தொடர் கதை
-2
முத்த
யுத்தம்
-எஸ்.
ஷங்கரநாராயணன்.
27.
பாண்டித்துரையின் கோபம்.

போர். வைக்கோற்போர். அதைச் சுத்தி
நடந்ததய்யா இன்னொரு அக்கப்போர். முத்தபோர்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததா? தெர்ல. அது போரில் ஈடுபட்ட பார்ட்டிங்க
சமாச்சாரம்.
வைக்கோற்போரில் வெயில் வந்த கணக்கில் காய்ந்த வைக்கோலை உருவி மாட்டுக்கு
வைப்பார்கள் என்ற அளவில்... மாட்டிக்கிடாத அளவில் மறுபக்கம் மேலப்புறம்
புதையல்களுக்கு அனுமதி இருக்கிறது.
வைக்கோற் போர் பக்கம் ஓடுவது சினிமாவோ அத கிளைமாக்ஸோ அல்ல - டிரைலர்தான்...எனவும்
நினைவில் கொள்வது நல்லது. வீட்ல சாப்டுட்டு வந்திருப்பான். இன்னாலும் டீக்கடையப்
பாத்ததும் துட்டுக் கொழுப்புல தோரணையா ஒரு டீ சொல்றதில்லையா...? அதைப்போல.
சிலாளுகளுக்கு தீப்பெட்டியப் பாத்தாலே கை சும்மா இராது... பெட்டியத் திறந்து
வேலை மெனக்கிட்டு ஒரு குச்சிய வெளிய எடுத்து ஆபாசமா ஒரு உரசு உரசிப்பாப்பான்.
அதைப் போல...
நல்ல உசரமான சிந்தனை பாரதியாருக்கு... அதுல என்னா சந்தேகம். விஷயம் என்னன்னா...சுட்டும்
விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ...ங்காரு இல்லியா? நேரா வானத்தைப்
பாக்கார். பொம்பளை ஞாபகம் வருது. வட்டக் கருவிழி வானக் கருமைன்றார்.
பட்டுக்கருநீலப் புடவையில் பதித்த நல்வைரம் நட்டநடு நிசியில் தோன்றும்
நட்சத்திரம்ன்றார்... வானத்தைப் பார்த்தாலே சும்மா ஜிகுஜிகுன்னு காத்து
பாரதியின் பனியனுக்குள்ளாற பாயுதுன்னேன்.
ஒடன்னே சாத்திரம் பாக்காதே. எனக்கு ஆத்திரம்... ஸோ இப்போ நோ சாத்திரம்ன்றார்
கண்ணம்மாகிட்ட. அறிவின் சுழற்சி ஆட்டமே போதை. உடனே பெண் கேக்குதப்பா மனசு
எக்குத்தப்பா. அது தப்பா? ஆம்பிளைப் பிறவியே அப்டியா...?
தெர்ல!
சைக்கிளில் ஏறியேறி மிதிக்கிறான அய்யம். பருவ நாடகத் தொல்லையைப் பார்த்த ஞாபகம்
வருது. எதிர்காத்து. வெயில் உக்கிரப்பட ஆரம்பிக்கிற வேளை. மனசுக்குள்ள எதாவது
ஐஸ் சமாச்சார ஜிலுஜிலுப்புருந்தா நல்லதுதானே?
துட்டு போச்சின்னே நினைச்சா நல்ல வேளை திருப்பிக் கெடச்சது பாதியாவது. அதைவிட
நல்ல சமாச்சாரம் வேலுச்சாமி சட்டைப்பையில் நாம கண்டுபிடிச்சது. ஏல பாத்தியா...?ன்னா,
என்ன துட்டு?ன்றான்... வாழ்க்கைல துட்டுன்னா என்னன்னே தெரியாத மாதிரி. பிறவி
நடிகன்தான். எலே இப்ப நீ அதே கேள்விய என்கிட்டக் கேளு... என் நடிப்பைப் பாரு.
ரெண்டு பேர்ல யாருக்கு ஆஸ்கார் பரிசுன்னு பாப்பம்! டிவில அய்யம்
பாத்திருக்காப்டி. ஆஸ்கார் பரிசு வாங்க வர்ற ஆம்பளைங்க அத்தனை பேருமே நல்லா
டீக்கா டிரஸ் பண்ணிட்டு கோட்டும் சூட்டுமா வர்றான். பொம்பளையாள்கள்தான்
கிழிஞ்சதும் கிழியாததுமா அலையுதுங்க. பணக்காரப் பிச்சைக்காரிகள்!
பைல துட்டு கிடக்கிற உற்சாகத்தில் மிதி அலுப்பு தெரியவில்லை.
புத்தம் புதிய புத்தகமே - உன்னைப் புரட்டிப் பார்க்கும் கவிஞன் நான்...
என்னாத்தைப் புரட்டிப் பாக்கறது? படிச்சிப் பாரேண்டா நாயே!
அந்தாக்ல டக்னு கேட்டாம் பாரு வேலுச்சாமி. எலேய் எனக்குக் கார் கத்துத் தரியா?
- இவனுக்குக் கத்துக் குடித்திட்டு...? நான் சோத்துக்கு சிங்கியடிக்கிறதா? இல்ல...
எருமையையும் பாகியையும் நான் குளிப்பாடணுங்களா?
இப்ப ஜாலியா சட்டையக் கழட்டி தலைல முண்டாசாக் கட்டிட்டு சைக்கிள்ல வந்தமே அதும்
மாறி அப்ப வர முடியுமா? மொதலாளி பேசாம வேலுச்சாமியைக் கூட்டிட்டு அர்ஜெண்ட்
அவசரம்னா வெளிய கிளம்பிருவாரு... ஆத்திரத்துக்கு அவரும் சாத்திரம்லாம்
காக்கிறதில்லை. மூத்தவர் சம்மதியேல்-ங்கறதெல்லாங் கிடையாது. நம்ம டிங்டாங்
இதெல்லாம் கண்டுக்குமான்னே தெரியலியே?
சந்தை தாண்டுகையில் மீன் வாடை சுண்டி இழுத்தது. காலை ஊனி நிறுத்திப் பார்த்தான்.
புது ஆத்துமீன்கள்.இப்டி அப்டி சிலது இன்னும் நெளிந்தன. உசிர் இருந்தது. நல்ல
சாட்டையான கெளுத்தி பார்த்து வாங்கி பிளாஸ்டிக் பைல போட்டு பையின் கழுத்தைக்
கயிறால் கட்டி சைக்கிளில் மாட்டிக் கொண்டான்.
மீன்கடைக்குப் பக்கத்தில் ஒரு ரசனையறியாப் பாதகத்தி பூக்கடை போட்டிருந்தாள்.
பூக்காரிகள் எப்போதும்...குழந்தைகளுக்குத் தேவையோ இல்லையோ பால் கொடுத்துக்
கொண்டே, பூ தொடுத்து, வியாபாரம் செய்கிறார்கள். அவன் பார்க்கிறான் என்றதும் அவள்
சிநேகித்து ஒரு புன்னகையை மூக்குச்சளியுடன் சிந்தி, "பூ வேணுமா?" என்கிறாள்.
நின்று நிதானமாயொ பூவை மாப்ளை நோட்டம் பார்த்தான். "வாடிக் கெடக்கு" என்று
திரும்பக் கிளம்பினான்.
ஏனோ நட்டுவனாரின் ஜால்ரா ஞாபகம் வந்தது.
*****
அவனுக்கு சிறிது மேலுக்குச்
சொகமில்லாமல் போனது. முதலாளி நல்லா கார்ச் சவாரி சுகம் கண்டுகிட்டாரு.
இப்பல்லாம் எதுகெடுத்தாலும் கார்தான். பாத்ரூம் டாய்லெட்னு போனாக் கூட கார்தான்.
"பெருமாளு?"-ன்னு அவனை இளுக்காரு. அவனுக்கும் நாலு இடம் போக்குவரத்துல கையில்
அஞ்சு பத்துன்னு சக்கரம் சுத்துதுன்னு வை.
இடுக்கண் வருங்கால் நகுகன்றாரு வள்ளுவர். அதைப் பத்தி தெரியாது. ஆனா ஒண்ணு -
மனுசன் சிரிக்கும் போது கண்ல தண்ணி வந்திருது. இன்பம் வரும் போது அழறியே மாப்ள...
துன்பம் வரும் போது சிரிச்சிப் பாரேன்னு... அவருக்கு விநோத எண்ணம்
தோணியிருக்கலாம்னு தோணுது.
அதைப் போல அவனுக்கு. காசு கிடைச்சாலும் வேளை கெட்ட வேளைல அவரு கூடவே
ஒட்டிக்கிட்டுக் கிடக்கறாப்ல ஆயிருது.
தூக்கம் கெட்டுப் போகுது. காலைல அவரு போற வார இடத்ல முகம் கழுவி பவுடர் கிவுடர்
அடிச்சி கிளம்பிக்குவாரு. நம்மபாடுதான் திண்டாட்டம். உடம்பே வியர்த்து நாறிரும்
சில சமயம்.
கண்ட தண்ணி. கண்ட சாப்பாடு. பக்கத்தூர் கல்யாணம் காட்சி காதுகுத்து எதுன்னாலும்
போறதுதான். முகூர்த்தம்னு நாட்ல பண்ணையாரைக் கூப்பிடாமயா? அதும் மைக்ல பேசச்
சொல்ற கல்யாணம்னா கண்டிப்பாப் போயிர்றாரு.
வீடு திரும்ப ராத்திரியாவும். வாற வழியில் "பாட்டில்" வாங்கி... அவன் நாக்கைச்
சப்புக் கொட்டக் கொட்டப் பார்ப்பான்... அவரு மட்டும் ருசி பாக்காரு. தெரியாமக்
கத்துக் குடுத்தேண்டா பாவி, அவன் ஐட்டம் அது. மைக்டைசன். வண்டியோட்டிப்
போகச்சில சப்டக் கொள்ளுமா? வேடிக்கை பாக்கத்தான் முடியும்...ருசி காட்டாம
இருந்திருந்தா ஜாக்கிதான் வாங்கியிருப்பார். அவனும் ஏக்கப்பட்டிருக்க மாட்டான்...
காய்ச்சலுக்கு என்று வீட்டில் ஒரு மூணு நாள் கிடந்தான். அதற்குள் கூப்பிடு ஆள்
வந்துவிட்டது. நெல்லு மூட்டையை லாரிலோடு ஏத்துகிற முத்து வந்து கூப்பிட்டான்...
அவன்தான் அந்தத் திடுக்கிடும் தகவலும் சொன்னான்.
"அய்யோ" என்றான் பெருமாள். அவன் உடம்பு நடுங்கியது.
*****
பாண்டித்துரை வில் வண்டி
எடுப்பதேயில்லை. வண்டியை விலை பேசுகிற மாதிரியும் ஒரு பேச்சு இருந்தது. சொந்தக்
கார் இருக்கிற தெம்பு. தவிரவும் பெருமாள் அவருடன் நல்லா செட் ஆயிட்டான்னு
பண்ணையார் மனசில நம்பிக்கை வந்திருந்தது. வேலுச்சாமி ருசி கண்ட பூனையில்லா? அவன்
காசு ரீதியா அவரைக் கைவைப்பதும் அவருக்குத் தெரியாம இருக்குமா என்ன?
ஃபோன் போட்டு டாக்சி எடுத்து வெளியே போன மனுசன். நல்ல மப்பு. திரும்பி வர
ராத்திரியாகி விட்டது. டாக்சியில் என்னவோ சிக்கல். ஊரடைய... விடியக் கருக்கலில்
வண்டி நடுவழியில் நின்று விட்டது. என்னவோ வயரையெல்லாமும் இழுத்துப் பாக்கான்
டிரைவர். பிரிச்சி மாட்டறான். வண்டி சண்டிமாடாட்டம் உர்ர்ருங்குது. சனியன்
எழும்ப மாட்டேங்குது.
அதுக்கும் போதையா? படுக்காத வரை நல்லது... கால் அசந்திட்டா பின்ன எந்திரிக்க
ஏலாது-ன்றாப் போல!
இறங்கி நடந்து வீட்டுக்கு வந்தார் அண்ணாச்சி. நல்ல போதை. உள்ளே ஆத்திரமாய்
வந்தார். கூட வேலைக்காரன் இல்லை. துணை இல்லை. தனியே வந்தார். அதுவே அவருக்குப்
பிடிக்கவில்லை...
கால்கள் டிரைவிங் லைசன்சுக்குப் போல தன்னைப் போல எட்டு போட்டன. எட்டுக்கு
அடுத்த நம்பர் என்னப்போவ்? ஒன்பதில்லை...? திருப்பியும் எட்டு போட்டன.
"என்னாச்சி?''
"அக்ஹ்" என்று சிரித்தான் முத்து. முத்தயுத்தம் தனிக் காண்டம்லா அது...
அந்த வேலுச்சாமி மாட்டிக் கொண்டான்...
பண்ணையார் கதவைத் தட்டிய் ஆத்திரத்துக்கு வீடே விழித்துக் கொள்கிறது. ஹ்ர்ரும்...என்ற
உறுமலுடன் பண்ணையார் வீட்டுக்குள் நுழைகிறார். பாவம் வேலுச்சாமி பரபரத்து
மாடியில் இருந்து நேர் வழியில் இறங்க முடியாமல் எப்படியோ இறங்கிக் குதித்து...
வேட்டி எங்கெங்கியோ மாட்டி இழுபட்டு... டர்ர்னு கிழிஞ்சி...
கதை சொல்லச் சொல்ல முத்துவுக்கும் சிரிப்பு. பெருமாளுக்கும் சிரிப்பு.
ஓட முடியல மாப்ள. அண்டிராயர்ல முள்ளு. ஓட ஒட. ஆ.. ஆ-ன்றான்.
பிடித்துக் கட்டினார்கள்.
"எங்கடா ஓடறே?" ன்னு சாதாரணமாகத்தான் கேக்காரு மக்கா. அவனுக்குப் பயம். கேட்டா,
"தெரியாம ரெண்டு நாளா எழநி பறிச்சிட்டேன்" என்கிறான்.
"இருக்கறதே ரெண்டு இளநி!"
பாகீ மாடியறையில். அதான் விசேஷம்.
"நீ எங்கடி மாடிக்கு?" ங்கறாரு முதலாளி.
"காத்து பத்தல" ன்னு அவ பதில். முத்து சிரிக்கான்.
"எலேய் சொல்லிட்டுச் சிரில..." என்று பெருமாளும் சிரிக்கான்.
மொதலாளி ஃபுல் மப்புல்ல? சுத்தி அத்தனை பேர் மத்தில கேக்காரு. "சைக்கிள்ல காத்து
அடைச்சாப்ல அவன் அடிச்சானாக்குங்" காரு.
காய்ச்சல் எங்க போச்சின்னே தெர்ல. கதை சுவாரஸ்யம் எழுந்து உக்கார வெச்சிட்டது.
வம்பு மனுசாளுக்கு எத்தனை வேண்டியிருக்கு?
"அய்யோ" என்றான் பெருமாள்.
நாலு பேர் கூடிய கூட்டத்தில் வேலுச்சாமியை நடு வளாகத்தில் கட்டி... பெல்ட்
அடிகள். "லேய் எளநியாடா திருடினே எளநி..."
அவன் அறியாத பாண்டித்துரையின் கடூர முகம். ஆவேச முகம்.
பொம்பளையாளுங்களை ரசிக்காரு. போறாரு வர்றாரு. மேடைல நகைச்சுவையாக் கூடப் பேசறாரு.
அதெல்லாம் வேற விசயம். மனுசன் வேட்டைப் பார்ட்டி. டென்னிஸ் விளையாட்டைப் போல
முன்ஷாட்டும் அடிப்பாரு. பின்ஷாட்டும் அடிப்பாரு.
பெல்ட்டாலயும் அடிப்பாரு.
ஊர்ல நாலு பேர் வாய்ல வயித்தெரிச்சல்ல விழலையின்னா இத்தனை சொத்து சேருமா? அட
இவர் சேத்தா என்ன? இவரு தாத்தா, கொள்ளுத் தாத்தா சேத்தா என்ன?
துட்டுன்னா என்ன? தேவைக்கு மேற்பட்டது துட்டு. ஒரு அவசரம்னு எக்ஷ்ட்ராவா கைல
பைல வெச்சிருப்பம்லியா? அதானே துட்டு? வீட்ல எல்லாம் நிறைஞ்சிருந்தா மனுசனுக்கு
எதுக்குத் துட்டு...
அந்தக்கால மனுசனுக்கு ஜாமான் செட்டுன்னு வீடு நெறைஞ்சிருந்தது. துட்டு
தேவையில்லாமப் போச்சு. அடங்கொக்க மக்கா துட்டுன்னு மனுசன் கண்டுபிடிச்சான்யா...
அத்தோட அழிவு காலம் ஆரம்பிச்சாச்சி.
பண்ணையாருங்க பண்ணாத அட்டூழியங்களா? எல்லாம் மனுசங்களை விட்டுட்டுத் துட்டு
பின்னாடி அலையிறதுனாலதானே?
சரி, நம்ம அய்யம்... அவனுக்கு எப்பிடி கையில துட்டுச் சக்கரம் வந்தது... நேர்
வழிலயா? முதலாளி அசந்த நேரம் தேத்தறதுதானே?
நினைக்க நினைக்க பயத்தில் மூச்சு முட்டியது.
கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடின்னு அந்தக் காலத்துப் பாடல்.
துட்டு கொண்டாந்தாதான் புருசன் உத்யோகம் புருச லெட்சணம். இல்லாட்டி அவலட்சணம்.
துட்டு இல்லாம வீட்ல வந்து அவ கிட்ட சோத்தப் போடுன்னா...? முதுகுல போடுவா
வெளக்கு மாத்து பூசை.
பண்ணையார்... பாரு வேடிக்கையை. அவரு மாத்திரம் எத்தனை பொண்ணுங்களை வேணாக்
கட்டிப் பிடிக்கலாம். துட்டை வாரியிறைக்கலாம். புகுந்து விளையாடலாம். வீட்ல
மத்தவான்னா கூடாது. அவரு சட்டம் அப்டி. அவரால தாள முடியல்ல...
அவரு கேப்பாரு கேள்வி. ஆனா யாரும் அவரைக் கேக்கக் கூடாது.
அன்னிக்கு ஒருநாள். வாசல்ல அந்த ராசலெட்சுமி... அதான் பாத்திரம் கீத்திரம்
பின்கட்டுல உக்காந்து கழுவிக் குடுக்கும்ல... அந்தப் பார்ட்டி. எதோ தானியம்.
கோதுமைன்னு வெய்யி. வாசல்ல உக்காந்து புடைக்கா. சொளகுல தானியம் எழும்பி
எழும்பிப் பறக்குது. தூசி எழு தானியம் மாத்திரம் சொளகில் சேருது...அவள் தூற்றிய
தூற்றலில் மழைத் தூறல் போல தானியக் குப்பைகள் அவள் மேலும் விழுகின்றன.
நல்ல வேகம். நல்ல தாளக்கட்டு. நல்ல குலுக்கல். அடிக்கடி சொளகைத் தட்டுவதும்...புஸ்புஸ்னு
ஒரு வாய் அசைச் சேர்க்கையும்... தறி அடிக்கிறாப்ல கேட்க ரம்மியம். குலுக்கல்?
அது பார்க்க விஸ்கியம்!.
சரி மேல விழுந்த தூசிக்குக் கண்டிப்பா பின்கட்டு ஏத்தம் இறைச்சிக் குளிரக்
குளிர... அவளுக்கும் குளிரும் பாக்கிற ஆளுக்கும் குளிரும்... குளிப்பான்னு
எதிர்பார்ப்பு... பரபரப்பு பெருமாளுக்கு.
அவ தூற்றி முடிச்சி எழுந்து புடவையினை சற்று நெகிழ்த்தி ஒரு உதறு உதறினாளேய்யா
உள்ளேர்ந்து அவனே விழுந்திட்டான் பொத்துனு. நேரா மொட்டை மாடிக்குப் போனான்
மாப்ளை.
ஏற்றம் ஏறி ஏறி இறங்குகிறது. அவன் மனப்படபடப்பு போல.
விசயம் என்னன்னா? திடுதிப்புனு முதலாளி வந்தாரு. நின்னு பாத்தாரு. வைக்கப்படப்பு
பக்கம் பாத்தாரு... சுத்து முத்தும் பாத்தாரு. மொட்டை மாடில பெருமாள் தலையைக்
குனிஞ்சிக்கிட்டான். சுத்தி யாரும் இல்லை. அப்டியே ஈரத்தோட அவளைத்
தூக்கிக்கிட்டாரு.
வைக்கப் படப்பு பக்கம் ஒற்றை ஒதுக்கல்.
படபடப்பை விட முதலாளி கண்ல பட்ருவோமோன்னு பயந்தான். அவனுக்கு இப்போது. மெல்ல
இறங்கி வாசலுக்கு வந்து விட்டான்.
அவகளை யார் கேக்கறது? இந்த அட்டகாசம்லாம் துட்டுத் திமிர்தானே?
*****
மீண்டும் பண்ணையார் வீட்டுக்குள்
வாகனங்கள் அமைதியாய்க் கிடக்கின்றன. ஒரு பயமான அமைதி அவனுள். எல்லாம் அடங்கி
விட்டது. நடந்ததை எல்லாரும் மறக்க விரும்பினார்கள் போலிருந்தது. மறந்து
விட்டாப்போலவே நடமாடினார்கள். பேச்சு இல்லை. கலகலப்பு இல்லை. ரேடியோச் சத்தம்
இல்லை.
தினத்தந்தி படிக்கப்படாமல் கிடந்தது. அதுல வர்ற நியூஸ்தான் நேர்லயே பாத்தாச்சே...
பாகீ. ஸ்ரீ வில்லிபுத்தூர். காபி...எல்லாம் வழக்கப்படி. பாண்டித்துரை
அண்ணாச்சியும் கணக்குப் பிள்ளையோடு சாதாரணமாய் உரையாடிக் கொண்டிருந்தார்.
திக்கென்றது. சமாளித்துக் கோண்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு வந்து ஓரமாய்
நின்றபடி காத்திருந்தான்.
தற்செயலாய்த் திரும்பிப் பார்த்தார். நாக்கு உள்ளிழுத்தது. சமாளித்து "வணக்கம்"
என்று சலாம் செய்தான்.
"ஏல வா. என்ன ஆளையே காணம். தலை மறைவாயிட்டாப்ல?" என்றார். தன் இடக்கை தானே
ரசித்தார். சகஜத்திற்கு வந்திருந்தார்.
"மேலுக்கு சொகமில்ல மொதலாளி."
அப்ப அடிக்கு சொகமாடே?" என்றபடி ஹோஹோன்னு சிரிக்கிறார். கணக்குப் பிள்ளையும்
சிரிக்கிறார். சிரிக்காட்டி "அவரு கணக்கை" முடிச்சிருவாரு முதலாளி.
"கேள்விப்பட்டேன்." என்றார் பண்ணையார்.
நானும் கேள்விப்பட்டேன் உம்மைப் பத்தி...
கொக் கொக் என்று அலைந்து கொண்டிருந்த ஒரு கோழியை திடீரென்று பிடித்து ஒரு
சிறகைப் பிய்த்தார். காது குடைய ஆரம்பித்தார்.
"என்னலே?" என்று தலை தூக்கி அவன் அங்கே நிற்பதை ஆச்சர்யம் துலங்கப் பார்த்தார்.
"ஒண்ணில்லங்க" என்றான் அவனது முத்திரையான நெளிசலுடன்.
"உள்ள போயி இவகிட்ட ஏதும் வேலையிருக்கான்னு பாரு...மீனு கீனு வேணுமான்னு கேளு"
என்றார்.
காத்து வருதான்னு கேக்கலாமா முதலாளி...? டாய் அடுத்த பெல்ட் அடி
உனக்குத்தானப்போவ்.
"சௌக்கியமா?" என்றான். இளநிக்கதை ஞாபகம் வந்திருக்கப்படாது. வருதே? என்ன செய்ய?
-மார்க்கெட்ல அந்த வேலுச்சாமியைப் பார்த்தான். பெருமாள் எங்கியோ புல்லுக்கட்டு
எடுத்துப் போய்க் கொண்டிருந்தவன் அவனைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தினான்.
"என்ன வேலுச்சாமி?" என்றான் பெருமாள்.
"த்ச்" என்றான் அவன். திரும்பி அவனைப் பார்த்து "எதுனா துட்டு இருந்தாக் குடேன்..."
என்றான். பாவமாய் இருந்தது. ஒரு ஐம்பது ரூபா வைத்திருந்தான் பெருமாள்.
பரவாயில்லை என்று கொடுத்தான். அவனுக்கு மேலும் நாலு ஆறுதல் வார்த்தை சொல்ல
விரும்பினான்.
"பணக்காரங்க நியாயமே தனி..." என்று பொதுவாய் ஆரம்பித்தான்.
"அந்த ராசலெட்சுமிய... வைக்கப்படப்புல..."
ஆரம்பித்து விட்டானேயொழிய மேலே என்ன பேச திகைப்பாய் இருந்தது பெருமாளுக்கு.
"ராசலெட்சுமியா?"
"ஏன்?" என்றான் பெருமாள்.
"அவ என் சம்சாரம்" என்றான் வேலுச்சாமி.
(தொடரும்...)
தொடர்கதை பகுதி-26 தொடர்கதை
பகுதி-28


|