........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

   குறுந்தொடர் கதை

கடல்

வாசுகி நடேசன்

 2. மரியம்மாவின் மன உளைச்சல்

“மரியம்மா...மரியம்மா...”

கொஞ்சலாக சூசை அவன் மனைவியை அழைக்கிறான். குடிசையின் நீக்கலுக்கிடையே நிலவொளி மரியம்மாவின் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. நிலவொளியில் கையால் கணவன் தன்னைத் துலாவுவது மரியம்மாவுக்கு நன்கு தெரிகிறது. அவள் மெல்லத் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்.சற்றுப் புரண்டு படுத்தாலும் மௌனமே அவள் பதிலாகிறது.

“மரியம்மா...மரியம்மா...”

இம்முறை சூசையின் குரல் சற்று உரத்து ஒலிக்கிறது.

“இப்ப உமக்கு என்ன வேணும்...?”

சிணுக்கமாக அவள் குரல்...

“இப்படிக் கிட்ட வாவன்...”சூசை அன்பொழுக வேண்டுகிறான்.

“வயதுவந்த பிள்ளைகள் கிடக்குதுகள். உமக்கு விளையாட்டுத்தான்...” சற்றுக் கண்டிப்பான குரலில் மரியம்மாவின் மறுப்பு சூசையை உலுக்குகிறது.

“ஒரே கால் உளைவு... பிடிச்சுவிடு எண்டு கூப்பிட்டா பிகு பண்ணுறாய்”

அவன் கோபம் மனைவி மீதா...? அல்லது அந்தரங்கங்கங்ளைக் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத... பேணமுடியாத தங்கள் பொருளாதரத்தின் மீதா...?

இவர்கள் உரையாடல் எற்படுத்திய குழப்பமோ அல்லது பசி மயக்கமோ இவர்களின் குழந்தை யேசுதாசனின் நித்திரையைக் குலைத்திருக்க வேண்டும். அவன் எண்ணையில் நெளிந்தபடி குரல் எழுப்பத் தொடங்கினான்.

மரியம்மா சட்டென்று எழும்புகிறாள். குழந்தையை அள்ளி எடுத்து சமாதானப்படுத்த முயன்றவளாய் அவனை அணைத்துக் கொள்கிறாள்.

அதிகம் பால் சுரக்கா விட்டாலும் அந்தப் பரிசத்தின் மென்மையில் குழந்தை மீண்டும் துயிலில் ஆழ்ந்து போகிறது.

அவனை எண்ணையில் கிடத்தி சற்று நேரம் ஆட்டிய மரியம்மாவிடம் சொற்பம் இருந்த நித்திரையும் ஒடிவிட அவள் தன் படுக்கையில் குந்தி இருக்கிறாள்.

அவளுக்கு அருகில் கபரி ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறான். அந்த நிலையிலும் அவன் முகத்தில் பசிக் களைப்புத் தென்படுவதாக உணர்கிறாள் மரியம்மா.

நேற்றுத் தொழிலுக்குச் சென்று களைப்போடு திரும்பிய கபரி பெயருக்கு அள்ளி இரண்டு வாய் சாப்பிட்டுப் படுத்தது மரியம்மாவுக்கு நினைவு வருகிறது.

அவனுக்காகப் பொரித்த முட்டையும் அவித்த பிட்டும் அப்படியே கிடக்கிறது. தாய் மனம் பொறுக்கவில்லை...

அவனை உலுப்பி எழுப்பிகிறாள். “கபரி...கபரி...எழும்படா மொனை...எழும்படா... உனக்குப் பசி தாங்காதில்லே...எழும்பு மகன்...”

மரியம்மா தன்னையும் அறியாது பக்கத்தில் படுத்திருந்த வள்ளியம்மையை உலுப்பி எழுப்புகிறாள்.

உடல் மன உளைச்சல்களுக்கு உள்ளாகி நித்திரையின்றிப் புரண்டுவிட்டு அப்பொழுதுதான் சற்றுக் கண்ணயர்ந்த வள்ளிக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது.

“என்ன மரியம்மா உனக்கென்னவும் பயித்தியமே.. எரிந்து விழுந்தவள்...”தன் செயலுக்காகத் தன்னையே கடிந்து கொள்கிறாள்.

மரியம்மாவின் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகவே இயல்பாக இல்லை என்பது அவளுக்குத் தெரியும். முகாமுக்கு வரும் உளவளத் துணையாளர்களும் அதனை அவதானித்து அவளுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

இந்த வேளையில் மரியம்மாவுக்கு ஆறுதலாக இருப்பது தனது கடமை என்று எண்ணமிடுகிறாள் வள்ளி.

மரியம்மா பாவம். அவள் வாழ்க்கையில்தான் எத்தனை பிரச்சினைகள்..?எத்தனை இழப்புக்கள்..? நீண்ட பெருமூச்சென்று வள்ளியிடம் தோன்றி மறைகிறது...

( தொடரும்)

பகுதி-1                                                                                                                                                                        பகுதி-3

 
                                                                                                                                                                                                                 முகப்பு