குறட்டை விடாமத் தூங்கு. பக்கத்ல மனுசன் படுத்திருக்காகளேன்னு கவனம் வேணாமா?"

அண்ணாமலை சிகரத்தில் ஒரு பக்கமாக பெரிய சிவங்கோவில், திருநாவுக்கரசர் சார் இதைப்பத்திப் பாடிருக்காரா தெர்ல. இங்கருக்கறதும் சிவன்தான். அங்கருக்கறதும் சிவன்தான். சளிக்கு உறிஞ்சுற இன்ஹேலர் மாதிரி லிங்கம். அதைப் பாத்த செகண்டுல பரவசப்பட்டு பாட்டு எடுத்து விடறாருய்யா. எத்தனைப் பாட்டு...! ஆச்சர்யமான மனுசன்.

நமக்கு ஒரு பரவசமும் வரமாட்டது. தெனாலிராமன் யானை வரைஞ்சாப் போல, பாத்தா ஓராள் மல்லாக்கப் படுத்திருக்காப்ல தோணுது. நம்ம சென்மம் அப்டி.

மலையுச்சி சிவன் கோவில் நல்ல பெரிய வளாகம் டோய். வவ்வால்கள் புழுக்கை வாசம், தரையெங்கும் பிரகாரத்தில் அவை கழிந்து வெச்சிருக்கும். அங்க அந்த இடத்துல ஒரு சாமி. அதுக்கு ஆடி அமாவாசைன்னு ஒரு விசேஷம். அதைக் கொண்டாடன்னு கிராமத்து ஆளுங்க கூடறது. யாரோ கைங்கர்யம் எடுத்துச் செஞ்சிட்டுத்தான் வர்றாங்க. ஒரு காலத்துல அந்தப்பக்கம் ஊர் இருந்து எல்லாம் அழிஞ்சு போயி கோயில் மாத்திரம் மிச்சம் இருக்குதோ? இல்லை வவ்வால்களே ஆளுக்குக் கொஞ்சம் துட்டு போட்டு கோவிலைக் கட்டிச்சோ தெர்ல.

திருவிழாச் சமயம்னா நாலு திசைலெர்ந்தும் மலையேறி சனங்க வர்றாங்க. வருசத்துக்கு ஒரு நாள்னு ஒரு ஜாலி. சின்ன வயசுல பாண்டித்துரை சினேகித மனுசாளுடன் முதல்முறையா வந்தது. புது அனுபவம். காட்சிகள் புதுசு. ஒரே ஆனந்தம். சில ஆளுகள் குழம்புச் சோத்துக்கு மொத வாய் கறி... அடுத்த வாய்க்கு அப்பளத்தை ஒரு கடின்னு சாப்பிடுவான். அதைப் போல... கொஞ்சம் இருட்டிக் கெடக்கும் காட்டுக்குள்ள. திடுதிப்னு வெளிச்சம் வந்துரும். மௌன வளாகங்கள். கொஞ்ச தூரம் போனா விநோதமான பறவையொலிகளும் பூச்சியொலிகளும். தண்ணியோடையில் தண்ணியோடும் ஜிலுஜிலு சத்தமே இனிமை. பாக்கவே கால்ல குளிரடிக்கும்.

பெரியகுளத்தில் இருந்து நல்லா பத்து பன்னெண்டு கிலோமீட்டர் இருக்கும். நடையலுப்பே தெரியவில்லை. பசியில்லன்னு சாப்பிட உக்கார்ந்தாலும் சில சமயம் சமயல் ருசில வயிறு கொண்டா கொண்டான்னு அண்டாவாத் தொறந்துக்கும். அதைப் போல ஏற ஏற அலுப்பே தெரியவில்லை அவனுக்கு. முன்னாடி முன்னாடி ஏறி "அண்ணாச்சி வாங்க. அண்ணாச்சி வங்கன்றான். "ஏல பாத்து ஒத்தையானை கீனை இருக்கப் போகுது" என்று பெரியவர்கள் பயந்தார்கள்.

யானைகள் கூட்டமாய்த் திரிந்தாலும் ஒரு பெண்யானைக்கு என்று சில சமயத்தில் ரெண்டு ஆண் யானைகள் போட்டி போடும். காட்டில் மல்யுத்தம் போல அவை கடும் சண்டையிடும் கோபாவேசச் சீற்றத்தில் காடே அதிரும்.

"அண்ணாச்சி அதை நம்ம பாக்க முடியுமா?"

"ஏல அதென்ன விளையாட்டா? தோத்துப் போன யானை கூட்டத்துலயிருந்து விலகி கோபாவேசமாத் திரியும்டா...மக்கா மாட்டினே...தூக்கிப் போட்டு சவட்டற சவட்டுல ஒன்சானி பிதுங்கி வெளிய வந்துரும்."

ராத்திரி கோவிலுக்குள் படுத்துக் கிடந்தார்கள். அமாவாசை இருட்டு. பெரிய வவ்வால் ஒண்ணு இறக்கையை விரிச்சி அந்தக் கோவிலையே கூடாரத் துணி மாதிரி மூடியிருக்கு.

நல்ல நடை முடிந்து சொகமான தூக்கம். ராத்திரி ஒரே சத்த அமர்க்களம். முழிச்சிக்கிட்டு எட்டிப் பாத்தா வாசலருகே கம்பியழி அருகே எத்தனை யானைகள். அந்த இருட்டிலும் கும்மிருட்டா பாறை நகந்தாப் போல. யானைகளும் குட்டிகளுமான கூட்டம் வா வான்னு தும்பிக்கையை ஆட்டி ஆட்டி அவனைக் கூப்பிட்டாப்ல இருந்தது. சிலது ஒரு பக்கத்துல புல்லைப் பிடுங்கறதும், சிலது குட்டிக்ளோட இழையறதும். அநேகமா எல்லாருமே அந்தச் சத்தத்துக்கு எழுந்து விட்டிருந்தார்கள். யாரிடமோ மணி கேட்டான். "இப்ப எதுக்குடா மணி?" என்றபடி அவர் ரேடியக் கடிகாரத்தில் பார்த்துச் சொன்னார். அதிகாலை மூணு மணி. விடிய விடிய யானைகள் காட்டுக்குள்ள பம்மிரும். வெளிச்சம் வர வெளியே வந்து அந்த வளாகத்தை ஏக்கத்துடன் பார்த்தான். யானைகள் சானி போட்டுவிட்டுப் போயிருந்தன. இன்னும் லேசான உள்க்கதகதப்பு இருந்தது. அதை எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு மிதித்தார்கள். கோவில் உண்டக்கட்டி போலக் கிடந்தன அவை. அதை மிதித்தால் கால்ல முள் குத்தாதுன்னு ஒரு கதை...

******

அப்ப பிடிச்ச கிறுக்குதான். காடு அவனுக்கு அலுக்கவெயில்லை. தனியே உள்ளே சுற்றித் திரிய ஆசை. வீட்டை விட்டு ஓடிப் போயிறலாமா என்று தோணும். மார்க் கொறைஞ்சு அப்பா ஆத்தா திட்டினா உடனே காடு ஞாபகந்தான் வரும். காடுதான் அவன் அம்மை. இந்த அம்மை அவனைத் திட்டாது!

பிறகு வேட்டைப் பைத்தியம் பிடிச்சது. அவங்கய்யா கூட மாந்தோப்புக்கு போக வர உற்சாகமாய் இருக்கும். குடிலின் வளாகத்தில் ஒரு மயில் கட்டிக் கிடக்கும். கூண்டுக்குள் முயல், மான், காட்டுக்கோழி என்று கிடக்கும். பெரிய பண்ணை வந்தால் முயலடித்து சமையல். எத்தனை விதமான முயல்கள். கருப்பு, பழுப்பு, ஒருமாதிரி சாம்பல் கலர். வெந்த தோசை போல ஒரு கலர். சின்ன குட்டி முயல் ஓட ஓட காதைப் பிடித்துத் தூக்கி விளையாடுவான். விதவிதமான பறவை முட்டைகள் காட்டுவார்கள். பெரிய பெரிய முட்டையெல்லாம் பார்த்திருக்கிறான்.

ரொம்பக் கண்டிப்பாக அப்பா சொல்லியிருந்தார். "ஏல எந்துப்பாக்கியத் தொடப்படாது..." அப்பதான் அதைத் தொடுகிற ஆசை வந்தது. அந்த நல்லான் சுத்தமா எண்ணெய் போட்டுத் துடைக்கையில் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பான். குறி பாக்க அவனுக்கு ஒரு கவட்டை தனியே நல்லான் செஞ்சி தந்திருந்தான்.

ஒரு தரம் தனியா காட்டுக்குள்ள ஒரு பர்லாங் நடந்து போயிருந்தான்.

நல்ல ராட்சஸ மரம் ஒண்ணு. ஒரே இரைச்சலாய்க் கிடக்கிறது மரம். மேலே பார்க்க வெள்ளை வெளேரென்று நாரைகள். நீள அலகுகள் மஞ்சளாய்ப் பூக்கட்ட நார் கிழித்தாற் போன்ற வண்ணத்தில். சும்மாவாச்சும் தென்னையோலை விரிந்தாப் போல சிறகுகளை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. அவனுக்கு உடம்பே பரபரத்தது. சட்டென்று கவட்டையில் வசமான கல்லாப் பொருத்தி, அடிச்சான் ஒரு அடி. குறியெல்லாம் தெரியாது. ஆனா ஒரு நாரை விழுந்திச்சே. ஜிங்குஜிக்கா!

கொஞ்சம் தள்ளிக் கிடந்தது நாரை. பெரிய சிறகு. எடுத்துப் பறக்க முடியாமல் சிறகில்தான் அடி. ஓடவும் முடியவில்லை அதனால். இவனுக்கு அதன்கிட்ட போக பயம். ஆனாலும் பெருமிதம்.விழுந்து விழுந்து சிரித்தான்.

குடிலை நோக்கி ஓடி கிடைத்த வேலைக்காரனைக் கூட்டி வந்தான். அந்தாள் போய் நாரையைப் பிடித்து அலகை அமுக்கி எடுத்து வந்தான்.

"பரவால்லியே..." என்றார் அப்பா.

"எய்யா ஒம்ம டுப்பாக்கி..."

'செருப்பு பிஞ்சுரும்" என்றார் அப்பா.

******

அப்பா காலம் முடிஞ்சது. அவன் காலம்.

கேட்பாரில்லை. நல்லான்தான் அவனுக்குக் குறி பார்த்துச் சுடக் கற்றுத் தந்தான். அவனில்லாமல் தனியே பறவைக் கூட்டத்தைச் சுட முயன்ற ஒரு கணம் மறக்க முடியாதது. பறவைகள் தன்னைப் போல ஒரு ஒழுங்கில் டயமண்ட், அம்பு, அரை வட்டம், நேர்க்கோடு என்று டிசைன் அமைத்துப் பறப்பதைக் கவனித்து அதிசயப் பட்டிருக்கிறான். யார் இதெல்லாம் அவற்றுக்குக் கற்றுத் தருகிறார்கள்?

சைபீரியப் பறவைகள் இனப்பெருக்கக் காலத்தில் குழப்பமேயில்லாமல்...நம்ம இந்தியா, அதும் கோடிக்காஇ வரை வந்துருது. நம்மாள் லேடீஸ்-ஸ்பெஷல் பஸ்ஸில் தப்பா ஏறி, கண்டக்டர் திட்டி இறக்கி விடுவான்...

வரும் போது வயசாளிப் பறவைகள் அழைச்சுக்கிட்டு வந்தாலும், போகும்போது புதுசாப் பொறந்த இளவட்டங்கள் முன்னெடுப்பு எடுக்குமன்றாங்க. அத்தனை சூட்சும அறிவு அதுங்களுக்கு.

அதைவிட அந்த உயரத்தில் இருந்து அவை பூமியை நோட்டம் பார்க்கிறதே அதைச் சொல். கழுகுகளை இங்கருந்து பார்க்க சிறு புள்ளிகள் போலத் தெரியுது. காட்டுல எதும் செத்து மாமிசம் கெடந்தா அங்கருந்து மோப்பமும் பார்வையுமா அளந்து சர்ர்ர்னு...ங்நொக்கமக்கா, இறங்கி வருதே? என்ன சூட்சுமண்டா. நம்ம வீட்டுக்குள்ள நெல் மூட்டைக்கும் அதுக்கு எலி வரத்து அதிகம்னு எலி மருந்து வைப்பார்கள். எலி செத்த வாசனையை மனுசன் கண்டு எடுத்துப் போடவே ரெண்டுநாள் மூணுநாள் ஆயிருதே.

துப்பாக்கி வெச்சி குறி பாத்ததை எப்பிடி அந்த வெளிநாட்டுப் பறவைக் கூட்டம் கண்டு பிடிச்சதோ? எதிர்பார்க்கவேயில்லை. சர்ர்ர்னு இறங்கி அத்தனையும் துரத்திச்சேப் பாக்கணும். ஓ ஓன்னு பயந்து நடுங்கி அழுகிறான். பறவை ஒண்ணொண்ணும் இத்தாம் பெரிசு. மனுசாள் உயரம். காலே நல்ல உயரம். நடந்து அவனை நோக்கி ஓடிவந்து சுத்தி வளைச்சுக்கிட்டது...

அவன் சத்தம் கேட்டு ஆட்கள் ஓடி வந்தார்கள்.

துப்பாக்கி கீழே கிடந்தது. அவன் டவுசர் ஈரமாகிப் போயிருந்தது.

******

மிருக வேட்டை சுவாரஸ்யத்தில் பறவைகள் அலுத்து விட்டன. சும்மா நின்னுக்கிட்டே ஒரு டப். நாய் ஓடி பறவையை எடுத்து வரும். மிருக வேட்டை அப்படியில்லை... வியர்வை சிந்தனும். ஆபத்தான வேலை என்கிற ஒரு கிக். திரில். வீர மதமதப்பு.

தவிர ஒரு ஜோலியாய் விருதுநகர் போயிருந்தப்ப ஒரு பார்ட்டி பத்திக் கேள்விப்பட்டார். அவருக்கு விதவிதமான நாய்களை வளக்கறது பொழுதுபோக்கு. பலஜாதி நாய்க்குட்டிகள்... டால்மேஷன். அல்சேஷன். டாப்ர்மேன். பொம்ரேனியன். ராஜபாளையம். ரயில்பெட்டி மாதிரி நீளமா ஒர் நாய். பேர் தெர்ல...உடம்பில் எத்தனை அமைப்பு வித்தியாசங்கள். காது விரைத்தவை சில. பெரிய எருக்க இலை போலத் தொங்கி மடிந்து கிடந்தன சில. முக அமைப்பில் அதிசயங்கள். நம்ம குறுந்தாடிப் பார்ட்டி மாதிரி மூக்கு வாய் சுத்தி மாத்திரம் கன்னங்கரேல்னு ஒரு ரகம்!

நாய்கள் வாசல் வெளியில் கோழிக்குஞ்சுகள் திரிகிறதைப் போல திரிந்தன. பல தினுசு நாய்களை இனப்பெருக்கம் செய்து நொடியில் துப்புரவா ஊசிகீசி போட்டுப் பாதுகாத்து, கேக்கிற ஆளுகளுக்குத் "தள்ளி" விட்டுக்கிட்டிருந்தாரு. துட்டுக்குத்தான்! அப்ப குட்டியா எடுத்தாந்ததுதான் இந்த புரூட்டஸ். பஸ்சுல யாருக்கும் தெரியாமக் கொண்டு வாரதுக்குள்ள போதும்னு ஆயிட்டது. பைக்குள்ள அடங்க மாட்டது. கீச்கீச்சுன்னு சத்தம்! மூச்சு முட்டி செத்துருமோன்னு பயந்து கெடந்தது. நல்லவேளை.

புரூட்டஸ் அவரது இணைபிரியாத தோழன். அதை மறக்க முடியுமா? எத்தனை வேட்டைகளில் அது தலைமை தாங்கி முன்னே பாய்ந்தோடியிருக்கிறது. எஜமான விசுவாசத்தில் அதுக்கு நிகர் அதுதான்.

ஒருமுறை இளம் காட்டெருமை ஒன்று தனியே அவர் மனக்குறிக்கு மாட்டிக் கொண்டது. என்னவோ ஒரு வேகம். காட்டெருமைகள் ஆபத்தானவை. புரூட்டஸைத் தட்டிவிட்டார். தலைதெறிக்க ஓடியது எருமை. பின்னால் குதிரையில் பி.பி.பி. தூக்கித் தூக்கிப் போடுது குதிரை. புரூட்டஸ் எடுத்தது பார் வேகம். ஒண்ணுமே புரியாத நிலையில் இருந்தார்.

புரூட்டஸ் எப்படியோ பாய்ந்து எருமையின் கழுத்தைப் பற்றிக் கொண்டு தொங்கியது. எருமை நாயையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது. நாய் பலமெல்லாம் திரட்டி அதைக் கீழே தள்ள முயல்கிறது.

இப்போது அவர் முறை. இருந்த தடுமாற்றத்தில் குறி சரியாக அமையுமா தெரியவில்லை. வேறு வழியும் இல்லை.

தரையோடு முட்டி நிற்க எருமைக்கு முடியவில்லை. உதறவும் புரூட்டஸ் விடவில்லை. எருமை குனியுந்தோறும் தரையில் படாமல் புரூட்டஸ் உடம்பைச் சுருட்டிக் கொள்கிறது. என்ன அறிவு!

எருமையும் லேசுப்பட்டதில்லை. அவர் சுட முடிவெடுத்து துப்பாக்கியை முடுக்கிய கணம். இனி தப்பிக்க முடியாத கணம். எருமை சட்டெனத் திரும்பியது அவரைப் பார்க்க. அவர் துப்பாக்கியின் "குதிரை"யை இயக்கி விட்டிருந்தார்.

காலம் கடந்த நிலை. எருமை திரும்பிய வேகம். நாய் காற்றில் எம்பிய வேகம். குண்டு நாய்மேல் பாய்ந்தது.

கவனிக்க நேரமில்லை. எருமை கோபத்துடன் ஓடி வருகிறது. குதிரையைத் திருப்பிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். வழியில் கிடைத்த மரத்தின் கொடிக்குத் தாவ வேண்டியிருந்தது. வேறு வழி கிடையாது. குதிரை திக்கு திசை தெரியாமல் ஓடுகிறது. அதைச் செலுத்த வழி கிடையாது. அவரையே அது உதற முயல்கிறது.

கிடைத்த கொடி. கிடைத்த ஊசல். கிடைத்த உயரம். கிடைத்த மரம்.

ஆ...ஆத்திரமாய் எருமை அந்த மரத்தை முட்டிய முட்டு. நாயை மரத்தோடு அறைந்த அறை...

அது நாய்க்குத் தெரியாது. அது எப்பவோ இறந்திருந்தது.

எருமை காட்டுக்குள் ஓடிப் போயிற்று. நாய் அப்போதும் கழுத்தை விடவேயில்லை. எருமையோடு அதுவும் மறைந்து போனது.

உடம்பு படபடப்பு ஆசுவாசப்படவே பத்து நிமிடம் போதவில்லை. உயிர் தப்பிய அனுபவம். ஆ ஆ... நண்பனை இழந்த துக்கம். சத்தமாய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழுதார். காடெங்கும் எதிரொலித்தது அவர் அழுகை.

இரவு முழுக்க மரத்தில் இருந்தார். தூக்கமா? தூக்கம் எப்படி வரும்? காலை நீட்டி வசம் பார்த்துச் சாய்ந்து கிடந்தார்.

வெயிலேற "மொதலாளி?" என்று சன்னமாய்த் தூரத்தில் குரல்கள். ஆட்கள் தேடிவர ஆரம்பித்திருந்தார்கள்...

ஒருநாள் தாமதித்து குதிரை தன்னைப் போல வந்து சேர்ந்தது.

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-9                                                                                                தொடர்கதை பகுதி-11

 
                                                                                                                                                                                                                 முகப்பு