........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

11. கோயில் திருவிழான்னு வந்துட்டால்...

புருட்டஸ் அவரது ஆண் துணை போல. அம்சவேணி பெண் துணை போல... என்பது ஒரு வகையில் சரிதான். புரூட்டஸிடம் ஒரு அலட்சிய நிமிர்வு இருக்கும். யாரையும் சட்டை பண்ணாத தனமை. வந்து ஈஷாது. செல்லங் கொஞ்சாது. சில ஆளுங்கள் வேலை ஒண்ணுமில்லாட்டி பேச எவண்டா மாட்டுவான்னு அலையவெல்லாம் மாட்டான். அவம்பாட்டுக்குத் தனியா உக்காந்து எதாவது ஊசியோ குச்சியோ எடுத்து பல் குத்திக்கிட்டே காலாட்டிட்டிருப்பான். அவன் பல் குத்த எதும் வசமா மாட்டாட்டி மனுசன் படறபாடு... அது கெடைச்சிட்டா பிறகு உலகே மறந்து, அவாள் அனுபவிக்கிற சுகம்... புரூட்டஸ் அதும் மாதிரி ஒரு அம்சம். வேலையில்லையா, உக்காந்து நாக்கை நீட்டி ஆட்டிட்டிருக்கும். அதுங்க நாக்கு ரொம்ப மெல்லிசா இட்லியூத்தற துணியாட்டம் இருக்கு. ஏன்? தெர்ல. இப்பிடி நீட்டிக்கிட்டே கெடந்தா வாய் வலிக்காதா?

அம்சவேணி தனிமையை அத்தனை சுவைக்காது. அவுத்து விட்டம்னா போயிப் புல் மேயும். வறட் வறட்னு அது புல்லை இழுக்கிற சத்தம் கேட்கும். பக்கத்துல போனா தானா வந்து முட்டி முட்டி முகத்தை உரசும். தடவிக்குடுத்தால் மூக்கை விரித்து பல்லை எப்டியெல்லாமோ கொனஷ்டை பண்ணி விநோதப் பார்வை பார்க்கும். புல்லைக் கயில் எடுத்து ஊட்டிவிடுன்னு அர்த்தம்.

சினிமாக்களில் வருகிறாப் போல அது முன்காலை உயர்த்திக் கோபத்தில் சிலிர்த்து அவர் பார்த்ததேயில்லை. தண்ணி கண்டால் அம்சவேணி இறங்க யோசிக்கும். மறுக்கும். வம்பாய்ப் பிடித்து இறக்கினால் அப்படி காலை உயர்த்திச் சிலிர்த்தாப் போல கனைக்கும். அது வீரக்கனைப்பு அல்ல. மறுப்பு. சினிமாக்களில் காலுயர்த்தி வீரமாய்க் கனைச்சாதான் அது குதிரை. சினிமாக் குதிரைகள் முன்னங்காலால் வில்லனை எத்துகின்றன. பாவி மக்கா, முன்காலுக்கு அதும் அப்டி தூக்கிய நிலையில் எப்படி அத்தனை பலம் இருக்கும்? அம்சவேணி திரும்பிக்கிட்டு பின்னங்காலால்தான் உதைவிடும்.

பி.பி.பி - புரூட்டஸ் ஒரு பக்கம் - அம்சவேணி ஒரு பக்கம் என்று ஒரு படம் இன்னும் இருக்கிறது. காலில் ரப்பர் ஷீ மாட்டியிருப்பார். முட்டிவரை ரப்பர். காட்டுப் பகுதிகளில் சாணி சகதி கெடந்தா மிதிச்சி தாண்டிப் போக சவுகரியம். இப்ப அதெல்லாம் ரோடு போடற ஆளுங்க மாட்டிக் கொள்கிறார்கள்.

மனுசாள் போலவே அம்சவேணிக்கு வயோதிகத்தில் முட்டி உபத்திரவம் வந்தது. முட்டி மாத்திரம் தனியே வீங்கி நடக்க சிரமப்பட்டது. நாட்டு வைத்தியர் என்னென்னவோ பத்தியமெல்லாம் செஞ்சி பார்த்தார். பச்சிலையெல்லாம் வெச்சிக் கட்டிப் பார்த்தார். அதன் ந்ண்டலை மாத்தவே முடியாமல் போய்விட்டது.

நல்லானுக்கு மாம்பழ லோடுகளை வண்டி பார்த்து கணக்கு பார்த்து அனுப்புகிற ஜோலி அமைந்த தினங்கள். வேட்டை மூடு இல்லாத தினங்கள், அழகான பௌர்ணமியப்பா... அனுபவிப்பம் என அவரே வேட்டையை மறந்த தினங்களில் அம்சவேணி மீதேறி அதை விரட்டாமல் காட்டில் விரும்பிய திசையில் தனியே பயணிப்பதும் உண்டு.

காடு அப்போது புன்னகையுடன் தலையாட்டி தன் இரகசிய ஏட்டின் இன்னொரு ஆச்சரியமான பக்கத்தைத் திறந்து காட்டும். அதுவரை அவர் போகாத வழி என்றால் இன்னும் விஷேசம். எங்காவது நடுப்பள்ளம் குட்டை கட்டி ஆம்பலும் தாமரையுமாய் மூடிக் கிடக்கும். சட்டென உள்ளே இறங்கத் துடிப்பாய் இருக்கும். இறங்கிறபடாது. உள்ளே எத்தனை கொடிகள். நல்ல மழைக்கு அந்தக் குட்டையில் இன்னும் ஓராள் ரெண்டாள் உயரம் நீர்மட்டம் ஏறினாலும் கிடுகிடுன்னு தாமரைத் தண்டு வளரும். சமைஞ்ச குமரியின் வளர்ச்சி அது! பிறகு நீர் சுருங்கிட்டா டெலிபோனின் ரிசீவர் வயர் போல உள்ளே சுருள் சுருளாச் சுருண்டுக்கும். நாமபாட்டுக்கு இறங்கி அதுல சிக்கிட்டம்னா வெளிய வர நீச்சலடிக்க ஏலாது.

ஜனங்களில் பெண்கள் ஒசத்தி. தாமரை மொட்டுக்கள் ஆண்கள் தாழ்த்தி. தாமரைத் தண்டுகள்.

காட்டு மிருகங்களிரவுகளில் இப்படிக் குட்டைகளில் வந்து தண்ணீர் அருந்திச் செல்கின்றன.

விதவிதமான மீன்கள், ஆமைகள், முதலைகள் கூடப் பார்க்கலாம். இதுங்கல்லாம் எங்கருந்து எப்பிடி வருதோ தெர்ல. மீன் கூட்டம் மேல வந்து அழகா மேயும். பாத்து ரசிக்கப்படாதா மனுசன்? ஒரு சிறு கல்லை எடுத்து வீசுவார். அத்தனையும் விஷ்க் என மறையும்.

அவர் முன்னால் போக பின்னால் தன்னால் தொடரும் அம்சவேணி. சேலையால் தோள் போர்த்திய கட்டுப்பெட்டியான பெண்டாட்டி போல!

வந்து அம்சவேணியின் அருகில் நின்றார். மூக்கின் துளைகளையெல்லாம் கன்னா பின்னா வடிவங்களாக்கி அம்சவேணி சிலிர்க்கிறது. பல்லைக் காட்டுகிறது. துப்பாக்கியை எடுத்தார். அதென்ன புது ஐட்டமோ என்கிறாப் போல அம்சவேணி அதைக் கடிக்கிறது. நல்லா உள்த்தொண்டைக்கும் வசம் பார்த்தார்.

அடடா, அவர் கடைசியா ஆடிய வேட்டை குதிரை வேட்டைன்னு ஆயிட்டதே...

அத்தோடு வேட்டையாடும் அந்த ரத்த சூடு அடங்கி விட்டது. கூடத்தில் இப்பவும் அந்தத் துப்பாக்கி பார்த்தால் பழைய கதைகள் ஆச்சர்யமாய் இருக்கின்றன. வாழ்க்கையின் தடம் எங்கே எப்போது எப்படி மாறுகிறது தெரியவில்லை.

தனியான தருணங்களில் பன்னீர்ப்புகையிலை வந்து சேர்ந்து கொண்டது. சுருட்டை இப்போது தொடுகிறதேயில்லை. நல்லான் போய் இப்போது கீசகன் என்றொரு வேலைக்காரன். தூக்கப்பிரியன். வேலையில்லையானா எங்காவது ஓரமாத் துண்டு விரிச்சி அந்தாக்ல மல்லாந்து விடுகிறாள். அதுக்குத் தயாரா எப்பவுமே தலைல ஒரு சேப்புத் துண்டு.

தோப்புக் கணக்கு வழக்கு பாக்க தனியே கணக்குப் பிள்ளை என்று ஏற்பாடு. வண்டிக்கார வேலுச்சாமி பாத்துக்குவான்னு நினைத்தார். அவன் கை கொஞ்ச நீளம். கொஞ்சம் இல்லை... நிறையவே நீளம். தாமரைத் தண்டு.

மாட்டுக்கே சரியாத் தீவனம் வைக்க மாட்டேங்கிறான். அவன் வந்த புதுசில் வண்டி மாடுகள் ரெண்டும் நல்ல தண்டிதண்டியாய் ஆரோக்கியமாய் இருந்தன. அவன் ஒல்லியா இருந்தான். இப்ப பார் மாடுங்க அசந்துட்டன. அவன் கொழுத்துக் கெடக்கான்.

பருத்திப்பால், மாட்டுப் புண்ணாக்கு எல்லாம், பாவிமட்டை அவனே திங்கானே?

அவசியம் ஏற்பட்டால் ஒழிய அவர் மாந்தோப்புப் பக்கம் வர்றதில்லை. கணக்குப்பிள்ளை வீட்டுக்கு வந்து போகிறார்.

அவருக்கும் குடும்பம் பெரிசாகி விட்டது. வாழ்க்கை ருசிகள் மாறிவிட்டன என்பதையும் சொல்லனும். அது முக்கியம். இப்ப மனுசனுக்கு வேறொரு வேட்டையில் சுவாரஸ்யம் தட்டியாச்சு!

சும்மா அடங்குமா உடம்பு. தனி மனுசன்... இஷ்டப்படி போக்குவரத்து என்று இருந்த காலம் போய் வீடு குடும்பம் என்று வேறொரு வட்டத்தில் வாழ்க்கை அம்சங்கள் சேர்ந்து கொண்டன. ஊர்ப் பெரிய மனுசன் அவர் இப்போது. பண விசயத்தில் கொஞ்சம் கறார் நிர்வாகம் வந்திருந்தது. கொஞ்சம் நிர்வாக போதை... அதிகாரப்பித்து என்று காற்று திசை மாறிவிட்டது.

ஊர் ஜனங்களின் மரியாதை வேண்டியிருந்தது. வெள்ளைக்கார துரை போல பேண்ட்டு சர்ட்டு எல்லாம் விட்டு விட்டு, இப்ப வெளேரென்று வேட்டி...ஒரேயொரு கலரில் சட்டை அல்லது சில்க் ஜிப்பா, ஸ்லாக்...என்று பாணி மாறியாச்சு. வேகம் அடங்கி நடையில் ஒரு நிதானம். அலட்சிய பாவனை. பந்தா.

எப்பவுமே கூட ஓராள் நின்று கொண்டே இருக்கிறாப் போல பார்த்துக் கொண்டார். எதுக்கு?

ஜமீந்தார்னா சில அடையாளங்கள் இருக்கில்ல... வேலையாளுக்குச் சொல்ல வேலை இல்லையானா கைல வாட்ச் கட்டியிருந்தாக் கூட மணிக் கூண்டுல போயி மணி பார்த்திட்டு வரச் சொல்லி அனுப்புவாகன்னு வசனம். எந்திரிச்சி நின்னா தொப்பை மறைக்கும். "எலேய் கால்ல செருப்பு கெடக்கா பாரு"ம்பாகளாம்...

எதிரில் வார ஆள் கண்டுக்காமப் போனால் கோபம் வருது. அவர் சொன்ன சொல்லை மறுத்துப் பேசினால் ஆத்திரம் வருது நம்மளைக் கூட்டத்துக்குக் கூப்பிடாமல் ஊர்ல எந்த விசேஷமும் இருக்கப்படாதுன்னு மனசுக்குள்ள ஒரு இது.

தனியா பார்வைக்கு எடுப்பா அம்சமா இருக்கட்டும்னு ஒரு வில்வண்டி கட்டச் சொல்லி வாங்கிக் கொண்டார். அருமையான காளைகள். அதற்கான பிரத்யேகக் கழுத்துச் சலங்கைகள். வேலுச்சாமி வண்டியோட்டுவதை முக்கிய வேலையா ஏத்துக்கிட்டான்.

பாண்டித்துரை கூடவே இருந்தால் அதே மரியாதை தனக்கும் கிடைக்கும்னு ஒரு கணக்கு. நல்ல சாப்பாடு. தண்ணி என்று அவன்பாடு சூப்பரா ஓடும்ல?

பெரியகுளத்தில் அவர் பங்களாதான் பெரியது. வாசப்புறம் பின்னம்புறம் என்று எடுப்பாய் இருக்கும். பெரிய காம்பவுண்டுச் சுவர். ஓரங்களில் காது மயிர்களாய் வெளியே நீட்டிக் கிடக்கும் தென்னைகள். முன்பக்கம் தானியமோ வத்தல் வகையறாக்களோ எப்பவும் எதாவது ஒண்ணு மாத்தி ஒண்ணு உலர்த்திக்கிட்டே கிடப்பாள் கொழுக்கட்டை. அதும் மேல காலை உரசி உரசி ஒரு உலாத்தல். டிராமாவுல ஆக்டிங் குடுக்கற ஆளுக சும்மாங்காட்டியும் இங்கருந்து அங்க அந்த மைக். அங்கருந்து இங்க இந்த மைக்னு நடப்பாங்க...அதுக்குப் பேர்தான் டைரக்சன். அதைப் போல!

இஷ்டப்படி அனுபவிக்க சொத்து. நிர்வாக சிரமம் எதுவுங் கிடையாது... ஏன்னா விசயமே தெரியாது! ஊரும் ஒரு போகம் விளைய, ஒரு போகம் தானியம் மாறும். காலப்பயிர்கள்...

சோளம் தலையாட்டிச் சிரிக்கும். குதிரை பல்லெடுப்புச் சிரிப்பு அது. அது ஆம்பளை.பக்கத்து வயலில் வாழை. தலை தாழ்த்தி நாணிக் கிடக்கும் வாழைப்பூ. அது பொம்பளைன்னு வெச்சிக்கலாம். தூரத்தில் இருந்து பாத்தா என்னவொரு ரசமான காதல் காட்சி.

சிற்சில இடங்களில் தாய்வாழை அருகில் குட்டிவாழையும். குடும்பப் புகைப்படம்.

முந்தானையெடுத்து இடுப்புச் செருகல் செருகினாப் போல வாழையிலைகள். கவனமாகப் பார்த்தால் இலைமறைவு காய்மறைவில் காதல் சோடிகள் இருக்கலாம்.

மத்த ஆம்பிளைகளோடு சமதையாய் உட்கார்ந்து சீட்டு விளையாடவும் மனசில்லை அவருக்கு. உள்ளறையில் பொழுதன்னிக்கும் ரேடியோ சிலோன் கேட்க யாராவது போட்டிருப்பார்கள். அதன் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்... பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கனகரத்னம், கே.எஸ்.ராஜா என உற்சாக ஊற்றாய் குரல்கள். தமிழ்நாட்டுல மதிய வெயிலில் சங்கீத சம்மேளனங்கான். பாட்டு மட்டும் விவிதபாரதில ஓட விட்டுட்டு அவனவன் படக்னு சிலோன் திருப்பறதுதான்!

வெயிலேற சாப்பாடு ஓர் எடுப்பு எடுத்தாரானால் உள்ளே தூக்கப் பம்பரம் கிர்ர்ருங்கும்.

சுத்துவட்ட கிராமத்து நிகழ்ச்சிகள், ஊர்ப் பொதுக் காரியங்கள், கோயில் வைபவங்கள் என்று அழைக்கப்பட்டார். அதுல சுவாரஸ்யம் அல்லது சாமி பக்தி...அப்டின்னுலாங் கிடையாது. கூப்பிடற ஆளுங்களுக்கும் அது தெரியும் என்றாலும் நன்கொடைன்னு வெய்ட்டா ஒரு அமவுண்ட் யார் வெட்றா? மொதல்ல எவண்ட்ட இருக்கு... அதைச் சொல்லு.

"அழைப்பிதழில் முன்னிலைன்னு பேர் பெரிஸ்ஸாப் போடுங்க" என்பார். அவன்பாரு முன்னிலைன்னு மொத்தையா தப்புத் தப்பா அச்சடிச்சுத் தருவான். அது பிழைன்னு கூட கவனிக்க மாட்டாரு.

பண்ணை ஒல்லியா இருந்தா முன்னிலை. தண்டி தாட்டிகமா இருந்தா முண்ணிலை...அதுஞ் சரிதான்!

கோயில் நிலைப்படி, சந்நிதிக் கற்களில் "உபயம்" என்று அவர் பேர் எழுதியிருக்கும். அவர் புத்திசாலியா? துட்டு தராமலேயே...பக்கத்தில் ஆர்ட் பைன்னு தன் பெயரை எழுதிக்கிட்ட ஓவியன்...அவன் புத்திசாலியா?

இது விளம்பரக் காலம். அந்தக் கால சிற்பிகள் ஒரு சிற்பத்திலாவது தன் பேரைப் பொறிச்சிருக்கானாய்யா?

உள்ளூர் கோயில் திருவிழான்னா நாதசுர தவில்ப் பார்ட்டியோ, கரகக் கோஷ்டியோ அவர் வீட்டு வாசலில் நின்று ஒரு பாட்டு...சங்கீதம் இல்ல. தேவா மியூசிக் போட்ட சினிமாப் பாட்டு - வாசித்துவிட்டு நீர் மோர், பானகம் என்று தாகசாந்தி முடித்துக் கடந்து போகிற ஏற்பாடுகள். மத்த நாள்ன்னா அஞ்சி காசு கடன் கேட்டு அண்ட முடியாத மனுசனிடம் இது ஒரு பந்தா.

பெரிய கலா ரசிகரா அவரு? ஒரு மண்ணுங் கிடையாது. பைக்குள் சலவைத் தாளாய்ப் புது ரூவா நோட்டுக்கள் வைத்திருப்பார். நாதசுரக்காரனுக்கு சட்டையில் பணங்குத்துவார். தவில் ஆளு சட்டையே போடாட்டி ஒரு திகைப்பு திகைப்பார். அட திரும்பிப் போயிருவாரோன்ற பயத்தில், தாளங் கெடக்குன்னு பாதில விட்டுவிட்டு அவன் காசைக் கை நீட்டி வாங்கி கண்ல ஒத்திக்குவான்.

உற்சவர் பல்லாக்கு நிற்கும். குருக்களும் சட்டை அணிவதில்லை. அவர் டெக்னிக் வேற. கற்பூரங் காட்டி ஹோட்டல் பில்லாய்த் தட்டை நீட்ட, பூபதி, ரேவதி, அவர், பாகீஸ்வரி...என்று தனித்தனியே டிப்ஸ் போடுவார்கள். ஒருமுறை வேலுச்சாமி அதிலிருந்து திருநீறு எடுக்கிறாப் போல ஒரு நாலணாத் துட்டு அள்ளிக் கொண்டான்.

புதுசா பந்தநல்லூர் கரகாட்டப் பார்ட்டி வந்திருந்தது. தர்மகர்த்தா ஏற்பாடு. டண்டக்கு டண்டக்குன்னு மேளம் சும்மா கழட்டியெடுக்கிறான்.பொண்ணு புதுப்பொண்ணு. அக்காக்காரி திடீர்னு கல்யாணம் ஆகிப் போயி, பொழைப்பு திகைச்சுப் போன குடும்பம், தங்கச்சிய ரெடி பண்ணிக் கூட்டி வர திண்டாடிப் போனது இளவட்டம். இளநீர் வட்டம். அவ ஆட ஆட, உடம்பை ஆட்ட ஆட்ட டண்டக்கு டண்டக்குன்னு தாளம் வேற. பாக்கவே தவில் குச்சியாய் போனார்.

தலையில் கும்பம் வெச்சி கீழ விழாம ஓர் ஆட்டம் தலைக் கும்பத்தை ஆரு பாத்தா.

"கல்யாணம் ஆயிட்டதால?" என்று கேட்டார் வேலுச்சாமியிடம்.

"ஆயிட்டதுங்க"

"ஏல பார்த்தா தெரியலியேடா?"

வேலுச்சாமி சுதாரித்து "இவளுக்கா? இன்னும் ஆவல" என்கிறான்.

"பின்ன யாருக்கு கல்யாணம் ஆயிட்டதுன்னே?"

"உங்களுக்கு"

"பாத்தா தெரியுதா? என்று சிரிக்கிறார்.

தர்மகர்த்தா அம்பது ரூபாய் குத்தியிருந்தார்.

பைக்குள் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்தார் பண்ணையார்.

என்னா கலைச் சேவை! என்னா ரசனை!

அவரே ரூவா குத்தி விடட்டும் என்று நிமிர்ந்து நின்றாள். தொழில்காரி தானப்போவ்.

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-10                                                                                               தொடர்கதை பகுதி-12

 
                                                                                                                                                                                                                 முகப்பு