........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

16. ரசிகர்கள் உயிர் யாருக்கு?

வெடிச்சுச் சிதறிய மாதுளைப் பரல்களாய் வானம். பால்பற்கள் என குழந்தையாய்ச் சிரித்துக் கிடந்தது. நிலா இல்லை. தூய நல்லமைதி. இரவுப்பயணம். கனவுப் பயணம் அல்லவா அது? தனலட்சுமி அம்மா மடியில் ஆனந்தத் துயில் கொள்கிறாள். பத்மினியின் உட்சிறகுகள் கட்டவிழ்த்துக் கொள்கின்றன. மொட்டவிழ்த்துக் கொள்கின்றன.

வானக்கடலின் நீல நீரிலும் கரையாத உப்புக் கற்களாய் நட்சத்திரங்கள்.

இரவின் தன்மைக்கு சிறு கதகதப்பாய் அவன் தோளில் அவள். களைத்த மனைவி. எங்கு போனாலும் அவள் தனலட்சுமியைச் சுமந்து திரிகிறாள். பத்துமாத உட்சுமை. கனவின் வளர்ச்சி. பிறகு அவள் தோளோடும் மார்போடும் அம்மாவின் உடல் சூடே பாதுகாப்பாக உணரும் சிறு குழந்தை.... வாழ்வில் பெண்மைதான் எத்தனை அற்புத அனுபவம். ஆணாதிக்க நிலையில் அதைப் பேணுவது பெரும் பாவம்...

பத்மினியின் கனவுகள் எளியவை. அவை எத்தனை எளிமையானவையோ அத்தனைக்கு மானுடத்தின் முக்கியத் திறவுகோல்களை உள்ளடக்கியவை அல்லவா? பெண்ணின் கனவுகள் மிக்கவாறும் பிறரின் நலன் கருதியே அமைகின்றன. கருணைச் சுடரேற்றிக் குடும்ப விளக்கமாய் அமைகிறார்கள் பெண்கள்.

எனக்கொரு ஆசை மாமா... நாம மூணு பேரும் கார்ல போகனும்...

உலகின் எல்லைகளைக் கடப்போம் பெண்ணே.

பெண்மைக்கு வணக்கம்.

பெண்ணின் பெருந்தக்க யாவுள?

ஏதேனும் உள? ஒன்றுமேயில்லை. அதில் சந்தேகமேயில்லை.

சற்றும் அவசரமின்றி நிதானமாகவே போனான். நிறையப் பேசிக் கொண்டே வர அவள் நினைத்திருக்கலாம். இரவில் விழிக்க விரும்பியும் தானாகவே தூக்க சாகரத்தில் அமிழ்ந்து மிதந்து விட்டாள் ஒரு குழந்தை போல...இருக்கட்டும். அவளுக்கு ஓய்வு தேவை. குழந்தை உறங்குகையில் அவள் உறங்கி, அது விழித்துக் கொள்கையில் அவளும் விழித்துக் கொள்ள வேண்டும்.

உழைப்பின் களைப்பு அது. கனவுகள் அவள் கண்ணுள் கையெழுத்திடுகின்றன. கனவோடு அவள் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறாள். அவைகளைக் கலைத்துவிட வேண்டாம்.

வலித்துக் கிடந்த அவள் தோள்களைத் தடவித் தரவும் சித்தப்படவில்லை. அவளைக் கலைத்துவிட மனம் ஒப்பவில்லை. அவள் உறங்குவதே சிறிது நேரம். குழந்தைகள் சிறிது நேரமே உறங்குகின்றன. அல்லவா? அதனால்தான் அயர்ந்து உறங்குவதே கூட அவர்களுக்கு அத்தனை அழகாய் உணர்கிறான் அவன்...பசித்து உண்கிறவனைப் பார்ப்பதே அழகு.

வேடிக்கை. அந்தக் குழந்தை...என் குழந்தை...தனலட்சுமி அம்மாவின் உடல் சூட்டைப் பாதுகாப்பாக உணர்கிறாள். ஆ பத்மினி என் தோளின் கிளி. என்னைத் தன் கதகதப்பாய் உணர்கிறாள். நான் முல்லைக்குத் தோள் கொடுத்த பாரிவள்ளல்!

நான்...அவள் தோளில் ஆறுதல் பெறுகிறேன். அமைதியுறுகிறேன்.

ஒரு பக்கம் சவால்களும் மிரட்டல்களுமாய்க் கொந்தளிக்கிற உலகம். இந்த ஆண் பெண் அண்மையில் சட்டென்று மழையின் குளிராக எப்படி முகம் மாறி அமைதி கொண்டாடி விடுகிறது. வாழ்க்கையின் பாதிப் பகல். பாதி இரவு...

இரவென்பது இயற்கையின் சீதனம். மானுடனே பெற்றுக் கொள்க. வாழ்க வளமாய். நலம். நலமறிய அவா. சிந்தனைகள் உள்ளே கற்கண்டுக் கட்டிகளாய்த் தித்தித்துப் பரவுகின்றன அவனுள். இதன் கவிதைச் சொட்டுகளின் முன் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல.

சந்தோஷமாய் உணரவும் வாழவும் பெரிய அறிவு ஒன்றும் தேவையில்லைதான்!

அறிவை ஆயுதமாக உணராதவர்கள் பாக்கியசாலிகள். வங்கிகளில் சலான்களை நிரப்பித் தர வேண்டிக் கொள்ளும் எளிய சனங்கள். பஸ் எண் தெரியாமல், போகும் இடம் சொல்லி சரியான பஸ்ஸில் ஏற்றிவிடச் சொல்லும் மனிதர்கள்... கூட ஒரு சிரிப்புடன் விண்ணப்பத்தை நீட்டுகிறார்கள். அவர்கள் முகம்தான் எத்தனை அழகாய் நடிப்பற்றுப் பொலிகிறது.

பாண்டித்துரை காத்திருந்தார். தாமதமாகி விட்டதோ என்றிருந்தது. அவர் ஒன்றும் சொல்லவில்லை. "வா" எனப் புன்னகை செய்தார். உற்சாகமாய் இருந்தது.

*********

இரையெடுத்து அலுத்துக் கிடந்த பாம்பாய்க் காலையில் கிடந்த வளாகம். மாலைப் பொழுது விழ பசித்துச் சுறுசுறுத்தது. குழல்விளக்குகளின் தடியடிப் பிரயோகத்தில் இரவு காணாமல் ஆனது.

ஒருநாள் பட்டிமன்றம்...என்று தமிழ்ப் பேராசிரியர்கள் சிரிக்கச் சிரிக்க மோதினார்கள். விநோதமான தலைப்புகள் - குடும்பத்தின் தலைவலிக்குப் பெரிதும் காரணம் கணவனே மனைவியே - (அவன் தீர்ப்பு -சரியா வெளிக்குப் போகாததே!) கணவனே என்ற தலைப்பில் அத்தனை பேரும் ஆண்கள். மனைவியே என்ற தலைப்பில் பேச அனைத்தும் பெண்கள்...என விநோத ஜோடனை முடிச்சுகள்.

விடிய விடிய நிகழ்ச்சிகள். கூத்து மாதிரி இல்லாமல் கொஞ்சம் பெரிய நாடக கம்பெனிகளும் ஒருநாள் ஏற்பாடு. அவர்களிலும் பாதியில் வசன சர்ச்சைகள் வருவது உண்டு. கதையை அப்படியே நிறுத்திவிட்டு கட்சி கட்டிப் பேசுவார்கள் நாயகனும் நாயகியும்...

இன்னும் பொம்மலாட்டம் ஒருநாள். மேலேயிருந்து நூலை ஆட்டி ஆட்டி வசனம் பேசி இத்தனை உற்சாகத்தைக் கிளப்ப முடிவது ஆச்சர்யந்தான். வாலிவதம், வள்ளி திருமணம், நளதமயந்தி, பாஞ்சாலி சபதம், பவளக்கொடி என நாடகத்தின் சகல அம்சங்களையும் பொம்மலாட்டத்தில் காண்பது தனி ருசி.

பட்டிமன்றம், கவியரங்கம், வழக்காடு மன்றம் என்று ஏற்பாடு செய்தால் உள்ளூர் ஆட்கள் ஒருவராவது அதைச் சாக்கிட்டு மேடையில் தலைகாட்டத் தவித்தார். ராவும் பகலுமாக விழாக் குழுவிடம் விழுந்து சான்ஸ் பிடிச்சதுல ஒண்ணுங் கொறைச்சல் இல்ல...என்றாலும் மேடையேறி "அறிஞர்கள் வீற்றிருக்கும் இந்த சபையில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்ததற்கு நன்றி" என்று கூனிக் குறுகி வாய்ப்புத் தந்தவர்களைக் கேவலப்படுத்தி...

அவர் பேசி முடிக்கையில் முன் வரிசையில் இருந்து அவர் சம்சாரமும் குழந்தைகளும், சில டியூஷன் மாணவர்களும் கை தட்டினார்கள்.

பேச ஆசைப்பட்ட பார்ட்டிகளைப் போலவே நாடகம் போட ஆவேசப்பட்டுத் திரிகிற பார்ட்டிகளும் கிராமத்தில் உண்டு. பிரபல நடிகன் ஒருவன் படத்துக்குப் படம் கிராப்பை மாற்ற மாற்ற, ஸ்டைலை மாற்ற மாற்ற இவர்களும் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் நடையிலும் பேச்சிலும் கலைக்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவராய்த் தெரிந்தார்கள்.

பாதிப்பேர் அப்பன் ஆத்தாளை மீறிக்கிட்டு, ரசிகர் மன்றம் வெச்சி ஒரு மாதிரி கண்சிவந்து திரிந்தார்கள். தங்கள் பேரையே மாத்தி வெச்சிக்கிட்டு, கைல நடிகன் பேரைப் பச்சைக் குத்திக்கிட்டு முகமெல்லாம் ஒரு அசட்டுக்களையுடன் வளைய வந்தார்கள். அவர்கள் வீட்டு வாசலில் உடல் மண்ணுக்கு. உயிர் அந்த நடிகனுக்கு...என்று போர்டு வேறு. ஏன் உடலையும் பார்சல் பண்ணிற வேண்டிதானல?

ரெண்டையும் இப்படி வாரிக் கொடுத்திட்டியேல...

அப்ப பெத்தவுகளுக்கு?

வாய்ல மண்ணு பெத்தவகளுக்கு - அதையும் போர்டுல எழுதிப் போடுங்கல.

அந்த நடிகன் படம் பட்டணத்தில் ரிலீசாகிற நாள் இவகளுக்கு இருக்கற பரபரப்பு. பக்கத்துப் பெரிய ஊர்ல, மாவட்டத் தலைநகர்ல அதே படத்தை வெளியிட்டாங்கன்னா போயி ஒரே அமர்க்களம். மொதநாள் மொத காட்சி காங்கலையின்னா இவாளுக்குத் தூக்கம் வராது...

அப்பன் பாவம் எத்தனை சிரமப்பட்டு பணத்தை ஒளிச்சி வெச்சாலும் நவட்டிக்கிட்டு ஓடிருவான் அல்லது அம்மைய வசியம் பண்ணி வாங்கிக்கிட்டு கிளி பறந்துரும். வெளிய கடன் வாங்கியாவது கிளம்ப வேண்டிதான். அதும் சும்மா இல்ல - சைக்கிள்ல நடிகன் படம் ஒட்டிய தட்டி கட்டிக்கிட்டு பத்து பன்னிரண்டு சைக்கிள்ல ஊர்வலம் மாதிரி கிளம்பறது. படம் பார்க்க வர்றவங்களுக்கெல்லாம் சாக்லேட் விநியோகம். மொதமொதல்ல அந்தப் படத்துல ஹீரோ வர்ற சீன்ல பூ வாரியிறைப்பு. தலீவா...ன்னு உணர்ச்சி பொங்க ஒரு கத்து...

திருளாச் சமயத்துல இவாள் நாடகம் ஒரு ராத்திரி. எவனுமே வர மாட்டான் பார்க்க. கதை திரைக்கதை வசனம் துட்டுச் செலவு டைரக்சன்...எல்லாமே இவாளே. கிளைமாக்ஸ்ல இவாள் - உயிரைக் குடுத்து நடிக்கானாம்ல - செத்தூர்றாப்ல உருக்கமான முடிவு. சாகறதுல என்னடா நடிப்பு...பேசாமப் படுத்துக் கிடக்க வேண்டிதானே?

ஏண்டா பாவி உயிர் அந்த நடிகனுக்குன்னியே?

அந்த நாடகம் அரங்கேர்றதுலயும் ஆயிரம் கோளாறுகள். செத்தவன் நாடகத்திரை இறங்குமுன் லைட்தான் அணைச்சிருக்கேன்னு எழுந்து போறதும், கைதவறி லைட் மாத்தற பார்ட்டி லைட்டை எரிய விட்டுர்றதும், தொபுக்கடீர்னு உடனே அவாள் திரும்பப் படுத்துக்கிட்டு "லைட்ட அணைங்கப்பா"ன்னு கத்த, அது மைக்ல எல்லாத்துக்கும் கேட்கும்! சீரியஸ் டிராமா காமெடியாயிரும்.

இந்த மாதிரி டிராமாக்களில் சீரியஸ் வசனம் வரும் போது ஜனங்கள் சிரித்தார்கள். காமெடின்னு வர்ற போது உம்மென்றிருந்தது கூட்டம்...

எல்லாக் கூட்டத்திலும் அண்ணாச்சி முன்னிலை - அது முக்கியமாச்சே...

நம்மகிட்ட எத்தனையோ திறமை இருக்கு. அதை நாம வளர்க்கணும்...என்கிற ரீதியா - வருஷா வருஷம் அண்ணாச்சி இதையேதான் பேசுவார். பேசி கலைஞர்களை அறிமுகப்படுத்தி மாலை அணிவிப்பார். உடனே அவாள் அண்ணன் அவர்களுக்கு ஒரு மலர் மாலையை மாணிக்க மாலையா அணிவிக்கிறது...அதென்ன மாணிக்க மாலை? ஏல என்ன வெலை தெரியுமால? அது எப்பிடி இருக்கும்னாவது நீ கண்டிருக்கியா?

இந்த மாதிரி கலை(த்துப் போட்ட) வாழ்க்கை வாழற ஆசாமிகளோட நடிக்க கதாநாயகி? கிராமத்தில் தெரிஞ்ச பெண்கள் யாரும் முன்வர மாட்டாங்க. கூத்து நடிகைகளையே பரவால்லன்னு இவங்களும் புக் செய்துக்கிட வேண்டிதான். அவுக கூத்து முடிஞ்ச நாலாவது நாள் இவுக டிராமான்னு ஏற்பாடு. அந்த இடைவேளைல ரிகர்சல்...தினசரி ராத்திரி ராத்திரி பாண்டித்துரை விசிட்...அது இல்லாமயாவே?!

அதுங்க நோட்டீஸ் இப்டி அடி அப்டி அடின்னு படுத்தற பாடு...சினிமாப் புகழ்னு போடுங்க...என்ன சினிமாவோ, என்ன புகழோ...? ஐந்நூறு நாடகங்களுக்கு மேல் நடித்த...அப்டி இப்டின்னு நோட்டீஸ். மேடைல அவக் அநடிப்பைப் பார்த்தா - ஐந்நூறு நாடகங்களுக்கு மேல் கெடுத்த...ன்னு போடலாம் போலருக்கும்...

ஹா...ஹா! ஐந்நூறு நாடகம்னா... ஊர்ப் பண்ணையோட ஐந்நூறு ரவுண்டு வந்திருப்பாளுக போலுக்கடா!

கதை முடிவில் கதாநாயகன் செத்தாலும் சரி. நாயகன் நாயகி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி...ஆரெஸ் மனோகர் எஃபெக்ட் மாதிரி - அப்டியொரு மயக்கந்தான். - மேலேருந்து பூ விழ ஏற்பாடு. எண்கோண வடிவத்தில் பத்துப் பன்னிரண்டு சிகரெட் டப்பா சேத்து ஒரு பெட்டி பண்ணி நூல்கட்டி ஸ்பெசல் தயாரிப்புகள். தலைல பூவா... கல்லைத் தூக்கிப் போடலாம் போலருக்கும்.

இந்த எழவு டிராமாவுக்கெல்லாம் அண்ணாச்சி வரமாட்டேன்னு சில சமயம் மறுத்துருவாரு. அவரை அசத்தறா மாதிரி, அவரைப் பாராட்டி "நம்ம எசமான்" னு முன்வரிசைல அவரைக் கைகாட்டி "ஊருக்கெல்லாம் நல்லது செய்யிற மகராசன்" அப்டி இப்டின்னு வசனம் சேத்துக்குவாங்க. அல்லது அவரையே சிறு பாத்திரமாக்கி மேடையேத்தி, "நம்ம சரவணன் கல்லூரிக் கலைவிழாவில் பாட்டுப் போட்டில முதல் பரிசு"ன்னு சீன் செட் அப் பண்ணி, அதை பாண்டி அண்ணாச்சி வழங்கறா மாதிரி கதையை அமைச்சுக்குவாங்க, அதுல நம்மாளுக்கு ஒரு குளிர்ச்சி.

திருவிழான்ற பேரில் சாமி சந்நிதியை மறைச்சி பந்தல் போட்டு இத்தனை அமர்க்களம்...

கொண்டாட்ட களியாட்டங்கள் முடிய, சாமிக்கு தீபாராதனை நைவேத்தியம்னு ஆவும். விழாவுக்கு வந்த அத்தனை கூட்டமும்...கேட்ட அத்தனை கெட்ட வார்த்தையும் மறந்து பரவசப்பட்டு சாமி கும்பிடும்.

பாண்டித்துரைக்கு சாமிக்குப் போட்ட மாலையை எடுத்து அணிவித்து தனி மரியாதை. (கற்பூரத்தட்டில அதுக்குத் தனித்துட்டு) அவர் அதைக் கொண்டாந்து வண்டி முன்பாகத்தில் மாட்டுவாரு!

ஒருவாரம் பத்துநாள்த் திருவிழாவில் சில ஒப்பேத்தல் நிகழ்ச்சிகள் இருக்கும் சரிதான்...ஆனா சில உருப்படியான நிகழ்ச்சிகளும் உண்டு.

சீர்காழி, டியெம்மெஸ் கச்சேரி...

நல்ல கர்நாடக சங்கீதம், பரத நாட்டியக் கச்சேரி...என்கிற எடுப்பான விசயங்களும் ஒண்ணு ரெண்டு சிக்கும். நிஜ சினிமாப்புகழ்! தேங்காச் சீனிவாசன் டிராமா, ஐசரிவேலன், லட்சிய நடிகர் எஸ்ஸெஸ்ஸார் ட்ரூப்...

அதுக்கான வரவேற்பு பார்க்கணுமே...பெருங்கூட்டம் கூடும். எள்ளுப்போட இடம் இராதய்யா...

அய்யம் பெருமாள் நோட்டீசே பார்க்கவில்லை. அவன் அண்ணாச்சியிடம் கேட்டான். "இந்தத் திருவிழாவின் பெரிய பார்ட்டி யாருங்க சார்?"

அடேங்கப்பா, என்று அசந்துட்டான் அய்யம்.

"மனோன்மணி" என்றார் அவர்.

சிறுகுளம் மனோன்மணியா? சதிராட்ட சுந்தரி மனோன்மணியா? தருமன் மலையில் அவன் சரியாப் பார்க்க முடியலியேன்னு ஏங்கிய மனோன்மணியா...?

அப்பத்திலயிருந்தே... கேட்ட கணத்திலிருந்தே மனசுல தடதடன்னு ரயில் அதிர்வு!

மனசு நிறைய நிறையக் கெட்ட வார்த்தை வருது!

"கார்ல நீதாம் போயி பிக்-அப் பண்ணிட்டு வரணும்டா" என்றார் அண்ணாச்சி.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-15                                                                                           தொடர்கதை பகுதி-17

 
                                                                                                                                                                                                                 முகப்பு