........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

12. இரவு நேர உளரல்கள்...

பத்மினி ஆள் பாக்கத்தான் அப்பிராணி சாது. நல்ல பேச்சு சாதுர்யமும் இடக்கும் உள்ளவள் தான். நாணம் பூசிய மனசு. பேசும் போதே சற்று மேக நிழலாய் முகத்தில் நகரும் நாணம். பக்கத்தில் உட்கார்ந்து நகத்தைப் பார்த்தபடி பேசுவா என்றாலும் தலையை மாத்திரம் ஆட்டி ஆட்டி, கேட்டுக் கொண்டிருப்பதை உணர்த்துவா. திடுக்கென்று தலை தூக்கி ஒரு வார்த்தை... ஒரு புன்னகை... அடேங்கப்பா என்றிருந்தது. பார்வையா அது? படையெடுப்பு. சொல்லா அது? சுறாவால் சுழற்சி!

வாய்ச்சொல் பாய்ச்சல்!

பாடப்பட்ட ராகம் என்கிறார்கள். பெண்கள் மூடமூட மோகம்...

இந்தப் பொற்கணங்களுக்குக் காத்திருக்கலாம். தப்பில்லை. எத்தனைக்குக் காத்திருக்குமோ அத்தனைக்கு இந்தப் பொழுதுகள் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் அமைகின்றன. துன்பத்தில் சிரிக்க வேண்டும் இன்பம் காத்திருக்கிறது. என்பார்கள்.

இன்பம் காத்திருக்கவெல்லாம் இல்லைதான். அதுக்கு வேற வேலையில்லையாக்கும். இவரு பெரிய கிராமத்து டவுன் பஸ்சு...காத்திருக்கிறதுக்கு...துன்பம் அகலுதலே அதை உணர்தலே அந்த விடுதலையை நுகர்தலே இன்பத்தின் உள்ளூற்றைத் திறக்க வல்லது.

ஆண்களும் பெண்களுமாய்ப் பின்னிக் கிடக்கிறது உலகு. அறிவும் உணர்வுமானதோர் தளத்தில் அறிவு சற்று உச்சப்பட்ட தளத்தில் இயங்குகிறவன் ஆண். உணர்ந்து உணர்ந்து அனுபவித்து, ஒரு வகையில் சிகரெட் குடித்த வெளிமூச்சாய் சுதந்திரப்படுகிறது பெண்மை. உள்மூச்சை விட வேகமான வெளிமூச்சு. தண்ணீர்க் குடத்தைச் சுமக்க முடியாமல் பொத்தென்று கீழே போடும் மேகமே பெண்கள்.

மூடிய கதவுக்குள் அவர்கள் தங்கள் கனவு முடிச்சுக்களை அவிழ்த்து அரிதாரம் அழித்து உள்ளே ஒளித்து வைத்திருக்கும் அந்தரங்க நகைகளை சற்று பூசிய நாணத்துடன் எடுத்து எடுத்துக் காண்பித்துப் பெருமிதங் கொள்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் வெகு அபூர்வமாகவே அமைவது துயரமானது.

ஆண்களை அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். வியக்கிறார்கள். கவனிக்கிறார்கள். அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த ஆண்கள் அறிந்தாரில்லை. இதில் அறிவின்பாற்பட்டு இயங்குவதான அவர்தம் பாவனை!

பெண்மை ஆணின் இதயம் சுமந்த நிழல். மயில்பீலி!

ஆணெனும் கிருஷ்ணருக்கு துலாபாரத்தில் பெண் எனும் துளசி போதும்! வேறெதும் அதற்கு நிகராக ஒரு போதும் போதாது...

உடல்வலியும் உபாதை உபத்திரவங்களும் தணிய மருந்திட்ட பத்மினி அவனது உணர்வுப் பசிக்கு விருந்திட்டாள்.

அவர்கள் மானுடத்துச் சிறு புல் என்றாலும் பூக்களும் கனவுகளும் அவற்றுக்கும் உள்ளவைதாமே?

அவளிடமிருந்து மாதக் கணக்கில் விடைபெற்றுச் சென்ற கணவன்...அதைப் பெண்கள் சமாச்சாரமாய் வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.

கணவனிடமிருந்து செய்தியே இல்லை. பணமும் வரவில்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடிப் போனது. சிறு சிறு வேலைகள் வந்தன. சித்தாள் என துட்டுக்கு மண் சுமந்தாள்... பிரம்படி படவில்லை. (புருஷங்காரன் ஊர்லயே இல்லையில்லா!) கைக்குழந்தை தனத்தை இசக்கிக் கிழவியிடம் விட்டுவிட்டு வேலைக்கு ஓட வேண்டியிருந்தது. கனமான செங்கல்கள் கழுத்தெல்லாம் அழுத்தும், ரெண்டு மாடி உயரங்கூட அதை வைத்துக் கொண்டு கயிற்றில் கட்டிய சவுக்குக் கட்டை ஏணிகளில் ஏறணும். மேலே ஏற ஏற பாரம் கூடுமேயொழிய குறையாது. ஒவ்வொரு முறை ஏறி இறங்கும் போதும் ஐந்து விரல்களாலும் பின் கழுத்தை அழுத்திக் கொள்வாள். மனசில் தனம் அழாமல் இருக்கனுமே என்றிருக்கும். எப்படா வேலை முடியும் என்றிருக்கும்.

வீட்டுக்கு வர இருட்டி விடும். வீட்டை நெருங்க நெருங்க நடை நடையோட்டமாகி விடும்.

"குழந்தை அழுதிச்சா பாட்டி?"

"போட்டாவக் காட்டிக் காட்டி - ம்மா...ம்மான்னு கேட்டது"

கரகரவென்று கண்ணீர் கொட்டிவிடும்.

குழந்தைகள் பெண்ணின் கனவு முட்டை பொரித்தவை அல்லவா? ஆண்களுக்கு அப்படியெல்லாம் பிரித்தறிதலே கிடையாது. கனவாவது முட்டையாவது? அவன் அசைவ ருசி கொண்டவன். கனவுகளின் முட்டைப் பொறியல் சாப்பிடுவான்!

ஒத்தடமும் வெந்நீர்க் குளியலும் முடிந்து நல்ல தூக்கம் ஒண்ணு போட்டு முடித்தார் மாப்ளை. உடம்பு சுளுக்கு எடுத்தாச்சி. ஒரு விடுபட்ட சிரிப்பு. நுரை உவகை. கதவுகளைச் சாத்திக் கொண்டு மானுடம் அவரவர்க்கான உலகை ஸ்தாபித்துக் கொள்ளும்...பகிர்ந்து பிரஸ்தாபித்துக் கொள்ளும் நேரம். அது வேறுலகம். அங்கே வாய் பேசுவதில்லை. கண் பார்ப்பதில்லை. காது கேட்பதில்லை.

பார்க்கிறவர்கள் குருடனாகிறார்கள். பேசுகிறவர்கள் ஊமையாகிறார்கள். நடக்கிறவர்கள் சப்பாணி ஆகிறார்கள்.

யானைக்குக் கட்டுப்படுகிற அங்குசங்கள்.

பெண் வசியத்தின் முன் வார்த்தைகள் அநாவசியம்.

நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின...நன்மை கண்டோம், என எழுந்து கொள்கிறான் அய்யம். அருகே மனைவி. இளம் மனைவி. அதைவிட இளம் குருத்தாய்க் குழவி. வாழ்க்கை வானவில்லாய்த் தெரிகிறது அவனுக்கு. வர்ணவீச்சு. கனவல்ல நிஜம் என்றே நம்ப இயலாத அளவு எத்தனை கஷ்டப்பட்டு விட்டான்.

மழை விட்ட பொழுதின் இறுக்கத் தளர்ச்சி போல...உடம்பு சொடக்கெடுத்து சோர்வு நீங்கி புதிய சக்தி, உற்சாகம் விளிம்பு வரை ஊறிக் கிடந்தது. அட சற்று முன்பு வரை அவன் அடிமை. இப்போது இந்தக் குடும்பத்தலைவன்.

தன்னைப் பற்றிச் சொல்லாமல் அவள் அவன் பட்ட துயரங்களைக் கேட்டுக் கண்ணீர் வடிக்கிறாள். சுண்டெலி சிறுமலையாய் விசுவரூபங் கொண்டாற் போல பிரமிப்பாய் இருந்தது அவனுக்கு. பனைத்துண நன்றி செய்யினும் தன்னைத் தினைத் துணையாக இந்தப் பெண்மை முன் வைத்துக் கொள்கிறதே...

ஒவ்வொரு பெண்ணும் இடுப்பில் குழந்தையும் நெஞ்சில் தாயுமாய் இருக்கிறார்கள்...

ஆண்களா? அதெதுக்கு? சரி, சொல்லிருவம்...அவங்க இடுப்பில் கத்தியும் மனசில் பயமுமாத் திர்றாங்கப்போவ்.

ரொம்பத் தெனாவட்டாச் சொல்லியாறது. மனைவிகள் மன்னிக்க -உலகில் ஒரேயொரு மனோன்மணின்னு.

ஆம்பளைங்க மன்னிக்க. உலகில் ஒரேயொரு எம்ஜியார்!

தாங்க முடியாதால? ஏல தூங்க முடியுதா? அப்பிடிச் சொல்லாமலேயே அவனவனுக்கு ஆயிரஞ் சந்தேகம். சாதி கெட்ட பயலுக!

ஆண்டாள் பாடினா அன்னிக்கு...தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்! எத்தனை அழகு ஆண்டாளின் உள்ளம். தன்னில் தாய்மையை உணர்கிற உள்ளாவேசம். (வை)கறைக் கனவு. வயிறு நிறைந்தவுடன் பாடிய வாழ்த்துப்பா அது.

இன்னிக்கு நம்மாளுங்க அதைச் சொன்னா அர்த்தம் வேற...

புருசன் அவளை வம்படியா அபார்ஷன் பண்ணி விட்டுட்டான்னு அர்த்தம்...

மாலையில் அது ஜரிகை மாலை. சம்பங்கி மாலை. மனை அல்ல அது. அரண்மனை. அவன் அரியணை ஏறி அமர்கிறான். அவனால் கணங்கள் அமரத்துவம் பெறுகின்றன. சிற்றறையில் சிம்மாசனம். அரண்மனை அகழியாய் தனம் விடுத்த மூத்திரக் குளம். ஒதுங்கி ஒதுங்கிப் படுக்கிறார்கள். கபடி விளையாட்டைப் போல ஓடிவருகிறது நதி. தண்டவாளம் இல்லாத ரயில்!

சற்று தலை தூக்கிப் புன்னகையுடன் குழந்தையைப் பார்க்கிறான்.

"இப்டித் திரும்பி ஒன்றுக்குப் போய்விட்டு அது அந்தப் பக்கம் உருண்டுக்கிச்சுடி" என்று சிரித்தான். குழந்தை தனத்தின் புத்திசாலித்தனம் அவனுக்கு எத்தனை உற்சாகம் தருகிறது.

"இனி இந்தப் பக்கம் எனக்கு ஒதுங்க இடம் இல்ல...: என்றாள் பத்மினி.

"ஒதுங்க வேணாம்னு நான் சொல்லல...குழந்தை சொல்லுது"

"அது ஒதுங்கிக்கிட்டு சொல்லுது" என்று ஒரு போடு மேலடி அடித்தாள் அவள்.

குழந்தையிடம் சற்று அசைவு தட்டுகிறது. "இப்ப முழிச்சுக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் பசிக்கும்..." என்கிறாள். தொப்புள் கொடி உறவு அது. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்ன்றாப்ல அது. இது தாய்மையில்லா... சிரிக்கு முன்னாடியே கேட்கிறது எதிரொலி.

பிரித்துக் கொண்டு எழுந்து போய் குழந்தைக்கு அமுதூட்டுகிறாள். தற்காத்து கணவனையும் காத்து குழந்தையையும் பேணும் பெண்மை.

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த வீடென்ற அமைப்பும் சிலிர்ப்பும் வேண்டித்தானே கெடக்கு. இல்லாட்டி வெயில்ல பாதங் கொப்பளிச்சாப்ல அவனவனுக்குக் கிறுக்குப் பிடிச்சிரும்...

வாழ்க்கை ஒவ்வொரு கணமும் தோள்ப் பிசாசாய் அழுத்திக் கொண்டிருந்தது. காலை விடிய உலகம் வேறு விஷயமாகி விடுகிறது. கொடிய விஷமாகி விடுகிறது. என்றாலும் மாஜிக் துணி போல இரவு அவற்றைத் துடைத்தெறிந்து விடுகிறது.

அவளுள்ளின் வாடிய சருகுகளை அவன் வருடிக் கொடுத்தான். வாழையின் உட்குருத்து போல பெண்ணே...நீ சிலிர்த்துத் தழைக்க. ராமர் கால்பட்டு கல் பெண்ணானால் கணவன் கை பட்டு பெண் தேவதையாகிறாள். மண்ணுலகத்து நல்லோசைகளை அவள் அவனுக்கு துப்பு துலக்கித் தருகிறாள்.

விழித்தபடியே கனவு காணும் வேளை அது. தூங்கினால் அவை தொலைந்து போய்விடும். தொலைவில் போய்விடும்.

சாதாரணமாகவே அவன் பிதற்றுவான். கட்டுக்கடங்காத சந்தோசம் தாலாட்டித் தள்ளாட்டுகிறது அவனை. நிறைய நிறையப் பேசத் தோணுகிறது. என்றாலும் உளறினால் இன்னும் சிலாக்கியம் போல் மனசில் படுகிறது.

உளரல் வார்த்தைகள் புனிதமானவை. அவை அறிவின் நகல்கள் அல்ல. உணர்வின் ஒரிஜினல்கள்! உளரல் ஒன்று-

"பத்மினி இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே..."

"நேத்திக்கு?"

"நேத்திக்கு அழகா இருந்தே. இன்னிக்கு, ரொம்ப சேத்துக்கிட்டேனா இல்லையா?"

"நேத்திக்கு நீங்க உளர்னீங்க...சரி உடம்பசதி. தூக்கத்துல இது சகஜம்னு விட்டுட்டேன்."

"இன்னிக்கு?"

"இன்னிக்கு நீங்க ரொம்ப உளர்றீங்க..."

"இராத்திரி ஒருத்தன் தூக்கம் முழிச்சான்னா இதும் சகஜம்தான்..."

"வேளைக்கு எண்ணெய் தேச்சிக் குளிக்காம தலையே கொட்டிப் போச்சு உங்களுக்கு" என்று அவள்.

"வேளைக்கு எண்ணெய் தேச்சுக் குளிக்கலைன்னா உளரல் வருமாக்கும்னு நினைச்சேன். யார்றி இவ...கழுவிக்கவே தண்ணியைக் காணோம் கோவணம் பட்டுப் பீதாம்பரம்னாப்ல..."

"கோவணம் பட்டு..." அவள் வேறுமாதிரிப் பிரித்துச் சிரித்தாள். உளருவது ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?

இரவு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

"கொழந்தை மெலிஞ்சுக் கெடக்கு..."

"ஒயரமெடுக்கச்சில அப்டி மெலியும். உடம்பு படுத்தும்...ஒண்ணும் பயப்படண்டாம்" என்று புன்னகை ஒழுக அவன் உடம்பெல்லாம் தடவித் தந்தாள்.

உளரல் இரண்டை அவன் ஆரம்பிக்கிறான்..."நம்ம குழந்தையப் பெரிய படிப்பு படிக்க வைக்கணுண்டி..."

"எங்கய்யா பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை படிக்கிறாரு. அது மாதிரியா?"

"நான் எது சொன்னாலும் நீ மறுத்துப் பேசறே?"

"இல்லையே?"

"பார்த்தியா? இப்பகூட நீ மறுத்துதான் பேசறே!"

அது ஒரு உக்கிரவேளை. காலையில் கேட்டால் என்ன பேசிக் கொண்டார்கள் அவர்களுக்கேத் தெரியாது. பேச்சு தேவையற்ற வேளை அது. தேவதையின் வேளை. வாயில் வெற்றிலையைப் போல அவர்கள் வார்த்தைகளைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாய்...அவர்கள் ருசி...ஒருவருக்கொருவர் அதை உதட்டுக்கு உதடாய்ப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

அந்த உளரல்களுக்கு அர்த்தம் தேவையுமில்லை. ஆளில்லாத ரயில்வே ஸ்டேசனிலும் நின்று போகிறது ரயில். அதைப் போல...!

வாழ்க உளரல்கள். வாழ்க மானுடம்.

( தொடரும்...)

தொடர்கதை பகுதி-11                                                                                              தொடர்கதை பகுதி-13

 
                                                                                                                                                                                                                 முகப்பு