|
தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
15. பாண்டித்துரை பார்த்த கூத்து...

சரி, கிளம்பி விட்டார் என்று நினைத்தால் மடக்னு வாச நாற்காலியில உக்காந்திட்டாரு
பாண்டி அண்ணாச்சி. என்னாச்சி லூசு மாதிரி நடந்துக்கிறாரு என்றிருந்தது
அய்யம் பெருமாளுக்கு. இல்ல, வயிறு கொடகொடத்து
லூஸ் மோஷனாகுதோ?
யாரோ வரணும் போல, என்று பார்த்தால் அப்பிடியும் தெரியல. அவர் மேக்- அப் முடிச்சி
வெளியவர, அவன் கார்க்கதவைத் தொறந்தாப்ல நின்னா, அவர் உக்காந்து சாவகாசமா தந்தி
பேப்பர் படிக்காரு. மணி பாத்துக்கிட்டாரு. பேப்பர். திருப்பியும் மணி...என்னவோ
சாவு பத்தி செய்தி. தந்திப் பேப்பர்ல வேறென்ன போட்றப் போறான். செத்தவன் எத்தனை
மணி நேரம் முன்னாடி செத்தான்னு பாக்காரா? ...ஓ, சரி சரி...
நிகழ்ச்சிக்கு சரியாப் போயி இறங்கினாத்தான் மரியாதை. கொஞ்சம் முன்னாடி போயிட்டா
வாய்ப்புக்கு நாக்கத் தொங்கப் போட்டு அலையறாப்ல ஆயிரும்னு பாக்காரு.
அலையிறது என்னவோ நிசந்தான். அதை யாரும் சொல்லிக் காட்டிறப்படாதுன்னு ஒரு இது.
இவருக்கும் கலைகளுக்கும் ஸ்நான சம்பந்தமே கிடையாது. ஆனா தலைமுறை தலைமுறையா
இதுங்க கலைன்னா என்னன்னு மேடையேறி மைக்கைப் பிடிச்சித் தைரியமாப் பேசியாறது. அதை
இந்த தர்மகர்த்தாவும், முன்வரிசைப் பார்ட்டிகளும், கூத்து ஆட்களை ஏற்பாடு
செய்தவர்களும் கைதட்டி மகிழ்ந்தாகிறது.
அன்னிக்கு ஒருத்தன் அரிச்சந்திரன் டிராமா போட்ட மனுசன். அவனே மேடையேறி
பாண்டித்துரை சிறந்த கலா ரசிகர்னான்...எத்தனை பெரிய பொய்! யானை முட்டை! அதைக்
கேட்டு குளுந்து போயி அடக்கமா பாண்டி அண்ணாச்சி கும்பிட்டாரு. உடம்பை மூடிய
டர்க்கி டவல். சலூன்லயிருந்து பாதில் எழுந்து வந்தாப்ல்...
ஒரு வழியாகக் கிளம்பினார்கள். புது சென்ட் சும்மா ஆளையே தூக்கியது... பிணத்தூக்கல்!
"எல்லாம் சரியா இருக்கா?" என்று எதிர்பாராமல் அவனிடம் விசாரணை வேறு.
தலையாட்டியபடியே மையமான சிரிப்பு சிரித்தான். அவர் முகம் மாறியதும் பயமாயிட்டது.
ஏ பாவி, வேலையைக் கெடுத்துறாதே... "இந்தப் பக்கம் கொஞ்சம் பவுடர்..." என்று
சமாளித்துத் துடைத்து விட்டான். துணி? அவரே போட்ருக்காரே துண்டு. சமாதானமாகல்ல
அண்ணாச்சிக்கு திரும்ப இறங்கி வீட்டுக்குள் போய்க் கண்ணாடி பார்த்து சரி செய்து
கொண்டு வந்தார்!
பார்ட்டி பாராட்டினால் குளுந்துரும் போலுக்கு. பெட்ரோல் போட, சின்ன அளவுல கோளாறு
சரி செய்யன்னு சொல்லி கழண்டுக்கிட்டு ஒர்ரவுண்டு வீடு வரை போயிட்டு வர முடிஞ்சா
நல்லது. நிகழ்ச்சி முடியுமுன்னால் வந்திறலாம்லா...
அட நம்ம போற நேரம் அவ கிளம்பி திருவிழா பாக்கன்னு இங்க வந்தா?...ன்னு அதுலயும்
சிக்கல்.
இவர் வர எல்லோரும் காத்திருந்ததைப் பார்க்க அவருக்கு ஒரு திருப்தி! பந்தலுக்கு
வெளியே கார் நிற்க, இவன் இறங்கித் திறந்துவிட...இறங்கிக் கொண்டே வணக்கம்
சொல்லியாகிறது. எல்லாரும் திரும்பிப் பார்க்கிறார்கள். இவர் கும்பிட்டுக்கிட்டே
முன்வரிசை நோக்கிப் போவதைப் பார்த்தான். சரிடா போயி உக்காரு. நிகழ்ச்சியப்
பாப்பம்... என்கிறாப் போல ஜனங்க திரும்பிக்கிட்டாங்க.
அண்ணாச்சி கார் வாங்கியது சிலருக்கு ஆச்சரியமாயிருக்கிறது. அட போங்கப்பா, இந்த
மாதிரி கார் ஆயிரம் கிடைக்கும். என்னை மாதிரி டிரைவர் கிடைக்குமா? அவர்கள் வந்து
காரைப் பார்த்ததும் விர்ர்னு நம்மாளுக்கு ஒரு விரைப்பு. அந்தஸ்து. ஒயரம் ஒரு
ஜான் கூடிட்டாப்ல...
என்னடா விரைப்பு இது, செத்த பல்லியாடா நீ, என்றது ஒரு மனசு.
"மாமா" என்ற குரல் தேனாய்ப் பாய்ந்தது. அது பத்மினியின் குரல் அல்லவா?
சந்தோசமாய்த் திரும்பினான்.
"இதான் நம்ப காரா மாமா?" என்று அவன் முகத்தைப் பார்க்காமல் காரைத் தடவித் தடவிப்
பார்த்தாள். வெறுப்பாயிட்டது. என்ன பார்வை - குருட்டு பொம்பளை மாதிரி! நல்ல வேளை
துடைத்து எடுத்துக் கொண்டு வந்தான். அப்படியும் வந்த புழுதி ஏறியிருக்கும்.
"ப்...பா" என்கிறது குழந்தை.
"ஒரு ஜெட்டி போட்டு எடுத்தாந்திருக்கப்படாதா?" என்றான்.
"அதென்னவோ ஜெட்டி போட்டா ஓடன்னே..." என்று அவள் முடிக்குமுன் அவன் சட்டையை
ஈரமாக்கி விட்டது குழந்தை.
ஏண்டா தூக்கிக் கொண்டோம் என்றாகி விட்டது. செண்ட் போட்ட முதலாளிக்கு மூத்திர
வாடையுடன் ஒரு டிரைவர்! என்னா காம்பினேசன் இது...அய்யம்பெருமாள் ராசின்னு ஒண்ணு
இருக்கில்லா. சும்மா விட்ருமா அது...
வரும் வழியில் வண்டியை நிறுத்தி பன்னீர்ப் புகையிலையும் சிகரெட்டும் வாங்கியாரச்
சொன்னாங்க அண்ணாச்சி. மொதல்லியே வாங்கி வெச்சிக்கிட்டா என்னடா வெண்ணே? - வந்து
முதலாளியிடம் சில்லரையை நீட்டினான். நீயே எடுத்துக்க, ரயில்வே கார்டு
கொடியசைத்தா மாதிரி கையை ஆட்டி விட்டார். அய்யோ என் ராசா, உன்னைப் போயி
திட்டிட்டேனே. ஸாரி!
"சாப்பிட்டீங்களா?" என்று பத்மினியிடம் கேட்டான் தைரியமாய்.
அவள் சாப்பிட்டாளா தெரியவில்லை. அதனாலென்ன? "போவம்" என்றாள் மையமாய்.
"கார்ல போவம் மச்சான்!"
"வேணா" என்றான் அவசரமாய். முதலாளி என்ன சொல்வாரோ என்று ஒரு பக்கம் பயம். அதைவிட
பயம்...குழந்தை காருக்குள்ள ஒன்றிரண்டுக்குப் போய்விட்டால்?
பெண் குழந்தை. இன்னும் கொஞ்ச நாள்த்தானே? அப்புறம் கண்ட இடத்துல இப்டி போக
முடியுமா?
அந்தத் திண்டாட்டம்லாம் சுடிதார் - பேண்ட் போட்ட பட்டணத்துப் பெண்
குமரிகளுக்குத்தானப்போவ். கிராமத்துப் பொம்பளைங்களுக்கு அந்த சிரமமெல்லாம் இல்லை.
எப்படியும் இப்பசத்தைக்குக் கூப்பிட மாட்டாக என்றிருந்தது. அவளோட கொஞ்சம்
நடந்திட்டு வரலாம்...
பைல இருக்க அஞ்சு ரூபா சில்லரைக்கு வளைவி வாங்கறதா? டிபன் சாப்பிடறதா?
குழந்தைக்கு பொம்மைகிம்மை வாங்கறதான்னு ஒரே குழப்பம்...முதலாளி திரும்பிப்
போகச்சில சில்லரை எங்கடான்னு கேட்டா?...அது வேற திகில்.
அட நாம ஆசைப்பட்டபடி பக்கத்துல பொண்டாட்டி. நெருக்கமா உரசிக்கிட்டே வர்றாப்ல.
அதை அனுபவிடா முண்டம். எதுக்கெடுத்தாலும் குழப்பம். பயம் உனக்கு...ஜாலியா அனுபவி
மாப்ள, என்றது உள்க்குரல். சரி, என்று இன்னும் நெருங்கி அவளை உரசினான். அதற்கு
வசதியா அவள் குழந்தையை அந்தத் தோளுக்கு மாற்றிக் கொண்டாள். எதோ ரகசியம் சொல்றாப்
போல அவள் கன்னத்தைப் பார்க்கக் குனிந்தா அவளிடமிருந்து ஒரு வாடை. தனலட்சுமி வாடை!
பெண்கள் பொறுமைசாலிகள்தான்!
உங்கம்மா உன்னையும் பொறுத்துக்கிட்டிருப்பா இதும் மாதிரி, என்றது மனது.
இயேசுநாதர் சொன்னதில் கொஞ்சம் உல்ட்டா பண்ணினா வசனம் இப்டி அமையும். பெண்கள்
வருத்தப்பட்டு ஈரம் சுமக்கிறார்கள்!
மெட்றாஸ்ல தண்ணி லாரிங்க இப்டிதான். போயிட்டே இருப்பம் சைடு எடுத்துப் போகச்சில
வலது பக்கம் தண்ணி லாரி நின்னா அப்டியே அது போடற திடீர் பிரேக்ல நம்ம மேல
தண்ணிய அப்டி ஒரு ஊத்து ஊத்தும்...
ரோட்ல நடந்து போயிட்டிருக்கும் போது ஓரமா ஒரு ஆம்பளை ஒதுங்கினாலே பாக்கற ஆளுக்கு
தனக்கும் போக வேண்டும் போல் தோன்றும். குழந்தை ஊத்த ஊத்த, பொம்பளையாட்கள்
பொறுமையை அதிகம் சோதிக்குமே, என்றிருந்தது. என்ன சமூக சிந்தனை, என்று தன்னையே
மெச்சிக் கொண்டான். அதான் அய்யம் பெருமாள்!
"எனக்கொரு ஆசை மாமா" என்றாள்.
"பைல கெடந்த அஞ்சி ரூவா காலிடி" என்றான் பயத்துடன்.
"அதில்ல மாமா..."
துட்டு செலவில்லாமக் கூட ஒரு ஆசையா?
"நம்ம மூணு பேர் மாத்திரம் கார்ல ஜாலியா எங்காவது போயிட்டு வரணும்..." என்கிறாள்
பத்மினி.
அதாவது முதலாளி துட்டுல.
மனசின் கவிதை அது. அட கற்பனை பண்ணி சந்தோசப்பட்டா என்ன? அதில் கூட
அய்யம் பெருமாளுக்கு ஒரு அபத்தமான சினிமாக் கற்பனை. இப்படி சினிமால ஒரு சீன்
வெச்சா...அவன் உடனே பணக்காரனாகி...உடனே சொந்தமாக் கார் வாங்கி....உடனே
எடுத்திட்டு வீட்டுக்கு வந்தா...அவ செத்திருப்பாள். அவளைக் கார்ல வெச்சிக்கிட்டு
அவன் அழ... அட மியூசிக் டைரக்டர் வயலின்காரனைப் போட்டு வேலை நிமிர்த்தி
எடுத்திடுவாரு! வயலின்காரன் வரலைன்னா? அவரே சோகப்பாட்டு பாடிற வேண்டியதுதான்!
இசையமைப்பாளர்கள்
ஏனோ சோகப்பாடலை மாத்திரம் பாடறாங்க! ஏன்?....
தெர்ல. குரல் அங்க இங்க பிசிறடிச்சாலும் யாரும் கண்டுக்கிற மாட்டாகன்னு ஒரு
தைரியந்தானோ என்னமோ!
"நைட்டு எப்டிடி வீட்டுக்குப் போவே?"
"டவுன் பஸ்ல சாயக்குடி (சாயல்குடி) போயிர வேண்டியதுதான்."
"அதுசரி. முதலாளி கொஞ்சம் பாராட்டு மோகம் உள்ள பார்ட்டி. நான் எப்பிடிப்
பேசினேன்னு கண்டிப்பாக் கேட்பாரு. நான் போயி அதைக் கவனிக்கிறேன்."
கூத்து மும்முரப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு மாதிரி நாடகமும் இல்லாம ஆட்டமும்
இல்லாம ரெண்டின் கலவை. நடிகர்களே பாடும் கூத்து. ஓரத்தில் ஆர்மோனியம் - தையல்
மிஷின் போல "மிதிசுருதி" போடற ஆர்மோனியம்! - மேளகாரன், ஜால்ரான்னு பின்பாட்டு
கோஷ்டி.
பின்னால் அம்மன்ற பிரக்ஞையே இல்லாம, கூச்சநாச்சம் இல்லாம, என்னென்னமோ ரெட்டை
அர்த்த வசனங்கள். அதற்கு வியாஜ்ஜியமில்லாமல் கைத்தட்டல்கள். விசில்கள்.
அண்ணாச்சி ரசிச்சிப் பாக்காரு. திடீர்னு பயமுறுத்தறா மாதிரி குரலெடுத்து
சத்தமாய்ப் பாட்டு. ஒரு நாலு வரி. அது முடியுமுன்னாலேயே டண்டனக்கு டண்டனக்கு
தாளம். அதன் விநோத முடிவு. கை ஓஞ்சி போயி ஆள விடப்போவ்னு மேளகாரன்
அலுத்திட்டாப்போல தாளம் அடங்கறது ஒரு ஸ்டைல்.
தாளம் சுறுசுறுக்க கதாநாயகி உடம்பெல்லாம் குலுக்கி ஒரு ஆட்டம். குட்டையோ
குட்டையா ஒரு பாவாடை. கீழ டைட்டா பேண்டேஜ் போட்டாப்ல துணி மறைப்பு இருக்கு.
அப்டி முன்னாடி வந்து சர்ர்னு அந்த குட்டை பாவாடை எகிற சைக்கிள்ல திரும்பினாப்ல
காலைத் தூக்கி ஒரு சாய்வா சாஞ்சி சட்டுன்னு உக்காந்தறது. கொக்கோ வெளையாடறாப்ல.
கொக்கோகம் விளையாட்டா?
உடனே நம்மாளு சட்டைக்குள்ள கைவிட்டு பணம் எடுக்காரு சிரிச்சுக்கிட்டே. "அந்தம்மா
முன்ன வந்து குனிந்து அதைக் குத்திவிடச் சொல்லி" காமிக்கிறாப்ல. அவர் காதுல எதோ
சொல்கிறார் அவளிடம். ச்சீன்றாப்ல ஒரு தளுக்கு தளுக்கினா அந்தம்மா. பச்சைப்
பவுடர் பூசிய முகம்.
கதாநாயகனுக்கும் கெட்ட வசனம் ஒண்ணுக்கு இவ்வளவுன்னு காசு கிடைக்கிறது. நாடகமாவது
கதையாவதுன்னு அதை அப்பிடியே விட்டுட்டு, "நம்ம பரசலூர்த் தங்கம் ஆசாரி... நம்ம கலையை ரசிச்சி ரெண்டு ரூவாத் துட்டு குடுக்காரு... அவருக்காக ஸ்பெசலா ஒரு அடி
அடிப்பமா?...ன்றான் கூத்துக்காரன். "அடிச்சிருவம்"ன்றான் தாளப் பார்ட்டி.
டண்டனக்கா டண்டண் தங்கச்சின்னு திரும்ப ஆரம்பிக்குது சத்தம். சனங்களுக்கு அத்தனை
பேர் முன்னாடி தன் பேர் மைக்ல சத்தமா வந்ததுல ஒரு சந்தோசம். அவைகளைச் சொல்லி
என்ன? பாண்டி அண்ணாச்சிக்கே அந்த கிக் வேண்டியிருக்கில்ல...
விழா சிறப்புற நடக்கிறதாகவும், ஏற்பாடுகள் எல்லாம் - என்ன ஏற்பாடோ? - நன்றாக
இருப்பதாகவும், கலைஞர்களுக்குத் தனித்தனியே மாலை அணிவித்து பேர் அறிமுகம் செய்து
பாராட்டினார் பாண்டித்துரை. மேளகாரன் எழுந்து வர சிரமப்பட்டான். அவன் கால்
மரத்திருந்தது பாவம்.
திடீர்னு பாத்தா பத்மினி வந்து நிற்கிறாள். கூத்து பார்க்கிற சுவாரஸ்யம். இந்தக்
கூத்துலயே கதாநாயகி கஷ்டப்பட்டால் அவளால் தாள முடியவில்லை. அடங்கொக்க மக்கா,
இந்த சனங்கல்லா எம்ஜியார் படம் பாத்தா என்னாவறது?...
பஸ்ஸை ஏன் விட்டே, என்கிறாப்போல அவன் "என்னாச்சி?" என்று கேட்டான். அவாள் பதில்
- "கதாநாயகன் நாயகி ஒண்ணு சேந்தா மாதிரி முடிச்சிருக்கப்படாதா...?" என்று
ஆதங்கப்பட்டாள்.
"அல்லது நாயகி...அவ மட்டும்னா சுமங்கலியாப் போயிச் சேந்திருக்கணும்..." என்றான்
சிரிக்காமல்.
"ஆமாம்" என்றாள்!
அண்ணாச்சி வர்றாரு. பேச்சை நிறுத்திவிட்டு விரைப்பானான்.
"பெருமாளு?"
"சார்!"
"கூத்துப் பார்ட்டிங்க தங்க மேட்டுத் தெருவுல ஜாகை ஏற்பாடாயிருக்கு. மொத
ரவுண்டு நான் அங்க போறேன். மிச்சாளுங்களை திரும்ப வந்து கூட்டிக்கிறணும்..."
"செஞ்சிறலாம் சார்"
"இதாரு?" என்றார் பத்மினிப் பக்கம் திரும்பி. ஒரு விநாடி பதறிட்டான்!
"வணக்கம். நான் இவரு சம்சாரம். அன்னிக்கு இவருக்கு மேலுக்கு சொகமில்லன்னு
உங்களுக்குப் போன் போட்டது நான்தான்..." என்றாள் பத்மினி.
"ஓ..." என்றார் அலங்காரமாய்.
"நல்லாப் பேசினீங்க" என்றாள் அவள்.
அசந்துட்டான் அய்யம் பெருமாள்.
"இவங்க ஐயா வீடு சாயக்குடி (சாயல்குடி) தான் சார். நான் போயிட்டுக் காலைல
வந்திறலாங்களா?" என்றான் அவசரமாய்.
"அதுஞ்சரிதான். கார்லயே போயிரு..." என்றார் புன்னகையுடன்.
கனவு போலிருந்தது.
"காலைல சீக்கிரமா வந்துருவேன் சார்"
"மெதுவாகவே வா!" என்றவர், ஒரு ஐம்பது ரூவாத் தாளை எடுத்துத் தந்தார். "சாப்பிட்டுட்டுப்
போங்க..." என்றார்.
( தொடரும்...)
தொடர்கதை பகுதி-14 தொடர்கதை
பகுதி-16


|