|
தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
17. மனோன்மணி எனும் கவிதை

மலையடிவாரத்து சிறுகுளத்தில் மயில்கள் மிகுதி. ஊரே அழகு பரத்திக் கிடந்தது.
தலைமையாக அவள். காவிய சுந்தரி. மனோன்மணி. சுந்தரக் காவிரி.
சதிர்ப்புதிர்
அவளுக்கே தன்னைப் பற்றிய ஆச்சர்யங்கள் மிகுதியாய் இருந்தன. ஆ, இந்த ஆண்கள்...எந்தப்
பெண்ணிடமும் இல்லாத எதை என்னிடம் காண்கிறார்கள் தெரியவில்லை. கண்கள் எனும்
கருணைச் சுரப்பிகள். கருவண்டு விழிகளைச் சிப்பியென மூடிய அந்த சோழிச் சிமிழ்
பரத்தி அவள் பார்வையை விசிறும் போது... அவர்கள் விளக்கேற்றிக் கொண்டாற் போல
உள்ளே நிறைவதை அவள் உணர்கிறாள். ஆ, அவர்கள் அவள் பார்வைக்குக்
காத்திருக்கிறார்கள் என அறிகிறாள். கட்டளைக்கு... பணிவதற்கு அவர்கள்
காத்திருக்கிறார்கள். வீழ்ந்துபட தோல்வியடைய அவர்கள் காத்திருக்கிறார்கள்...
ஏன்? ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் ஏன் இப்படி தோல்வியுற ஆவேசமுற வேண்டும்? அழகு சரி...அழகு
மட்டுந்தானா பெண்? அட அழகே கூட...என்னிடம்தானா இருந்தது அந்த அழகு? பிற
பெண்களிடம் இல்லையா என்ன?... இல்லை என்கிறார்களே...அல்லது இதைப் போல இல்லை
என்கிறார்களே? அந்த ஆண்களின் ஏக்கம் மிக்க கண்கள் அதை அவளுக்கு உணர்த்துகின்றனவே?
ஐயா கனவான்களே? உலகத்தை உருட்டி நகர்த்திச் "செல்ல" வல்லவர்களே...அழகு - என்
அழகு என்பது என்னிடம் மாத்திரம் இல்லை. என்னழகில் பாதி உங்களிடம் உள்ளது.
உங்களது கண்களில், உங்களது இதயத்தில் உள்ளது...
இதை ஒருநாள் அவள் பகிர்ந்து கொண்டாள். அன்ரொரு நாள்...அவள் சொல்கிறாள். "ஆணும்
பெண்ணும் சமரசம் செய்து கொண்டு அன்பைப் பகிர்ந்து கொள்கையில் அங்கே அழகு
பிறக்கிறது. " ஆ, என்று மானுடம் அந்த நெகிழ்ச்சியைத் தாள மாட்டாமல் நெஞ்சைப்
பிடித்துக் கொண்டு ஆடுகிறது. கொண்டாடுகிறது.
"பெண்ணா நீ - தேவதை. உன் பார்வை அழகு. பேச்சோ அழகோ அழகு" என்று கண் கிறங்கப்
பேசியாகிறது.
கலீரெனச் சிரிக்கிறாள் மனோன்மணி.
உலகில் அழகில்லாமல் எதுவுமே இல்லை.
"ஆம். உன்னைப் பார்த்த பின் அதை நான் உணர்கிறேன்...!"
அடடா, இந்த ஆண்களின் தேவைதான் என்ன? இணக்கப் போக்கு. பிணக்கைப் போக்கிய மன
இணக்கப் போக்கு...அது அவரவர் பெண்களிடம், மனைவிகளிடம் கிடைக்கவில்லையா என்ன?
கிடைக்காதா என்ன?
சரி கிடைக்கவில்லை...எனில் அதற்கு பெண்களையே - பெண்களை மாத்திரமே காரணமாய்ச்
சொல்வது சரியா? அது தகுமா? அது தர்மம்தானா?
அலை பாயாதே கண்ணா!
என்னிடம் விட்டுக் கொடுக்க, பணியத் தயாராய் இருக்கும் மனம்...மனைவிகளை சிரம்
தாழ்த்தி அறிவுக்குள் ஏந்திக் கொள்ள ஏன் தயங்க வேண்டும்...
நிரந்தரமான அழகு அது - அல்லவா? ஆகவே அதில் கவர்ச்சி குறைவெனக் கருதுகிறீரா ஐயா?
மனோன்மணி பாடல்கள் புனைய வல்லவள். அவள் பாடல்கள் இப்படியாய் அமைகின்றன. அறிவின்
ஊற்றுக்கண்ணை சோடாவெனத் திறந்து நுரைக்க வைக்க, நனைக்க வைக்க அவை முயல்கின்றன.
எளிய ஆனால் உள்ளே புரட்டுகிற அலைதாங்கிகள் அப்பாடல்கள்.
வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கை. மெல்ல நடந்து கவிதை வளாகங்களைக் கடந்து அவள்
போய்க் கொண்டிருக்கிறாள். தூய நல்லழகு. தினந்தோறும் விழித்த கணம் அவரவர் வீட்டு
ஜன்னலைத் திறந்து பாருங்கள் மானுடரே...
பூக்கள். எத்தனை விதவிதமான பூக்களால் இந்த உலகம் சிரித்து...தங்களைத் தாங்களே
இந்த மரங்கள் அலங்கரித்துக் கொள்கின்றன. அழகாய், ஜோராய் இருக்கிறது அல்லவா? அழகா?
எங்கிருந்தது வந்தது அது? மரத்தில் இருந்து வந்தது அல்லவா? தானே தன்னை
உற்சாகமாய் அந்த மரம் உணர்கையில் அழகு அங்கே பிறக்கிறது அல்லவா? பேருந்தில்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவே..இடைப்பட்ட பிரதேசத்தில் அழகு சிறு குழந்தை
போல உட்கார்ந்து கொண்டதை அறிந்து கொண்டீர்களா மானுடரே...
"என்னமாக் கவிதை எழுதுறாய்யா இவ..." என அதற்கும் என்னை வியந்தால் என்ன செய்வது?
கலீரென நகைத்துச் சிரிக்கிறாள் மனோன்மணி. ஒளிபூத்து விரிகிறாப் போல.
உடலுக்கு ஒத்தடம். அறிவுக்கு விருந்து. அதுதான் மனோன்மணி.
"உன்னைப் போல என் மனைவிக்குப் பேசத் தெரியவில்லை..."
சற்றுமுன் தனக்கு இப்படிப் பேச வரவில்லை. என்று தோல்வியை ஒப்புக் கொண்ட மனம்.
அதைப் பெரிதுபடப் பாராட்டாத மனம், மனைவிக்குப் பேசத் தெரியவில்லை என
முறையிட்டால் என்ன செய்வது?
பேசலாம். கவிதை புனையலாம். பேச்சுத்தான் அழகா? மௌனம்?
கடல் மௌனமாய் இருந்தது. வார்த்தை நதிகள் மௌனக் கடலை நோக்கி ஓடுகின்றன.
கடல் என்பது மௌனம். வார்த்தைகள் அதன் சிற்றலைகள். கவிதைகள் சிற்றலைகள். கவிதைகள்
மௌனத்தைப் பற்றியே பேசுகின்றன.
என் வார்த்தைகள் உங்கள் மௌனத்தை மையமிட்டு இயங்கும். பாரும் மேன்மக்களே. கவிதை
உங்கள் மடியில் வந்தமரும் உங்களின் குழந்தை...என்கிறாள் மனோன்மணி ஒரு கவிதையில்.
வாவ்...என வியக்கிறது கூட்டம். கைதட்டி ஆரவாரிக்கிறது.
என்ன இது? கர்நாடக சங்கீதம் அல்ல. வடநாட்டு இந்துஸ்தானியுமல்ல. கஜலுமல்ல.
புதுமாதிரியான அனுபவம் அது. அதுதான் மனோன்மணி. அதுதான் அவளின் சிறப்பு.
தனிமுத்திரை. அடையாளம். கற்பனைச் செழுமை. வளமான குரல். சுயமான அபிநயங்கள்.
கவிநயங்கள். சலங்கை சலசலப்பு. ஓஹோவென்ற அதன் எளிமை. அவளது ஐவிரல் குவிப்பில்
தாமரை மொட்டு தெரிகிறது. மெல்ல மெல்ல விரித்தால் கர்ச்சீப் மேஜிக் போல அட
நிஜத்தாமரை என ஒரு மயக்கம்...
நிஜத்தாமரையில் இந்த அழகு இல்லையேய்யா!
"ஏன் இல்லை?" என்கிறாள் மனோன்மணி. மானுடரே நீங்கள் நிஜத்தாமரை மலரக்
காத்திருந்து, ஆமாம்...அதற்குக் காத்திருக்கத்தான் வேண்டும் - காத்திருந்து
பார்த்திருக்கிறீரா? காத்திருத்தல்...அங்கே இருக்கிறதுகவிதை ஐயா. பிடித்து
இறுக்கிக் கொண்டாட முடியாது சில குழந்தைகளை, என அறிவீர்கள் அல்லவா?
காத்திருந்தால், அவை தாமே வந்தமரும் மனசில். வந்து மனசில் பறவையென கூடு கட்டும்.
ஆண்டாள் இறைவனை, உடல் மூலமாக வழிபட உத்வேகங் காட்டவில்லையா? எம்கொங்கை நின்
அன்பரல்லாதோர் தோள் சேரற்க...
மனோன்மணியின் கவிதைகளில் குழந்தை குஅழந்தை என வருகிறது அடிக்கடி, என்றார்கள்
விமரிசகர்கள்.
உலகம் சார்ந்த அவளது பார்வை. கவிதைகள்... ஒரு குழந்தையின் ஆச்சர்யப்பார்வை அது
- என்கிறார்கள். அத்தனை எளிமை. நல்லதை மாத்திரம் எடுத்துக் கொண்டு அல்லது
தாய்ப்பாலாய் உறிஞ்சுச் செரிக்கிற பார்வை.
கலீரென நகைக்கிற மனோன்மணி. கள்ளங்கபடமற்ற அந்தச் சிரிப்பு. அது தனி மனித -
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வாய்க்க வேண்டும் என ஏங்குகிற சிரிப்பு. அது அவள் வாய்
வழியே வெளிச்சிந்தி உலகத்தை வெளிச்சமாய் நிறைத்து நுரைக்கிறது.
முக இணக்கம். உடலின் வழியே அபிநயங்கல் நரம்புகளில் ஓடும் அந்த உற்சாகத்தை
தெறித்துத் தெளித்துத் தெரிவிக்கின்றன. மனோன்மணி கனவுக் கன்னியாகிறாள்.
மானுடத்தின் கனவு கரு ஆகிறாள். கனவின் மானுட உரு ஆகிறாள்!
மானிடம் கட்டுண்டது மானுடம். விழிப் பிரளயம். ஆளைத் தாலாட்டும் அழகு அது. மலர்க்
கோபுரம்.
ஆ. பார்த்தீரா? இது கவிதை இல்லையா? எத்தனைச் சிறப்பாய் இருக்கிறது? எங்கிருந்து
வந்தது இது? உம்மிடமிருந்து தானே? எப்படி வந்தது இது? உம்மிடம் கவிதை இருக்கிறது
அல்லவா? அதுதானே நான் சொன்னது!
"பெண்ணே, நீயே எம் கவிதையின் திறவுகோல்!"
கலீரென நகைக்கிறாள் மனோன்மணி அதைக் கேட்டு. காதை சங்கீதமாய் நிறைக்கும் சிரிப்பு
அது. அதன் வெண்மை. முகமலர்ச்சி...கண்ணுக்கு விருந்து. மனப்புண்ணுக்கு மருந்து.
என் கவிதை...என்னில் நீங்கள் காணும் கவிதை...அது என்னிடம் எப்படி ஐயா வந்தது? -
என்கிறாள் மனோன்மணி சிறு புன்னகையுடன். நகைச்சிரிப்புடன். அது இந்த உலகத்தில்
உள்ளதுதானே? அதில் நான் எடுத்துக் கொண்டதுதானே? எடுத்துக் கொடுத்தவள் நான்.
அதைப் பாடலாகத் தொடுத்துக் கொடுத்தவள் நான். நான் நடந்த இடத்தில் கிடந்த பூக்கள்
அவை. அவை நான் நடந்த பின் அங்கே கிடப்பதாக நீங்கள் உணர்கிறீர்களோ?
நிமிர்ந்த நன்னடை. நேர்கொண்ட பார்வை - அது ஆண் ஆகவே கொட்டிக் கிடக்கும் பூக்களை
இழந்தீர்.
குனிந்த மென்னடை. கடைக்கண் பார்வை...எனினும் அதன் அழகு...அது நீவீர் காணாத
அழகாகவே இருக்கிறது அல்லவா?
கதவுக்குப் பின்பக்கமாய் கவிதை... குறும்புக்கார குழந்தையெனக் காத்திருக்கிறது
மானிடரே. கண்டுபிடியுங்கள் அதை.
அது நீங்கள் கண்டு கொள்ளக் காத்திருக்கிறது.
ஹாவென வியந்தது மானுடம். அட, நர்த்தகி. என் ரட்சகி. யட்சணி. நீ குழந்தையா?
மேதையா? பேதையா? இல்லை மானுடத்தின் போதையா?
அடி யட்சிணி. எனை ரட்சி நீ.
யாதுமாகி நிறைந்தவள். எங்கும் நிறைந்தவள்.
அந்தச் சிரிப்பில் சிறிய ஏக்கம் இருக்கிறது. ஆ, மனிதர்கள் ஏன் வளர்கிறார்கள்?
அவர்கள் குழந்தையாகவே பிறந்து வாழ்வை ஆச்சர்யங்களாகவே நுகர்ந்து மறைந்தும்
விடலாம். சச்சரவுகள் நச்சரவுகள் அல்லவா? அவற்றை அனுமதிக்கலாமா வாழ்வில்?
வாழ்க்கை அழகானது. சிறிய எல்லைகளின் பாற்பட்டது. அதை விரோதம் பாராட்டிச்
சீராட்ட பொழுதில்லை. அது முறையும் இல்லை - என்றாள் ஒருநாள்.
பெரிய தத்துவம் மனோன்மணி எதைத்தான் சொல்லிவிட்டாள்.
அதுதான் ஆ...ஆ...ஆச்சர்யம். கரிசனத்தின் தரிசனம்.
மானுடம் அவள் மடியில் குழந்தையென வந்தமரத் தவித்தது...
மனோன்மணி பெண்மையின் பரிபூரணம். அவள் குரல் சொன்னதை விரல் அறிவித்தது.
அர்த்தத்தை நர்த்தனத்தில் அள்ளி வழங்கினாள். அர்த்தநர்த்தகி. "அர்த்த நாரீஸ்வரி"
சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர். ஆ...சுழன்றும் அவள் பின்னதாய்க்
கிடந்தது உலகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
சரி, அவள் கனவுக்கன்னி. ஆனால் மனோன்மணியின் கவிதைகள் அவளது கனவுகளா? அவற்றின்
கனவின் பூச்சு...மணம்...நல்வாசனை எப்படி அமைந்தது?
விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவளாய் அவள் திகட்டினாள் அவர்கள் மனதில்.
திகைப்பூட்டினாள். விமரிசன வளாகங்களில் விமரிசையாய் அவள் முன் வரிசை பெற்றாள்.
அவளை விளக்கியுரைக்க உறைக்குள் சிறைப்பிடிக்க அவர்கள் திண்டாடினார்கள். அவளது
மாய எல்லைகளை அவர்களால் சுற்றி வளைக்க முடியவில்லை. தூய ஒளியெனக் கிடந்தாள்.
கம்பன் சொன்னாற்போல- சற்றோர் கவியெனக் கிடந்தாள்.
மேடையின் உயரத்தில் விரலாலே அவள் துயரங்களைக் கழுவித் தூய்மையாக்கினாள். இளமைக்
குளுமை. வளமைச் செழுமை.
நான் துளசி மாடம். வீட்டுப் பெண்கள் குத்து விளக்குகள் அல்லவா? - என்கிறாள்
மனோன்மணி ஒரு கவிதையில்.
காற்றில் அலைப்புறும் அதைக் காப்பாற்றுங்கள்.கைச்சுடர் போற்றுதும்.
அவள் ஏக்கம் குடும்பச் சூழலை நோக்கி சர்க்கஸ் கூடாரமாய் விம்மித் தணிவதை அலைவதை
வியக்கிறார்கள் அனைவரும்.
அதுதான் அந்த இணக்கச் சிணுக்கம்தான் அவளது வெற்றி என்பாரும் உண்டு.
அக்கரை பச்சை. இக்கரை கொச்சை - என உணர்தல் ஏனோ மனித இயல்பாக இருக்கிறது.
சிவபூஜை செய்ய அவள் கோவிலுக்கு வந்தால், சந்நிதிக்கு வெளியே சாமியைத்
தேடுகிறீர்களே...? என நகைத்தாள் அவள்.
மனிதர்களைக் குறை சொல்வதேயில்லை. சாடுவதேயில்லை. இனிய உளவான் சொற்கள். சுட்டு
விரல் பாவனையில் சற்று வேடிக்கை போல நளினக் குழைவாய் அவை சுட்டிக் காட்டின.
எள்ளின மானுடத்தை சிறு நகைப்பொலியுடன். நகைப்பொலிவுடன்.
பண்டிதர் பாமரர் யாவர்க்குமானவை அவள் கவிதைகள்.
மற்றும் அவள்.
முற்றும் அவள்!
"நாங்கள் பொக்கிஷங்கள். எனினும் பெண்ணே...திறவுகோல் நீ அல்லவா?"
ஆஹா உம் கவிதைகள் என்னை எனக்கு அறிவிக்க வல்லவை. நீர் என்னைப் பற்றி எனக்கு
அறிவிக்க வல்லவை. நீர் என்னைப் பற்றி எனக்கு எடுத்துச் சொல்ல நான் அறிகிற போது,
உம்மைப் பற்றி உம்மிடம் நான் என்ன சொல்லிவிட முடியும் ஐயா...? என்னிடம் ஒரு
கவிதை அவளிடம் இருந்தது.
வாருங்கள் மானுடரே, வந்தென்னைப் பாருங்கள்...
நானே உங்கள் கண்ணாடி. உங்களைக் காட்டித் தருகிறேன் -என முடிகிறது அந்தக் கவிதை.
நாவே நர்த்தனம் செய்ய வல்லதாய் உள்ளதே உன்னிடம் - என அதற்கும் என்னை வியக்கிற
மானுடம். அவளுக்கு வெட்கம் பூக்கிறது.
கொடுத்தல். எடுத்தல். பகிர்ந்து கொள்ளுதல்...இவை எதிலும் தனியே இன்றி பிணைந்து
ஒரு ரகசியம் போல உள்ளொளிந்து கிடந்தது கவிதை. அழகு. உண்மை.
நிஜம் ஒளிந்து கொள்கையில் கவிதையாகிறது!
மேகமூட்டம் எனும் யானைக் கூட்டம்.
கனவுக் கருச்சுமந்து கருத்துக் கிடக்கின்றன மேகங்கள். கருத்துக் கிடங்குகள்.
பொட்டலம் பிரித்து அதைப் புரட்டலாம். வாருங்கள்.
ஒரு சொல். சொல்லில் இருந்து சொல் கிளை விரிக்கிறது. சொற்கள் ஊற்றெனப் பெருகி
மடையுடைத்துச் கவிதயென அலைபுரட்டி ஓடித் தழுவுகிறது அரங்கத்தை. மானுடத்தைக் கால்
நனைக்கிறது. சிலீரெனப் பொங்கி அவை குளிர வைக்கின்றன. அத்தனை ஜனங்களும் அங்கே
அந்த அமைதியில் அலை கிளம்பக் காத்திருந்தார்கள்.
சப்தம் மௌனத்தை வியக்கிறது. மௌனமோ சத்தத்தை வியந்தமைகிறது. உலகத்தில் எத்தனை
முரண்கள்!
அவள் காற்சலங்கை கலீரென நனைக்கிறது. தோளமர்ந்த சிறு குழந்தையாய் எத்துகின்றன அவை
மானுடத்தை. கன்னத்தைக் கடிக்கின்றன.
(தொடரும்...)
தொடர்கதை பகுதி-16 தொடர்கதை
பகுதி-18


|