........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

24. பாண்டித்துரையின் பழைய கதை

இப்பதான் டேப், சி.டி.ன்னு வந்துவிட்டது. அந்தக் காலத்தில் கிராமபோன் ரெகார்டுதான் தோசைக்கல்லாட்டம் ஒரு தட்டு. அதில் கருப்ப ரெகார்டை ஓடவிடணும். நீண்ட கை மாதிரி ஒரு அமைப்புல குண்டூசி போல முள்ளைப் பொருத்தி ஓட விட்டா டியெம்மெஸ் விழுந்தடிச்சி எந்தரிச்சிப் பாட ஆரம்பிச்சாரு.

இருட்டுதான் ரெக்கார்டு. இருட்டின் அமைதியக் கீறினாப்ல வீட்டுக்கு வீடு டி.வி.அலற ஆரம்பிச்சிட்டது. கிராமம்னா என்ன பட்டணம்னா என்ன... இந்த இம்சையில் மாற்றமேயில்லை. ஏழு மணிக்குச் செந்திலைக் கவுண்டமணி ஒரு எத்து எத்தினா வெளிநாட்டுக்காரன் ஃபுட்பால் மேட்சை ரசிக்கிறாப்போல தமிழ்நாடே சிரித்து அதிர்ந்தது. ஏழரை நியூஸ் என்று வந்தால் ஜனங்கள் டி.வி. சத்தத்தைக் குறைத்துவிட்டு அவசர அவசரமாய்ச் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

வீட்டில் அனைவரும் சுவாரஸ்யமாய் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாண்டித்துரைக்கு சினிமா சுவாரஸ்யப்படவில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று பாதி மனசு அவர் மாடியில் உடைக்க வைத்திருந்த சரக்கில் இருந்தது. ரெண்டாவது காரணம்.

சினிமாக்களில் விஜயகாந்த் ஏழையா வந்தால் அந்த ஊர்ப் பண்ணையார் வில்லனாகி விடுகிறார். அவரே பணக்காரனாக வந்தால் அவர் நல்லவர்... வாரி வழங்கினா தோள்ல கம்பீரமா வீசிப் போட்டு நடக்காரே அந்தத் துண்டு குறிதவறி மண்டைக்கு எகிறிரும்ப்பா.

சன் டி.வி.ல விஜயகாந்த் வாரி வழங்குறாப்லியும், விஜய் டி.வி.யில பண்ணையாரை எதிர்க்கிறாப்லயும் படம் ஒரே சமயத்தில் ஓடிக்கிட்டிருக்கு.

ஜனங்க கொஞ்ச நேரம் இதைப் போடுதுங்க. இதில் பாட்டோ விளம்பரமோ வந்தால் பட்டுனு அதை மாத்திருதுங்க.

சின்னத்திரையில் பண்ணையார் ஒரு பெண்ணைக் கற்பழிக்கப் போக, நம்ம அண்ணாச்சிக்கு என்னவோ போலிருந்தது. எழுந்து மாடிக்குப் போனாரு.

அதுவரை அய்யம்பெருமாள் காத்திருக்க வேண்டியதாயிட்டு. மைக்டைசன் தயாரா இருக்கு. டம்ளர் காலியா பக்கத்ல கூட ஐட்டம் சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ். அவரு வர்றவரை ஏளாமத் தத்தளிக்கான். ரயில்வே ஸ்டேசன் லெட்ரின்ல வெளிய காத்திருக்கா மாதிரி.

வைக்கப் படப்பில் "ஜாக்கி"யைக் கண்டெடுத்ததைச் சொல்லலாமா என்றிருந்தது. அதாங்க அறிவாளின்றது. நாமே இங்கத்திய ரகசியங்களைக் கண்டுபிடிப்பம். எதையும் காட்டிக்க வேணாம்னது அறிவு சூப்பர்லா? "எங்க எடுத்திட்டு வா" அது இதுன்னு அவரு பரபரப்பாகி தேவையற்ற குழப்பங்களை நாம உருவாக்கிறபடாது. அட நாமளும் அனுபவிப்பம். அதை விட்டுட்டு...என்றது மனம்.

வந்தார் பாண்டித்துரை. இந்த வயசிலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. சட்டையில்லாம மேல்துண்டு மாத்திரம் அணிஞ்சிருந்தார். (என்னவோ வீட்ல துஷ்டி...என்கிறால்ல!) சினிமாப் போல அவரும் துண்டை ஒரு வேகச் சுழற்று சுழற்றித் திரும்பப் போடுவாரா தெர்ல. என்னத்த, சனியன் இதுக்கு விசிலடிக்கவே தெரியாது...

சரக்குல ஒஸ்தி வெரைட்டியே தெர்ல. தனியா எந்த முடிவும் எடுப்பாரான்னு தெர்ல... சில ஆளுக ஸ்டூடியோல போயி படம் எடுத்தான்னா கைகளை என்ன பண்றதுன்னு திணறிப் போவாப்ல. சட்டை பட்டனைக் கிள்ளுவான். மடிச்சி வெச்சிக்குவான். பேண்ட் இல்லாட்டி ஒரு பெரிய உசரத் திண்டில் முட்டை அமுக்கிக்கிட்டு நிப்பமான்னு தேடுவான்... என்னா முடிவெடுக்கறதுன்னு அவன் படுற பாடு... காமெராக்காரன் வெறுத்துருவான். சொந்தமா யோசனை தெரியாத பயல்வ. அல்லது ஆயிரம் யோசனை இருக்கும் உள்ள. எது சரின்னு புரிபடாது.

அவன் எதிர்பார்த்தபடியே பண்ணையார் வந்து உக்காந்து "உடைப்பமா?" ன்னு சூடாக்கிக்கிட்டாரு. காம்பினேசன் ஐட்டம் சிக்கன் சிக்ஸ்டி ஃபைவைப் பாத்துக்கிட்டாரு.

"அதென்னடா 65?"

""அது...65 நாள் குன்சு இறைச்சி முதலாளி"

"தெரிஞ்சி வெச்சிருக்கியேடா..." என்று அவன் முதுகைத் தடவினார். ஆரம்பிச்சிட்டாரய்யா.

"உனக்கெப்படித் தெரியும்? நீ கேள்விப்பட்டியா?"

"இல்லீங்க கோவில்பட்டி!"

கொஞ்சம் யோசிச்சி. பின்ன சிரிச்சாரு.

பாட்டிலில் கொள கொளன்னு திரவ்ம் விழும் சத்தமே உள்ள என்னமோ செய்யுது.

"சோடா இல்லியாடா?"

"இருக்கு வேணுமா?" ங்கான்.

"ஏலேய் நீயி?"ன்னு நிமிர்ந்து பார்த்தாரு. சிரிக்கான். "அப்படியே அடிப்பியா?" ன்னு திரும்பத் தடவ ஆரம்பிச்சிட்டாரு. பயமா இருந்தது. பெரியாளுங்களை ஓவரா நம்பப்படாது. தூக்கறாப்லருக்கும் திடுதிப்னு தள்ளிருவாங்க...மைக் டைசன் மாதிரி...!

தண்ணியடிப்பது பத்தி வகுப்பு எடுக்கலாம் போலிருந்தது. புதுச் சரக்கு.

எத்தனை ஆளுங்களைப் பாத்தாச்சி. சரக்கு ஏறியதும் படபடன்னு உளற ஆரம்பிப்பான். சில பேர் கப்புனு கம்னாட்டி வாயடைச்சிப் போயிருவான். ஒண்ணி ரெண்டு பார்ட்டிங்க அந்தாக்ல அழுது உருகும்... பண்ணையார் என்ன செய்யப் போறாரு?

ஹான்னாரு. உள்ள கிர்ர்னு சைக்கிள்ப் பல்சக்கரம் மாதிரி என்னவோ உருண்டாப்லயிருந்தது. "என்னடா இது? கண்ணே தெரியலியேடா? எலேய் நீ எங்கருக்கே..."

"ஒண்ணில்ல முதலாளி... செட்டாவ கொஞ்ச நேரம் ஆவும்..."

"ஆவட்டும் ஆவட்டும்..."

கீழ விஜயகாந்த் வந்துட்டாப்ல. ஜாக்கெட் கிழ்க்கும் வரை வராத மனுசன். பூபதி கைதட்டுகிறான். அப்பனுக்குத் துரோகம் செய்கிறான் படுபாவி...என்று நினைத்துக் கொண்டார் பண்ணையார். துக்கம் விக்கியது. ஒரு வேளை அம்மாவுக்கு அப்பன் துரோகம் செய்யிறதா அவன் நினைச்சிக்கிட்டானோ என்னமோ?

"சரக்கு எப்டிங்க முதலாளி?"

"ஹ்ர்ரும்" என்கிறார் மீசையைத் தடவிக் கொண்டே பாட்டிலை உடைச்சி சாப்பிடுவதில் என்ன வீரம் இருக்கு? மீசையை உருவி விட்டாறது...?

எதுக்காகவோ எழுந்து நிக்கப் போனார். தள்ளாடியது... பொம்மலாட்ட பொம்மை போலிருந்தது. அவரைப் பார்க்க. "உக்காருங்க முதலாளி" என்றான். வேட்டி பகல் பொழுதென நழுவிக் கீழே சரிந்து அண்டிராயர் காட்டியது. பகலுக்குள் இரவு கட்டி விட்டான். அடேங்கொக்க மக்கா, மொதல் ரவுண்டுக்கே மனுசன் லாயக்கில்லியே?

"ஐட்டம் எப்டிங்க அய்யா?"

"ஹ்ர்ரும்" என்றார். அவர் திரும்புவதற்குள் சோடாக் கலப்பில்லாமல் அப்டியே வாயில் பாட்டிலைக் கவிழ்த்துக் கொண்டான் அய்யம். "ஹ்ர்ரும்" என்றான் அவனும். முதலாளி முன் தண்ணியடிக்க சிறிது பயமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் அவர் மலையேறியாச்சி... என்று உறுதி செய்து கொண்ட பின், இனி காத்திருக்க வேண்டியதில்லை என முடிவெடுத்திருந்தான்.

பகலில் அத்தனை வேகமும் ஆவேசமும் மிக்க அவரது குரல், ஆளுமை எல்லாமே மாறி ஒரு பூஞ்சை முகம்... குழந்தை முகம் வந்திருந்தது. இன்னுங் கொஞ்சம் டம்ளரில் ஊற்றி சோடாவும் நிரப்பி நீட்டினான். மறுக்கலாமாய்க் கையை ரயில்வே கார்டு கொடியசைத்தாற் போல ஆட்ட நினைத்தவர் கடைசியில் மனம் மாறி வாங்கிக் கொண்டார். "ஹ்ர்ரும்" எனத் திரும்பவும் ஒரு பன்றியின் உறுமல்.

இருந்த உற்சாகத்துக்கு மனதில் பாட்டு வந்தது. கொடியசைந்ததும் ட்ரெய்ன் வந்ததா? ட்ரெய்ன் வந்ததும் கொடியசைந்ததா?

எவனோ ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் பாட்டு எழுதியிருப்பான் போல.

"ஐயா நீங்க உக்காருங்க" என்று அமர்த்தினான். "ஹ்ர்ரும்" என்று உட்கார்ந்தார். சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் தேடினார். கண்ணு மயங்கியது. தட்டை நகர்த்திக் கையருகே வைத்தான். பிரியாணி மணம் தனி எடுப்பாய் இருந்தது.

"ஹ்ர்ரும்" என்றார். அவனைக் கிட்டே கூப்பிட்டார். கன்னத்தைத் தடவிக் கொடுத்தார். வார்த்தைகள் குழற ஆரம்பித்தன. "வனஜாவுக்குத் தண்ணியடிக்கறது பிடிக்காது..." என்றார். சரியாகப் புரியவில்லை. "என்னங்க முதலாளி?" என்றான். அவர் வேட்டி திரும்பவும்நெகிழ்ந்தது...மனசைப் போல.

"மறக்க முடியல்லியேடா" என்றார். அழுதுருவார் போலிருந்தது.

"ஹ்ர்ரும்" என்றான் அவன்.

"ஹ்ர்ரும்" என்றார் அவர். அடிக்கடி எச்சில் ஊறி ச்ச் என இழுத்துக் கொண்டார். திடீரென சிவந்த விழிகளால் அவனைப் பார்த்தார். தலையைக் குனிந்து கொண்டார். என்னவோ தப்பு பண்ணி விட்டாப் போல.

"ஹ்ர்ரும்" என்றான். "கேக்கவே ரொம்ப இதுவா இருக்குங்க மொதலாளி" என்றான். - சுவாரஸ்யமாய் இருக்கு என்றா சொல்ல முடியும்...

"எசமானியம்மா படம் ஒண்ணு கூட இல்லீங்களே முதலாளி..."

"ச்" என்றார். எடுத்திட்டேன்...அவளைப் பார்க்கவே அழுகை வரும்..." என்று பாட்டிலைப் பார்த்து அழ ஆரம்பித்தார். பாட்டில்தான் வனஜா என நினைக்கிறாரா?

அவளுக்குத் தண்ணியடிக்கிறது பிடிக்காதாமே...

நல்லவேளை செத்திட்டா.

"ஊத்துறா" என்றார்.

"பாத்துங்க மொதலாளி..."

என்னத்தைப் பாக்குறது? இப்ப மாடியிறங்க லாயக் இல்லை மனுசன். போதை முதலில் இறங்கி, பின்ன மாடியிறங்க வேண்டும். அவர் சட்டையில் இருந்து ஒரு பெரிய நோட்டை எடுத்து தன் சட்டைப்பைக்கு மாற்றிக் கொண்டான். சட்டென்று கையைப் பிடித்துக் கொண்டார்... பயந்து விட்டான். அதானே, பண்ணையாரா கொக்கா என்றிருந்தது.

"என்னா வேணும் உனக்கு? பணந்தானே? எடுத்துக்க..."

அவரே கையில் சிக்கிய நோட்டுக்களை எடுத்து வீசினார். காற்றில் சர்ரென நகர்ந்தன ரூபாய்த்தாள்கள். அவசரமாய்ப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். விஜயகாந்த் நடிக்காத பாத்திரமா இருக்கேய்யா? வில்லனும் அல்ல... வள்ளலும் அல்ல... வில்ல வள்ளல்!லூசு மேதைன்றாப்ல.

"ஹ்ர்ரும்"...இவ... பாகி... இவளுக்கு என்னைப் பிடிக்காது..."

ஏன்னு கேட்க நினைத்தான். எதுக்கு வம்பு? "ஐய நீங்க எவ்ள தங்கமான மனுசன்...உங்களைக் கூட ஒருத்தருக்குப் பிடிக்காமப் போகுமா?" என்றான்.

லேசா ஒரு விக்கல் வந்தது அவருக்கு. வாந்தி எடுத்திருவாரோ? வனஜாவையே...ச்சீ, பாட்டிலையே பார்த்தார். "ஹ்ர்ரும்" என்றான் அவனும். மொட்டை மாடி முள்ளுக்காடாகியிருந்தது. இரண்டு பன்றிகளும் மாறி மாறி உரும ஆரம்பித்திருந்தன.

"வனஜா நல்லாப் பாடுவா" என்றார். பாட்டில் பாட்டுல்லாம் பாடாது முதலாளி.

கைல கெடச்ச ரூவாத்தாளை எடுத்து நீட்டிட்டாரு. பகல்ல பத்துப் பைசா வாங்க முடியாது மனுசங்கிட்ட.

வேலுச்சாமி. இப்படி எத்தனை துட்டு அள்ளினானோ என்று பாட்டிலைப் பார்த்தபடியே பெருமூச்சு விட்டான். பாட்டிலே பாண்டித்துரைக்கு வனஜா என்றால்,,,அவனுக்கு அது வேலுச்சாமி.

"ஹ்ர்ரும்" என்றான் அவன். "ச்" என்றார் அவர்.

"பாகீக்கு என்னியும் பிடிக்கல... என் பிள்ளைங்களையும் பிடிக்கல..."

வனஜாவையும் பிடிக்கல என்று தோணியது.

"ச்" என்றான். "ஹ்ர்ரும்" என்றார்.

கீழேயிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது. பாராட்டுக்கள் ஏழை விஜயகாந்துக்கா தெர்ல...

இங்க பண்ணையார் பாண்டித்துரை அழ ஆரம்பித்து விடுவார் போலிருந்தது. உள்ளே நினைவுகள் அவருக்குச் சுடுகாட்டுப் புகை போல மண்டின. "இன்னிக்கு எனக்குத் தூங்க முடியாது" என்றவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார். தலை உள்ளிழுத்து ஒரு ஆட்டம் ஆடியது உதறி விழித்துக் கொண்டார்.

அவரால் இனியும் விழித்திருக்க முடியாது என்று தோணியது.

உட்கார்ந்து மீதி சிக்கன் 65 ஐச் சாப்பிட ஆரம்பித்தான். பகலுக்கும் இரவுக்கும் எத்தனை வித்தியாசங்கள். பகலில் வெளிச்சத்தில் தைரியம் உள்ளவர்கள் இருட்டில் பயப்படுகிறார்கள். கோழையாய் உணர்கிறார்கள். குழந்தையாகி விடுகிறார்கள். பிரியாணி சுற்றிய பேப்பரிலேயே கை துடைத்துக் கொண்டான். வனஜாவை... ச்சீ, வேலுச்சாமியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

திரும்பிப் பார்த்தான். அவர் தூங்க ஆரம்பித்திருந்தார்.

என்ன தோணியதோ திரும்பப் போய் ஒரு நோட்டை அவர் சட்டைப் பையில் இருந்து தன் பைக்கு இடம் மாற்றிக் கொண்டான்.

சத்தமில்லாமல் இறங்கி வந்தான். சிரிப்புச் சத்தம் அடங்கி கிளைமாக்ஸ். எட்டிப் பார்த்தான். பாகீக்கு என்னைப் பிடிக்காது...

பாகீ... என்று தேடினான்.

ஐய அவ சொக்கத் தங்கம்லா... கருப்புத் தங்கம்.

டி.வி.பெட்டி அருகே பாகீஸ்வரி இல்லை. மெல்ல நழுவி மீதி டைசனை வைக்கப்படப்பில் பத்திரப்படுத்த நினைத்தான்...ஆ!

என்னவோ சத்தம் கேட்கிறது. வைக்கப்படப்பில் பாட்டிலைச் செருகப் போகிறான்...மறுபக்கம்...

அது...பாகீஸ்வரி கூட அந்த ஆம்பளை...அது, வண்டிக்கார வேலுச்சாமி அல்லவா?

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-23                                                                                          தொடர்கதை பகுதி-25

 
                                                                                                                                                                                                                 முகப்பு