........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 10. தற்கொலை செய்து விடுவாளோ...?
ஒரு நித்திரைக்கான ஊசியால் எத்தனை நேரம்தான் மூளையைச் சோர்வில் வைத்திருக்க முடியும். ஆழ்மனம் ஓயாமல் விழித்திருக்கையில் நித்திரையும் விடைபெற்று ஓடிவிடுகிறதே... மரியம்மாவின் மனத்திரையில் சுனாமியின் கோரத்தாண்டவம் திரும்பத் திரும்ப அரங்கேறிக் கொண்டிருந்தது. “அம்மா... என்னை அலை இழுக்குது... ”ரெமியின் கடைசிக் குரல்... காதுகளை வண்டு போலக் குடைகிறது. கண்களில் தேவதாசனும் ரெமியும் அலையால் மூடப் படும் காட்சி... ஓர் அலையல்ல ... ... ... ஓராயிரம் அலைகள் ஒன்று திரண்டு அவள் மனக்கதவைத் தூள் தூளாக்கிச் சிதறடித்துக் கொண்டிருந்தன. “என்ற பிள்ளயலை என்னால காப்பாத்த ஏலாமல் போட்டுது.” ஆயிரம் தடவைகளுக்கு மேல் இந்த வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிப்பட்டுவிட்டன. “அம்மா என்னக் காப்பாத்து எண்டு கத்தேக்க இந்த ரெண்டு கையும் சும்மா கிடந்தது.” தன் கைகளால் மிருகத்தனமாய்த் தன் தலையில் அடிக்கிறாள் மரியம்மா. மண்டையில் கைகள் ஏற்படுத்திய காயத்திலிருந்து இரத்தம் கசியத் தொடங்கி விட்டது. அருகில் இருந்தவர்களால் அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவள் செயல்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சிரமமாயிருக்கிறது. சாப்பாடு தண்ணியைக் கூடச் சரியாகத் தொடாத அவளிடம் இந்த யம பலம் எங்கிருந்து வந்தது என்பது அவர்களுக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது. சிறுவர்கள் பயத்துடன் சற்றுத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். “என்ற பிள்ளையல் செத்தாப் பிறகு நான் மட்டும் ஏன் உயிரோட இடுக்கிறன். என்ன மட்டும் இந்த நாசமாப் போன கடல் ஏன் விட்டு வச்சிருக்குது.” குற்ற உணர்வால் மரியம்மா குமுறுகிற போது அவள் தற்கொலை செய்து விடுவாளோ என்ற அச்சம் சூழ உள்ளவர்களுக்கு எற்படுகிறது. டொக்றர்கள் பல சமயம் ஊசி மூலம் நித்திரையில் ஆழ்த்த வேண்டியிருக்கிறது. உளவளத் துணையாளர்களும் மனநல மருத்துவர்களும் மரியம்மாவின் மனவடுவை வெறும் கவுன்சிலிங்கால் நீக்கிவிட முடியாததென்பதை உணராமலில்லை. ஆனால் பல்வேறு வேலைப் பளுக்களுக்கு இடையில் உடனடியாக மனநோய்க்கான ஏற்பாடுகளைச் செய்வது அவர்களால் முடியாதிருந்தது. அவர்கள் கவலையைச் சற்றுக் குறைப்பது போல மேரி தாயைப் பார்க்க அந்த முகாமுக்கு வருகிறாள். ( தொடரும்)
|
முகப்பு |