........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

20. கிராமத்துக் ஹீரோக்கள்.

கிராமத்தில் திடீர் ஹீரோக்கள் அதிகம். விடாமல் பத்துநாள், பதினாலு நாட்கள் என்று சைக்கிளில் இறங்காமல் ஓட்டுகிற அண்ணாச்சி. அவனே அவனுக்கு ஹீரோ. பசங்கள்லா ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க - என்று கேட்டு வாங்கிக்குவாப்ல. சில பிள்ளைகள் அவனைக் குரங்கா நினைச்சோ என்னமோ வாழைப்பழம் வாங்கித் தரும். அவனும் கிட்ட வந்து குனிஞ்சி வாங்கிக்கிட்டு ஒரு சலாம் வைப்பான்.

கோயில் திருவிழா என்று சாமி புறப்பாடுக்கு முன் யானை ஊர்வலம்னு ஏற்பாடு. பக்கத்தூரில் இருந்து யானையை வரவ்ழைப்பார்கள். இது சிவன் கோயிலா இருக்கும் யானை பெருமாள் கோயிலா இருக்கும். தினசரி அங்கே நாமம் போட்டு வளாகத்தில் நின்றிருந்த யானைக்கு நாமம் அழித்து அவசர அவசரமாய்த் திருநீறு பூசுவார்கள்.(ஒருநாள் பேண்ட், மறுநாள் வேஷ்டின்னு ஆபிஸ் வந்தாப்ல) - விடிய விடிய யானை நடந்து வந்திருக்கும். மாவுத்தன் அவனுக்கென்ன - மவராசனா ஜம்மென்று சவாரில வருவான். சரின்னு தூங்கிறப்படாது... எங்காவது வயர் கியர்ல மண்டை சிக்கிருச்சின்னா...கரெண்ட் ஷாக்... அடி ஆளைத் தூக்கிரும்லா?

திருவிழா எனக் கிளம்பி வார வழியெல்லாம் ஜனங்க யானைக்கு அளிக்கும் உற்சாகம் அலாதியானது. கடந்து வரும் ஊர்களில் ராஜ வரவேற்பு. யானைக்கு எல்லை தாண்டும் வரை பிள்ளைங்க கூட வரும். யானை ஆசிர்வாதம் பண்ணிப் பண்னித் துட்டு வாங்கி வாங்கி மேலிருக்கும் மாவுத்தனிடம் தரும்.

அப்புறம் ரோடு ரோலர் ஓட்டுகிறவன்... அவன் ஒரு ஹீரோ. செம்மண் ரஸ்தாவை தண்ணியடிச்சி அயர்ன் பண்ணினாப்ல அமுக்கி விடற வாகனம். அதை வாசனை பிடிக்க... வேடிக்கை பார்க்க என்று நிற்கிற ஜனம். யாராவது அவனுக்கு டீ சப்ளை பண்ணுவார்கள்...

அதைப் போலவே டாக்ஸிக்காரன்...

உள்ளூர் பக்கத்தூர் என்று எங்கையும் டாக்ஸி கிடையாது. மதுரைலேர்ந்து வரனும். பதிவா வெளியூர்ப் பார்ட்டிகள் நிகழ்ச்சி... அட நம்ம டிஎம்மெஸ் போல கச்சேரியாட்கள் அமைகையில் மதுரையிலேர்ந்தே பிக்கப். பட்டணத்தில் இருந்து மதுரை வரை ரயில் டிக்கெட் செலவுகள் எனப் பாண்டித்துரை பார்த்துக் கொள்ள வேண்டி வந்தது.

புழுதி பறக்க டாக்ஸி ஊருக்குள்ளே வர்றதே தனி பந்தா. எடுப்பு ஊய்யென்று பசங்கள் அந்தப் புழுதியை சட்டை பண்ணாமல் பின்னால் ஓடும். வண்டில வர்றது கச்சேரி ஆசாமியா டெட்பாடியான்னு பெரியாட்கள் வெளியால வந்து பார்ப்பார்கள். நாம் செத்தா இப்டி டாக்ஸிலதான் பாடி வந்திறங்கணும்னு அவுகளுக்கு ஒரு ஏக்கம்!

கிராம ஜனங்களுக்கு விவஸ்தையே கிடையாது. அந்தான்னிக்கி...உள்ளூர் ஆசாமிதான்...ஒருத்தன் துபாய்ல செத்தான். அவன் துபாய் போனதே அவனவனுக்கு வயித்தெரிச்சல்னு வெய்யி. செத்த்துல ஒரு திருப்தி...ஆனா அந்தத் திருப்தியும் நீடிக்கல...

பாடியை பேக் பண்ணி ஒரு வாரம் பத்துநாள்ல அனுப்பினாங்க. ஒரே கூட்டம் அவங்க வீட்டு வாசல்ல. பிளேன் ஆக்சிடெண்ட் புதுசில்ல...? அதை வேடிக்கை பார்க்கிற கூட்டம்... டாக்ஸி சர்ர்ர்னு ஊருக்குள்ள வருது. சினிமாக் காட்சி போல. அவனவன் வாய் பொளக்கான். சவப்பெட்டி அத்தனை அழகு -என்று கூட்டத்தில் மனசார ஒரு பாராட்டு. "என்ன வாசனை...எலேய் நாம குளிச்சிட்டு வந்தாக் கூட இப்டி வாசனை இராதப்போவ்"னு ஒரு அசரல். பாராட்ட ஒரு நல்ல மனசு வேணுல்லா. அது அத்தனை கிராமத்தாளுக்கும் உண்டு.

"நான்லா வெளிநாட்ல செத்தா அங்கயே கார்யம் பண்ணிருங்கன்ருவேன் மாப்ள. இங்க் இத்தனை வாசனையா வந்து சேர்ந்து, பெறகு நம்மூர் நாத்தம் பிடிச்ச வரட்டில வேகுறதா?

*******

அய்யமும் ஒரு வழியா ஹீரோ ஆயிட்டாப்ல. பையங்களும் வெளியாட்களும் வந்து வண்டியைப் பாக்கறதும் அவனிடம் விசாரிக்கிறதும்...அவனும் வர்றாளுகளை "டேய் ஒன் அழுக்குக் கைய வைக்காதே" என்று வர்றாளுங்களை விரட்டறதும்...

"ஐய உன் வண்டில கை வெச்சிதான் என் கை அழுக்காயிட்டு" என்று அவன் வெறுப்பேத்திட்டுப் போறதும்...

மனோன்மணி அவளும் பெரிய பார்ட்டில்லா? எந்த நிகழ்ச்சி எந்த ஊரில் என்றாலும் ராத் தங்குவதில்லை. அது ஒரு பந்தா. பாண்டித்துரையும் மனோன்மணின்னா டாக்ஸி வைக்க அஞ்சுவதில்லை. இது ஒரு பந்தா.

மதுரைலேர்ந்து வெத்து டாக்ஸி ட்ரங்க்காலில் புக் பண்ணி... மனோன்மணிக்கு ஏற்பாடு செய்வாரு. புக் பண்ணின ஜோருக்கு டாக்ஸிக்காரன் கிளம்பி வர்றதுதானே? மாட்டான். மதுரை பஸ் ஸ்டாண்டுல ஓர் ரவுண்டு எடுத்து...வர்ற வழியில இறங்கிக்கிற பயணிகளை ஏத்திக்கிட்டு துட்டு வாங்கிப் பையில் போட்டுக்குவான்...தனிக்கணக்கு அது.

பாண்டித்துரை டாக்ஸி பந்தா பத்தாமத்தான் இப்ப காரே வாங்கிட்டாரு. காரைப் பார்த்து மனோன்மணி எதோ கேட்க அவர் மீசையை நீவி விட்டுக்கறதை அய்யம் பெருமாள் பார்த்தான். நாந்தான் அதன் டிரைவர்னு தானும் மீசைய நீவி விடலாம்னு ரொம்ப இதுவா இருந்தது.

நிகழ்ச்சி முடிய பத்து பத்தரை ஆயிட்டது. நேரம் போனதே தெரியல். நிகழ்ச்சி முடிஞ்ச ஜோருக்கு வண்டியேறி மயில் பறந்துரும். புழுதி கிளப்பி அதும் போற ஜோரே தனி எடுப்பு. இப்ப சொந்த வண்டில்லா... பண்டித்துரை மத்த நிகழ்ச்சி குடுத்த ஆட்களுக்கு மேட்டுத் தெருவில் ஜாகை போட்டிருந்தாப்டி. அதிலயே இப்ப மனோன்மணிக்கு விருந்து. வான்கோழி மணத்தது. அய்யம் பெருமாளுக்கு ஒரு கை பாத்திற வேகமாய் இருந்தது. பட்டணத்தில் வான்கோழி பிரியாணி என்று வேறெதோ கலப்படமா பண்ணிப் போட்டதைத் தின்னவன் அவன். இது மனோன்மணிக்கான ஸ்பெசல் விருந்து... கேக்கவே அந்தக் காரமும் ருசியும் நினைச்சி நாக்கில் தண்ணி கொட்டியாச்சி. நாய்ப்பீறவி போல.

பார்த்தா இவ வந்து தலைய வறட் வறட்னு சொறிஞ்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு நிக்கா. நிகழ்ச்சி முடிஞ்சதில் குழல் விளக்குகள் பாதி அணைக்கப்பட்டிருந்தன. யாரோ பிச்சைக்காரின்னு நினைச்சி "சில்லரையில்ல"ன்னான். நிசமாவே அவனிடம் துட்டு இல்லை. பாத்தா...இவ! ஆ...பத்மினி.

வழக்கமா வீட்டுக்கு டாக்ஸில போறாப்ல நினைச்சு பாதகத்தி கடைசி பஸ்ஸையும் விட்டாச்சி...

"ஐய நைட்ல நான் கச்சேரி பார்ட்டிய சிறுகுளம் கொண்டு விடனும் இன்னிக்கு" என்று பதறினான்.

சாதாரணமா திருவிழா பார்க்க வந்த வெளியூர் சனங்கள் மேடை வளாகத்திலயே பந்தல்ல தங்கிக்குவாங்க அல்லது குளக்கரை மேடை மண்டபம்னு துப்புரவா இருக்கிற இடம் பார்த்து ஒதுங்கிக்கலாம். ஆனா - நாய்களும் பிச்சையெடுக்கிற சனங்களும் கூட வந்து சேந்துரும். அதுகூட பிரச்னையிலை. என்ன- அதுங்க அப்பதான் சாப்பிடும். அன்றைய நிதிநிலையைச் சரிபார்க்கும். எய்யா, பிச்சைல இவ்ள பணமான்னிருக்கும். திருவிழா...கோயில்..னு பிச்சைக்கும் சீசன் உண்டுல்லா! நல்ல சூடா மசால் தோசை அது இதுன்னு மணக்க ருசிக்க சாப்பாடு...நம்மாளு பசிக்க பசிக்க பாத்திட்டிருபான். இதுல நாய்க்கு வேற ஒரு விள்ளல் எறின்சாறது!

இவளை என்ன பண்ண தெரில அய்யத்துக்கு. நேரம் ரொம்ப ஆயிட்டு. பி.பி.பி ஒரே சிரிப்பா வர்றாரு. மனோன்மணி ஜல்ஜல்னு வருது. மோகினிப் பிசாசு! சில பொம்பளையாள் தூரத்ல அப்சரஸாட்டம் ஆள் தூக்கியடிக்கும் இதயத்தை. கிட்டத்ல பாத்தா...புஸ்சுனு பலூன் காத்துப் போனாப்ல ஆயிரும். மனோன்மணி கிட்டத்தில் இன்னும் கிறுகிறுப்ப ஏத்றாப்ல இருந்தாள்.

தானறியாமல் திரும்பி பத்மினியைப் பார்த்தான். தூக்கக் கலக்கமாய் இருந்தாள். வைக்கோல் பிரிகளாய்த் தலை காய்ந்து கிடந்தது. புடவையிலேயே வியர்வை மணக்கும் போல ஒரு சாயம் போன கசங்கல்...

"வணக்கம் முதலாளி" என்கிறாள் பத்மினி. அடி யார்டி இவ? உன்னைப் பாக்கிற நிலைமைலயா அண்ணாச்சி இருக்காரு... பக்கத்ல யாரு தேவ சுந்தரி. ஐந்தரை அடி விஸ்கி பாட்டில்.

அவரும் சில்லரையில்லன்னு சொல்லிருவாரோன்னு பதறிப் போச்சு.

இருக்குன்னு போட்டுட்டா அதைவிடச் சங்கடம்.

பி.பி.பி. திரும்பிப் பார்த்து விட்டு - அட புரிந்து கொண்டார் - அந்த மட்டுக்குத் தாவல... "என்னடா?"ன்னு அவனைப் பார்த்தார். சட்னு எதையாவது சொல்லனும். எரிச்சல் படுத்திறப்படாது...

"அய்யா கடைசி பஸ்ஸை விட்டுட்டாப்டி..."

"ம்" என்றார் முகம் மாறி.

"நம்ம அம்மாவோட விருந்து முடியுங்குள்ளாற வந்திருவேன் முதலாளி..." என்றான்.

மனோன்மணி பொறுமை இழந்திடுவாளோ என்று பயமாய் இருந்தது. பி.பி.பி திரும்பி மனோன்மணியைப் பார்க்க அவள் "சீக்கிரம் வந்திருங்க டிரைவர்" என்றாள். ஆ ஆது போது. அவளை மீறி என்னா சொல்லிறப் போறீரய்யா நீரு?- என்று பி.பி.பி.யைப் பார்த்தான். தலையாட்டி சம்மதம் சொன்னார்.

இருந்த சந்தோசத்துக்கு, என்ன மனுசன்யா நீரு...சொந்தமா ஒமக்கு என்னிக்குத்தான் அறிவு வரும்?-னு மனசுல ஒரு கிண்டல்!

எலேய்! நீ செருப்படி வாங்கக் கூடிய நாள் வெகுதூரத்தில் இல்லை!

பத்மினியைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு வண்டியை மேட்டுத் தெருவுக்கு எடுத்தான்.

வான்கோழிப் பிரியாணியை மறந்திற வேண்டியதுதான்.

அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

*******

மேட்டுத்தெரு வீடே அமர்க்களக் கோலாகலம். சாப்பாட்டை எதிர்பார்த்து எவனெவன் நிக்கான். அட இதுல ஒரு பிடி நமக்குக் கொடுத்து வைக்கலியே... அழுகை வந்து விடும் போலிருந்தது.

அப்பதான் அந்த அதிசயம் நடந்தது. நம்ம மனோன்மணியம்மாவின் கீழ்படியாள் - அதான்யா அசிஸ்டெண்ட் - கூஜா வகையறா கூட எடுத்திட்டுப் போகிற பெண்...அவனைப் பார்த்து சினேகிதமாய் ஒரு புன்னகையை வீசினாள்.

என்ன தோணிச்சோ? அய்யம் அவளிடம் போய், "நான் போயி என் சம்சாரத்தைப் பக்கத்து சாயல்குடில விட்டுட்டு வரணும். வந்து எங்க சாப்பிடறது..."ன்னு ஒரு இழுப்பு இழுத்தான்.

"சரி ஒனக்குஞ் சேர்த்து நான் சாப்பிடறேன்" என்றாள் அவள்.

"அட அதுக்கில்ல...ஒரு பார்சல் கீர்சல்..."

அவள் அவனைப் பார்த்தாள்.

"நீயே உள்ள போயி கேக்கப்படாதா?"

"படாது. நாங் கேட்டா இருக்கும்பாக இல்லம்பாக...பொம்பளையாட்க கேட்டா ஒடனே சேங்ஷன்! நம்ம கலாச்சார சமாச்சாரமே அப்டில்லா?"

"நல்லாப் பேசறே" என்றாள் அவள்.

"தாங்ஸ். நேராவுது. தேர்முட்டிப் பக்கம் என் சம்சாரம் நின்னுட்டிருக்கு"

அசந்து விட்டான். அவன் வார்த்தை, ஜொரத்துக்கு மாத்திரை போட்டாப்ல வேலை செஞ்சிட்டது. நல்ல பெரிய தூக்குப் போணி நிறைய பிரியாணி எடுத்து வந்தாள். "வரும்போது இந்தப் போணியைக் கொண்டாந்திரு." என்றாள்.

"ஆவட்டும். தூக்குப் போணிய ஆரு சாப்டுவா" என்று வெளியே பாய்ந்தான்.

பத்மினிக்கு பிரியாணியைப் பார்க்க முகமெல்லாம் பூரிப்பு. தனிக்கார் பயணம் வேற. அவள் வண்லயே போணியத் திறந்தாச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டபடியே அவனுக்கும் ஊட்டி விட்டாள்...ஒரு அமர்க்களம்தான்!

மாமனாருக்கு அத்தனை சந்தோசம். பாத்திரம் மாற்றிக் கொடுத்தாள் பத்மினி. நிற்க நேரமில்லை.

"மழை வர்றாப்லருக்கே?" என்றாள் கவலையாய்.

"சிறுகுளத்து மயில்ல ஆடியிருக்கு...மழை வரத்தான் செய்யும்!" என்றபடி கிளம்பினான் அய்யம்.

*******

என்ன நாள் இது...!

வெகு அபூர்வமாகவே இப்படி நாட்கள் அமைகின்றன. கொந்தளிப்பான நிகழ்ச்சிகள். சாயல்குடியில் இருந்து ஸ்டியரிங்கை ஒரே பிடி. சீறிப் பாய்ந்தது வண்டி. மனசு குளிர்ந்து கிடந்தது. வெளியே சிறு குளிர் காற்று தெருநாய் போல மோந்து மோந்து பார்த்தபடி வெட்டியாய் நடமாடியது.

என்ன...உட்கார்ந்து ஆற அமர பிரியாணி திங்க முடியல. ஏல எல்லாம் உன் இஷ்டத்துக்கு கட்டி வருமாடா? இதாவது வாச்சதே என்றிருந்தது. துணிச்சலா அந்தப் பெண்ணிடம் பேசினேன். அவனுக்கே அது ஆச்சரியம். ஆனால் கேட்டதுக்குப் பலன் இருக்கத்தான் செஞ்சிது.

நல்லாத்தான் பேசறே...என்றாள் அவள். ஏண்டி நான் ஆள் நல்லால்லியா? - டாய்!- என்று மனசைக் கட்டுப்படுத்தினான். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்னு வசனம். மனோன்மணி வீட்டு விளக்குத் திரியும்...டாய்!

நம்ம பாண்டித்துரை அண்ணாச்சி சொக்கிட்டாரு கச்சேரில. "நீலவண்ணக் கண்ணா வாடா...நீ ஒரு முத்தம்தாடா"ன்னா பாரு. அதைக் கொஞ்சம் முன்ன குனிஞ்சு அவரை நோகி அபிநயம் பிடிச்சாப்லதான் இருந்தது. சூன்யக்காரி.

ஜோசியக்காரங்க உத்தி அது. நல்ல நல்ல பலனா முதல்ல பொதுவாக அடுக்கிருவாப்ல. பட்ட கஷ்டமெல்லாம் தீரும்னுதான் ஆரம்பிப்பான். அதைக் கேக்கவே நம்மாளுக்கு முகத்தில் பால் பொங்கிரும். நமக்கான பலன்னு ஒரு நம்பிக்கை. முகமெல்லாம் சிரிப்புதான்...அட நாயே...அப்பதான் ஜோசியம் பார்க்கன்னு குனிஞ்சி உட்கார்ந்ததுல, இருக்க ஒரே அண்டிராயர் டர்ர்ராயிட்டது.

அதைப் போல மேடைல மனோன்மணி - "நீலவண்ணக் கண்ணா வாடா...நீ ஒரு முத்தம் தாடா"ன்னு ராகம் பாடி... வா வா-ன்னு ஒரு அபிநயம். தரேண்டி-ன்னு அந்தாக்ல எந்திரிச்சிப் போயி கிச்ச்ச்னு முத்தம் ஒரு ஏத்து ஏத்திருவாரோன்னு பயமா ஆயிட்டது.

மழையின் மூச்சு கேட்டது. நல்ல குளிர் இறக்கம். மழையில் நனைய அய்யம் பெருமாளுக்குப் பிடிக்கும். ஆனா குளிரோட சேந்த மழைன்னா மறுநாளே காய்ச்சல் வந்திரும். குளிர் இல்லாத மழையா ஓ.கே ஆனந்தமா வெளியே வந்து நனைவாப்டி.

ஒரு புது சினிமாப் பாட்டு - என்மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...னு சூப்பரா இருக்கில்ல.

மழைல எருமை நனைஞ்சி பாத்திருக்கியாடே? தலையைத் தூக்கி கண்ணை மூடி மூக்கு ஓட்டைக்குள்ள கூட தண்ணி விழறா மாதிரி நீட்டி நீட்டி அனுபவிக்கும். சிலது ங்ர்ர்ர்னு ஒரு சிறு சுருதி சேத்துக்கிறதும் உண்டு...

எலேய் இப்ப எருமை மழைய எப்டி அனுபவிக்கிறதுன்னு ஒரு ரசனை தேவையா?

மழை பிடிச்சிக் கழட்டப் போவுது என்றுதான் பட்டது.

நைட் நம்ம பொழப்பு என்னாவும்னு தெர்ல.

"மாமாவ்"னு சத்தங் குடுக்கான். அசிரத்தையா வந்து தொறந்தாரு மாமனார். வேளை கெட்ட வேளையா வந்து கதவைத் தட்டறதே இவன் வேலையாப் போச்சுன்னு அவருக்கு எரிச்சல். தட்டறது இவந்தான்னு தெரியும். இருந்தாலும் அந்த எரிச்சலுக்கு "ஆரது"ன்னு ஒரு அதட்டல். வெறுப்பு. மனுசன் தூக்கப் பிரியன். நாட்ல அதொண்ணுதான் ஓசியாக் கிடைக்குது. மத்த எல்லாத்துக்கும் துட்டுல்லா...அந்தத் தூக்கத்தையும் கெடுக்கீயளே பாவியளா...ம் பாரு.

கதவைத் திறந்து விட்டுட்டு திரும்பப் படுத்து உருளப் போனாரு பாரு. "மாமா பிரியாணி சாப்பிடறீயளா?" ன்னான். எந்திரிச்சிட்டாரு. "வான்கோழி பிரியாணி"ன்னாம்பாரு, கொக்கமக்கா...சடார்னு தூக்கத்தை துப்பட்டாவா உதறி "ஏது"ன்னு வந்தாரு.

"வாயக் கொப்பளிக்கலியா?"

"சாப்பிட்டு முடிச்சதும் ஒண்ணாச் சேத்துக் கொப்பளிச்சாப் போச்சு..."

கண்ணை மூடி மூடி அனுபவிக்காரய்யா மனுசன். வயசுக்கும் சுகத்துக்கும் சம்பந்தமே கிடையாது... எந்தக் கோர்ட்ல வேணாச் சொல்லுவான்!

இது வான்கோழி. டம்மி. மயிலைப் பாத்து ஆட முயற்சி பண்ணிச்சுன்னு நம்மள்ல கதை. கேள்விப் பட்டிருக்கீரா தெர்ல்-

படிச்சிருக்கான். மயிலுக்கு வான்கோழி புலவர்களுக்கு எந்நாளும் பண்டிட்ஜீக்கள்...ஞானக்கூத்தன் கவிதை. அதென்ன "எந்நாளும்?" சேஷ்டையான கிள்ளுதான்! வேறென்ன?

(நம்ம மனோன்மணி...ஒரு மயில் வான்கோழி சாப்டுதப்பா!)

நம்ம பாண்டித்துரை அண்ணாச்சிக்கு டம்மியை விட ஒரிஜினல் மேல... மயில் மேல ஒரு கண்ணு!

பொம்பளை ருசி கண்ட மனுசன்...!

கதை எப்பிடிப் போவுது, பாப்பம் - என நினைத்துக் கொண்டான் பெருமாள்.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-19                                                                                           தொடர்கதை பகுதி-21

 
                                                                                                                                                                                                                 முகப்பு