........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

21.தூக்கத்திலும் அவள் அழகு.

விருந்து முடிந்து வெத்திலை பாக்கு பீடா என்று கலகலப்புகள். மணி அதாகுது பதிணொண்ணரை. யார் மணி பத்திக் கவலைப்பட்டார்கள்...அல்லது எவனுக்குமே மணி பார்க்கத் தெரியாது போல.

மனோன்மணியும் அவளின் கீழ்படியாளும் தவிர மத்தாளுகள் ஜாகையிலே தங்கி காலையில் கிளம்புகிறாப் போலிருந்தது. இங்கே வந்து மனோன்மணி உடை மாற்றியிருந்தாள்.

புடவையில் வேறாளாய்த் தெரிந்தாள். குடும்பப் பாங்காய் இருந்தாள். மெல்லிய ஆகாய வர்ண ஷிபான், ரவிக்கை உள்ளே கருப்பு உள்ளாடை. வெத்திலை போட்டு உதடுகள் இன்னும் சிவந்து கிடந்தன. சாதாரணமாகவே அது சிவப்புதான். பொம்பளையாள் வெத்தலை போட்டா எந்த ஆம்பளைக்கும் இருப்பு கொள்ள மாட்டேங்குது. ஏன் அப்டி?

தெர்ல!

நம்ம தலைவரும் சதா பன்னீர்ப் புகையிலை அதக்குகிறவர்தான். இருந்தாலும் உதடா அது? அரக்குச் சரக்கு. போஸ்டாபீஸ் தபால் பையில் வைத்து புளி நச்-ச்=சாப்ல வருமே...கருப்பும் சிவப்புமான அரக்கு சீல். அந்த அழுக்குச் சிவப்பு.

பாண்டித்துரை சும்மா குழைஞ்சி நெளியறாரு அவளைப் பார்த்துப் பார்த்து. வேடிக்கையா இருந்தது.

எந்த மிருகத்துல பார்த்தாலும்.... ஆண்தான் அழகு. ஆண் யானைக்குத்தான் பொதுவாத் தந்தமிருக்கும். சில ஆப்ரிக்க யானை வகைல பெண் யானைக்கும் உண்டுன்றாங்க. அதை விடு. ஆண் மான்தான் கொம்பு சிறந்தது. ஆண் மயிலுக்குத்தான் தோகை. அழகு சம்சாரத்திலே மத்த மிருகங்களில் ஆண்தான் உசத்தி. மனுசாளில் மாத்திரம் மாத்தி அமைஞ்சிட்டது.

அய்யம் பெருமாள் அறிவளி. அவனால் இப்படி பெத்தம் பெரிய சிந்தனைகள்...ஆராய்ச்சிகள் செய்யாமல் இருக்க முடியல.

கொட்டாவி வந்தது. மத்தாளுகளுக்கும் அலுப்புதான். இவனுக்கென்ன அலுப்பு - வண்டில சாயல்குடி போயி பறந்து வந்திருக்காப்டி. மத்தாளுகளுக்குத் தின்ன அலுப்பு. அவனவன் இடுப்பு பெல்ட்டை அவிழ்த்து விட்டாச்சி. அந்தாக்ல உருள வேண்டிதான்.

காலைல நாலு நாலரைக்கெல்லாம் ஜாகைல தீபாவளித் திருநாள்தான்.

அவன் போன ஜோருக்கு மனோன்மணி எழுந்து கொள்கிறாள். மோதிரம் பொலியும் செம்பஞ்சுக் குழம்பு - அதென்ன செம்பஞ்சுக் குழம்பு? தெர்ல! காவியங்களில் வாசிச்சிருக்கான். பொம்பளையாள் சமாச்சாரம்ல... அது ஒரு சாப்பிடற வஸ்துன்னு ரொம்ப நாள் நினைச்சிருந்தான்! - விரல்கள் குவித்து தாமரை மொட்டாய் வணக்கத்தை வழங்கினாள் ஒரு சிரிப்புடன்.

சிரிப்பா அது? நள்ளிரவு சூரியன். பாண்டித்துரைக்கு அவளைப் பிரியவே மனசு வர்ல. அழுதறாதய்யா. பரவால்லன்னு அவர் அழுதாலும் ஆச்சர்யம் இல்லை.

அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?

அழாத பிள்ளை விரல் சூப்பும்.

அவன் பார்த்தவரை ஆண் குழந்தைகள் அதிகம் அழுகின்றன. பொம்பளைப் பிள்ளைகள் விரல் சூப்பிக் கொள்கின்றன. ஏன்?

தெர்ல.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு பழமொழியப்போவ்!

"உங்க கூடப் பேசிட்டிருந்ததுல நேரம் போனதே தெரில..." என்கிறார் அண்ணாச்சி.

"நல்ல விருந்து. ரொம்ப நன்றி. வரட்டுமா?"

இப்ப பாண்டித்துரை மனசுல என்ன பாட்டு ஓடும் சொல்லு பாப்பம்? அந்த நீயொரு முத்தம் தாடா...அதானே?

தாடா - அல்ல தாடி!

நீல வண்ணக் கண்ணே வாடி. நீ ஒரு முத்தம் தாடி...

அந்த மனுசனைப் போட்டு இப்டி வாட்டி வதைக்கிறாளேய்யா...?

இந்தக் காப் புதுக் கவிஞன் சொன்னாப்ல-

ஆடிக்குப் பின் ஆவணி
என் தாடிக்குப் பின் தாவணி

இந்தக் காலக் கவிஞர்கள்ல ஜொள்ளர்கள் அதிகம். விக்கிரமாதித்தன் அதுல கொஞ்சம் ஓவரு. திடீர்னு குண்டக்க மண்டக்க எழுதிப்பிடுவாரு.

- காரில் பின் சீட்டில் மனோன்மணியும் கீழ்படியாளும் அமர்கிறார்கள். பவ்யமாகக் காரைத் திறந்து விட்டார் பாண்டித்துரை.

சொந்த சம்சாரத்தைப் பிரியும் போது கூட மனுசன் இத்தனை துக்கப்பட்டிருப்பாரா? சந்தேகந்தான்.

இப்ப எத்தனை துயரப்படறாரோ, "அப்ப" அத்தனை சந்தோசப்படலாம். ஒரு வேளை...! பாகீஸ்வரி...யானைக்குட்டி. அந்தப் பய பூபதி. யானைக்குட்டிக்குப் பிறந்த பன்னிக்குட்டி.

டாய்! இவர் பெரிய மன்மதக்குஞ்சு. ஊர்ல இருக்கறாளுகளையெல்லாம் கேலி பண்ணியாறது...

கார் எடுத்த எடுப்பில் உற்சாகத்துக்குக் குறைவில்லை. மனோன்மணியிடம் தன் தமிழ் அறிவைக் காட்டிக் கொள்ள வேணுமாய் ஒரு இது. வாய்க்குமா என்றிருந்தது.

எங்க? அத்தனி உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள் கார் கிளம்பிய ஜோரில் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள். கீழ்ப்படியாள் தோள்ப்படிந்து விட்டாள்.

நல்ல அலுப்பு இருக்கும் பாவம், என நினைத்துக் கொண்டான். அவளால் காட்டிக் கொள்ள முடியாது. சதா சிரித்த முகமாய் முகமூடி தேவை சில ஆட்களுக்கு. நாட்டிய அம்மணிகளுக்கு. நர்சுக்கு, பிரசவம் பார்க்கற டாக்டருக்கு...டாக்டர் தூக்கக் கலக்கமாயிருந்தா வம்பாயிரும். நர்சுக்கு ஆபரேசன் பண்ணிப்பிடுவாரு.

பாவி, தூக்கத்தில கூட அழகாயிருந்தாள். சில ஆட்கள் முழிச்சிட்டிருக்கறப்ப சுதாரிப்பா இருக்கும். தன்னை மறந்து தூங்கறப்ப அத்தனை ஆபாசமா இருக்கும். வாயைப் பொளந்து தூங்கும். சாளவாய் வழியும். கஷ்டப்பட்டு புகையிலை போல் உள்ளதக்கியிருந்த பல்லு மேஜைக் கைப்பிடி மாதிரி வெளிய வந்துரும்.

மெல்ல தோளில் இருந்து சரிந்து இறங்கி கீழ்ப்படியாள் மடிக்கு மாறியிருந்தாள். ராகம் உறங்கும் வீணை.

இனி எங்க இவர்களைப் பார்க்க, அடுத்து எப்போ வாய்ப்பு வரும் என்றிருந்தது.

டிரைவர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

அசோக வனத்து ராட்சசிகள் ஆஞ்சனேய வசியத்துல அகப்பட்டாப் போல- ராத்திரி டிரிப்ல ரொம்பக் கொடுமை - சுத்தி எல்லாவனும் தூங்கிருவான். இவனுக்கும் அந்தாக்ல உள்ள உள்ள சர்ர் சர்ர்னு மூக்குச்சளியா இழுக்கும்.

தூங்க முடியுமா அவன்?

அட வர்றது வரட்டும்னு சில சமயம் கண்ணு அந்தாக்ல அதுபாட்டு மூடிரும். ஆக்சிடெண்ட்! வேறென்ன?

எலேய், பாத்து ஓட்டப்போவ். இதுவரை நீ எத்தனையோ பேர் காலை ஒடிச்சிருக்க - ஒத்துக்கறோம். இந்தம்மா பாவம். அவுக விசேசமே கால்தான்.

காலி பண்ணீறாத...!

மனசை உற்சாகப்படுத்திக் கொள்ள முயன்றான்.

ஒரு ஜோக். "ஒரே காலுள்ள கொக்கு ஒண்ணை நான் பார்த்தேன்யா" என்கிறான் அவன்.

அதுக்கு "நம்பவே முடியல. அப்டி ஒருக்காலும் இருக்காது" என்றான் இன்னொருத்தன்.

இன்னொரு ஜோக்

நர்ஸ் - இன்னியோட நீங்க டிஸ்சார்ஜ் ஆகிப் போறீங்க. உடம்ப நல்லாப் பாத்துக்கங்க"

நோயாளி பதில் - சரிம்மா காட்டு

ஒரு படத்துல எம்ஜியாரு பாடுவாரு... நானே எழுதி நானே நடிக்கும் நாடகத்தில் நல்ல திருப்பம்...அதும் மாதிரி...டிரைவர் வாழ்க்கை. ஊரே உலகமே சுத்தியும் தூங்கிக்கிட்டிருக்கும். நைட். அவன் மாத்திரம் தூங்காமக் கொள்ளாமல்... அதும் பத்திரமா பார்ட்டிய வீட்ல கொண்டாந்து சேக்கணும். என்ன பண்றது? எதாவது யோசனை மனசுல தன்னைப் போல ஓடிருது... அதைத் தவிர்க்க முடியாது. அதும் பாதி நைட்- பயணம் என அமைஞ்சிருது. மனுசனும் ஆம்பிளைப் பிறவி. மோப்ப நாய் வர்க்கம்... எங்க தொட்டாலும் சிந்தனை பொம்பளையாள் பத்திதான் வந்து நிக்கும்.

அதிலும் பொண்டாட்டி வாசனை கிட்டாத வெளியூர் டிரைவர்னா இன்னும் சாஸ்தி அவஸ்தை...

ஐயோ டாக்ஸி டிரைவர்ங்க பாடு இன்னுங் கஷ்டம்டா. வர்ற பார்ட்டிங்க ஒவ்வொரு விதம். ஏர்ற ஆலுங்க புருசன் பொண்டாட்டியான்னு ஐடெண்டிடி கார்டா கேட்க முடியும்? ஆனா உரசற உரசல்லியே தெரியும்னு வெய்யி...

புதுக் கல்யாணம்னா தவிர...புருசன் - பெண்டாட்டி வந்தாங்கன்னா ரெண்டு பேர் மூஞ்சிலயும் ஒரு உர்ர் இருக்கும். என் வாழ்க்கையின் மொத எதிரி நீதான்றாப்ல...

அதை விடு காதல் ஜோடியோ, புதுக் கல்யாணப் பார்ட்டியோ ஏறினா பின் சீட்டில் ஒரே அமர்க்களம். கார் அம்பாசடர் கார் அத்தனை இடங் கெடக்கு. ஏன் இப்டி நெருக்கியடிச்சி தொட்டித்தவளையாட்டம் உக்கார்றாங்களோ? தெரு வெளிச்சம் சட்டுன்னு அடங்கி கொஞ்சம் இருட்டு வந்திறப்படாது. என்னென்னவோ சத்தம் கேட்கும் பின்னாலயிருந்து. வெளிச்சம் வந்தா அடங்கிடும்.

இவாளுக்கு அவள் ஊட்டி விடறது. ஏண்டா உனக்குத் தன்னாலத் திங்கத் தெரியாதா? எருமை மாதிரி வளர்ந்திருக்கியே-ன்னிருக்கும்... ஏன் அப்டித் தோணுது? எல்லம் ஒரு வயித்தெரிச்சல்தான்...

கார் அதுபாட்டுக்கு ஓடியது. மனசும் அதும் பாட்டுக்கு ஒரு எடுப்பு எடுக்குது. குளிரெடுத்த இரவு. மழையறிகுறிகள் வலுப்பெற்றிருந்தன... ரயில் வரப்போகிற ரெண்டாம் அறிவிப்பு. மழை இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்...

சிறுகுளம் வந்து விட்டது. அவன் கனவு கண்ட காத்திருந்த... மனோன்மணியுடனான பயணம்...தனிமை இரவு...எல்லாமே வாய்த்தது. ஆனால் உரையாடல் இன்றி. ஆனால் இழப்பாய் இல்லை.

ஆ, இவளைப் பத்திரமாய்க் கொண்டு சேர்த்தேன்...என ஒரு திருப்தி.

பி.பி.பி - பேரைப் பார்... நாதசுரத்தை ஊதிப் பாக்கிறாப் போல... உம்ம மனோன்மணியைப் பத்திரமா கரை சேத்துட்டேன்.

இருட்டிலேயே வீட்டின் எடுப்பு தெரிந்தது. முதலில் அந்த கீழ்ப்படியாள் இறங்கிப் போய்க் கதவைத் திறக்கிறாள். சற்று திறக்க திகைக்கிறாள் அவள்... அவன் போய்த் திறக்க உதவும் போது அவளுடன் உரசிக் கொள்கிறான். விகல்பமில்லாமல் சற்று அவள் ஒதுங்கிக் கொள்கிறாள் பிறகு.

உள்ளே போய்ப் பார்க்க ஆசைதான். மறுநாளின் சிறு துவக்கம். மனசின் வக்கிரங்களை கவனமாக உதறிக் கொள்ள முடிவு செய்தான்.

கூடைகளை உதவியாள் எடுத்துச் சென்று உள்ளறைகளை வெளிச்சப்படுத்தினாள். அதுவரை மனோன்மணி காத்திருந்தாள் காருக்குள்ளே. உள்விளக்கு போட்டிருந்தான் அவன். அலுப்பான அவள். தூக்கக் கலக்கமான அவள். எவ்வளவு மென்மையாய் இருக்கிறாள். கிட்டத்தில் ஆசைதீரப் பார்த்தான்.

ஓரங்கள் வரை நீளப் பரந்த விழிகள். மை தீட்டிய ஜோர் தனிக்களை தந்தது. அந்தக் கண்களை மென்மையாய்ப் பிரியமாய் முத்தமிட விரும்பினான்...

இப்படி இன்னொரு தடவை வாய்க்குமா என்ன? அப்படியே கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்தாள். அதுவே ஒரு அபிநயம் போலிருந்தது. சோம்பல் முறிக்கும் ஆம்பல். அவன் பார்ப்பதைப் பார்த்து சட்டென தனக்குள் அந்தப் பார்வையை உள் வாங்கிக் கொண்டு...ஆனால் புன்னகைத்தாள்.

"மறக்க முடியாத நிகழ்ச்சி..." என்றான் அய்யம். எதுடா, அவ சோம்பல் முறிச்சதா?

"மகிழ்ச்சி" என்றாள்.

"உங்களை விட உங்கள் தமிழை வணங்குகிறேன்..."

"நியாயமே" என்று தலையை ஒதுக்கிக் கொண்டு புன்னகைத்தாள். "நான் தனியாக ஒரு தமிழாசிரியரிடம் பயிற்சி பெற்றவள்"

"எனில் அவரையும் வணங்குவேன்..." என்றான் அலங்காரமாய். "ரொம்ப நேரம் ஆயிட்டது. நிறையப் பேச ஆசை இப்ப முடியாது" என்றான் புன்னகையுடன். " மழை வேற வருது..."

"தங்கிட்டு காலைல போறீங்களா?" என்றாள் மனோன்மணி.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-20                                                                                           தொடர்கதை பகுதி-22

 
                                                                                                                                                                                                                 முகப்பு