........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

23. வைக்கப் படப்பு ரகசியம்.

ஓடிக் களைத்த நாயாய் கிராமத்து நியதிகள் சுருண்டு படுத்து விட்டன. அந்த மனோன்மணி மேற்தளத்துக்கு வந்து விசுக்கென உள்ளே பதுங்கிய மீன் போல மறைந்து விட்டாள். இனி அவளைப் பார்க்கும் வாய்ப்புகள் அரிதே, என எப்போதாவது நினைத்துக் கொள்கிறான் அய்யம் பெருமாள்.

அது ஒரு கனவு. சரி, கொஞ்சம் அலங்காரமான பிரம்மாண்டமான கனவு மீண்டும் அவளை, வியர்வையை மோப்பம் பிடிக்கிற அருகாமையில், அங்க லாவண்யங்களை அடையாளம் “பிடிக்கிற” அளவில் தரிசனம் பண்ண அதிர்ஷ்டம் இருக்குமா?

என்றாலும் அந்தக் கணங்கள் அற்புதமானவை. எளிமையான பூச்சற்ற கவிதைத் தருணங்கள்...அல்லவா? மங்கியதோர் ஒளி, வீட்டு வெளிவிளக்கு வெளிச்சம். காரில் அவள். சிறு புன்னகை. ஆண் என அவனை ஓர் கவனவியூகத்துடன் அணுகாமல், அலட்டிக் கொள்ளாமல் சோம்பல் முறித்த கணம்... அவனுக்கான மரியாதை.

மனோன்மணி பெரிய கை. அடிக்கடி... வருடாவருடம் அவளை அழைக்க நிதிநிலை...விழா அமைப்பாளர்களுக்கு ஒத்து வராது. பட்ஜெட்டில் துண்டு விழும் என்பார்கள். மனோன்மணியின் ஒரு பார்வைக்கே. ஒரு சோம்பல் முறிப்புக்கே வேட்டி துண்டு எல்லாமே விழுந்துரும்!

தினத்தந்தி பேப்பர் தவறாமல் வாசிக்கான் அய்யம், முஷாரப் ரொம்ப தெனாவட்டா மப்பா பேட்டி கொடுக்காரு வழக்கம் போல. முஷாருஃப்பா அவரு? படாரப் (படா - இந்தி) அவரும் நம்ப பிரதமர் அண்ணாச்சியும் பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தன்றாங்க...ஆனா, கூடிப் பேச மாட்டாங்காங்க. ஏன்?

தெர்ல!

அமெரிக்காக்காரன் பின்லேடனைப் பிடிக்கேன் பிடிக்கேன்னாப்டி. ஒண்ணுங் கதையாவல சரின்னு ஆப்கானிஸ்தான் ஊரையெல்லாம் சுத்திப் பார்த்திட்டு, இப்ப ஈராக் கூட சண்டை போடலாமான்னு யோசிக்கான். சில பிள்ளைங்களுக்கு ஒரு செல்ல ஆசை. அடுத்தவன் கூட வம்பிழுத்துக்கிட்டே இருக்கனும்.

மண்டைல ரெட்டைச் சுழி இருக்க பசங்க இந்த மாதிரி சேஷ்டை கோஷ்டின்னு ஐதீகம். எல்லா அமெரிக்கனும் ரெட்டைச் சுழி ஆசாமிங்கதானோ? யாராச்சும் ஒத்தன் ரெண்டு பேர்த்தையாவது பிடிச்சி குனியச் சொல்லிப் பாத்தாத் தாவல. கருப்பான ஆளுங்களைக் கண்டாலே அவனுங்களுக்கு
தெருநாய் போல ஓர் அலட்சியம் அதானே? ஏன் அப்படி?
.

நிறைய ஓய்வு நேரம் கிடைக்குது. வேலை கிடையாது.மேலப்புதூர், பெரியகுளம் ரெண்டு நூலகத்திலும் அவன் மெம்பர். யாரும் படிக்காதபடிக்கு நண்டு நண்டா தலைப்பு எழுதின புஸ்தங்களையெல்லாம் எடுத்து வந்து வாசிக்கிறான். இலக்கிய எழுத்தாளர்னா புத்தகத்தின் தலைப்பு ஒரு மாதிரி புரியாத அளவில் எழுதிப்பிடறாங்க. உள்ள கதையும் சில சமயம் புரிய மாட்டாங்குது. அதுக்காகத் தலைப்பிலேயே பயமுறுத்துறதா? மனுஷா மேலே இரக்கப்படுங்கப்பா.

புஸ்தகம்னா இதுதான் வாசிக்கணும். இத வாசிச்சாதான் அவன் அறிவாளின்னு எல்லாம் கிடையாது. எல்லாம் வாசிக்க வேண்டியதுதான். களவும் கற்று மற.

குமுதம் ராணின்னு ஒருவகை. கதைல பொம்பளையே இல்லாட்டி கூட படத்ல பெரிஸ்ஸா பொம்பளையாள் படம் போடுவாங்க. ரெண்டு பேர் டீ சாப்பிடற சீன்னு வரைஞ்சி, அந்த டீக்கடைல டீ பாய்லர் பின்னாடி பெரிஸ்ஸா பொம்பளையாள் படம்... தொறந்து போட்டுக்கிட்டு. நம்ப மனசையே டீ
பாய்லராட்டம் கொதிக்க வெச்சிர்றாங்க.

இலக்கியப் புஸ்தகங்கள் எல்லாம் இந்த பாவனையைத் திட்டித் தீர்த்துட்டு... இப்ப அவனுங்களே பச்சை பச்சையா எழுத ஆரம்பிச்சாச்சி. கெட்ட வார்த்தைய இலைமறைவு காய்மறைவாப் போட்டா அது வணிகத்தனம். அப்டியே போடு! அதே வார்த்தையைப் போடு! அதாண்டா இலக்கியம்னு ஒரு கோஷ்டி. அதுக்குப் படமும் ஒரு டைப்ல இருக்கும். படவா மாடேர்ன் ஆர்ட்ம்பான். எல்லாம் மூடி மூடிப் போடுவான். -இந்த அக்குல், கொங்கை விவரங்களை மாத்திரம் அப்டியே தத்ரூபமா அந்தப் படத்ல வரைஞ்சிருவான். ஏன்யா அப்டி? மூஞ்சி மொகரைக்கட்டை எல்லாம் கண்டுபிடிக்கவே ஏலாது. பிஞ்சி பிஞ்சி கிடக்கும். ஆனா மேற்படி சமாச்சாரங்கல்லாம் கண்ணை உறுத்தும். கலிகாலமப்போவ்.

இதப் படிக்கணும், இதைத் தள்ளனும்னு வித்தியாசம் பாராட்டறதில்லை அய்யம். நண்டெழுத்துப் புஸ்தகம்னாலுஞ் சரி, அதற்கு நிகரான கொஞ்சம் மட்டத்தாளில் அச்சடித்த “அந்த” மாதிரி புஸ்தகங்கன்னாலும் சரி... இருங்க. இலக்கியமா மஞ்சப் புஸ்தகமா என்ன வித்தியாசம்னு பாதிப்பேர்த்துக்கு டவ்ட். அதைக் கிளியர் பண்ணிப்பிடுவம். அதொண்ணில்லய்யா - தரமான பேப்பர். ஆப்செட்டின் ஒஸ்தி அச்சு புகைப்படம் படாது. ஆனா அதே மேட்டர்னா இலக்கியம்.

ஆ தலைப்பு - சிலுக்கு சிங்காரின்னு லோக்கலா வெச்சா அது மஞ்சள்.

நம்ப எஸ்.வி.சேகர் சொல்லுவாப்டி - யூ சர்ட்டிபிகேட் படத்துக்கும் ஏ படத்துக்கும் என்ன வித்தியாசம்...? அப்பா அம்மா குழந்தைங்க எல்லாரும் ஒண்ணா உக்கார்ந்து பாக்கற படம் யூ. அப்பா- அம்மா - பசங்கன்னு தனித்தனியா அதே படத்துக்குப் போனா ஏ படம்.

முத்தயுத்தம்னா இலக்கியமா? ரெண்டுங்கெட்டானா?

தெர்ல,

நம்ம அய்யம் பெருமாள்தான் இப்டி ஆராய்ச்சில்லாம் பண்ணியிருக்கான்னு ஆலோசிக்கண்டாம். படிச்சிருக்கான் - யுவன் சந்திரசேகனு ஒரு பார்ட்டி. எழுதறாரு. “மார் சிறுத்த பெண்களுக்கு சரித்திரக் கதைகளில் இடமில்லை!”

பெரியண்ணாச்சி கி.ரா. இதுல வஸ்தாது. டிரைவர் சீட் அவருக்குத்தான். அவரு பேசிக் கேட்டா - எழுதிப் படிச்சா சிரிக்க சிரிப்புல புரையேறி மூக்குச் சளியே வெளியே வந்திரும். “சனியன் ஒருதுளியோ ரெண்டு துளியோ... இருந்தாலும் மனுசாளைத் தூங்கவிடுதா?”ம்பாரு.

தூக்கமா? கனவுலயே வருதேய்யான்னு ஒரு போடு போட்டாரு கவிஞர் பாரதிராமன்.

இவரு தெரியுமா?

வண்ணதாசன். அப்பப்ப கவிதை எழுதுவாரு. சும்மாவே மெழுகுவர்த்தி டைப். எதைப் பார்த்தாலும் உருகிருவாரு அப்டியே திடுதினு அடிச்சார்யா ஒரு கவிதை.

குனிஞ்சி பெருக்கி
கூட்டிப் போனா
குப்பாயி
அறை சுத்தமாச்சி
மனம் குப்பையாச்சி


-என்ன ஒரு சஸ்பென்ஸ் பாருங்க கடேசில...

மனசோட குப்பையப் பெருக்கித் தள்ள குப்பாயி உதவி செஞ்சாளாமா?

தெர்ல.

*****

எப்பவும் தண்ணி வாங்கிட்டு வரச் சொன்னா முதலாளி, வேலுச்சாமி இல்ல? வண்டிக்காரப் பயல்... அவனைத்தான் வேலை ஏவுவார். அந்தரங்கமா முதலாளி பத்தி அவனுக்கு நிறையச் சமாச்சாரம் தெரியும்னிருக்கு. அந்தா அண்ணிக்கு அவன் ஆள் இல்லை. சட்னு பெருமாளைக் கூப்பிட்டு வாங்கி
வரச் சொன்னார்.

எப்பவாச்சிம் ஓசில கெடச்சா நம்ப ஆசாமியும் ஒரு ருசி பாத்துக்கிறதுதான். இவருடன் அவனுக்கு இது புது அனுபவம்.

என்னவோ போலிருந்தது. துட்டை எடுத்து நீட்டினார். முழிக்கான்.

”என்னலே பாக்கே?”ன்னாரு.

பயமாகி விட்டது. நோட்டு பெரிய நோட்டு உள்ப்பாக்கெட்ல நிறைய வெச்சிருக்காரு. பேசாம வாங்கிக்கிட்டான்.

“பழக்கம் இல்லியாலே?”

இதற்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை. பழக்கம் இல்லன்னா முழுசா அவரே போட்டு மாட்டிருவாருன்னு ஒரு இது. உண்டுன்னு சொல்லவும் ஒரு உதறல்.

மையமாச் சிரிச்சி வெச்சான். புரிஞ்சிக்கிட்டாரு. “அதானோ?”ங்காரு.

“என்ன ஐட்டம் முதலாளி?”

ப்பூன்னு போச்சு. அதைவிட சூப்பர் டூப்பர் ஐட்டம்லாம் ருசி பாத்திருக்கான் அவன் டவுன்ல.

அவரை குஷிப்படுத்தலாம் போலிருந்தது. “அது இல்லாட்டி... மைக்டைசன் வாங்கிட்டு வரவா?”ன்னு கேட்டான். அசந்துட்டாரு.

“அடடே”ன்னு அவனைத் தடவிக் குடுத்தாரு. திடீர்னு கன்னுக்குட்டியா மாறிட்ட மாதிரி இருந்தது அவனுக்கு. “பெரிய ஆளா இருப்ப போலுக்கேய்யா”

“உங்க பக்கத்ல வந்தா...பின்ன எப்டி?” என்றான் துணிச்சலாய். “அதும் அப்டியா...நல்லாப் பேசறே”ன்னு திரும்பத் தடவிக் குடுத்தாரு. என்னத்துக்கு போட்டுப் போட்டு தடவறாரு... எலேய் பார்ட்டி ஆம்பளை- ஆம்பளையோன்னு பயமாயிட்டது.

சேச்சே, அப்டினா திருவிழால அடிச்ச கொட்டம்லாம் என்ன கணக்கு...

வேறொண்ணிலப்பா. . தண்ணி போடுமுன்னமே ஒரு கிக். எதிர்பார்ப்பு.

“டைசன்னியே...அதையே பாப்பம்! என்ன சொல்றே?”ன்னு கண்ணடிச்சாரு. அதானே சொந்தமா முடிவெடுத்துறாதிரூமய்யா... என்னைப் போல ஏழை பாழைங்க வாழ்க்கையே உங்க முட்டாத்தனத்துலதான் ஓடுது.

மனுசன் என்னவோ ஒரு ஜாலில இருந்தாரு. என்னா விவரம் தெரியவில்லை.

என்ன விவரமானா என்ன? சில்லரை கேட்க மாட்டாரு. அல்லது மறக்கடிச்சிரணும் மாப்ளோய்...நிதானப்பட்டார்னா... “குடுத்தனே மொதலாளி”ன்றலாம் நிலைமையைப் பொறுத்து.

வேலுச்சாமி இப்டி எத்தனை சம்பாதிச்சானோ? பாட்டில் ஒண்ணுக்கு “அவன்” வெச்ச விலை என்னவோ?

நம்ம என்ன விலை வைக்கிறது? அதைப் பாரு மொதல்ல...

எப்டியும் டைசன் புது ஐட்டம்தான். கிடைக்காட்டி என்ன பண்றதுன்னு கவலையாய் இருந்தது.

ஐய முதலாளி சொன்ன அந்த ரெட் ஆக்ஸ்...

சனியன் உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் மாதிரி. அதை எப்டி ருசிக்கார் தெர்ல... கொஞ்ச கொஞ்சமாய் முதலாளியின் அந்தரங்க வியூகத்தினுள் நுழைகிறாப் போலிருந்தது.

முதலாளிகள் வளையம் -அதன் விசித்திரங்கள் அவனுக்குப் புதியது அல்ல. மதியச் சாப்பாடு நேரத்தில் பொம்பளையாள் டைனிங் ரூமுக்குள் வந்து அவளுகள் டிபன் பாக்சில் இருந்து எதாவது எடுத்துச் சாப்பிடுவார்கள். “நீயே சமைச்சதாம்மா வெரிகுட்”னு பாராட்டு வேற. சோஷியலாப் பழகறாராம்... ஆனா இவாள் ஆம்பளையாள் டைனிங் டேபிளுக்கு வந்து எடுப்பதுமில்லை. பாராட்டுவதுமில்லை. சோஷியலாப் பழகறதும் இல்லை!

டைப் அடிக்க, சுருக்கெழுத்து எழுத என்று பொம்பளைங்களுக்குன்னே ஒரு கேடர் கண்டுபிடிச்சி வெச்சிருக்கு முதலாளி வர்க்கம். தனியா தன்ரூம்ல பக்கத்துலயே அவாளுக்கு சீட். ஒரு அவசரம்னு கூப்பிடுவாங்களாமே? என்ன அவசரம்?

டைசனைத் தேடிப் போக வேண்டியிருந்தது. பெரியகுளம் சின்ன ஊர்னு பாத்தா பெத்தம் பெரிய ஒயின் ஷாப். உள்ள போறதும் வாரதுமா எத்தனை ஜனம். எல்லாம் முண்டாசுப் பார்ட்டிங்க. உள்ள போற ஆளுங்க நேராப் போறான். வெளிய வார ஆளுங்கள் கொஞ்சம் மடிஞ்சாப்ல வாரான். ஏன்?

காரணம் தெரியும். கேட்டுக்க-

அவன் உள்ள போனபோது “அது” உள்ள போகவில்லை.

அவன் வெளியே வந்த போது “அது” உள்ளே!

ஒரு குடிகார ஜோக்-

“எலேய் என்னாலே கட்டாந்தரையில தடவுறே?”

“நீச்சல் அடிக்கேன்”

“ஏல தண்ணியே இல்லியேடா?”

“அது உள்ள இருக்கப்போவ்”

டைசனைப் பேப்பர் சுற்றி முன் சீட் பக்கத்து சீட்டில் போட்டுக் கொண்டு திரும்பினான். வண்டியே கொஞ்சம் தள்ளாடிக் கிளம்பியது போலிருந்தது.

இத்தனை நாள் பழக்கதில் பாண்டித்துரை வீட்டிலோ வெளியிலோ தண்ணியடித்துப் பார்த்ததில்லை. வீட்டில் எங்கே வைத்திருப்பார் தெரியவில்லை. அவனுக்கு அநாவசிய சந்தேகம்லாம் வேண்டாம் என்கிறாப் போல... அவரே சொல்லி விட்டார். “வாங்கி யார் கண்ணுலயும் படாமல் வைக்கப்படப்புல
வசம் பார்த்துச் சொருகி வைலே. ராத்திரி எடுப்பம். நீ கூட இருப்பியா?”

நான் இருக்காட்டி உமக்கு அந்த உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரையே வாங்கித் தந்திருக்க மாட்டனா மூதேஎவின்னு நினைச்சுக்கிட்டான்.

பாண்டித்துரைக்கு எப்படியோ, அவனுக்கு உள்ளே இருப்புக் கொள்ளாத ஒரு பம்பரச் சுழல். எள்ளுச் செக்கு ஓடுது. ருசி பார்த்து ரொம்ப நாள் ஆன சரக்கு. விதவிதமான ஐட்டம்ஸ் எல்லாம் பார்த்து ஒரு சந்தர்ப்பத்தில் - இதாண்டா நம்மாளுன்னு முடிவெடுத்தான். இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று-ன்னு ஒரு கண்ணதாசன் பாட்டு உண்டில்ல. படம் - அவள் ஒரு தொடர்கதை.

கண்ணதாசன் சரக்கு எது? தெர்ல.

இதும் தொடர்கதையா ஆகாதான்னிருந்தது. சிறுகதையாயிட்டது...

பாண்டித்துரை புண்ணியத்தில் தொடர்கதை ஆகுமா?

மணிதண்ணிகளின் ருசி பத்தி நல்லா வெவரம் அறிந்தவன். கார் ரிப்பேர் தெரியுதோ இல்லியோ...வெளி விவகாரங்களில் எல்லாம் சூப்பர் நாலெட்ஜ் அவனுக்கு. ஒருவிதமான லூஸ் அவன். காசு கடனாக் கேட்டா இல்லம்பான். “வா மாப்ள தண்ணி உன் செலவு”ன்னம்னா துட்டைத் துட்டுன்னு பாக்காமச் செலவு பண்ணுவாப்டி.

அதுக்கு கடனாக் குடுத்தா துட்டு திரும்பியாவது வரும்ல? ஆரு சொல்றது...குடிவெறில...மாப்ள கடன்னு மாத்திரம் கேட்கப்படாது. கடன் அன்பை முறிக்கும்-னு தத்துவம் வேற பேசுவான். சரி, வந்த வரைக்கும் லாபம்னு வாங்கி வாய்ல ஊத்திக்கிட்டு விதையை நொந்தாப்ல பெருமாள் வீடு திரும்புவான். இருந்த பசிக்கும் வெத்து வயித்துக்கும் சரக்கு போயி வயித்தை வலிக்கும்...

சரக்கு ஒண்ணு ஒண்ணொத்துக்கும் துணை ஐட்டம்னு ஜாதகப் பொருத்தம் பெரியவங்க பாத்து வெச்சிருக்காங்க. சிலதுக்கு அசைவம். சிலதுக்கு மிச்சர். அப்றம் ஆம்லெட் கொசுறு. கொத்துக்கறி, ஊறுகாய்...ஒஸ்தி ஐட்டம்னு சாஃப்ட் டிரிங்க் எடுத்துக்கிட்டா முந்திரிப்பருப்பு.

ஒவ்வொருத்தன் பண்ணி வெச்சிருக்க ஆராய்ச்சிக்கு பெருமாளின் திறமை கம்மின்னு தோணுது.

பெருமாள் இரவு வரக் காத்திருந்தான். இதுவரை முதலாளியிடம் அவன் பழகியதேயில்லை. பொம்பளையாள் விஷயத்தில் கூட ஒதுங்கியே இருந்தான்... அது வசதியாய் இருந்தது. நான் பிள்ளைக் குட்டிக்காரன் அய்யா என்னிய விட்ருங்க...என்றிருந்தது. காலம் இப்டியே ஓடிட்டா நல்லதுதானே?

ஓடிருமா தெர்ல.

அட அவரு அறிவாளியா முட்டாளான்னே யூகிக்க முடியல. வீட்ல அங்கங்க அவரோட இளமைக்காலப் படம். வேட்டைக்காரப் படம். குடும்பப் படம்னு இருக்கு. ஒரு டுப்பாக்கி மாட்டியிருக்கு. கணக்குப்பிள்ளை வேலுச்சாமின்னு அவரோட நெருங்கிய வட்டம்லாம் இனி பழகிக்கிட்டா நிறையத் தகவல் கிடைக்கும். நல்ல அமுக்கமா இருக்கானுங்க ஒவ்வொருத்தனும்.

நாட்ல தெரிஞ்சிகிடவும் ஆராய்ச்சி பண்ணவும் நிறைய நிறைய இருக்கு!

( “உங்களுக்கு பிடிச்ச ஐட்டம் அந்த சிவப்புச் சனியன் - உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர்தானா முதலாளி?”) - “ஆமா”ங்காரு. “எப்பவும் அதான் நமக்கு”ன்னாரு.

இருட்டில் தப்பான இடத்தில் வைக்கோல் படப்பில் கை வைத்து விட்டான் அய்யம் பெருமாள். பாட்டில் கிடைத்தது என்னவோ உண்மை. உருவி

வேறொரு ஐட்டம். இதை யார் எப்ப சொருகி வெச்சா தெர்ல. முதலாளி எப்பவோ வெச்சிட்டு மறந்திட்டாரா? இல்ல அந்தப் பய வேலுச்சாமி வெச்சிருக்கானா? இல்ல வேற யாராவது?

இந்த மாதிரி அனுபவங்கள் அவனுக்குப் பட்டணத்தில் உண்டு. தெருப்பக்கங்களில் பிசிஓன்னு தகரப் பெட்டியில் காது போல் மாட்டிய தொலைபேசிகள் கண்ணாடி அறைக்குள் இருக்கும். யாரும் வரலைன்னா போய்த் தட்டுவான். கலகலன்னு காபரே டான்சராட்டம் துட்டை உதிர்த்துவிடும் சில சமயம். அதே போல ரயில்வே வளாகங்களில் எடை பார்க்கும் மிஷினில் இருந்தும் காசு எடுத்திருக்கிறான். அதிர்ஷ்டம் இருந்தாக் கிடைக்கும்...

கண்ட இடத்திலெல்லாம் துட்டெடுக்கும் மாஜிக் போல!

அவசர ருசித் தேவைக்கு வைக்கப் படப்பை அணுகலாம் என்று தோணியது.

நம்ம சுந்தர ராமசாமி அந்தக் காலத்துல “புளிய மரத்தின் கதை”ன்னு ஒரு நாவல் எழுதினாரு. “வைக்கப் படப்பின் கதை”ன்னு எழுதலாம் போலுக்கேய்யா...

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-22                                                                                          தொடர்கதை பகுதி-24

 
                                                                                                                                                                                                                 முகப்பு