........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

25. அய்யம் பார்த்த காட்சி

அடடே, முத்தயுத்தம் ஆரம்பிச்சிட்டது போலுக்கே. வேலுச்சாமி? அட பாவி மனுசா... என்ன புண்ணியம் பண்ணி இப்டி ஒரு வாழ்க்கை அனுபவிக்கியோ?

இந்த ஜென்மத்துல பாவம் பண்ணி வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கவே போன ஜென்மப் புண்ணியம் வேணும்ல?

லேசான இருட்டு. அவனே தட்டு தடுமாறி நடக்கான். கையில் பாட்டில். யாரும் பாத்திறப்படாதேன்னு வீட்டுப் பின்புறம் பதுங்கிப் பதுங்கி சத்தமில்லாமல் போனான். உள்ளதான் கிளைமேக்ஸ். தொலைக்காட்சித் திரைப்படத்தில் என்றால், வெளியயுமா? சூப்பர்!

இருட்டு. நான் வைக்கப்படப்பைத் தடவுகிறேன். ஜாக்கி இல்லை. ஆச்சர்யமா இருந்தது. அதைவிட ஆச்சர்யம்... படப்பின் மத்த பகுதியில் சத்தம். முத்தச் சத்தம்... என்னவோ பாம்புதான் பதுங்கிட்டு வெளியேறுதோன்னு பாத்தா...

இது மனுசப் பாம்பு.

வேலுச்சாமி நீ ஹீரோவா வில்லனா?

பாகிக்குட்டிக்கு ஹீரோ. பண்ணையாரின் வில்லன்!

அப்ப எனக்கு?

தெர்ல! போகப் போகத் தெரியும். அந்தப் பூவின் வாசம் புரியும்... உலகத்தின் முதல் கறுத்த பூ. யானைக்குட்டி. பாகிக்குட்டி. முதல் பார்வைக்கு அந்தக் காட்சி தாக்கிட்டது. அடங் கொய்யா, தலைல இளநி விழுந்தாப்ல..மொதல்ல அதிர்ச்சி! அடுத்த கணம் சிரிப்பு தாள முடியல்ல... அவனால முடிஞ்சது அவ்ளதான்னு...பாட்டிலை அழுத்தமா செருகிட்டு திரும்ப மாடியேறிட்டான். படபடப்பு. மூச்சு திகைத்தது...வேகவேகமா சைக்கிள்ல வந்தாப்ல. அத்தோடு ஒரு வேர்வை குப்பென அப்பியது. முள்ளில போயி சைக்கிளை ஏத்திக் கீழ விழுந்தாப்ல. அங்கங்க சிராய்ச்சிக்கிட்டாப் போல... அத்தோடு சிரிப்பு. திரும்பிப் பார்த்தா பாண்டித்துரை தூங்கிக்கிட்டிருக்காரு. வாயைப் பொளந்துக்கிட்டு. வெறுன்ன வாயைப் பொளந்து என்ன செய்ய?

வேட்டி நெகிழ்ந்து கிடக்கு. அதைப் பார்க்க இன்னும் சிரிப்பு.

பாகீ...? என்று மனம் சத்தமெடுத்தது. கருந்திராட்சை. கருப்பு வெண்ணெய். சமையலறையில் இருந்து அவள் வெளிவர ஒரு ஸ்ரீ வில்லிபுத்தூர் சீயக்காய்த்தூள் குளிச்ச ஜோருக்கு வாசம் வரும். உனக்குப் பிடிக்குமா வேலுச்சாமி? படுபாவி சண்டாளா, மாட்டைக் குளிப்பாட்டச் சொன்னா அவன் பாரப்பா மனுசாளையே குளிப்பாட்டறான்? தேறிட்டான்னு அர்த்தம்.

தமிழ்ல் ஒரு வசனம் உண்டு. பெண்டாட்டி செத்து கவலைப்படுறியேன்னாளாம்...அவன் நீயே வாயேண்டி வப்பாட்டியான்னானாம்! அந்தக் கதையாட்டம்...

வைக்கப் படப்பில் புதையுண்டு ஆயிரம் ரகசியங்கள் கிடைக்கும் போலுக்கேய்யா...

இருட்டுக்குள் இருட்டு போல பாகி. குகையிருட்டு. சரி. பசிக்கு எருமைதான் கயித்தை அவுத்துக்கிட்டு வைக்கப்படப்புக்கு ஒதுங்கிட்டதுன்னு பார்த்தா, இது வேற எருமை. பாகி!

இது வேற பசி!

பண்ணையார் வீடுகளில்... பணக்கார வீடுகளில் எத்தனை கதைகள்.

உள்ளே இருக்கிற ஃபோட்சுக்கு (ஃபோர்ஸ்) போதயே சப்புன்னு போச்சி. சரி போயி பாட்டிலை எடுக்கப் போக முடியல்ல... டைசன் போதையே அடங்கிச்சின்னா, ஆச்சர்யம்தான்.

திரும்பி முதலாளியைப் பார்த்தான். பாகீக்கு என்னைப் பிடிக்காது... அவளுக்கு அந்த வேலுச்சாமியப் பிடிச்சிருக்கு. உமக்கு? உமக்கு சனி பிடிச்சிருக்கு...

சினிமாவில் காணாத கதையா இருக்கேய்யா. பண்ணையார் அட்டகாசம்தான் விலாவாரியா வரும். பண்ணையாருக்கு எதிரா இந்த மாதிரி கதை சுவாரஸ்யமா இருக்கு... இப்டிக் கதைங்க... கொஞ்சம் வயசாளிங்களின் காதல்... கள்ளக் காதல்... சினிமாவில் வர்றதில்லை.

ஏன்?

தெர்ல

அதற்கு தினத்தந்தி!

சரி மாப்ளை. இந்தக் கதைக்குத் தலைப்பு... ஆ. முத்தயுத்தம்! நல்லாத்தான் இருக்கு. இல்ல? மன்மத அம்புகளால் யுத்தம். யானைப்படைக்கு பதிலா எருமைப் படை. சாராயம் கலந்த, வியர்வை கலந்த, என்னென்னமோ கலந்த வைக்கோல் வீட்டு எருமை சாப்பிடுது...

பாண்டித்துஅரை வித்தியாசமான ஆளு. வில்ல வள்ளல். அப்படின்னா பாகி? வில்லி வள்ளி.

கால காலமாய்க் காத்திருந்த டைசன். போதை அடங்கிட்டது. இன்னொரு பெப் ஏத்தினா கிக் திருப்பியும் ஏத்திக்கிர்லாம். கீழ கிளைமாக்ஸ் முடிஞ்சிருக்குமா தெர்ல. போயி டிஸ்டர்ப் பண்ண மனசில்லை.

படத்தின் கிளைமாக்ஸையும் வீட்டின் கிளைமாக்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான். சும்மாவா? அய்யம்பெருமாள் பெரிய ஆராய்ச்சியாளன்லா?

சமுதாயத்தில் பல்வேறு வாழ்க்கை மட்டங்கள் இருக்கு. வர்க்க பேதங்கள். அதுக்குத் தக்ன வாழ்வம்சங்களும் அமையுதப்பா. தவிரவும் "இந்த" மாதிரி விசயமெல்லாம் சுரப்பிகளின் அட்டகாசம். மனுசாள் என்ன பண்ணுவா பாவம்? இதுங்க சும்மா கெடன்னாலும் அதுங்க - பேயி...சும்மா விடாதுன்னு தோணுது.

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோ?-ங்கான்.யாரு...? நம்ம பாரதி!

திருட்டுப் பண்டத்துக்கு ருசி அதிகம்தானளா? ருசித்துச் சாப்பிட ஆருக்குத்தான் பிடிக்காது சொல்லும். எல்லாம் தர்ம ஞாயமும் பசி பாக்கிற வரைதான். சாமியாருங்க எல்லாக் கதையும் சொல்வாங்க. ருசி பாக்காத ஆசாமிங்க.

நாம சாமியாரும் இல்லை. ருசி பாக்காதா ஆளும் இல்லை. நாட்ல அவனவன் தாக்குப் பிடிக்கிறதே...சிரிச்சிறப்படாது. ஆனா அதான் உண்மை. ஒரு பயத்துலதான்னேன். குப்புனு வேர்வை அப்பிருதுல்லா. நினைக்கவே உள்ள ஒரு குளிர்...

மனசு வேற...உடம்பு வேற... ரெண்டும் ஒரே மாதிரி வேலை செய்யணும்னு என்ன இருக்கு?

இதுல இன்னொரு விசேஷம், தெரிஞ்சிக்கிடனும். ஒரு தலைமுறைன்றது இருபது வருசம்ங்காங்க. அப்புறம் வாழ்க்கை ரெண்டாம் பாகம். இருபத்தி ஒண்ணு முதல் நாற்பது வரை. நாற்பதுக்குப் பிறகு? மூணாம் பாகம்னு வெச்சிக்கலாம்.

ஒவ்வொரு பாகத்லயும் வாழ்க்கைத் தரம், அறிவுத்தரம், ஒவ்வொருத்தரோட சிந்தனைத் தளம்...எல்லாம் மாறுதுன்னு ஒரு கணக்கு. இருபது வயசிலே பார்த்தேனே அதே ஆளு நாப்பது வயசில அதே மாதிரி இருக்கானா என்ன? இருக்க முடியுமா என்ன?

இருபது வயசில கம்யூனிஸ்ட்டா இருப்பாங்க. நாப்பது வயசில ஆன்மீகவாதியா ஆயிருவாங்க-ன்னு நம்மள்ல வேடிக்கையா ஒரு வசனம். பாதி ஆளுங்க அப்டித்தான்.

மனசு அந்த இளமைப் பருவத்துக்கு ஏங்கும். ஆனா நோ சான்ஸ். தியேட்டர்ல ஹவுஸ் ஃபுல் போட்டாப்ல. துள்ளித் திரிந்த காலங்கள். பயமற்ற காலங்கள். டக்னு பாத்த பெண்ணுக்கு - பேனாவை எடுத்து - என்ன பேனாவோ! அது அவரவர் சௌகர்யம். அதைவிடு மாப்ள... பட்னு இந்த வயசில், நாப்பதாவது வயசில் லவ் லெட்டர் எழுதிற முடியுமா? அட எழுதி நீட்டிற முடியுமா?

எழுத முடிகிறவர்கள் தைரியசாலிகள்தான். அதில் சிலர் வெற்றிவீரர்களாகவும் வலம் வருகிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள். மனசில் தைரியம் அல்லது பாக்கெட்டில் துட்டு தேவை. இல்லாட்டி போத்திட்டுப் படுக்க வேண்டியதுதான்.

கல்வி கரையில. கற்பவை நாள் சில.

சாரி. ஸ்பெல்லிங் மிஷ்டேக். கல்வி அல்ல - புள்ளி எக்ஸ்ட்ரா.

ஆச்சர்யமான விசயம் ஒண்ணு. இப்டி பக்கத்து வீட்டில் சாய்கிற தென்னை மரங்கள். மனசளவில் ரொம்ப அமைதியான பார்ட்டிங்களா ஒரு வேளை இருக்கும். உள்க் கொந்தளிப்பு அடங்கிட்டதில்லையா? என்ன மாப்ளே, சரியா?

காலை எழுந்ததும் திருநீறு பூசி அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டு அந்த நாளைய பணிகளை பாகி துவங்குவதையும் பெருமாள் இப்படித்தான் புரிந்து கொள்ள விரும்பினான். அது அவளது தனிப்பட்ட வாழ்க்கை. ரகசிய வாழ்க்கை. அது உனக்கேன் தெரிய வேண்டும்? தெரிந்து கொள்ளவும் விமர்சிக்கவும் நாம யாரு? கூந்தல் உள்ளவ கொண்டை முடிகிறாள். மொட்டப் பொம்பளை மண்டையத் தடவிக்கிட்டுக் கெடக்க் வேண்டிதான்.

ஒரு விசயம் ரகசியமாகக் கிடக்கையில் அழகாகவும் ஒளி பொருந்தி உள்ளெங்கும் பரவசமூட்டுவதாகவும் அமைகிறது. அதாவது அந்த ஆளுக்கு அனுபவிக்கிற ஆளுக்கு. அதே, வெளிய வந்திட்டதா ஆபாசமாயிருது. அதாவது மத்த ஆளுக்கு.

எது ரைட்டு? எது தப்பு? ஆரு சொல்றதுன்னேன்? சொல்லேலாது. சொல்லப்படாது.

எனக்கு பாகி தாயம்சம். சோறு பரிந்தூட்டும் பெண்ணம்சம். அவள் பார்வையின் அன்பு ஒளி இதோ இந்த மனசில் இந்த இடத்தில் பத்திரமாய் இருக்கிறது. முதல் காட்சிப் பதிவு அது. அவள் எனக்கு அறிமுகமான முதல் அனுபவப் பதிவு. ஒரு ரகசியம் பொட்டலம் போலச் சிந்தியிருக்கலாம். அதைக் கொச்சைப் படுத்த நான் யார்?

பரவாயில்லையே... என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான் பெருமாள். திருப்தியாய் இருந்தது. அதோட திரும்பிப் பண்ணையாரைப் பார்க்கிறான். உறங்கிக் கொண்டிருந்தார். சிரிப்பு வந்தது. அவர் முதல் சம்சாரத்தை இன்னும் மனசளவில் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அட, அவளை இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிறார். நல்ல விசயம்லா?

அவ இருந்த அளவுக்கு இவரு அவ காலையே சுத்தித் திரிஞ்சிருப்பாருன்னு தோன்றுகிறது. வேற பொம்பளை வாசனையே பிடிச்சிருக்க மாட்டாரு. அதே போல அவளுக்குப் பிடிக்கலையா சரின்னு தண்ணியடிக்க பழக்கத்தையும் ஏறக் கட்டியிருக்கலாம் அல்லது எபவாச்சும் வெளியூர் கிளியூர் போனா வெச்சிக்கிறது உள்ளூர்ல வீடு திரும்பச்சில ஒழுங்கா... சமத்தா இருப்பம்னு இருந்திருப்பாரு நல்ல விசயம்தானே?

நல்லவோ நல்ல விசயம். ஏன்னா... நானும் அப்பிடி ஆளுத்தானே!

இன்னொரு யோசனை. அவரு சொன்னதில் இருந்து அந்த வனஜா - அந்த மனுச சுந்தரியைப் பாக்கணுன்னிட்டிருக்கு. நம்ம பாண்டித்துரையையே போட்டு மாட்டிருக்கான்னா நல்ல மகாராசிதான். இவருடைய ரசனையையே அவள் வளர்த்தும் இருக்கலாம். வேட்டையாடும் வேட்கையையும் அடக்கியிருக்கலாம்.

அவளுக்குப் பிறந்த குழந்தைகளே இந்த ரெண்டும் என்று பாண்டித்துரை பேச்சுவாக்கில் சொல்றாப்ல.

அதனாலேயே பாகிக்கு இந்த குழந்தைகள், இவர்... என மனம் ஒட்டாமலும் போயிருக்க வேண்டும். ரெண்டாங் கல்யாண, செய்துக்கறது சாதாரண விசயமா என்ன? பொம்பளைங்க யார் அதை விரும்புவாங்க... அட துட்டை வெச்சி நம்மளப் போட்டு மாட்டிட்டாரேன்னு அவளுக்குள்ள அந்த வன்மம் காய்ச்சிப் போயிக் கிடக்கும்லப்பா. பக்கத்து வீடு எதிர் வீடு மனுச மக்களைப் பார்க்கணும்ல... சிநேகிதிங்க மூஞ்சில முழிக்கணும்... வாழ்க்கை எவ்வளவோ இருக்கு. அதிரடியா தாலி கட்டி நீ பதிவிரதையா இருன்னா ஆச்சா? தாலி கட்டற முகூர்த்தத்தில் பிறத்தியார் சத்தம்... நாராசச் சத்தம்... கேட்கப்படாதுன்னு கெட்டி மேளம் வாசிச்சாறது...

கல்யாணப் பொண்ணு மனசே இரையும் போது என்ன செய்யிறது? மனுசன் பாகிட்ட கேட்டிருக்க மாட்டாரு. கேக்காண்டமா ஒரு வார்த்தை... என்னப் பிடிச்சிருக்கா? - அப்டின்னு... கேக்காதது எத்தனை பெரிய தப்பு? எத்தனை பெரிய பாவம்?

அவரு விரும்பாமலேயே கூட பெத்தவங்களாப் பாத்து அவருக்கு பாகியைக் கட்டி வெச்சிருக்கலாம்...

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் எத்தனையோ சுவாரஸ்ய முடிச்சுகள். சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்றாப்ல பேசிறப்படாதில்லையா?

அவரவர் மனசுக்கு...அதும் அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கபடி சிலது சில சமயம் நியாயம்னு படுது. சில சமயம் அடப்பாவி மக்கான்னு மனசு அலறுது - இல்லையா? என்ன நான் சொல்றது?

தண்ணியடிக்கது ரைட்டா?

தப்புங்கம். அது நம்பூர்ல. ஒரே சூடு பூமி இது. உனக்கு அந்த சமாச்சாரம் தேவையே இல்லை இங்கே. ஆனா வெள்ளைக்காரனுக்கு...? அந்தப் பனியில உடம்பு வெரைச்சிறாம இருக்க... அந்தக் கோட்டு அந்த சூட்டு தொப்பி... போர்த்திய உடை விஸ்கி -உள்க் கதகதப்பு வேணும்ல. இல்லாட்டி உடம்பே அந்தப் பனியில பேயைப் பாத்தாப்ல நடுங்கிப் போகும்லப்பா.

அய்யம் பெருமாள் ஒண்ணும் அறிவாளி அல்ல. எதோ தேடித் தடவிப் படிச்ச இலக்கியம்... பரவால்ல ஆளை நிதானப்படுத்திருக்கு நல்ல விசயந்தான்.

ஒரு பார்வைக்கு இந்த இலக்கியவாதிங்க சமுதாய் எதிரிங்க போல...குழப்பவாதிங்க போல் தெரியும். ஆனா அவங்களுக்குள்ள ஒரு சுய நிதானம், வேற மாதிரியான அணுகுமுறை, வாழ்வில் ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் இருக்கு. இல்லாமல்லாம் இல்லை.

மனிதனை...மனிதனுக்குள் இருக்கிற நல்ல மனிதனை வெளியே கொண்டு வர்ற வேலையை அவங்க துப்புரவாச் செய்யறாங்க. உள் மனசையும் கொச்சைப்படுத்தாமல், வெளி வாழ்க்கையையும் அகௌரவப்படுத்தாமல் ஒரு விசயம் அவங்களால சொல்ல முடியுது. நினைச்சிப் பார்க்க முடியுது.

அது சாதாரண ஆட்களுக்கு... வாழ்க்கையின் நெருக்கடின்னு அமையும் போதுதான் தெரிய வரும்.

போதையே அடங்கிட்டதேய்யா... என்று கவலையாய் இருந்தான். போதையாய் இருந்தால் மனசு இப்படியெல்லாம் சிந்திக்குமா?

அதுசரி. நம்ம வெளுத்த தோல் அறிவாளிங்க... அவங்க தண்ணியடிச்சா? அது இல்லாம முடியாதே அவங்களுக்கு. அப்பிடி இப்பிடி ரேன்ஜ்ல அறிவு அவங்களுக்கு வேலையே செய்யாதா என்ன?

ஆனா பெரிய அறிவாளிங்கன்னு திர்றாங்களே? அது பொய்யா?

தெர்ல.

மணி எக்குத்தப்பா ஆயிருக்கும்னு தோணுது... என்று நினைக்கவே ஆவெனக் கொட்டாவி விட்டான். தூக்கம் கண்ணைச் சுழற்றியது. அவர்களைத் தேடி யாரும் மாடிக்கு வந்திருக்கலாம். தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்பியும் போயிருக்கலாம் அல்லது பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் சாப்பிட்டதை கவனித்து எழுப்ப மனசில்லாமல் போயிருக்கவும் கூடும்.

மாடியில் தனி உள்ளறை இருந்தது. படுக்கிற வசதியுடன். பண்ணையாரை அங்கே நல்லடக்கம் பண்ணியிருப்பார்கள்...! இவனை அப்படியே விட்டிருப்பார்கள்...!

அந்த வேல்ச்சாமியே கூட இதையெல்லாம் செய்திருக்கக் கூடும்.

அது அவன்தான்னு தோணுது. கவனமாய் அய்யம் பெருமாள் அன்டிராயரில் பதுக்கி வெச்சிருந்த துட்டு... காலையில் எழுந்து பார்த்தான். காணம்.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-24                                                                                          தொடர்கதை பகுதி-26

 
                                                                                                                                                                                                                 முகப்பு