........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 3. கடலுக்குப் போகும் குடும்பம்
அதிகாலை... நிலவு மேலைக் கடலில் மெல்ல மெல்லச் சரிகிறது. நிலவு தந்த போதையால் கடல் அலை நிலமகளைத் தாகத்துடன் தாவி அணைக்கிறது. குடத்தனைப் பிரதேச வீடுகள் சிலவற்றில் மட்டும் விளக்கொளி வானத்திடையே சில நட்சத்திரங்கள் போன்ற பிரமையை எற்படுத்துகின்றது. அதிகாலை... ....மணி மூன்றைத் தொடுகிறது. கடத்தொழிலுக்கான் ஆயத்தங்கள் அயல் வீடுகளில் தொடங்கி விட்டன. சூசைக்கு நித்திரை கலைந்து விட்டது. ஆனாலும் உடல் அலுப்பு எழும்புவதற்குத் தடையாக இருக்கிறது. அவன் புரண்டு படுக்கிறான். மரியம்மாவுக்கு விழிப்பு தட்டி விடுகிறது. அருகில் கபரி, மேரி, ரெமி உட்பட பிள்ளைகள் ஆழ்ந்த நித்திரையில் கிடக்கிறார்கள். மரியம்மா அரக்கப்பரக்க எழும்பி ,கணவனைப் பார்க்கிறாள். “இந்த மனுசன் விடிஞ்சது கூடத் தெரியாமல் இன்னும் குறட்டை விடுது.” தனக்குள் முணுமுணுத்தபடி கணவனைத் தட்டி எழுப்புகிறாள். ‘”எழும்புமன் கண்டறியாத நித்திரை... அங்க பாரும் டானியல் தொழிலுக்கு வெளிக்கிட்டிட்டுது... இப்ப இங்க வந்து சத்தம் போடப் போகுது..” “கபரியேல் எழும்பிட்டானே...?”சூசையின் கொட்டாவியிடையே வினா ஒன்றும் தொக்கி நிற்கிறது. “அவனை நான் எழுப்பிறன் நீர் போய் வெளிக்கிடுகிற வேலையைப்பாரும்... ...” “கபரி....எழும்படாமோனை... தொழிலுக்கு நேரமாச்சுதில்லை...”மகனை எழுப்பி விட்டபோதும் மேரியை எழுப்புவது லேசான காரியம் இல்லை என்பது மரியம்மாவுக்குத் தெரியும். இவள் பெட்டைக்கு இனி தண்ணி ஊத்தினாலும் எழும்ப மாட்டாள்... “எடி மேரி எழும்படி. கொப்பரும் கொண்ணரும் வெளிக்கிட வேணுமில்லை...” மேரி முனகியபடி புரண்டு படுக்கிறாள். “அதுக்கு நான் என்ன செய்யிறது...நீ எல்லாத்தையும் செய்யன்...” எரிச்சலுடன் பதில் வருகிறது மேரியிடம். “நான் எல்லாத்தையும் செய்யிறது எண்டால் பிள்ளையள் எண்டு நீங்கள் ஏன் இருக்க வேணும். கருவாடு காயப் போட்டு நேற்றைக்கு முழுக்க முதுகு வலியில கிடக்கிறன். கதையை விட்டிட்டு எழும்பி பல்லை விளக்கிட்டு அடுப்ப மூட்டு பிள்ளை.” “ஒழுங்கா நித்திரையும் கொள்ள விடாதுகள்.” புறுபுறுத்தபடி அரைமனதுடன் எழும்பி கிணற்றடி நோக்கிச் செல்கிறாள் மேரி. இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தை யேசுதாசன் எழும்பியழவே, அவனைச் சமாதானப்படுத்த ஒரு தாலாட்டுப் பாடலை முணுமுணுத்தபடி எணையை ஆட்டுகிறாள் மரியம்மா. மேரி முகம் கால் கழுவிவிட்டு அடுப்பை மூட்டவே அவள் வேலைகளுடன் மரியம்மாவும் இணைந்து கொள்கிறாள். “நான் புட்டுக் கொத்திறன் பிள்ளை. நீராலை பொரி. நேற்றையான் நண்டுக் குழம்பைக் கொதிக்க வைத்துக் கொடுத்தால் கொப்பர் புறுபுறுக்காமல் சாப்பிடுவார்.” மரியம்மா சொல்லியபடியே பேசினை எடுத்து அதற்குள் பிட்டு மாவைக் கொட்டுகிறாள். காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்த கபரி மரியம்மாவின் பக்கத்தில் குந்தியபடி மேரி கொடுத்த தேத்தண்ணியை உறிஞ்சுகிறான். “அம்மோய் படுவான் கரைராசனும் இண்டைக்கு எங்களோடை வாரான். ஒரு பார்சலைக் கூடக் கட்டணை.” ராசன் என்ற பெயர் மேரியின் காதில் தேன் எனப் பாய்கிறது. திடீரெனப் பாய்ந்த மின்சாரத்தால் உடல் சூடேர காது மடல்கள் சிவந்து போகின்றன. அவள் முகம் மலர்ந்து புதுப்பொலிவு பெறுகிறது. “அம்மோய் அப்ப முட்டை ரெண்டும் பொரிச்சு வைப்பமே.” தன்னிச்சையாக அவளிடமிருந்து அந்தக் கேள்வி கிளம்பிகிறது. “முட்டையென்ன கோழிக்கறி கூட நீ வைப்பையெண்டு எனக்குத் தெரியும்.” நமிட்டுச் சிரிப்புடன் கபரி சொல்லவும் அவனைப் பார்த்து முறைக்கிறாள் மேரி. “இப்ப முட்டைக்கு நான் எங்க போறது? பேசாமல் இதுகளை வைச்சுச் சமாளிப்பம்.” புட்டுக் கொத்துவதிலேயே மரியம்மாவின் கவனம் செல்கிறது. “கதைகண்ட இடம் இவனுக்கு கைலாயம். கபரி! வலையில சின்னப் பீத்தல் இருக்குதில்லை... அதைச் சரிப்படுத்தினியே? இண்டைக்கு காத்தமுத்துச் சம்மட்டியிண்டை மெசின் போட்டிலை கடலுக்குப் போறமெண்டு தெரியும்தானே...? அவன் டேவிட் ஒரு கொதியன். நடுக்கடலிலை நிண்டு கத்துவன்.” “ ஒமன அப்பு ராசனும் நானும் அதை நல்லாச் சரிக்கட்டிப் போட்டம். நீ யோசியாதை.” மகனின் பதிலில் திருப்தி கண்டவனாய் மகள் கொடுத்த தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு வெளியே சூசை வரவும் அவனை அழைத்துக் கொண்டு டானியல் படலையைத் திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருக்கிறது. “வா டானியல் அஞ்சு நிமிசத்தில நாங்கள் ரெடியாகிடுவம்.” குடிசை வாசலில் போடப்பட்ட வாங்கில் இருந்து கொண்டு டானியல் இருக்க இடம் தருகிறான் சூசை. டானியல் சாவகாசமாய் அமர்ந்தபடி பீடியொன்றைப் பத்தவைத்துப் புகையை உள் இழுக்கிறான். அநதப் பனி படர்ந்த காலைப் பொழுதுக்கு அது இதம் அளிக்கிறது. அது தந்த உற்சாகத்தில் இருவரும் பலதும் பத்தும் கதைக்கிறார்கள். “என்ன சூசை நேற்றைக்குப் பேப்பர் பாத்தனியே?” திடிரென இப்படியொரு கேள்வி டானியலிடமிருந்து எழுகிறது. “பேப்பரோ...? அதுகளை பாக்க வாசிக்க எனக்கு எங்க நேரம்...என்னவாம் போட்டிருக்குது.” “கடலில் கடற் புலியிண்டை பயிற்சி நடக்குதெண்டு நேவியிண்ட கடற்கட்டுபாடு மேலும் அதிகரிக்கப் போகுதாம்...எண்டு போட்டிருக்குது.” “இது போல நியூசுகள் நெடுக வாரதுதானே...இதுகளைப் பார்த்தா தொழில் செய்யேலுமே?” சூசையின் குரலில் ஒருவித அலட்சியம். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர் கொள்ளும் மனம் அவனிடம் கைவந்திருந்தது. “இல்லை....... எங்கட போட்டிலையும் மூண்டு இளந்தாரிகள் வாராங்களில்ல. அதுதான் யோசனையாக்கிடக்குது...” டானியல் சொன்னவை சூசையைப் பெரிதும் பாதிக்கவில்லைதான். அனால் குடிசையினுள் வேலையாக இருந்தாலும் இவர்கள் கதைப்பதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த மரியம்மாவால் சும்மா இருக்க முடியவில்லை. அவள் வெளியே வருகிறாள். “என்னென்ணை அப்ப இவன் கபரி கடலுக்கு வாரதில எதும் பிரச்சினை வருமோ...?” கலக்கம் அவள் கேள்வியில் ஊடுருவி நிற்கிறது. “இவள் பாவிக்கு எந்த நேரமும் பொல்லாத பயம். எது நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும். இதுகளுக்குப் பயந்தால் வாழமுடியுமோ...?” “நீர் தத்துவம் பேசும். உங்களைக் கடலுக்கு அனுப்பிப் போட்டு வயித்திலை நெருப்பைக் கட்டின மாதிரி அவதிப்படுகிறது நாங்களில்லோ...? முந்திதான் கடல் கொந்தளிப்பு சூறாவளி எண்டா இப்ப சூரப்படையே கடலுக்க...” உணர்ச்சி வேகத்தில் கண்களில் திரையிட்ட கண்ணீரை முந்தாணையால் துடைத்தபடி வேலையைத் தொடர உள்ளே செல்கிறாள் மரியம்மா. தாய்மையின் தவிப்பை சூசையோ டானியலோ உணராமலில்லை. ஆனால் அவர்களால்தான் என்ன செய்ய முடியும்..? அப்பொழுது ராசன் அங்கு வரவே “கபரி! கபரி!! ராசன் வந்திட்டுது. போய் வலையை எடுத்து ஆயத்தப்படுத்து மோனை.” உட்பக்கம் பார்த்து சூசை குரல் கொடுக்கிறான். கபரி குடிசையில் இருந்து வெளியே வர மேரியும் வாசல் கதவருகில் வந்து எட்டி ஆர்வமாக இராசனைப் பார்க்கிறாள். இருவரின் முகங்களிலும் புன்னகை... மேரி சட்டென தலையைக் குனிந்து கொள்ள அதனை அவதானித்தவனாய் “காதல்...மழையே காதல்...மழையே” என்று பாடிக் கொண்டு கபரி ராசனை நோக்கி வருகிறான். இவர்கள் இருவரும் தங்களுக்காகவே அந்தப் பாட்டுப் பாடப்பட்டது என்பதை உணர்ந்தவர்களாய் வெட்கத்துடன் மீண்டும் புன்னகைத்துக் கொள்கிறார்கள். சற்றுத் தயங்கி நின்ற ராசனின் தோள்களைப் பற்றி அணைத்தபடி வலையை நோக்கி கபரி நடை போடுகிறான். “மேரி உங்க என்ன எமலாந்திக் கொண்டு நிக்கிறா... தண்ணி எடுத்துப் போத்தலில நிரப்பிட்டியோ..?” மரியம்மாவின் அதட்டலால் தடுமாறியவளாய் “ஒமனை... இல்ல... இப்ப... எடுத்து வாரன்.” உளறுகிறாள் மேரி. வெளியில் சென்று ராசனை வடிவாகப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ந்தவளாய்ப் போத்தல்களை எடுத்துச் செல்லும் அவள் நடையில் துள்ளல்... வலையைப் பிரித்தபடி ராசனும் அவளைக் கவனிக்கவே அவன் தலையில் நொங் எனக் கபரியின் குட்டு விழுகிறது. “வேலையை ஒழுங்காகப் பார் மோனே” “வேலையை ஒழுங்காகத்தான் பாக்கிறன்.” கபரியின் கிண்டலுக்கு அவன் பாணியிலேயே பதில் கூறிய ராசனின் கண்கள் மட்டும் இமை வெட்டாது மேரியை விழுங்குகின்றன. இவர்கள் இருந்த இடத்துக்குச் சூசையும் டானியலும் வருகிறார்கள். பின்னால் மரியம்மா சாப்பாட்டுப் பார்சலுடன் வர மேரியும் தண்ணிப் போத்தலுடன் அங்கு வந்து சேருகிறாள். கபரி வலையை எடுத்துத் தோளில் போடவே மேரி ராசனிடம் தண்ணிப் போத்தல்களைக் கொடுக்கிறாள். “கவனமாய்ப் போட்டு வாங்கோ...”அவள் குரல் கிசுகிசுக்கிறது. “ம்...ஞாயிற்றுக் கிழம பின்னேரம் மாதா கோயிலில சந்திப்பம். எமாத்தாம வந்திடும்.” கபரியின் வேண்டுகோளுக்கு ம்...எனத் தலையசத்துச் சம்மதித்த மேரியின் கண்கள் ஏக்கத்துடன் அவனையும் கடலையும் நோக்கித் திரும்புகின்றன. மரியம்மா சாப்பாட்டுப் பார்சலைக் கணவனிடம் கொடுத்து விட்டுக் கபரியைக் கட்டியணைக்கிறாள். “கவனமாப் போட்டு வா ராசா... ராசன் நீரும் கவனமாய்ப் போட்டு வாரும்.” அவள் நாத் தழுதழுக்கிறது. கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை கணவனுக்குத் தெரியாமல் அவசர அவசரமாகத் துடைக்க முற்பட்ட போதும் சூசையின் பார்வையில் அது பட்டுவிடுகிறது. “நாங்கள் கடல் மாதாட்டத்தனே போறம். எந்த நேரமும் கண்கலங்கிக் கொண்டு...” சற்று எரிச்சலுடனும் கண்டிப்புடனும் சூசை கூறுகிறான்.
“அப்ப நாங்கள் போட்டு வாறம்...”அங்கு நிலவிய
இறுக்கத்தைத் தளர்த்துவதற்காய் டானியல் சொல்கிறான். நால்வரும் திரும்பி இரு
பெண்களையும் பார்த்து விட்டுக்
கடல் நோக்கிப் போகிறார்கள் ( தொடரும்)
|
முகப்பு |