தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
14. பொண்ணுங்க ஒவ்வொன்னும் அழகுதான்...

பன்னீர்ப் புகையிலை பாண்டித்துரைக்கு வேட்டை ருசி தாண்டி பொம்பளை ருசி தட்டி,
அது கொள்ளைக்காலம் ஆச்சி. விலங்கு வேட்டைன்னா அது ஒரு காலம். இளமைக் காலம்.
ஓடணும் சாடணும். சதா கவனமா இருக்கனும். வேகம் சுறுசுறுப்பு அதன் அழகு. இந்த
வேட்டை அப்பிடியில்ல. இதற்குத் தேவை நிதானம். சிலாளுகள் இதிலும்... புதுசா
சைக்கிள் கத்துக்கிட்டவன் மாதிரி வேகவேகமாப் போயி விழுந்து வருவான். நம்மாளு
அவசரங் காட்டறதேயில்லை. பொண்ணுன்னா பூவுல்லா. இதழ் இதழா அதைப் பிரிச்சி, விரிய
விரிய அனுபவிக்கனும்யா...மானுடத்தின் ரகசியம் அது. அது ஒரு சுகம்.
மனுசாளுக்கு ஒண்ணாக் கூட்டமாக் கூடி சந்தோசமா இருக்கிறது பிடிக்கிறது.அடிக்கடி
வீடலயும் பொது இடங்களிலும் விசேஷம் என்றும் திருவிழா என்றும் கொண்டாட
களியாட்டங்கள் வேண்டித்தான் இருக்கிறது. வேடிக்கை விநோதம் அன்னாடப் பரபரப்புன்னு
இல்லாமல் இது உபரியான பரபரப்பு. சில வெட்டி வீரமணிகளுக்கு ஊர்ல எலக்சன்னா ஒரு
தன்னெடுப்பு, மிதப்பு வந்துரும் கூடிக்கூடி அந்தக் கச்சி இந்தக் கச்சின்னு
ஆவேசமாப் பேசுவான்!
வேலை காரியம்னு வெளியூர், பட்டணம்னு போனவர்கள் கூட ஊர்ல திருவிழான்னு வருஷம் ஒரு
முறை மண்டகப்படி ஏத்துக்கிறதும், வந்து உறவுக்கா ஆளுக வீடுகளில் தங்குவதும்
காலைல எழுந்து நாலு ஆளுகள் தெரிஞ்சாளுகள் வீடுகளுக்கெல்லாம் ஒரு விசிட்
அடிக்கறதும்...அவனவன் ஒரு வாரம் பத்துநாள் லீவு போட்டுட்டு வாரன்யா... ஒடம்பு
சரியில்லேன்னாலே லீவு எடுக்க யோசிக்கிற மனுசன்...அது சரி...பாதிப்பேருக்கு
ரெஷ்டே ஆபிசுலதான். வீட்ல மாத்தி மாத்தி என்னமாச்சியும் வேலை செஞ்சுக்கிட்டே
இருப்பான். ஆபிசுன்னா இருக்க வேலையும் செய்றதில்லை. வேலையா? அது தனியா ஓ.ட்டி.
கணக்கு.
இங்கே ஒட்டுதல் இன்றி, இருந்த வீட்டையும் விற்றுக் காலி செய்து போனவர்
எல்லாரையுங் கூட ஊர் விடவில்லை. சொந்த ஊர், சொந்த மண், தாய்நாடு, உலகம்...எத்தனை
பற்றுதல்கள்.உயிரின் இருத்தல் தாகம்.கேட்கிறது எல்லாமும்!
"சாருக்கு சொந்த ஊர் இதா?"
"நம்ம அவ்ள பெரியாளு இல்லங்க.சொந்த வீடுதான் நமக்கு"
இதையே உல்ட்டாவாச் சொல்றதும் உண்டு. "எங்க அய்யா எனக்கு நிறைய சொத்து
வெச்சிட்டுப் போனாரு..." என்றானாம் ஒருத்தன். அடுத்த அறிவாளி, "அட போடா, எங்க
அய்யா இந்த உலகத்தை விட்டேப் போனாருன்னானாம். நாட்லே பாதிப் பேரு வாழ்றதே இந்த
தடாலடியிலும் சண்டியர்த்தனத்திலும்தான்.
பண்டிகைக் காலங்களில் கிராமம் அழகெடுத்துக் கொள்கிறது...பூத்த மரம் போல.
பக்கத்து பக்கத்துக் கிராமம்னாக் கூட ஒரே சமயத்தில பண்டிகை வைக்கிறதில்லை.
விட்டுவிட்டுக் கொண்டாடினார்கள். அப்பதான் இங்கத்திய ஆளுங்கள் அங்க போக வர
சவுகரியம். அதுல பாட்டி வேற... இந்தத் திருளா...நம்ம ஊர்ல...ஜமாச்சிரணும்யா...என்பார்கள்.
அறுவடை முடித்த ஜோரில் பொதுவாக, சாமிக்கு ஒரு நன்றி அறிவித்தல் போல கோலாகல
கலகலப்புகள் நடந்தேறும். மழையில்ல, தண்ணியில்ல, வறட்சி...நோய்நொடி ஊர்ல புகுந்து
சுழல்காத்தா வாலைச் சுழட்டுது...என்கிற மாதிரியான பிரச்னை சமயத்திலும்
கஞ்சியூத்துதல், சாமி குளிப்பாட்டு, ஆடு பலி தருகிறது...என்று பயத்தில்
கொண்டாடுவதும் உண்டு. அப்ப பூசாரிக்கோ ஊர் ஆளுகளில் ஒருவனுக்கோ உள்ளூற சாமி
இறங்கும்.சனங்கல் அதன் குழந்தைகள் அல்லவா? குறி சொல்லிவிட்டு "மலையேறும்"
கவலைப்படாதய்யா, நான் குளுந்திட்டேன் - இனி ஒரு குறையும் வராது. நான்
பார்த்துக்குவேன்...னாப்ல. ஐதீகங்கள்...!
வறட்சிக்குப் பின் வந்த மழை ஊரையேக் கலக்கிப்பிடும் கலக்கி. அவனவன் தெருவுல
வந்து மழைல ஆட்டம் எடுப்பான். அத்தை மடி மெத்தையடி. ஆனா அவ பல்லு சொத்தையடி...ன்னு
இட்டுக் கட்டி பாட்டு. இதுல ஆம்பிளையாள் பொம்பிளையாள் வித்தியாசமில்லை!
திருவிழா நெருங்க நெருங்க...போன வருடத் திருவிழாவை நினைவு கூர்ந்து பேசித்
திரிவார்கள். பம்பு செட், தோட்ட வளாகம், பஸ் ஸ்டாண்ட், டீக்கடை என்று
சந்திப்பிடங்கள் அழகு பெறும். சாதிகள் கரைந்து காணாமப் பொயிரும். அவனவன்
திருவிழாவச் சாக்கிட்டு முடி வளர்த்துத் திரிவான். பக்தி பிச்சிக்கிட்டுக்
கிளம்பும் நாலா பக்கமும்...பஸ் புழுதி போல...மீசையும் தாடியும்...சொறியலும்
மூக்குச் சிந்தலுமாத் திரிவான். பாக்கப் பைத்தியக்காரன் சாயல் தட்டும். இது ஒரு
துருவம்னா...சரியாத் திருவிழாச் சமயம் மொத்தத்தையும் வழிச்சிட்டு முழு மொட்டையா
சீக்குக் கோழியா, மண்டை வெல்லமாத் திரிவான். கழுத்து நீட்டமாயிட்டாப்ல.
பொண்ணுங்க ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதத்தில அழகுடாம்பாரு பாண்டித்துரை.
ஒருத்திக்குக் கண் அழகு. ஒருத்திக்கு உதடு சும்மா கருவண்டாட்டம் நவ்வாப்பழ
பளபளப்போட வாவான்னு கூப்பிடும். சிலருக்கு மார்பு எடுப்பு...வடித்தெடுத்த சிலை
போல. கைவிரல், நீள உடம்பு, நீண்ட முகம்னு பல்வேறு தினுசு அழகுகள். சிலாளுகள்
தலையைக் கொஞ்சம் தூக்கி வாரியிருப்பாங்க. பிடரி தெரியும். குதிரை மாதிரி ஒரு
தோற்றம். அதை ஒரு சிலுப்பு சிலுப்பிக்குவாளுக. பல் அழகுக்காரிகள். சில பேருக்கு
ஒடம்பு நல்ல தோல் - வெரைப்போட உயரக் கழுத்து. அதையடுத்து தோளின் விரிவுன்னு அது
ஒரு எடுப்பு.
இதுல என்ன விஷேசம்னா யார் யாருக்கு எது அம்சம்னு அவளவளுக்கே தெரிஞ்சிருக்குது.
நல்ல பல்வரிசை உள்ளாளுகளைப் பார். சதா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க.
வாழைப்பூவாட்டம் தெத்துப்பல் பார்ட்டிங்க சிரிக்கலையான்னு எதிர்க்கேள்வில்லாம்
போட்டு ஒழப்பப்படாது. அவங்க சிரிக்கலைய்யா...பாத்தா சிரிச்சாப்ல தோணுது.
அவ்ளதான். ஒண்ணரைக்கண் பார்ட்டி பார்க்கலியா? அதும் மாதிரி.
வெறும் உடம்பு - அழகு மட்டுமா? சிலாளுகள் இடுப்பை ஆட்டியாட்டி ஒரு நடை
நடப்பாளுகளே, செத்தாண்டா எதிரி! மனசையே தாயக்கட்டையாக் குலுக்கிப்பிடுவாளுகளே.
சில பொம்பளைகள் சாதாப் பேச்சே வசியம் போலருக்குது. கொஞ்சம் கண் செருகினாப்ல
பாவனை வேற சேந்திச்சின்னா...அப்டிப் போடு அருவாள...!
சிவப்புத் தோல்க்காரிகள் மாத்திரம்தான் அழகுன்றதில்லப்போவ். கருப்புல
முழுக்கருப்பு. ஒரு பூசின கருப்பு உண்டு. கண் கூசும் பாக்கவே. மகா அம்சம் அது.
கிட்டத்ல சிவந்த முகத்தில் நதிக்கரை வண்டலாய் பூனை மயிர் அலைவுகள்.புருவம்
ரெண்டு சேர்ந்த அடர்த்தின்னு ஒரு நேர்த்தி...
பார்க்கிற எந்தப் பெண்ணையும் இந்த ஆண்கள் அரைகுறையாப் பாக்கறதேயில்லை! இவன்
இப்டி இந்தப் பக்கம் சைக்கிள்ல போயிட்டிருப்பான். பஸ்சுல ஒரு பொண்ணு - பாக்காத
முகம் போகுது. சரியாக் கவனிக்கலைன்னா இவனுக்குப் பெரிய லாஸ்(நஷ்டம்)அது. போற
சோலியே மறந்துருது. அப்டியே ஒரு ரவுண்டடிச்சித் திரும்பி இறங்கிப் போறாளைக்
கிட்டத்ல மோப்பம் பிடிச்சி முகத்தையும் பார்த்திட்டு அப்படியே அரைவட்டத்
திரும்பல் திரும்பறதுதான்!
முன்னெப்பவோ பார்த்த ஒரு பெண்ணைத் திரும்ப வேத்தூர்ல பொது இடத்துல
பார்த்திறப்படாது... மனசு பரபரப்பயிருது. இவளை...எங்கியோ...பார்த்திருக்கமே...!
எங்க எங்கன்னு உள்த்தேடல் ஆட்டிரும் ஒரு ஆட்டு. லேசுல விடாது!
புதுசான முகங்கள் பார்க்கிறது தனி உற்சாகமான அம்சம்தான். பக்கத்தூர்த்
திருவிழான்னு மனுச மக்கள் கூடறதில இப்படி ஒரு விஷயம் இருக்கப்போவ்!
ஊர்ல திருவிழா - மார்ல சந்தனம்னு வசனம். பி.பி.பி.க்கு அது ரொம்பப் பொருத்தம்.
பட்டணம் போயி வந்தால் தவறாமல் பாண்டித்துரை ஆஃப்டர் ஷேவ் லோசன், சென்ட்
பாட்டில்னு வாங்காமத் திரும்பறதில்லை. அப்பாவுக்குத் தெரியாமல் பூபதி இப்பவே
அதையெல்லாம் ஒரு வாசனை பாக்கறது. போட்டுக்கறதுன்னு ஆரம்பிச்சாச்சி. லெட்ரீன்
போயிட்டு வந்தா கைகழுவிட்டு ஒரு சோப். அப்றம் சென்ட் தெளிப்பு கையில்.
குளிச்சிட்டு கையைத் தூக்கி ஒரு விஷ்க். பிறகு இந்தப் பக்கம். உள்ளங்கையில்
தேச்சித் தேங்காயெண்ணெய் போல கன்னத்துல சப்புசப்புன்னு ஒரு அறை...சாமி சந்நிதில
நின்னுக்கிட்டு சில பேர் அறைஞ்சிக்குவாங்க இப்டி!
சாமிதானே கும்பிடறாங்க? பின் ஏன் தண்டனை வாங்கினாப்ல நம்மாளுங்க படார் படார்னு
அறைஞ்சிக்கிறதும் குட்டிக்கிர்றதும் தோப்புக்கரணம் போடுறதும்...?
தெர்ல!
அய்யம்பெருமாளுக்கு வேலையே இல்லை. தினத்தந்தியில சுவாரஸ்யப்படவில்லை மனசு. இவன்
இல்லாமல் பட்டணத்தில் விபத்துக்கள் குறைஞ்சிட்டாப்ல இருந்தது. வீட்டுப் பெண்கள்
கிட்ட கேட்டு ராணி, ராணி முத்து, பாக்யா எல்லாம் படிச்சி முடிச்சான்.
வண்டிக்குள்ள சிறு தூக்கம் போட்டான்.
ரெண்டு வேளைச் சாப்பாடு. அதற்கு வஞ்சனையில்லை. வீடு, அதன் அம்சங்கள் எல்லாம்
பாத்துக்கிட்டான். வந்து போன முகங்களில் சில பேர் அவனை அடையாளம்
கண்டுக்கிட்டாங்க. அதுல ஒரு சந்தோசம்.
துணி கேட்டு வாங்கி ஒரு வாளில தண்ணி எடுத்திட்டு வந்து சலவைத்தூள் போட்டு
பளிச்னு காரைத் துடைத்தான். பெரிய ஓவியன் போல சற்று தள்ளி நின்னு ஒரு பார்வை.
தூசு தும்பு போயிருக்கான்னு ஒரு செக்கப். அதும் வேலுச்சாமி பின்கட்டுல மாட்டைக்
குளிப்பாட்டிக்கிட்டே எதிர்ப்பார்வை பார்க்கிறான்னதும் ஒரு உற்சாகம். மதியம்
அவன் வந்து பால் கறந்தான். தொழுவங் கழுவினான். அய்யம் அவனோடு சிநேகம் காட்ட
நினைத்த போது ஒரு விரைப்போடுதான் அவன் தலையாட்டினான்.
எடேய், டிரைவர்னா சும்மாவாடா? அது படிச்சவன் வேலையில்லா. நெஞ்சில் பேனா குத்திய
ஆளுங்க நாங்க. சட்டையே அணியாத பார்ட்டி நீ. தலைல முண்டாசு கட்டித் திர்றீங்க.
உடம்பை மறைக்க வகையில்ல. இப்ப தலைமுடிய மறைச்சி என்னாவப் போவுது?
ஆனா இதுல ஒரு பின்னனித் துக்கம் இருந்தது. வேலையெல்லாம் முடிச்சி கைகழுவி
வேலுச்சாமி கிளம்பியாச்சி. மாலை வெயில் டென்னிஸ் பந்தாட்டம் இங்க விழுந்திட்டு
ஒரு எம்பு எம்பி அந்த சைடு எகிறியாச்சி. அய்யம் பெருமாளுக்கு கிளம்பலாம்னு ஒரு
இது...
பெண்டாட்டி ருசிக்கு மனசில் ஒரு சிறு பரபரப்பு.
போகலாமா வேணாமான்னு ஒரு யோசனை. கேப்பமா வேணாமான்னு ஒரு தவிப்பு...அப்ப பார்த்து
பாண்டித்துரை திரும்ப ஒரு தபா குளிக்காரு. என்னடாதுன்னு ஒரு குழப்பம்.
உடம்பையெல்லாம் ஒரு ஷோக் பண்ணிக்கிட்டாரு. டிரஸ் வேற மாத்திக்கிட்டாரு ஒரு சப்
சப். ஒரு விஷ்க் அங்கங்க...
சரிதான். வெளிய கிளம்புறாரப்போவ்...
திருவிழாச் சமயம் எல்லாரும்...இருக்கறதுல நல்லதா எடுத்து உடுத்திக்கிட்டு...புதுமொட்டையெடுத்து
சந்தனம் தேச்ச அல்லது புதுசா காது குத்தின குழந்தைகளோட அப்டி இப்டி வளைய வரான்.
அது அவனுக்கு சுதந்திர நாள். நமக்கு அப்பதான் வேலை இங்க மாட்டுது...
ச்சே, பட்டணத்துலயே இருந்திருக்கப்படாதா...?
ஒரு நல்ல நாள்னு பொண்டாட்டி பிள்ளைகூடச் செலவழிக்கத் திகையாதபடி இதொரு வேலை...!
தினசரி இப்டியே இருக்கும் போலிருக்கு. பெண்டாட்டி பக்கத்துல இருந்தும் நெருங்க
முடியல்ல... என்னவோ அவ வீட்டுவிலக்கு ஆனாப்ல!
இருந்த ஆத்திரத்துக்கு வண்டியை அழுத்தித் துடைத்தான்.
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-13 தொடர்கதை
பகுதி-15


|