தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
13. மாடு பார்க்கற வேலை...

மசூதிக்குப் போகிறவன் போல அய்யம் பெருமாள் சைக்கிள் சீட் - மண்டைக்கு கர்ச்சீப்
கட்டிக் கொண்டு கிளம்பினான். ஒரு பாதுகாப்புக்குத்தான்.
விடியலில் சீக்கிரமே எழுந்து கொண்டதும், வெளிச்சம் வரவர கண்கள் சோர்வு நீக்கிக்
கொண்டதுமான உற்சாகக் காலை. மனம் சிற்கெடுய்த்துக் கிடந்தது. எதிர்காத்து என
வரும்போது வழிமறித்த காத்து. தற்போது தள்ளு காத்து. மனசில் தாளம். பொன்மானே
சங்கீதம் பாடிவா. அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா...
தூரம் தெரியவில்லை. தெரியாது. மனசெங்கும் மனைவி... நிழலாய் அவனைக்
கவிந்திருந்தாள். உதடுகளில் அவளது ருசி இன்னும் ஒட்டிக் கிடந்தது. உடலெங்கும்
மனசெங்கும் அவள். ரத்தநாளமெங்கும் ஒரு.... அவளது முத்தநாள மேளக்கும்மாளம்.
ஒவ்வொரு அணுவுக்கும் அலைப்பரவல் பரவும் "செல்ல" வேளை.
அந்தப் பாடல் அந்த உற்சாகம். பெரியகுளம் நெருங்க நெருங்க திடும் திடும் என்கிற
இதய அதிர்வுடன் பயம் பரத்தியது. மேற்கத்திய இசை! பாண்டித்துரையின் முதல் "வாய்ப்பாட்டு"
வாங்கப் போகிறான். சைக்கிள் கத்துக்கிறவன் முதலில் கீழ விழ எப்படிப் பதறுவான்.
குழந்தைகள் முதல் ஊசி போட்டுக்கொள்ள எப்படிப் பதறும்...அந்த நிலை.
ஒரு நம்பிக்கையுடன் தன்னையே சிரிப்புக் காட்டிக் கொள்ள முயன்றான். பாண்டி
அண்ணாச்சிதான் டாக்டர். அவன் குழந்தை. பாண்டி அண்ணாச்சி ஊசி எடுக்காரு. அவன்
புன்னகை செய்கிறான். அவர் எந்திரிச்சி வந்தாரு. கண்ணை மூடிக் கொள்கிறான்.
திறக்கிறான் அட, வலிக்கவேயில்லை... நர்றுக். "ஊ"வென்று அழ ஆரம்பிக்கிறான்.
ஊ...இல்லடா..ஊசி...சொல்லு? ஊசி!...
இருந்த பதட்டத்தில் பாட்டையே விட்டுட்டான். அடுத்த வரி எங்க தேட. மொத வரி எங்க
தேட. மொத வரியே வழில எங்கியோ விழுந்திட்டது. வண்டி எவ்வளவோ தாண்டி வந்தாச்சி.
தெரு திரும்பியதும் குபீரென நின்றிருக்கிறது பண்ணையாரின் பங்களா. புதுசாப்
பள்ளிக்கூடம் போற குழந்தையாட்டம் கால் தயங்கியது. சண்டித்தனம் பண்ணும்
கன்னுக்குட்டிய சர்ருன்னு ரோட்டோட இழுத்துட்டுப் போவாகல்ல அதுமாதிரி மனசைக்
கயிறு கட்டி முன்னே அதும் அவனே இழுக்க வேண்டியிருந்தது. அவனிடம் இந்த பயந்தான்
பிரச்சனை. எதுக்கெடுத்தாலும் பயம்...சைக்கிளில் போகும் போதே... கூட வர்ற
சைக்கிளில் இருந்து யாராவது ஹச்சென்று தும்மினால் பொத்னு விழுந்துருவாப்ல...
அதைப் பாத்திட்டு அந்தாள் விழுந்து விழுந்து சிரிப்பானே அதைத்தான் தாள ஏலாது.
வாசலில் பாண்டித்துரை இல்லை. அது நல்ல சகுனமா கெட்ட சகுனமா தெரியவில்லை.
சைக்கிளை எங்க நிறுத்த தெரியவில்லை. எடுத்த இடத்திலேயே விட்டுவிட்டு வந்தான்.
வீட்டுக்குள்தானே...பூட்டண்டாம் என்றிருந்தது. வில்வண்டியைக் காணவில்லை என்றதும்
ஒரு திடுக்.அப்றம் பார்த்தா பின் வளாகத்தில் அவிழ்த்துக் கிடக்கு. எலேய்
எதுக்கெடுத்தாலும் பயந்து சாகாதடா முண்டம்.
நம்பிக்கையோட இரு. இது பேய் குடியிருக்கிற வீடா என்ன?
போய் கைகால் முகங் கழுவி... கர்சீப் எங்கே? ஆமாமா, சைக்கிள் சீட்டில்... போய்
அவிழ்த்து எடுத்து முகம் துடைத்துக் கொண்டான். அந்தப்பாட்டு "பொன்மானே..." என
இப்ப ஞாபகம் வந்தது. சரி, இப்ப அடுத்த வரில்லாம் பாட ஏலாது.
உள்ளே போனால் அண்ணாச்சி. அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தார். பாசி
பிடிச்சாப்ல முதுகில் விட்டுவிட்டு மயிர்ச்சுருள்கள். சலூன் தரையாட்டம்,
அண்டிராய்ருடன் நின்றபடி காது குடைந்து கொண்டிருந்தார். அண்டிராயர்த்துணிகள்
மாத்திரம் மேலிருந்து கீழ் நீளக் கோடுகள் போட்ட டிசைனிலேயே அமைகின்றன. ஏன்?
தெர்ல...
மவனே இந்த ஆராய்ச்சியெல்லாம் எப்ப நீ நிறுத்தறியோ அப்பதான் உருப்படுவே.
தலை காயட்டும் என்று ஃபேனடியில் நின்றபடி உலர்த்திக் கொண்டிருந்தார். திடுமென
கையை உயர்த்த ஃபேனில் பட்டுவிடுமோ என்று பயமாயிருந்தது. வேட்டி கட்டிட்டுத்
தலைய உலர்த்தப்படாதா?...வெளியே போயி அவர் வரக் காத்திருப்பமா?...சத்தங்கேட்டுத்
திரும்பி "ஏம்ல லேட்டு?" என்றார். இயல்பாய்க் கேட்டாப்லதான் இருந்தது.
"லேட்டாயிட்டு" என்று அறிவுப்பூர்வமான விளக்கம் தந்தான்.
"சரி, பாகீயப் பாரு..." - யாரது பாகீ? ஓ, இவரு வீட்டம்மா..."எதாவது
வேலையிருக்கான்னு கேளு."
ஆக இவர் சார்பில் தற்போதைக்கு வேலை எதுவும் அவசரப்படண்டாம். வாயில் பாட்டு
வந்தது. சீ, வேணாம்.
உள்ளே போனான். மொதல்ல சோரு போடு பாகீ. ச்சீ, தாயி.
ஒலிகள் துவங்காத காலை. இளம் பெண்கள் தங்கக்காசுக் குடங்களை, ஆனால் சத்தங்
கேட்காத அளவில் தூக்கித் திரிகிறார்கள். பெரிய நீள பெஞ்சில் தினத்தந்தி விரிந்து
படபடத்துப் படமெடுக்கிறது...நல்லாத்தான் பேர் வச்சாங்க- தினத்தந்தி. கிராமத்து
ஆளுங்க பத்திரிகைல்லா? கிராமத்து ஆளுங்களுக்கு தந்தி வாறது எப்ப? எவனாச்சிம்
செத்தா, சீரியசாக் கெடந்தாதான? தினத்தந்திலயும் முக்கிய நியூஸ்னா இதுதான். லாரி
மோதி அழகி சாவு!... அழகிங்க சாவலாமா? அய்யோ பாவம்லா...
பெத்தம் பெரிய அறைகள் விதவிதமான வாசனைகள் சுமந்திருக்கின்றன. பெண்களின் அறைகளில்
பெரிய கண்ணாடி. பெரும் கட்டிலில் அவிழ்த்துப் போட்ட உடைகள். விளையாட்டில் முதல்
பரிசு ரெண்டாம் பரிசு என்று ஏறி நிற்கிறாப் போல... சின்ன பெரிய உயர
வித்தியாசத்தில் தேங்காய் எண்ணெய் பாட்டில்-பவுடர் குப்பி... என நிற்கின்றன.
நெல்லு மூட்டை தாண்டி, அது வேறு மாதிரி வாசனை.தொட்டாப் போலவே சமையல்.
ஆ, வீடு பழகிவிடும் என்றிருந்தது. பூபதி உறங்கிக் கொண்டிருக்கிறான். சில
ஆளுங்கள் தூங்கும் போது தன்னைப் போல ஏனோ வாயைப் பொளந்துர்றாங்க. ஏன்? தெர்ல.
நம்ப வீட்டம்மா பத்மினி...அதும் அப்பிடித்தான். ஒருமுறை அவ தூங்கும் போது
அவனுக்கு முழிப்பு வந்திட்டது. எதோ கரப்பான் பூச்சி வெளிக்கிளம்பி அறையைப் பூரா
அலைந்து கொண்டிருந்தது. அவன் மேல பறந்து வந்து உக்கார்ந்து கிறுகிறுவென்று ஓடி...அவன்
தட்டி விட்டாலும் அத்தோடு தூக்கம் அவ்ட். சரின்னுஎழுந்து விளக்கைப் போட்டான்.
கிர்ர்கிர்ரென்று அலைகிறது பூச்சி. அப்பவே நம்ம மேல எப்ப உக்காருமோன்னு ஒரு
நடுக்கம். இனி தூங்க முடியுமா தெர்ல. சரி வெளக்குமாத்தால ஒற்றைப் போடு போட்டு
இதுக்கு சமாதி கட்டிற வேண்டியதுதான்னு திரும்பினா, இவ... வாயைப் பொளந்துகிட்டுத்
தூங்கியாறது. பூச்சி வாய்க்குள்ள போனா?... நினைக்கவே சிலிர்த்தது.
ஒருவேளை அவ வாய்லேர்ந்துதான் வெளிய வந்திச்சோ என்ன எளவோ...
மறுநாள் காலை அவளிடம் "நீ எப்பவும் வாயைப் பொளந்துகிட்டுத் தூங்கறே..." என்றான்.
"நீங்களும்" என்றாள்.
சமையல்கட்டுப் பக்கம் நுழைகையில் எதிரே கொழுக்கட்டை வந்தது. முட்டிக் கொண்டான்.
அவள் கிட்டே வந்து இடிக்குமுன் டிங்டாங் என மெத்தென்று எதோ மோதியது அவன்மேல்.
தொளதொளன்னு...கெட்டுப்போன உருளைக்கிழங்கு. இனி ஆரு வாங்குவா இதை? டாய் மனசை
அலைய விடண்டாம்.
"அம்மா வணக்கம்..." என்றான் எசமானியிடம். தலையை நிமிர்த்திச் சிரித்தாள் அவள்.
"இன்னிக்கு வேலுச்சாமி வர்ல...என்னவோ துட்டிக்குப் போறாம் போலுக்கு..."
அதைப்பத்தி என்ன... அவனே செத்தாலும் எனக்குக் கவலையில்லை...
"மாடுங்களப் பாத்துக்க. வைக்கல் பிரிச்சுப் போடு" என்றாள் பாகீ. பாகீரென்றது.
ச்சீ, பகீரென்றது. என்ன மாப்ளே? யூனிஃபார்ம் போட்டு வேலை செஞ்ச ஆளு...ம்...
பின்கட்டுக்குப் போனான். முகம் தெரியாத ஒரு பெண் குந்தி உக்கார்ந்து பாத்திரம்
தேய்த்துக் கொண்டிருந்தாள். பாத்திரங்களைக் கரி போகத் தேய்க்க அவள் பிரயத்தனப்
பட்டாள். ஈர வைக்கோலால் அவள் அழுத்தித் தேய்க்க அவள் உடம்பே குலுங்...கியது.
உள்ளாடை போட்டா தள்ளாடுமா இப்படி? டாய்!
தலையைத் தூக்கி அவள் அவனைப் பார்த்ததும் திடுக்கென்றது. திருடனின் பயம் அது. "புதுசா?"
- "ஆமா" என்றான் சினேகமாய்.
"இந்தப் பாத்திரமெல்லாம் உள்ள எடுத்திட்டுப் போ" என்றாள் அவள்.
சிரிச்சிருக்கப்படாது!
வைக்கோலை உருவ மனம் அழுதது. இதெல்லாம் நம்ம வேலையோடே....டேய், நீதானடா ஊரைப்
பார்க்க வேலை கேட்டே..."
நல்லா திரண்ட எருமைகள்... அவனைப் பார்த்ததும் மிரண்டு பெருமுழி முழித்தன.
எத்தாம் பெரிய உருவம். பார்க்க நமக்கே பயந்து கெடக்கு. ஆனா அது நமக்குப்
பயப்படுது...என்னா சென்மம்டா இது. முட்டுமோ?...என்று கவலையாய்க் கொம்புகளைப்
பார்த்தான். நடு வகிடெடுப்பான் சில ஆளுகள்...பொம்பளையாளுங்க மாதிரி...அப்படி
ஓரத்துக்குப் படிந்திருந்தன கொம்புகள். அதை வெச்சி முட்டாதுன்னு முடிவு
செஞ்சிறபடாது. முட்டி ரெத்தம் வரணுன்னில்ல. சில மாடுகள் அந்தாக்ல கவட்டைக்குள்ள
மண்டைய விட்டு கிட்டிப்புல்லு விளையாடிரும்.
"ஒண்ணுஞ் செய்யாது போ..." என்றாள் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவள். அவ
எப்டி...முட்டுவாளா தெர்ல. கிட்டே போனபோது ஒரு மாடு மிரண்டு பின்வாங்கி
சங்கிலியை அறுத்துக் கொண்டு விலக முயன்றது. வைக்கோலைப் பிரித்துப் பரத்திப்
போட்டான். அதற்குள் என்ன அவசரமோ மாடு சாணம் போட்டது. அவன் வேட்டியில் தெறித்தது.
மடித்துக் கட்டிக் கொண்டுதான் வந்தான். வைக்கோல் தூக்கிப் பாதி வழி வரும்போதே
அவிழ்ந்து விட்டது. மேலே சிந்திய சாணி பத்தாது என்று சந்தேகத்துக்கு மூத்திரம்
வேறு அடித்தது. அதும் பத்தாது என்று மூத்திரத்திலேயே வாலை நனைத்து மயிர்க்
குஞ்சலத்தால் ராஜாவுக்கு கவரி வீசியது...
சாயந்தரம் இதைப் பால் கறக்கச் சொல்லுவாங்களோ? குளிப்பாட்டச் சொல்வாங்களோ
என்றெல்லாம் கவலை கிளம்பியது. ஈப்பட்டாளம் வேறு. மாடு நிற்கக் கொள்ளாமல் காலை
அசத்தியது. என் கால்ல வெச்சிறாத எரும...சதை தாளாது...
சில வேலைக்காரர்கள் தென்பட்டார்கள்.ஏற்றம் இறைத்துத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு
ஒருத்தன். தென்னை மரத்தில் ஒருத்தன். மண்டைல இளநியப் போட்றாதய்யா...எல்லாரும்
இயல்பாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
பழகிவிடும் என்றிருந்தது. வேறு வழியும் இல்லை. பெரிது பெரிதான அறைகள். காற்று
தாராளமாய் வளைய வருகிறது. ஃபேனே தேவையில்லை. அவர்கள் வீட்டில் யாரும் ஃபேன்
போடவும் இல்லை. அதன் சடசடப்பு இல்லாமல் நிம்மதியாக இருந்தது.
பூபதி எழுந்து தூக்கம் விலகாத தள்ளாட்டத்துடன் வந்தான். கக்கூசில் யாரோ ஏற்கனவே
போயிருந்தார்கள். காத்திருக்க முடியவில்லை அவனால். ரெண்டு முறை தட்டிவிட்டு
வந்தான். அவன் ஆத்திரத்துக்குக் கதவை ஒடைச்சிக்கிட்டு உள்ள பாஞ்சிருவாம்
போலிருந்தது. இதுல என்ன விசயம்னா, இவாளுக்கு "வந்த" கவலை உள்ள இருக்கறவாளுக்கு
"வராத" பிரச்சனை!
பூபதி வைக்கப்படப்புக்கு அந்தாண்டை ஒதுங்கினான். முட்டை போடும் கோழி போல.
துட்டு விசயத்தில் எவனும் இத்தனை ஜாலியாச் செலவழிக்கிறதில்லை. பைக்குள்ள கைய
விட்டாலும் காசை எடுக்க மனசு வர மாட்டேங்குது. ஆனா இந்த சமாச்சாரத்தில்
சர்ர்ன்னு அத்தனையும் வெளிய தள்ளிவிட்டால்தான் அவனவனுக்கு நிம்மதி.
தத்துவங்கள் வாழ்க.
உள்ளே வர, அந்தப் பெண்கள் புன்னகை செய்கிறார்கள். நிறைய முகங்கள் பழகிவிட்டன
இப்போது. சிறு சிட்டுக்களாய்ப் பெண்கள். தோழிகள் சோழிக் கலகலப்புடன். ரேடியோப்
பெட்டி இருந்தது. சென்னைன்னா எஃப்.எம் கேப்பான். தேன்கிண்னம், சிறப்புத்
தேன்கிண்ணம்னு பாடாவதி ஆளுங்களைக் கூப்பிட்டுப் பாடாவதிக் கேள்விகள் கேட்பார்கள்.
அவன் இதாண்டா நேரம்னு தன் சம்பந்தப்பட்ட படமாச் சொல்லி டப்பாப் பாட்டா வெச்சி
அறுத்துத் தள்ளிருவான்...
யார்னு பேர் கேட்ட மாத்திரத்திலேயே அணைசிறலாம்னிருக்கும். "உங்க வாழ்க்கைல
மறக்க முடியாத சம்பவம்?"னு ஒரு கேள்வி. ஓடாத ஒரு படத்தை - அவன் எடுத்த படத்தைப்
பத்தி அவக பேசுவாக பெருமையாய். ஜனங்க மறந்து விட்ட சம்பவம் அவனுக்கு மறக்க
முடியாத சம்பவம்...பாவிகளா!...
வாசலில் யாரோ வந்திருந்தார்கள். பாண்டித்துரை பேசிக் கொண்டிருந்தார். எல்லாம்
துட்டு விசயந்தான். கெழ்ங்கெட்டைகளுக்கு வீட்ல கால் தரிக்காது. சாமி காரியம்
ஊர்ப் பொதுக்காரியம்னு அலையிறது...தின்ன சோறு செமிக்காண்டாமா?
மதுரை டிவியெஸ் கம்பெனியாளுங்க ஒண்ணாச் சேர்ந்து மியூசிக் பார்ட்டி
வெச்சிருந்தாங்க. எல்லாம் ஒண்ணாப் பெரிய வேனெடுத்து வந்து இறங்குவாங்க. கச்சேரி
ஆரம்பிக்கு முன்னால ஆத்தாடி அவனவன் செய்ற அமர்க்களம். டொய்ங் டொய்ங்னு மைக்கச்
சரி பண்றதும் -க்ரீச்னு காது கூசுறாப்ல சப்தத்தை மைக்செட்காரன்
அதிகப்படுத்தறதும், இவக அதைச் சுண்டிப் பாக்குறதும், சத்தம் ஒழுங்கா வருதான்னு
சைட் ஸ்பீக்கலயும், தள்ளி தெருப்பக்கம் திருப்பிய குழாய் ஸ்பீக்கர்லியும்
செக்கப் பண்றதுமா பயங்கர செட் அப். ஆளுக்காள் டை கட்டி, அம்சமா ஸ்டெப் கட்டிங்
- அப்ப அதான் ஃபேமஸ்... வயலின் கிடார்னு சுண்டறானுங்க. சுருதி சேக்கறானுங்க.
அதுக்கே ரொம்ப டைம் ஆயிட்டு. சரி பாட்டு இன்னிக்குப் போட்டுக் கழட்டப் போறான்னு
பாத்தா மொதப்பாட்டு சீர்காழிப் பாட்டே சொதப்பல்...விநாயகனே வல்வினையை வேரறுக்க
வந்தாய்...னு குரலைப் பிடிச்சி சும்மா ஆட்ட்ட்றாப்டி... போடா நீ எந் தாலியறுக்க
வந்தாய்...னு அவனவன் கிளம்பிட்டாப்ல...
நன்கொடை ரசீதில் கையெழுத்துப் போடறாரு பாண்டித்துரை. பேனா எழுதல.வந்தாளுகள் பேனா
அது. நம்ம அய்யம் பைல எப்பவும் பேனா வெச்சிருப்பாப்டி. அவன் பட்டணத்துக்காரன்லா?
சட்டுன்னு நீட்டினான். புன்னகைத்தபடி வாங்கிக் கையெழுத்துப் போட்டார். எவ்வளவு
எழுதறாருன்னு பார்க்க முயன்றான். முடியவில்லை.
கிர்ர்னு பறக்கிறாப்ல இருந்தது. அப்டியாளாக்கும் நான். மாடு கழுவ விட்றாதீங்க...
வந்தது பக்கத்து கரிசலூரணி ஆட்கள். ஒரு வாரத் திருவிழா போல. நைட்டு அண்ணாச்சி
கிளம்பலாம். கூட நானும்...அவர் காரில்...அது தனி பந்தாதான்.
பெட்ரோல் போட டயர் காத்தடைக்க என்று பங்க் அருகே கிடையாது. கரிசலூரணி அடிக்கடி
போகவேண்டிய தேவை இருக்கும் போலிருந்தது. அப்டியே மேலப்புதூர் பக்கந்தான். நம்ம
வீட்டுப் பக்கம் ஒற்ற அழுத்து அழுத்திக்கிர்றதுதான்...
பொன்மானே...என்று திரும்பவும் பாடினான். காலையில் இருந்து ஈ சுத்றாப்ல திரும்பத்
திரும்ப இதே பாட்டு. சில நாள்ல ஆப்டி அயிருது.ஏன்?
தெர்ல.
ஏம் மாப்ள தெர்லன்ற பதிலுக்கு ஒரு ஆராய்ச்சியா? தேவையா?
தெர்ல!
அம்மானை...பொன்னூஞ்சல்...
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-12 தொடர்கதை
பகுதி-14


|