தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
26.
பாகீக்கு ஒரு ஜாக்கி...?

அடப்பாவி மக்கா... எப்பிடியும்
பத்தைந்நூறு ரூவா இருக்க்கும். ஒரே நாள் வசூல். இனி எப்ப பண்ணையார் தண்ணியடிக்க...எப்ப
நாம அதைக் கண்ணால பார்க்க. அது வந்தாப்ல அப்டீ போக்கு காட்டி விட்டு, ரயில்வே
ஸ்டேசன்ல நிக்காமப் போன ரயில் மாதிரி, எலக்சன்ல ஓட்டுக் கேக்க வந்த கட்சித்
தலைவர் மாதிரி போயே போய்விட்டது....
அட எடுத்தவன் சரியான நப்பி போலுக்கு. சொந்தப் பணம் ஒரு பதினஞ்சி ரூவா
வெச்சிருந்தான் அய்யம். அதையும்ல நவட்டிட்டான் சண்டாளப் பாவி.
அண்டிராயர் மட்டும் விட்டுட்டான். ஏன்னு தெர்ல.
இரக்கமற்ற வேலுச்சாமி ஒழிக. இத்தனை நாள் அனுபவிச்சியேடா படுபாவி. ஒருநா ஒரேயொரு
நாள் எதோ என்னாலானது ஒரு பிடிபிடிச்சேன்னு பாத்தா...
முகம் கழுவித் துடைத்துக் கொண்ட போது அந்த இருள். அந்த சோகத்தைத் துடைக்க
முடியல்ல. கண்கள் சிவந்து கிடந்தன. சிறு தலைவலி. தண்ணியடிச்ச மறுநாளின்
அடையாளங்கள்.
வேலுச்சாமியிடம் கேட்கலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பம்.
நமக்கு துட்டு விசயத்தில் நல்ல நாளாட்டம் இருந்ததுன்னு பாத்தா, அவனுக்கு டபுள்
மடங்கு சூப்பர் நாளாயிட்டதே அது. காரியஜித்தன். இந்த வளாகத்துள் கூண்டுச்
சிங்கம் போல அவன் உலவுகிறான். அட நாந்தான் உள்ள தவறி விழுந்த மானாயிட்டேன்.
இனி உஷாராயிருப்பம். என்ன பண்றது?
அய்யம் எந்திரிச்சதுமே தன் துட்டை சரி பார்த்தான். இல்லைன்னதும் இறங்கும்போது
கவனித்தான். முதலாளி உள்ளறையில் தூங்கிட்டிருந்தார். இருந்த ஆத்திரத்துக்கு போயி
அவர் சட்டைப்பையில் இன்னும் ஏதாவது சிக்குமா என்று குடைய ஒரு வேகம்... மவனே
பொன்முட்டையிடும் வாத்து. அறுத்துப்பிடாதே...
அது மட்டுமில்லை. பெல்ட் அடிக்கு அவன் தயாராயும் இல்லை.
நடந்த நிகழ்ச்சிகள் ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தாப் போல மனசில் வந்தன.
எல்லாம் முடிந்தது. படத்தில் கிளைமாக்ஸ் வரும்னு பாத்தா, படம் பார்த்தவனின்
வாழ்க்கையில் கிளைமாக்ஸ்!
ஸ்ரீ வில்லிபுத்தூர் மணத்தது. சர்க்கரைப் பாகு போன்ற இனிப்புச் சிரிப்புடன் பாகி.
காபி தந்தாள். கபி நனைத்தூட்டும் தாய் இவள். விடியல் அவளை... இன்று புதிதாய்ப்
பிறந்தோம் என மலர்த்தியிருந்தது. வாழ்க்கை இரவென்றும் பகலென்றும் ரெண்டு
துண்டாக அல்லவா காணக் கிடைக்கிறது...
முதலாளியின் இன்றைய நிகழ்ச்சிகள் என்ன தெர்ல. வீட்டுக்குப் போயி இன்னுங் கொஞ்சம்
படுத்திருந்திட்டு, சாயந்திரப்பொத்ஹு வாக்கில் திரும்பினம்னா நல்லது.
முதலாளியிடம் கேட்காமல் எப்பிடிப் போறது...
அவரு வனஜாவைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு மாடியில கெடக்காரு! அவரு மனக் கதவைத்
தட்டி இன்னொரு கிளைமாக்ஸ் ஏற்படுத்த வேணான்னிருந்தது.
வைக்கோலை எடுத்துப் பிரித்து விரித்துக் கொண்டிருந்தான் அந்த ராஸ்கோல்
வேலுச்சாமி. உற்சாகமாய் ஒரு பாட்டு வேற வாயில். தாழையாம் பூ முடித்து...
அய்யத்துக்கு தொண்டையில் துக்கம் விக்கியது. மண்டையில் மொட்டையடித்துன்னு பாடறதா?
டிவியில் படம் மாத்தி மாத்திப் பாத்தாப்ல... அவன் வாழ்வில் நேத்து இடைவேளை வரை
எம்ஜியார் படம் போல் உற்சாகம். இன்டர்வலுக்குப் பின்...? சிவாஜி படம் போல ஒரே
சோகம்.
"வணக்கம் மாப்ள...நல்ல தூக்கம் போலுக்கு" என்றான் வேலுச்சாமி உற்சாகமாய்.
தூக்கமா தூக்கம்...
சட்டென்று கேட்டான். "வேலு, இப்டி -கீப்பாக்கெட்ல துட்டு... பத்தைந்நூறு
வெச்சிருந்தேன். பாத்தியா?"
"எவ்வளவு?"
"ஐந்நூறு"
"காணமா?" என்று வைக்கோலை எறிந்துவிட்டுக் கிட்ட வந்தான் வேலுச்சாமி. பிறவி
நடிகனாயிருக்கான். பெரிய பெரிய நடிகனையெல்லாம் பீட் அடிச்சிருவான் போலிருக்கே...
"பைல வெச்ச இடத்துல துட்டு இருந்தா ஒங்கிட்ட ஏன்யா விசாரிக்கிறேன்?"
வேலுச்சாமி மனசில் அதை - இவனது சோகத்தை ரசிக்கிற பரவசம் முகத்தில் தெரியுது. "பாத்டு
வெசிக்கிறனும் பெருமாளு. இங்கத்த வேலைக்காரங்க ரொம்ப மோசம்... நேத்து மொதலாளிய
யாரு உள்ள கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சாங்கன்னு விசாரி... விட்றாதே?"
"நீ இல்லியா?"
அவன் முகம் மாறியது. "நான் வேற வேலையா இருந்தேன்..."
"என்ன வேலை?"
"அதைப் பத்தி உனக்கென்ன?" என்றான் விரைப்பாய்.
கிளைமாக்சில் இருந்தான்...என்று நினைத்துக் கொண்டான் பெருமாள்.
"அது சரி பெருமாளு...உனக்கேது அவ்ள பணம்?" என்று பதில் பிடி போட்டான் வேலுச்சாமி.
அய்யம் அவனை ஒரு வினாடி பார்த்தான். பெருமூச்சு விட்டான். "அதைப்பத்தி
உனக்கென்ன?" என்றான்.
"எடேய், மொதலாளி தண்ணி போட்டாரா?" அவன் தொடர்ந்து விசாரித்தது பெருமாளுக்குப்
பிடிக்கவில்லை. "நீ போயி வாங்கிட்டு வந்தியா?" என்று தொடர்ந்து கேட்டான்
வேலுச்சாமி.
"ஜாக்கி ஒண்ணும் சுகமில்லை" என்றான் பெருமாள் சுருக்கமாய். நான் போனதும்
வைக்கோலில் புது ஜாக்கி பாட்டிலத் தேடுவான். தேடட்டும் நாயி...
ஒரு வேளை மைக்டைசனைக் கண்டுக்கிட்டால் என்று கவலையும் வந்தது கூடவே.
சரி, நனைஞ்சது நனைஞ்சிட்டம். இனி முக்காடு அவசியம் இல்லை. ஆனபடி ஆவட்டும்...
"யாரது மாப்ளை வனஜா?"
"ஆரு?" என்று வேலுச்சாமி திரும்பிப் பார்த்தான். "அவரு சொன்னாரா?"
"இவரோட முத சம்சாரமா?"
அட ஆச்சரியம்.
"இல்ல" என்கிறான் அதற்கும்.
"நம்ம எசமானியம்மா... (உன் லவ்வு) ரெண்டாவது சம்சாரமா இவருக்கு?"
அதற்கும் இல்லை என்று தலையாட்டினான்.
"அட சொல்லித் தொலை வேலுச்சாமி..."
மூணாவது கிளைமாக்ஸா இது?
"வனஜா இவரோட லவ்வு" என்றான் வேலுச்சாமி. கதை சுவாரஸ்யம் கூடிப் போச்சு. பலமான
முத்தயுத்தம் நடந்திருக்கும் போலுக்கப்போவ்.
முதலாம் பானிப்பட் போர். ரெண்டாம் பானிப்பட் போர்ம்பாங்களே அது மாதிரி...
வனஜா என்றொரு வனதேவதை. பழம் பொறுக்க வந்து அவர் மனதில் புகுந்து
கொண்டிருக்கிறாள்...
துப்பாக்கி ஏந்தித் திரிந்த அண்ணாச்சி பூ எந்தித் திரிகிற காட்சி...
ஒரு சினிமாப் பாடல் அங்க போட்டுக்கிடலாம். சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...
செந்தாமரை இரு கண்ணானதோ... எவன் பாட்டெழுதியது? இலக்கணம் தெரியாத ஆளு. இரு
கண்ணானதோன்னா... செந்தாமரைகள்னு பன்மை வராண்டாமா?
கிளைமாக்சில் இன்னொரு கிளைமாக்ஸ். விசயம் அப்பாவுக்குத் தெரிந்தது. அவரது 'கீ '
வசனம் பேசிட்டாரு. "எடு செருப்ப!"
ஏன் அவரே குனிஞ்சி எடுத்துக்கிறப்படாதோ...? தொப்பை இடிக்கும் போல.
எம்ஜியார் படம் சிவாஜி படமாயிட்டது. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்
தெரியாதா? யார் படம்... சிவாஜிதானே? அட பாடறது சரோஜாதேவி. அதுமாத்திரம் ஞாபகம்
இருக்கு. பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
பாரி மகளிர் ரேஞ்சில் பண்ணையார் எடுப்பு - அன்றொரு நாள் இதே இரவில் அவளிருந்தாள்
என்னருகே... நான் அடைக்கலம் தந்தேன் என்னுயிரை... நீ அறியாயோ நிலவே... உடனே
பட்டணத்து ரயில்வே ஸ்டேசன் பிச்சைக்காரன் ஆர்மோனியப் பிளிறல் பிளிறுகிறான்.
பாகீஸ்வரிக்கும் பண்ணையாருக்கும் கல்யாணம். பாகீ கல்யா...ஆ...ஆ...ண வைபோகமே...
என்று செண்டிமெண்டல் பாடல். பெருமாள் முதலில் நினைத்தது. கெட்டி மேளம்
சொந்தக்காரனின் இரைச்சலை அடக்க அல்ல... என நினைத்திருந்தான். அது ஒரு கிளைமாக்ஸ்.
ஆனா கதையில் திடுக் திருப்பம்.
என்ன? மாப்ளை பக்கத்தில் பாத்தா...? கரடிக்குட்டி! பாகிக்குட்டி...பயந்துட்டாருன்றியா...?
அட அதில்லய்யா. மாப்ளை மனசின் இரைச்சலை அடக்க கெட்டி மேளம்லா? டபுள் கிளைமாக்ஸ்..
இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாகம்பானே சன் டிவியில். அதைப் போல.
கெட்டி மேளம் கெட்ட மேளம் ஆயிட்டது.
புதுமையிலும் புதுமை. ஃப்ர்ஸ்ட் நைட்டில் சோகப்பாட்டு. கடவுள் மனிதனாகப் பிறக்க்
வேண்டும். அவன் வேறொருத்தியுடன் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட வேண்டும்...
ரொம்ப ஆடாதே அய்யம். இப்டி ஆட்டாமா ஆடி, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்றாப்ல,
உள்ள துட்டும் போச்சு உனக்கு...
*****
குடி வெறியில் அவர் சொன்ன அரைகுறை
கதை. அதை இவன் புரிந்து கொண்டது அதற்கும் மேலே... என்று புரிந்தது.
அண்ணாச்சியின் குழந்தைகள் வயசு அதிகம் இல்லை என்பதை அவன் கவனிச்சிருக்கண்டமா?
அட, பூபதி அந்த ரேவதி... பாகியின் சாயலில் இருப்பதை ஆலோசிச்சிருக்கண்டாமா?
இன்னம் எத்தனை கிளைமாக்ஸ் வருதோ கதைல? தெர்ல!
பிடிக்காத மனசு ஒட்டாத தாம்பத்யம். சும்மா வனஜா வனஜான்னா கல்யாணம்
முடிச்சவளுக்கு சுர்ர்ருனு மூக்குல மொளகாப்பழ நெடி ஏறாதா? இவரு கூட குடித்தனம்
நடத்த எவ சம்மதிப்பா?
முதல் மரியாதை கதை போலப் போகுதேய்யா...
மனசு ஒட்டாம உடம்பு மாத்திரம் ஒட்டி...ரெண்டு குட்டி!
தனக்கும் தன் மனைவிக்குமான உறவின் நெகிழ்ந்த கணங்கள்... அந்தரங்கப் பரிமாறல்கள்.
உடம்பு மற்றும் மனசின் சமிக்ஞைகள்... அந்த ஒட்டுதல்... சரி, ஓட்டுதல்னே
வெச்சிக்குவம். அவர்களிடையே இல்லை. பேச்சு வார்த்தை அதிகம் இல்லை.
மனைவியைக் கணவனே... போல ஆயிட்டதேய்யா? என்ன வித்தியாசமான கிளைமாக்ஸ். வாழ்க்கைல
நிறைய பேருக்கு அப்பிடி ஆகி விடுகிறது பாவம். முத்தமே யுத்த முத்தமா ஆயிருது!
உறவுப் பகை. உடனே விவாகரத்து, பிரிந்து போதல்னுல்லாம் சொல்லலாம். வாழ்க்கையில்
அதெல்லாம் சகஜமா என்ன?
உள்ளூற காயம் சுமந்து வாழ்தல். காலமல்ல அது ஆலகாலம்.
பாகீஸ்வரிகளுக்கு புருசன் வேண்டாம்- ஆனா இந்த சொத்து சுகம் அந்தஸ்து மரியாதை
எல்லாம் வேண்டியிருக்கிறது! கொழுக்கட்டை ஒரு தன்மையான மாமியார். டிங்டாங்
மணியடிக்கும் வித்தியாசமான யானைக்குட்டி. கழுத்துக்கழலை மகாராணி... என
வேறுவகையான... வாழ்க்கையின் முடிச்சுகளில்... பாண்டித்துரை போட்ட மூன்று
முடிச்சு தவிர... அவள் தாமரைக் கொடியில் சிக்கினாப் போலச் சிக்கிக் கொள்கிறான்.
தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டாத வாழ்க்கை. என்றாலும் பழகி விட்டது.
வாழ்க்கை கொஞ்சம் துவர்ப்பு. கொஞ்சூண்டு வாசனையும் கூடவே. ஸ்ரீவில்லிபுத்தூர்
கூந்தல்-தூள் போல.
அவசரப் படபடப்புக்கு வைக்கப் படப்பு. வேலுச்சாமி.
வெயிட்டிங் லிஸ்ட்னு, ஆர்.ஏ.சி ஏதும் உண்டா பாகீ? ...டாய்!
பாகிக்கு "ஜாக்கி" பிடிக்குமா?
கற்பனை ஓவராப் போயிட்டிருக்கு. "ஜாக்கி" அடிக்கிற ஜாக்கி... அந்த வேலுச்சாமி...
அவனே அவளது ஜாக்கி ஆயிட்டாப்ல... ரெட்டைப் புலவர் பாடல் ஞாபகம் வருது.
இக்கலிங்கம் போனால் என், ஏகலிங்க மாமதுரை சொக்கலிங்கம் உண்டே துணை. சாரி
சொக்கலிங்கம் அல்ல. வேலுச்சாமி. டாய் மகனே, காபி வாங்கிக் குடிச்சிட்டு கற்பனையை
ரொம்ப நீள விடறே... சுருக்கு.
புதிய நாள் அதுபாட்டுக்கு ஆரம்பிக்கிறது... பூபதியின் அவசர எழுச்சியுடன். போய்
டமாலென்று லெட்ரின் கதவை முட்டிக் கொண்டிருக்கிறான் அவன்.
காலை அவனுக்கு வயித்துக்குள்ள கன்னுக்குட்டி முட்டிதான் அவனே எழுந்து கொள்வான்
போல.
நெல்லடுக்கிய உள்ளறையில் வெளிச்சம் தாராளமாய்ப் புழங்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு
லாரியளவு முதலாளி விற்றிருக்கலாம். அதான் பைல துட்டு சரளமாப் புரண்டதோ என்னமோ
தெர்ல?
என் காசு போச்சேய்யா... அதைச் சொல்லு, என் மனம் அழுதது.
அந்த வனஜா எப்பிடி இருப்பா? - என மனசைத் தட்டியெழுப்பினான். நம்ம பாண்டித்துரை
வேட்டையாடப் போனார் துப்பாக்கியோட. காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி
வந்தேன்றாப்ல... வேட்டையாடப் போனார். லவ்வு வாங்கி வந்தார்.
அவரு கைல இருந்த துப்பாக்கிய அவங்கப்பா பிடுங்கி நெஞ்சுக்குக் குறி வெச்சிட்டாரு.
அப்பாவுக்கு பயந்த மனுசன். இவரு கதை பாகீஸ்வரி கல்யாணத்துல முடிஞ்சுது. அந்த
வனஜா கதை என்னாச்சி?
இருக்கிற மாமரத்தில் ஒரு மரத்தில் அவ தூக்கில் தொங்கிட்டாளா? அதுலேர்ந்து
பண்ணையார் காட்டுப் பக்கமே போறதில்லன்னு ஒரு யூகம்.
பூபதி வெற்றி வீரனாய்த் திரும்ப வந்தான்.
கிளைமாக்ஸ் போரடிக்கிறது. ஆன்ட்டிகிளைமாக்ஸ். வேலுச்சாமி பின்கட்டுத்
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
நெல் மூட்டை அடுக்கிய அறையில் அவன் சட்டை அவிழ்த்து ஆணியில் மாட்டியிருந்தது.
கைப்பக்கம் வீங்கிய மடிப்பு.
நம்ம அய்யம் பரபரப்பாயிட்டாப்ல. போயி மடிப்பை விரிச்சிப் பாத்தால், ஆகா, அதே
பணம். அதே புத்தம் புது தாள்கள். மவனே, எடுக்கலைன்னு பொய்யா சொல்றே...?
பீடிக்கட்டை நீயே வெச்சிக்க ஐந்நூறை அப்படியே எடுத்துக்க ஆவேசம் வந்தது. சே
வேணாம், என இரக்கம் கொண்டான் அய்யம் பெருமாள். உனக்குப் பாதி எனக்குப் பாதி...
சரிதானே? இதை அடுத்த பேச்சு வார்த்தையில் எதிர்கால டீலாகவும் வெச்சிக்குவம்டா?
அம்பது ரூவாத் தாள் இல்ல. இந்த முறை - எனக்கு முந்நூறு உனக்கு இருநூறு - நான்
உழைச்சிச் சம்பாதிச்சதில்லா...! என் கணக்கு அதிகம். ஓ.கே.?
உலகம் உற்சாகமாய்த்தான் இருந்தது.
கேட்டா, ஆமா நாந்தான் எடுத்துக்கிட்டேன்னு சொல்லுவம்... என்ன பயம்?
வேலுச்சாமி, பாகியில் எனக்கு பங்கு உண்டா...? அவள் பொன்முட்டை எனக்கும் இடட்டுமே...
வேலுச்சாமி பார்க்கு முன்னால் வீட்டுக்குப் போக பரபரப்பாய் இருந்தது.
உள்ளே ரேடியோலவில் பாட்டு. சிறப்புத் தேன்கிண்ண சிறப்பு அறுவை. அதற்கேற்றாப்
போல முதல் பாடல் ரம் பம் பம் ஆரம்பம்... ரம்பம் ஆரம்பம்...
வேலுச்சாமிக்கு விவரம் தெரியாது. செதுக்கி ஒதுக்கிய புல்லும் ஒரு மாதிரியான
வேட்டி - தலைப்பாக் கட்டுமா இவனைப் பார்த்துப் புன்னகையுடன் அந்த அபாயகரமான
கேள்வி கேட்டான்.
"பெருமாளு, எனக்குக் கார் ஓட்டக் கத்துத் தரியா?"
"உனக்கு வில் வண்டி. எனக்கு கார் - முதலைக்குத் தண்ணி. யானைக்குத் தரை..."
என்றான் பெருமாள். எசமானியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் சைக்கிளில். "சாயக்குடி
வரை போயிட்டு வரணும் அம்மா. அவ்சரம்னா நம்ப மூனா பானா கடைகு ஒரு போன் போட்டு
தாக்கல் சொன்னா வந்திர்றேன்..."
"சரி" என்று புன்னகைத்தாள். என்ன அழகு. கிட்ட வாயேன் ஸ்ரீவில்லிபுத்தூர்...?
டாய். நேரமாயிட்டது.
(தொடரும்...)
தொடர்கதை பகுதி-25 தொடர்கதை
பகுதி-27


|