........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

   குறுந்தொடர் கதை

கடல்

வாசுகி நடேசன்

 1. சுனாமியின் பாதிப்பு

சுனாமிப் பேரலையின் கோரத் தாண்டவம் குடத்தனை தாளையடிப் பிரதேசங்களை முற்று முழுதாக உருக்குலைத்திருந்தது. இடிந்த கட்டடச் சித்தைவுகள், முறிந்து விழுந்த மரங்கள், எங்கும் பரந்து கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் என்று அப்பிரதேசமே மாநகரசபையின் குப்பைத்தொட்டி போலப் பொலிவிழந்து காட்சி தந்தது.

நிவாரணப் பணியாளரின் கடைக்கண் இன்னும் சரியாக அந்தப்பிரதேசத்தில் விழவில்லை போலும். குடத்தனை அரசினர் கலவன் பாடசாலை இன்று அகதி முகாமாக மாறி இருந்தது. அதில் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என்று முன்னூறு பேர் அளவில் அடைக்கலம் தேடியிருந்தார்கள். தொடர்ச்சியான போருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வைத்த அவர்கள், இயற்கையின் கோரத்தைக் கண்டு கிலி கொண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடாதவர்களாய் நடைப்பிணங்களாய் உலவிக் கொண்டிருந்தார்கள்.

அரசினர் பாடசாலைக்கு அண்மையில் இருந்த பாலர்பள்ளி இன்று தற்காலிக மருத்துவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது.

உடல் வருத்தங்களுக்கு உள்ளானவர்களுக்கும் உளப்பாதிப்புக்கு உள்ளாகி மீளமுடியாது தவிப்பவர்களுக்கும் உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்களும், மருத்துவத் தொண்டர்களும் சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.

உடல் உபாதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை உடன் பலனைத் தரலாம். ஆனால் உள நெருக்குவாரத்துக்கு உள்ளானவர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடுவார்களா...? உள்ளத்தை அரிக்கும் புற்று நோயாக மரணத்தின் எல்லைக்குப் போய்விடுவார்களா...? பயங்கரமான கேள்வி ஒன்று, மருத்துவரை மட்டுமல்ல சமூகப் பணியாளர் ஒவ்வருவரது உள்ளத்திலும் எழுந்து ஆட்டி வைத்தது.

மருத்துவ முகாமின் ஒரு மூலையில் மரியம்மா சுருண்டு படுத்திருந்தாள். அவள் கண்கள் மட்டும் தூக்கத்தைத் தொலைத்தனவாய் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.அந்தக் கண்களில் நவரசநாயகியர் காட்டும் இரசபாவங்கள் பல கணந்தோறும் தோன்றுவதும் மறைந்து மீண்டும் மாறுவதுமாய் விந்தைகாட்டிக் கொண்டிருந்தன.

அவள் உள்ளத்தில் இருந்து எழ  விரும்பும் ஆயிரம் உணர்ச்சிகள் பிரமைகளாய் அலையடித்துக் கொண்டிருந்தன. அந்தப் பிரமைகளை உண்மைகளாய்க் கருதி அவள் தனக்குள் கதைத்துக் கொண்டிருந்தாள்...இல்லை... அவள் மன அந்தரங்கத்தில் அவளது உறவுகள் தோன்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு இணையாக மரியம்மாவும் தனது உணர்வுகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

( தொடரும்)

பகுதி-2

 
                                                                                                                                                                                                                 முகப்பு