........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

28. பொம்பளைங்க அவசரம்.

உலகம் மீண்டும் அரிதாரம் அழித்து புது அவதாரங் கொண்டாற் போலிருக்கிறது.

பண்ணையார் ஒருமுறை முடிவெட்டிக் கொண்டார். பார்க்க விநோதமாய் இருந்தது. ஓர் அசட்டுக் களை... ஏமாளி அப்பாவிக் களை. எப்படியோ முடிவெட்டிக் கொண்டால் தன்னைப்போல் அமைந்து விடுகிறது.

வைக்கோல் படப்பு கரைந்து தரைமட்டமாகி விட்டது. அத்தனையும் எருமைகள் தின்று தீர்த்து விட்டன. அதன் புதையல்கள் எங்கே? அவை மனித வயிற்றுக்குள் ஜீரணமாயிருக்கலாம்.

ஊரில் புதுசாய்ப் பணக்காரன் முளைச்சிருந்தான். சிங்கப்பூர் பார்ட்டி. கரும்பு ஆலை கட்டப் போவதாகப் புரளி. எல்லாருக்கும் வேலை கிடைக்கும்... அப்டி இப்டின்னு ஜனங்க வாயைப் பிளந்து அவனைப் பார்த்தார்கள். நம்ம வேலுச்சாமி அந்த வளாகத்தில் வளைய வர ஆரம்பித்திருந்தான். பூமியில் சில ஆட்கள் இப்படித்தான். பணக்காரர்களின் நிழலாய் வாழப் பிரியம் கொண்டவர்கள் அவர்கள்.

அவன் சம்சாரம் பண்ணையார் வீட்டிலேயே ஒதுங்கிக் கொண்டாள்! அவள் நெற்றிப் பொட்டு முன்னைவிடப் பெரிசாய் இருக்கிறது. பாகீஸ்வரி பொட்டைவிடப் பெரிசா என்னன்னு தெர்ல...

நம்ம டிங்டாங் கொழுக்கட்டை ஒரு நாள் வாயை பொளந்திட்டது. முடிவெட்டிக் கொள்ளவே வேடிக்கையாய்ப் போன மனுசன் பி.பி.பி மொட்டையில் இன்னும் வினோதமாய் ஆயிட்டாரு. அது அசட்டுக்களை எனில் இது பைத்தாரக் களை. வெளியே போகவர வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளவே இருந்தார். உதவி ஒத்தாசை எடுபிடி வேலைக்கு அந்த ராசலெட்சுமி. யார் அது என யூகிக்க யாருக்கும் கஷ்டம் இல்லை.

அவன் முதல் முதல் பார்த்தப்ப உள்ளாடை அணியாத ராசலெட்சுமி. இப்ப பண்ணையார் வாங்கித் தந்திட்டாப்ல. மலங்காட்டுல தோப்புக்கு வேலி போடலியாக்கும்? அது போல இதும் மாம்பழ வேலி.

அய்யம் பெருமாளின் மீசை டிசைன் கொஞ்சம் பெரிய எடுப்பாகி இருக்கிறது. முதலாளியின் வலது கை போல அவன். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என ஆள் தடபுடல்தானே. அவன் பெண்டாட்டி பத்மினி இடுப்புச் சதை எகிறி சற்று ஊத்தங் கண்டிருந்தாள். துட்டு புழக்கம் அதிகம். புருசன் குளிப்பாட்டும் மகிழ்ச்சி. மந்தகாசம் இல்லாமலாப் போகுமா?

குழந்தை தனலெட்சுமி நிறைய வேண்டாத வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தது. பல விஷயங்களில் அப்பா அவளுக்குப் போட்டியாகிப் போனார்... "அப்பா போ" என்று திட்டுகிறது. ஜெட்டியைக் கழற்றிக் கழற்றி எறிந்த பெண் அல்ல இது. ஜெட்டியில்லாமல் நிற்கக் கூசும் கவனமான பருவம்.

"அப்பா ஜெட்டி போட்டுக்கல அம்மா" என்கிறது.

நல்ல வேளை அப்பாவிடம் இதே புகாரை எழுப்பவில்லை.

எங்கிருந்தோ அந்தப் பகுதிக்குப் புதுத் தண்ணி போல ஒரு ரெண்டுங் கெட்டான் வந்து சேர்ந்திருந்தான். ஊரின் புது சுவாரஸ்யம் அவன். எதைப் பார்த்தாலும் ஆச்சரியம் அவாளுக்கு. நடந்து கொண்டேயிருப்பான். எங்கியோ பராக் பார்ப்பான். பார்வை அதைக் கடந்து சஞ்சரிக்கும். எதையோ கணக்கு போட்டு விடை கண்டுபிடிக்கிறாப் போல இருக்கும். எஸ் எஸ் என்கிறாப் போல தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு தொடர்ந்து புன்சிரிப்புடன் நடந்து போவான்.

பி.பி.பி. "எலேய் உன் பேர் என்ன?" என்று கேட்டுப் பார்த்தார். அவன் கழுத்தை விநோதமாய்ச் சொடக்கு நெளித்து ஒரு சிரிப்பு சிரித்தான்.

அவன் பேர் யாருக்குமே தெரியவில்லை. அதனால் என்ன? பட்டப்பேர் நிபுணர்கள்-உள்ளூர் அரை டிக்கெட்டுகள். -ஒன்று கூடி விவாதித்து "டொடாங்கு" என விநோதமாய் ஒரு பேர் அவனுக்கு வைத்தார்கள். பூவரச இலை பார்த்ததுமே ஒரு விநாடி நிற்பான். ஆச்சர்யப்படுவான். எஸ்.எஸ்...! என்று அதை வைத்துச் சூப்பராய் ஒரு நாதசுரம் செய்து பீப்பி...என்று சத்தம் எடுத்தான். நம்ப பி.பி.பி.யே அசந்துட்டாரு. அவர் வீட்டு வாச்ல்ல வந்து வாசிச்சது அவரையே பேர் சொல்லிக் கூப்பிட்டாப்ல இருந்தது.

மொட்டைத் தலை முதலாளி. எதிரே டொடாங்கு. இரண்டு பைத்தியங்கள் சந்தித்துக் கொண்டாப்ல.

"எலேய் இங்க வா"ன்னு கூப்பிட்டு அவனிடம் அதை வாங்கி ஒரு ஊது. யப்பா. காதடைக்கிறாப் போல சூப்பராச் சத்தம்.

"இதை நான் வெச்சிக்கிறேன்" என்றவர் அவனிடம் ஒரு அஞ்சு ருவ்வாத்துட்டை நீட்டினார். அவன் வேணாம் என மறுத்து பீப்பிக்குக் கை நீட்டினான்.

அய்யத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்.

"டொடாங்கு வெவரமான ஆளுத்தான்"

யோவ், உம்மைவிட எல்லாவனுமே வெவரமான ஆளுத்தாவே.

*****

மொட்டையில் மயிர் நாற்றுப் பாவ. சிறு தாடியும் கிளம்பிய ஜோரில் முதலாளி உற்சாகங் கொண்டார். சலூனுக்குப் போய் தாடியை மாத்திரம் துப்புரவா ஷேவ் எடுத்து கையை வானத்தைப் பார்த்துத் தூக்கி சுத்தம் செய்து கொண்டு சட்டையை சலூனிலேயே உதறி மாட்டிக் கொண்டு வந்தார். ராசலெட்சுமியை வெந்நித்தண்ணீ போடச் சொன்னார்.

சர்த்தான். உள்ளுக்குள்ளே மன்மதன் அம்பு போட்டாச்சி போலுக்கே.

இந்நாட்களில் இந்தக் காட்சிகள் எல்லாம் அவனுக்குப் பழகியிருந்தன. ஊருக்கு ஒரு மகாராணி அவருக்கு. ஏ, பாவி வயசென்னய்யா, என்றிருந்தது. சொல்லேலுமா? மனுசாளில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அம்சம். அதில் இது துட்டு வம்சம். எடுக்க எடுக்கக் குறையாத துட்டு. தவிர இவரா அடாவடி பண்ணிச் சேத்தது போக, தானே வந்து நிலத்தை ஒத்திக்கு வைத்துவிட்டு மீட்க ஏலாமல் போனது...

இடைப்பட்ட ஓய்வு அவரை மேலும் கிளர்த்தியிருக்கலாம். மனசில் புத்தாளம். பட்டாம்பூச்சி. புது வெளிச்சம். எதோ சங்கீதம் உள்ளே உருள்கிறாப் போலிருக்கிறது. ஒரு முறைக்கு இரு முறை பன்னீர்ப்புகையிலை அதக்கியாகிறது.

சில ஊர்களில் கார் நிறுத்திவிட்டு உள்ளே போக அகௌரவமாய் உணர்கிறார். இருட்டு முற்றம் என் காத்திருந்து தாமதித்துக் கிளம்புவார். கிளம்புகிறார்.என்று தெரிந்து தாமதித்தும் கிளம்பினால் அது நல்ல விசயம். பெருமாளை வீட்டுக்கு அனுப்பிருவாரு...

"காலைல ஒரு அஞ்சி அஞ்சரை போல வந்துரு" என்று காரில் இருந்து இறங்கிக் கொண்டு அவனை விடுவித்து விடுவார். வீடு வந்து அலாரம் வைத்துப் படுப்பான்.வரும் வழியெல்லாம் மனசு எகிறும். தனலெட்சுமி தூங்கியிருக்க வேண்டும்... இல்லாட்டி அதுக்க்க் கதை சொல்லனும்.

அவன் சொல்லும் கதைகள் தனலெட்சுமியை விட அவ அம்மா பத்மினிக்கு சுவாரஸ்யமாய் இருக்கின்றன. சினிமா ரசிகைல்லா. நாலு எழுத்து நல்ல எழுத்து, கதைகள் வாசிக்கிறவன். கொஞ்சம் கூட்டிக் கொறச்சிக் கதை சொல்வான்.

பாதிநாள் தனலெட்சுமி "இன்னொரு கதை சொல்லுப்பா" என்பாள். பத்மினி தூங்கியிருப்பாள்.

அவனும் தூங்குவான்.

முதலாளிக்கு உற்சாகம் தாள முடியவில்லை. இன்றைக்கு கரும்பைக் காய்ச்சறாப் போல உள்ள யாரோ பெருங்கரண்டியால் துழாவுகிறார்கள். நம்ம டிங்டாங் வெயிலில் நெல்லைக் காயப் போட்டுப் பரசி நடக்குமே அதைப் போல. குழந்தைக் குதூகலம். அவன் எக்குத்தப்பா அவரு ரூம்ல நுழஞ்சானா... மனுசன் டயலாக் அடிக்காரு. "ராசு... (என்ன செல்ல அழைப்பு) அண்டிராயர் போட்டு விடு வா" அட எரும இத்தனை வருசமாயி உனக்கு அண்டிராயர் மாட்டத் தெரியாதா?

வாழ்க்கைய எத்தனையோ ரகங்களில் மனுசன் அனுபவிக்கான். இது ஒரு ரகம். விரகம்.

குழந்தைக் குதூகலம்தானப்போவ். அதுக்காக இத்தனை குழந்தையாவா? எங்க தனலெட்சுமியே தானே "போட்டுக்குது"

பகலானா "போட்டு விடுடி..." நைட்ல...? தெர்ல!

வீட்ல பொம்பளைப் பிள்ளையள் யாரும் காணவில்லை. எங்காவது கோவில் கீவில்னு போயிட்டாங்களோ என்னமோ? ரேடியோச் சத்தம் இல்லாமல் வீடே என்னமோ மாதிரியிருக்கு...

வரவர மனுசனே டீக்கடையாட்டம் ஆகிப்போனான். ரேடியோவோ டி.வியோ ஒரு சத்தம் அதும்பாட்டுக்குக் காதுக்கும் ஈயப்படும்...ஒரு உவமை பேசுவமே... காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினாப்ல... என்பார்கள். அது இப்ப பழகிட்டது.

வாசல் பக்கம் டொடாங்கு இலை நாதசுரம் எடுத்து பெரிய வித்வான் என்கிற கற்பனையுடன் அதை மேலும் கீழும் ஆட்டியாட்டி ஊதுகிறான். சுருட்டு பிடிக்கும் கரடி...

ஆடற வரை ஆடும். நான் தந்தி வாசிக்கேன்... வாசலில் அமர்ந்து கொண்டான்.

*****

"கொழந்தைக்கு லேசா கணகணன்னிருக்கு... ஜீரம் வந்தாலும் வரும்" என்று பத்மினி சொன்னாள். வரும் போது பணம் கொண்டு வந்தால் டாக்டரைப் பார்க்கலாம். என சிறு பின்குறிப்பும் தந்திருந்தாள்.

மேலப்புதூரில் டாக்டர் எவனுங் கிடையாது. நாட்டு வைத்தியம்னு பாக்கிறது. ஒருத்தி இருக்கா மருத்துவச்சி. பாதகத்தி அவளே நெத்தில பத்து போட்ட மாதிரி மஞ்சளும் சந்தனமும் கலந்தாப்ல பூசியிருப்பா. அதும் மேல பொட்டு... படுக்கை விரிச்சி தலகாணி வெச்சாப்ல. வாய்ல வெத்திலைச் சிவப்பு. தலை சடை பிடித்து ஆளே ஆவேசமாயிருப்பாள். அவளைப் பார்க்கவே குழந்தைகள் பயந்துக்கிரும். இந்த லெட்சணத்துல "பேயடிச்ச" குழந்தைகளுக்கு அவ வைத்தியம். வேப்பிலை அடி.

குழந்தைகள் மொதல்ல பேயைப் பாத்ததோ இல்லியோ? இவளைக் கண்டதும் பேயடிச்சாப்ல அப்டி அலற ஆரம்பிக்கும்.

"முடிஞ்சா பணங் கொண்ட்டு வரேன். மொதலாளி எப்டி இருக்காரோ? ஒரு மொகரைல துட்டென்னடா துட்டுன்னு சர்ர் சர்ர்னு எடுத்து விடுவாரு. ஒரு சமயம் எலேய், இங்கென்ன காசு வெளையுதா? நானென்ன பணங்காய்ச்சி மரமான்னுவாரு... லூசுப்பிறவி. பணக்கார டொடாங்கு" என்றான்.

"தனத்துக்கு ரொம்ப உடம்பு முடியலின்னா பெறப்ட்டு சாயக்குடி போயிருவேன்..." என்கிறாள் பத்மினி.

உள்ள மாப்ளை பார்ட்டி என்னமோ பாட்டுச் சத்தம் குடுக்காரு. பழைய பாடாவதிப் படங்கள்ல நின்னாப் பாட்டு உக்காந்தாப் பாட்டுன்னு வரும். சாரி பாடாவதிப் படம் அல்ல. பாடுவதிப் படம். அதும் மாதிரி முதலாளி...

அந்தக் காலத்தில் அண்டிராயர் போட யாரும் பாடினாப்ல தெர்ல!

போட்டுக்கிட்டாரா, முடிஞ்சதா? இல்ல போட்ட ஜோரில் அவுத்துட்டாரா?

எதுக்கோ வயரை வெளிய வரை எடுத்து ஃபோன் ஈசிச்சேர் அருகே வந்திருந்தது. பக்கத்தில் யாருங் கிடையாது. கணக்குப்பிள்ளை கூட இல்லை. சாயக்குடிக்கு ஃபோன் அடிக்கலாமா? கடன் யாவாரம் இல்லியின்னா சரக்கு வாங்கவே ஆள் வராத மனுசன். வெறுப்படிச்சி உக்காந்திருப்பார். மூனாபானா கடைல தொலைபேசி இருந்தாலும் யார் அவர் கூடப் பேசப்போறான். சரக்கு தேவைக்கு அவரு டவுணுக்கு மதுரைக்குன்னு அவராப் பேசறதுதான். போன் பெரும்பாலும் அரவமில்லாமல் கெடக்கும். சில நாய்ங்க வீட்டு நாய்ங்க.. பேர்லதான் நாய் வம்சம். குரைக்கவே குரைக்காது அதுபோல.

இழுத்துக்கிட்டு கிடக்க வயசாளிங்க வீட்டில்... ராத்திரி ஆளுங்க எந்திரிச்சா... நோயாளி நெஞ்சில கைய வெச்சி உயிர் போயிடுத்தோன்னு செக் அப் பண்ணிக்கிடுவாங்க. அதும் மாதிரி... மூனாபானா திடீர் திடீர்னு போனை எடுத்து, செத்துட்டதா உயிர் இருக்குதான்னு பாத்துக்குவார்.

நோயாளியப் பாக்கிறது செத்திட்டாப்லியான்றா பார்வை. இது உயிர் இருக்கான்ற பார்வை...

அவன் கூப்ட்டா அவருக்கு அதில் சந்தோசம் இருந்தது. அவருக்கான மரியாதை என ஏனோ உணர்ந்தார்.

"தனலெட்சுமிக்கு உடம்பு பொரியுது" என்கிறாள் பத்மினி. "டாக்டரைப் பார்த்தே ஆகணும். துட்டோட வாங்க... இப்பதான் லேசாத் தூங்க ஆரம்பிச்சது. முழிச்சிக்கிட்டா அழும். வெச்சிர்றேன்,,," என்று படபடவென்று பேசி வைத்து விட்டாள்.

அவள் பேசிய அவசரம், படபடப்பு... நேரில் பக்கத்தில் இல்லாததால் அவனைக் கவலை கொள்ளச் செய்தது. உடனே சாயல்குடி போக வேண்டுமாய் ஒரு இது. சரிடா, பொம்பளையாள்களில் சிலது இப்படித்தான்... விசயத்தைப் பெரிசா ஊதிப்பிடுவாளுக. தனியே அழத் தெரியாத ஜென்மங்க. நாலு ஆளை இழுத்து வெச்சிக்கிட்டு அழஊம். அதில் ஒரு ஆறுதல். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் ரகம்.

இவளுக பதர்ற பதட்டத்துக்கு நாம அங்க பறந்து போயி வேர்க்க விறுவிறுக்க நின்னம்னா... விசயம் ஒண்ணுமே இராது. ஆத்திரமாயிருக்கும். சரி, கத்தலாம்னு பாத்தா... நம்மளக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுவாளுக. அதுல தன்னைப் போல ஆத்திரம் அடங்கி அவனும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு ஆறுதல் சொல்லி ஒரு முக்கால் முத்தம்னு குடுக்கிறதுதான்.

அதென்ன முக்கால் முத்தம்? பத்தாத லேஸ் தீக்குச்சி உரசல். அதான் முக்கால் முத்தம். முழு முத்தம் குபீர்னு உள்ள பத்திக்கும்.

வீட்லய இருந்தம்னா குழந்தை உடம்பைத் தொட்டுப் பார்ப்பான். "லேசா ஜீரம் சாஸ்தி ஆயிரும்" என்பான்.

இப்ப என்ன செய்யத் தெரியவில்லை. ஒண்ணு துட்டு கோண்டு போக வேண்டும். பையில் சல்லிக்காசு இல்லை. இது தகுமா தெரியவில்லை. இருந்த பணத்தை அண்டிராயர் போட்டு விட்ட ராசலெட்சுமி அள்ளிக்கிட்டா என்ன பண்றது?

ரெண்டாவது விசயம். அவன் குழந்தையைப் பார்க்க முடியுமா தெரியவில்லை. அட ராத்திரி வீட்டுக்குப் போக வாட்டப்படுமான்னே தெரியல்லியே?

நான் அண்டிராயர் போட்டு விடவா முதலாளி?

சீச்சீ, என்று தலையை உதறிக் கொண்டான். என்ன... புத்தி இப்டி போகுது...

*****

வானம் மப்பு மந்தாரமாய்க் கிடந்தது.

வாசல்ல எதோ சத்தம். யாரோ கிழட்டுக் கும்பல். கோவில் கும்பாபிஷேகம்னு வசூல் பார்ட்டி. எரிச்சலாய் இருந்தது. எச்சிலைக்கு நாய்கள் போட்டி போடுகிறாப் போல ஒரு உணர்வு. போங்கடா டேய் வேலையத்தவங்களா? உள்ள ராசலெட்சுமிக்குப் போக, எனக்குப் போக, மிச்சம் இருந்தா உங்களுக்கு வரணும் துட்டு.

"முதலாளி இல்ல..." என்றான்.

"கார் நிக்கறதே?" என்றார் ஒருத்தர்.

"ஏன்னா அதுக்கு உக்காரத் தெரியாது" என்றான் பொறுமையாய். "நாந்தான் டிரைவர். நான் இருந்தா கார் இருக்கும்..."

"முதலாளி எப்ப வருவார்?" என்று கேட்டார் இன்னொரு தாத்தா. அவாத்தில் காபி பொடி தீர்ந்து, இன்னிக்கு இங்க காபி சாப்டலாம்னு பாத்தார் அவர்.

"அவரு எப்ப வருவார்னு அவருக்கே தெரியாது" என்றான். முதலாளி வெளில வந்திறப்படாதா என்று அதுவரை நினைத்திருந்தவன். இப்ப உள்ளியே இருக்கணுமே என்று கவலைப்பட்டான்.

காபிப் பிரியர் விடவில்லை. "மாமி இருக்காங்களா? மாமி எப்டியும் காபி தருவாளோல்யோ? அடங் கொக்க மக்கா, என ஆத்திரமாய் வந்தது. "ரெண்டு பேருமாத்தான் போனா"

அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டாகிறது. "கார் நிக்கிறது. ரெண்டு பை வாக் எங்கியாச்சும் போயிருக்கான்னா பக்கத்லதான் போயிருப்பா. நாம வெயிட் பண்ணலாமா?"

காபின்னா பேசறது? அவரா பேசறார்?

நன்கொடைப் பணத்தை எடுத்திண்டு போய் அவர் காபிப் பொடி வாங்கிண்டு வீட்டுக்குப் போகணும் போல... மாமி காபி சாப்பிடனுமே.

"யாராவது வந்தா காலைல வரச் சொல்லுன்னு சொல்லிட்டுத்தான் மொதலாளி போனார்... நாந்தான் கார்ல போயி பஸ்ல ஏத்தி விட்டேன்..."

"பஸ்லியா?"

"ஆமா"

"ஊருக்குப் போயிருக்காளா?"

"ஆமாய்யா ஆமாம்"

"கார்ல போயிருக்கலாமே?"

"அட உங்களுக்குத் தெரிஞ்ச ஐடியா அவருக்குத் தெரியாமப் போச்சே?" என்றான். "காலைல வாங்க" - அடுத்த மாசக் கும்பாபிசேகத்துக்கு இப்ப என்னய்யா அவசரம்?

காபிப் பொடிக்கு அவசரமாச்சே?

அதற்கு மேல் நின்றால் கல்லால் அடிப்பான் என்ற பயத்தில் அவர்கள் இடத்தைக் காலி செய்தார்கள். ஹா, என ஆசுவாசமாய் மூச்சு விட்டான்.

உள்ள கும்பாபிசேகம் முடியணும்.

தனம் நினைப்பில் மீண்டும் கவலையாயிருந்தது. வெளிய மழை மூட்டம். அது வேறு பயமுறுத்தியது.

"போலாமா?" என்று வெளியே வந்தார். ஏய்யா, ஒரு அண்டிராயர் போட்டு வர இவ்வளவு நேரமா? வண்டியெடுக்கு முன் ரிப்பேர் கிப்பேர் பாத்து அனுப்றாப்ல உள்ள ஒரு தரோ செக் - அப் பண்ணிக்கிட்டீரா?

கியர் கரெக்டா விழணுமே.

"போலாங்க முதலாளி..." (பைல தாராளமாத் துட்டு எடுத்துக்கிடுங்க)

"எவ்ள தூரங்க மொதலாளி?" என்று சாதாரணமாய்த்தான் கேட்டான். "சிறுகுளம்" னாரே பார்க்கணும்.

தூக்கியடிச்சிட்டது அந்த வார்த்தை.

மனோன்மணி!

ஹா, எனத் திகைத்தான்.

மயில் பாக்கப் போகிறார். மழை மூட்டம் போட்டிருக்கிறது.

மனோன்மணி சிநேகம் எப்பலேர்ந்து தெரியவில்லை. ஒருவேளை இதுவே முதல் சந்திப்பாகவும் இருக்கலாம்...

இருக்கும். இருக்கும். இப்ப சீசன் இல்லை. நிகழ்ச்சிகள் இல்லை அவளுக்கு. ரெண்டும் ரெண்டும் நாலு. கணக்கு போட்டு கல்லடித்திருக்கிறார் பாண்டித்துரை.

மாங்காய் சிக்கிட்டதப்போவ்.

ராசலெட்சுமி பழம். இது காவெட்டுதான்.

வள்ளுவர் வாக்கு "இனிய உளவாக" இல்ல... அதுக்கு இது உல்ட்டா. ஜொள்ளுவர் வாக்கு. காய் இருப்ப கனி கவராது!

அதான் மனுசன் கரடியாக் குட்டிக்கரணம் அடிக்காரா? தேன் குடிச்ச நரிம்பாங்க... அவன் இப்பதான் பாக்கான்.

அப்டின்னா ஒரு கணக்குல... பண்ணையார் கனின்னா... அவன் காய் அல்லவா? டாய்!

ஈசி சேரில் இருந்தபடி மனோன்மணிக்குப் போன் போட்டாரா ஒரு வேளை?

அவருக்கு முன் அவனுக்கும் உற்சாகம் கொப்பளித்தது.

பஜார்ப்பக்கம் அந்த காபி தாத்தா தட்டுப்பட்டார். அந்தக் கும்பலே காபி குடித்துக் கொண்டிருந்தது. காரைக் கண்ட அவசரத்தில் காபி சிந்தியதைக் கவனிக்காமல் டம்ளரை வைத்துவிட்டு ஓடி வந்தாகிறது.

"சார் வணக்கோம்..." என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வருகிறார். கார் முன்னாலேயே விழுந்திடுவார் போலிருந்தது. வண்டியை விரைவு படுத்திக் கடந்து விட முடியவில்லை. மாட்டு வண்டி ஒன்று குறுக்கே. முதலாளி பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தார். "அப்புறம் வாங்க..."

ஒரே வரி! நச்னு போட்டாப்ல. காப்பிப் பொடிக்கு என்ன செய்வது என தாத்தா திகைத்தார். குடிச்சிட்டிருந்த காபியும் கெட்டிட்டது.

"எப்ப கும்பாபிசேகமாம் முதலாளி?"

"இவங்க நினைக்க நாள்ல" என்றார் முதலாளி சிரிக்காமல். அவனுக்கு ஒரு ஜோக் ஞாபகம் வந்தது.

"சார் நன்கொடை தரணும்..."

"நான் நல்ல மூடுல இருக்கறப்ப வாங்க"

"சார் எப்ப நல்ல மூடுல இருப்பீங்க?"

"எந்த நாயும் நன்கொடை கேக்காட்டி நல்ல மூடுக்கு என்ன குறை?"

பஜார் என்றால் பெரிய வழியெல்லாம் இல்லை. சிறு ஒடுக்கத்தில் நாலு கடை. கரிசலூரணியில் எதோ ஆட்டோ திருடு போயிருந்தது. பக்கத்துக் கிராமமெல்லாம் நோட்டீஸ் விநியோகம். ஆட்டோ டியென்69 3768 காணவில்லை. கூடவே இன்னொரு நோட்டீசும் தந்தார்கள். ஒரு பிரசுர வெளியீடு. இயேசுவைத் தேடு.

ஐயய்ய, இயேசு எப்ப காணாமல் போனார்?

டொடாங்கு - அவனும் கை நீட்டி ரெண்டு அறிவிப்பையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு விநாடி யோசித்தான். எஸ் எஸ் - என்று தலையாட்டி ரசித்துக் கொள்கிறான்.

தூறல் ஆரம்பித்தது.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-27                                                                                          தொடர்கதை பகுதி-29

 
                                                                                                                                                                                                                 முகப்பு