........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

  தொடர் கதை -2

முத்த     யுத்தம்

-எஸ். ஷங்கரநாராயணன்.

29. வேகமா உள்ள வாங்க...!

பெருமாள் விவரிக்க இயலாத உணர்வுகளால் சூழப்பட்டிருந்தான். ஒரு கனவுப் பயணம் என இது... மனோன்மணியைச் சந்திக்கப் போகிற இப்பெரும் வாய்ப்பு அமைந்திருக்க வேண்டும்...

ஹா- என்ற பிரமிப்பும் சிறு உட்திகட்டலும் உள்ப் பிரகாசமும் துள்ளும் மனமுமாக இக்கணங்கள் கொண்டிருக்க வேண்டும்.

காலகாலமாய் உள்ளே இந்தப் பொழுது சிறு படபடப்பும் உற்சாகமுமாய் எதிர்பார்க்கப்பட்டது. - ஆசைப்பட்டது அல்லவா. கிபீரென புஸ்வானமாய் உள்ளே ஒளிக் கொந்தளிப்பை நிகழ்த்தியிருக்க வேணாமா?

குழந்தைக்கு ஜூரம் என பத்மினியின் படபடப்பு. துட்டு அவசரத் தேவை, என்கிறதோர் நெருக்கடி நிலை. "இது" - இந்த அண்டிராயர் மகான்... வரங் குடுக்கணுமே என்கிற பிரச்சனை... என அவன் தள்ளாட்டப்பட்டிருந்தான். காலடியில் பூமியே நழுவி நழுவி விழுகிறது. தங்கப் பதக்கம் சினிமாப் பாடல் ஒன்றில் பிரமிளா... டிராபிக் சிக்னல்ல எரும பூந்தாப் போல - ஊடால புகுந்து ஒரு வசனம் பேசும் - காய்ஞ்சி போன கம்மாயெல்லாம் வற்றாத நதியாப் பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே வற்றிப் போயிட்டா...?

அதைப்போல - வேட்டி நழுவினா பூமில விழும் அந்த பூமியே நழுவிட்டா?

மழை வேற பிடிச்சி மாட்டிரும் போலுக்கு. இப்பத்திய பெரும்பிரச்னை அதுதான். பாண்டித்துரை நித்யகல்யாணி. மனசெங்கும் யாரோ கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். அவருக்கு குபுகுபுன்னு உள்ள பூ பூக்குது. மாலிஷ் செய்யப்பட்ட குதிரை. யார் மாலிஷ் செஞ்சா? அந்த "ராசு" தான் - வேற ஆரு? - "வாழ்விலோர் திருநாள்"ன்னு பாகவதர் மாதிரி சல்லுன்னு கிளம்பியாச்...!

சென்ட் வாசனை இவ்வளவுக்கு அடிக்குது. பின் சீட்டில் வசத்யோ வசதியா உக்காந்து பன்னீர்ப் புகையிலையைப் பட்டை விரிச்சி எடுத்து வாய்ல அதக்கி அதக்கி... வாய்க்குள்ள யுத்த ரகளை. ரத்த அமர்க்களம். இது செயற்கை ரத்தம். வெத்திலையின் பச்சை ரத்தமா இது? முதலாளி ரத்தங் குடிக்கிற வெஜிடேரிய ராட்சஸன். இந்த வாசனை பத்தாதுன்னு... வாயில் பாட்டு மணக்கிறது. நல்லாத்தான் பாடறாரு. இங்கிட்டு ஒரு வரி அங்கிட்டு ஒரு வரி. மல்லிகைத் தோட்டத்தில பூ பறிச்சிட்டே போறா மாதிரி. ஒரு பாடலுக்கு ஒரு வரி - ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிறாப் போல... பதம் பாத்தாறது.

உடம்பில் வாசனைத் திரவியம். பையில் இன்னொரு திரவியம். தரைகடல் ஓடித் தேடிய திரவியம். திரைகடல் அல்ல... தரைகடல்! அவன் நினைச்சாப்லியே மனோன்மணியோட நிகழ்ச்சியின் பாடல் - நீல வண்ணக் கண்ணா வாடா. நீயொரு முத்தம் தாடா...

வந்துட்டேண்டி.

தனலெட்சுமிக்கு உடம்புக்கு எப்படியிருக்கிறதோ? நான் இங்கே இவாளின் குஷால் பயணத்துக்கு "விளக்கு" பிடிச்சிட்டிருக்கேன்.

பண்ணையார்... கோமகன் அல்ல இவன். காமுகன்... என மனசை வேடிக்கை காட்ட முயன்றான். மனம் முரண்டு பண்ணி அழுதது உள்ளே. மழை உள்ளே மூட்டம் போட்டாப் போல ஒரு இருள். உட்பக்கம் நினைவுகள் நடமாடத் தடுமாறின. பிடித்துக் கொள்ள பிடி எங்கே என்றே தெரியவில்லை.

ஓட்டல்ல ஒவ்வொரு ஐட்டம் வைக்கிற போதும் தட்டு மாத்தறாப்ல... முதலாளி பாட்டு பாட்டு மாத்திட்டே போகிறார். வாழ்க்கைன்னா உம்மைப் போல அனுபவிக்கணும்யா, என்றிருந்தது.

அன்டிராயர் மகான் அருள் செய்ங்க. எங் குழந்தை இருமல் சுலோகம் உம்முன் வாசிப்பது கேட்கலியா? ஜலதோஷச் சலங்கையின் ஜல்ஜல் இருமலில் கேட்கிறது.

மனோன்மணி மனோன்மணின்னு அடிக்கிறது அவரது மன "மணி". டிங்டாங்.

மழை மெல்லத் தீவீரப்படுகிறது. மழை இந்நேரத்துக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. "மழை நல்லாத்தான் இருக்கில்ல?" என்கிறார் முதலாளி. இத்தனை வயசுக்கு மேல உமக்கு மழை வேண்டிக் கெடக்காவே?

இந்த வயசில் அவனவன் முட்டிவலின்னு அவஸ்தைப்படறான். எல்லாம் தரை - பஸ்கி பார்ட்டி. நம்மாளு மெத்தை வம்சம். பாட்டு எடுக்கற ஜோரைப் பார். என்ன பாட்டு பாடறம்னே தெரியாததோர் மயக்கம். குழந்தைக்கு மேலுக்கு சொகமில்ல முதலாளி... என வார்த்தை தொண்டை வரை அஜீர்ண ஏப்பமாய் எதிர்த்து எதிர்த்து வருகிறது. வாய்க்கு வெளியில் வர தைரியம் இல்லை... காபித் தாத்தா நன்கொடை கேட்டு கிடைக்காமப் போன மாதிரி... எதாவது ஏடாகூடமாச் சொல்லிட்டாரும்ன்னா.... இவனுக்கு வார்த்தை தாங்காது. உள்ள குப்புனு குண்டு விழுந்தாப்ல ஆகிப் போகும். குண்டுப் பய ஒருத்தன் கிணத்தில் குதிச்சாப்ல தண்ணி தூக்கியடிச்சிரும்...

நாக்கு புரளத் தயங்கியது. குளிர் வேற. காருக்குள் சாறல் அடிக்கிறது. குளிருக்கு உடம்பு விறைத்த சிறு நடுக்கம். ரோடு வேற சரியில்ல. சரளை போட்டப்பறம் இன்னும் மோசமாயி அங்கங்க மேடும் பள்ளமும் குண்டக்க மண்டக்க எடுத்திட்டது. வண்டி நொண்டிப்பய நடந்து போனாப்ல தள்ளாடுது. இருட்டு. வழி தெரியாதபடி மழை. வைப்பர் துடைத்தாலும் தெரு வியூகம் திண்டாடியது.

இந்தக் குளிருக்கும் அதுக்கும் ஒண்ணு...பக்கத்தில் பெண்டாட்டி தேவை.உடனடி தேவை. அல்லது மைக் டைசன். அது ஒரு போதைன்னா இது இன்னொரு விதமான ரகளை அல்லவா? மனோன்மணிக்கு மரியாதை தந்து முதலாளி டைசனைக் கை பார்க்காமல் போகிறதாக யூகித்தான். வைக்கப் படப்பும் இல்லை. இப்ப மாடி உள்ரூம் பீரோல பூட்டி வைக்கிறாரு. நினைச்சா- அதாவது அவர் மனசு வைச்சா அவனுக்கும் கிடைக்கும். வைக்கப் படப்பு போல சுதந்திரம் - அனுபவ பாத்யதை... பவர் ஆப் அட்டர்னி... இப்போது இல்லாமப் போச்சு!.

அவனை அப்படியே வெளியால விட்டுட்டு - ஒரு வேளை கவலையேப் படாமல் கூட... அவர் "உள்ளே" போய் விடலாம். டைசன் இருந்தா கதகதப்பாய் இருக்கும். ஆர்றா இவன்? உண்டக்கட்டிக்கே வழியில்ல... ஊறுகாய்க் கவலையா உனக்கு?

தெருவில் ஒரு குஞ்சு கிடையாது. இந்த நிசப்தப் பொழுதுகளில்தான் பாம்புகள் வெளிவருகின்றன. முதலாளி எதாவது உற்சாகமாய்ப் பேச்சுக் கொடுத்தால் கூட நன்றாய் இருக்கும். தன்னுலகில் அவர் சிறகடித்திருந்தார். கொடியேத்தியிருந்தார். உள்ளே ராணுவ இசை. டட்டர டட்டர ஆர்ப்பரிப்பு. அவன் மனம்தான் தூக்க தூக்க எலும்புக் கூடென சொத் சொத்தென்று விழுந்தது.

முடி வளர்ந்திட்டது பரவால்ல. இல்லாட்டி டொடாங்கு பாவனையில் அவ முன்னால போயி இவரு நின்னா என்னாறது...

எல்லா நேரந்தான். ஒரு பூவரசம் பீப்பி செய்யேலாத மனுசன். அஞ்சி ரூவ்வா தந்தாரு... வாங்க மாட்டேன்னான் டொடாங்கு.

நான் பத்து பீப்பி செஞ்சி தாரேன். ஒரு அம்பது வெட்டறீங்களா முதலாளி...

முதலாளிக்குப் பெரியகுளம்னா பெரிய வீடு. சிறுகுளம்னா சின்ன வீடா?

சிறுகுளம் நல்ல தூரந்தான். ஊரெல்லை தொட மழை மட்டுப்பட்டது. விட்டுட்டா நல்லது. காருக்குள்ள பம்மிக் கொள்ளலாம்.

மழையடங்க உயிர்த்தாமரை சோம்பலை உதறி பாம்பென நிமிர்கிறது.

ஊரைத் தொடவே சிறு உற்சாகம் வந்தது. இந்த மண்ணிலேயே ஒரு கிளுகிளுப்பு இருக்கேய்யா.

திருநெல்வேலி மண்ணுல விளைந்த கோதுமைக்கு அல்வா பிரசித்தம்னாப்ல... சிறுகுளம்னா சிட்டுக்குருவி லேகியமா?

மனசு தனனை போல இந்த "டொடாங்கு"க்குப் பதிலா தன்னைக் கற்பனை பண்ணுகிறது. எலேய்... அடுத்த பெல்ட் அடி உனக்குத்தானப்போவ்... என வழி மறித்தது இன்னொரு மனசு.

மழை விடினும் தூவானம் விடவில்லை. ஒரு கனவுக் கதகதப்பு நல்லதுதானே? குளிர் எனும் எசமானின் முன் நாய் வாலாய் ஆடுகிறது உடல். வெடவெடப்பு.

மனோன்மணி வளாகத்தில் உச்சி விளக்கு எரிகிறது. வசீகரி. கொண்டாடப்பட ஏக்கங் கொண்டவளா நீ? சில மனிதர்களின் சில அந்தரங்க முகங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அட... அவனே மனசில் ஓராளாகவும் வெளியே... வேற்றாளாய்... நாகரீக பாவனையுடன் நடந்தாறது.

பாகீஸ்வரி? -உடனே அவதானா உதாரணம்? - எல்லோருமே அப்படித்தான். உள்ளுலகம் வேறு. வெளியுலகம் வேறு. அபத்தமான முரண்பாடுகள். இரண்டும் ஒன்றாக வெளியே வெடித்து வெளிச்சப்படுகையில்... இரண்டுமே ஆபாசமாய்த் தோற்றம் தருகின்றன.

முதலாளி... துட்டு வேணும் முதலாளி... நாக்கு... ஈரச்சாக்கு எனக் கனத்தது.

ஊரடங்க மழையும் அடங்க... சிறுகுளத்தை அடைந்து, முதலாளியின் பாட்டு எப்போது நின்றது...? வண்டியிலிருந்து இறங்கிக் கொள்கிறார்.

மனம் அழுகிறது அவனுக்கு. துட்டு தேவை. தனலெட்சுமி தொண்டையில மீன்முள் குத்தினாப் போல இம்சை.

வண்டியை நிறுத்துகிறான். உச்சி விளக்கு கதகதப்பளிக்கிறது இங்கிருந்து பார்க்க.

"முதலாளி - வண்டிலயே படுத்துக்கிடுங்க. நான் மேல போயிட்டு வாரேன்..." என மனசை வேடிக்கைப் படுத்திக் கொண்டான். நாயே வண்டியை ஒதுக்க வசம்பார்...

ஓரத்தில் ஓடு விலகிய சிரு தொழுவம். ஒரு காலத்தில் மனோன்மணியின் அம்மாவுக்காக வந்திருந்த எவரது ஜட்காவாவது அங்கே குதிரையவிழ்த்துக் காத்திருக்கலாம். மேல இன்னொரு குதிரை குபீர்னு எழுந்திருக்கும்.

இன்றைய இராத்திரி இதனடியில்தானா?

சிறு தூவானத்துக்குத் தூண்டைத் தலையில் போட்டுக் கொண்டு வண்டியில் இருந்து பண்ணையார் இறங்கினார். இப்பவே என்ன அவசரமோ? வரும் போது எல்லோரும் போட்டுக்குவாங்க. இவரு என்ன... போம்போதே...?

அவனிடன் துட்டும் இல்லை... தலையில் போட்டுக்கத் துண்டும் இல்லை...

அந்தத் தூண்டு வாங்கக் கூடத் துட்டு இல்லை...!

இரு... போ... என எதும் சொல்லாமல் உள்ள போயிட்டாரு. அவரு அவசரம் அவருக்கு. பார்த்தபடி நிற்கிறான். காலைவரை நிற்க வேண்டும் இப்படி. கதவைத் தட்டுவதா வேணாமா என அவர் குழம்பினாப் போல இருந்தது. வரணுன்னா வந்திருக்க முதலாளி. திரும்பிப் போயிறலாம்... என "தன்னை" உற்சாகப்படுத்திக் கொண்டான்.

அவர் தொட்ட மாத்திரத்தில் கதவு திறந்து கொள்கிறது. பிறகு என்ன விவரம் எதுவும் "தெரிய"வில்லை. திரைசீலைத் துதிக்கை. உட்சிறு விளக்கு எரிந்து... இரகசியம் போல ஒரு சிணுக்கச் சிரிப்பு. ஹா, அது மனோன்மணியின் குரல் கிண்கிணி.

காரை வளைத்துத் திருப்பி தொழுவத்தடியில் முடிந்தவரை மழைக்கு ஒதுக்கினான். இந்தக் குளிரில் தனிமையில் படுக்க வேண்டும். கிராமத்து வேலை தேடி வந்ததில் இது ஒரு தண்டனை.

அலுப்பாய் இருந்தது. சாதா மனுசாளை விட அவன் சற்று வளத்திதான். வண்டியில் படுக்க, கால் வெளிய தெரியும். "கால்" அலுத்து விடும். ரயில் பெர்த் போல் உள் மடக்கிப் படுக்கக் கார் உள்வ்சம் பத்தாது.

குழந்தையைக் காய்ச்சலோடு பத்மினியிடம் விட்டு விட்டது என்னவோ போலிருந்தது. சில சமயங்களில் குழந்தைக்கு சுகமில்லை... ஜூரம், என்று இவர்கள் முழித்திருக்கப் போக இவாள் ரெண்டு பேரும் நெருக்கி நெருக்கிப் படுத்து இவர்களுக்கு உடம்பு சூடேறிப் போகும். இவாளுக்கு ஜூரம் வந்து விடும். மன்மதன் அம்பு போட்டு விடுவான் உடனே.

மன்மதன்னா ஆருன்னு வெளிய எங்கயும் தேடாண்டாம். இவனே மன்மத வில். அப்ப அம்பு? அட போங்கப்பா... ஏற்கனவே குளிர் தாங்க முடியல்ல...

மேலே வானத்தைப் பார்த்தான். நல்லா சூலிறக்கிய மேகங்கல் மழை இன்னும் இருக்கும் போலுக்கேய்யா என நினைக்கையிலேயே சிறு காற்றின் மிதப்பும் குளிரும்... எசமானின் வருகை. உடம்பு மீண்டும் நாய்வாலென ஆடியது.

மழை. மழை வந்தே விட்டது. சினிமாப் படங்களில் வரும் குதிரைக் கொள்ளையன் போல சவுக்கை இப்புறமும் அப்புறமும் வீசிவரும் மழை. இந்த இரவு முழுக்க என்ன செய்யப் போகிறேன். திகைத்தே விட்டான்.

வேறொரு மனநிலையில் இருந்தால் இந்த மழையும்... நனைவதும் கூட நன்றாகவே இருந்திருக்கும். முதலாளி உள்ள குஷாலாய்க் கிடக்கைஅயில் மழை வெறுப்பாய் இருந்தது.

ஆ, மனோன்மணி... என அவள் அழகுக்கு, அந்த அருகாமைக்கு வாயைப் பிளக்கிறார்.

வாசல் கதவு திறந்து கிடக்கிறது. உள்ள போவமா? -என நினைத்து சட்டென்று பயங்கரக் கனவென அதை உதறினான்.

கதவு திறந்து கிடந்ததை உள்ளே அந்த மகராசி... மனோன்மணியின் கீழ்படியாள் பார்த்திருக்க வேண்டும்.

மழை திரைச்சீலையை நனைத்து உள்ளே எட்டிப் பாரந்து தரையெங்கும் நனைக்கிறது. அவள் கதவைச் சாத்த வருகிறாள். சாத்தியிருப்பாள். இருட்டு... மழையிருட்டு வேறு.

குபீரென ஒரு மின்னல். அவன் உடல் நடுங்க மழையில். அந்த மின்னலில் அவள் அவனைப் பார்த்தாள். "அய்யோ" என்றாள்.

"அய்யோ இல்லங்க. என் பேரு அய்யம்"

"உள்ள வாங்க" என்றாள்.

பகீரென்றது அந்த அழைப்பு. முதலாளிக்குத் தெரிஞ்சா பெல்ட் அடியில்லா...? என உடனே பதறியது. மழைல நனைஞ்சாலும் காலைல அதற்கேற்ற பலனிருக்கும். கை நிறையத் துட்டு ஒரு வேளை கிடைக்கலாம்...." என ஒரு கணக்கும் ஓடியது.

"இல்ல பரவால்ல..."

"பைத்தாரத்தனம் பண்ணாதீங்க. உள்ள வாங்க"

வெளியே நிற்பது பைத்தாரத்தனமா?, உள்ளே போவதா? தெர்ல.

அவன் உள்ளே வராமல் அவள் உள்ளே போக மாட்டாள் என்றிருந்தது.

பெருமாள் சரி என்று சம்மதித்து உள்ளே நுழைந்தான். பரவசமாய் இருந்தது. அதுவரை மழை விட வேண்டும் என நினைத்தவன்... விடவே கூடாது, என வேண்டிக் கொண்டான்.

கதவைச் சாத்தினாள் அவள். உலகம் மீண்டும் இருண்டு கொண்டது. வாசல் முதலை வாயென மூடிக் கொண்டது.

(தொடரும்...)

தொடர்கதை பகுதி-28                                                                                          தொடர்கதை பகுதி-30

 
                                                                                                                                                                                                                 முகப்பு