|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
2 |
|
|
|
a |
|
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 9. மரியம்மாவின் பிரார்த்தனை...?
யாழ் குடத்தனை வராதமாமணி வந்தது போல 2002 இல் சமாதானப் பேச்சு வார்த்தைகள் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே தொடங்குகின்றன. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மக்கள் வாழ்விலும் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஐந்து வருடங்களுக்கு மேல் வன்னியில் அஞ்ஞாத வாசம் செய்துவிட்டு சூசையின் குடும்பமும் சொந்த இடத்தில் மீண்டும் குடியேறிவிட்டது. பின்னும் ஒரு வாழ்க்கைப் போராட்டத்தைத் தங்கள் சொந்த மண்னில் எதிர் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். கபரியேல், ராசன், அன்றனி அகியோர் காணாமல் போய் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அவர்கள் நினைவுகளை மட்டும் காலவெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியவில்லை. அவர்கள் உறவுகளின் உள்ளங்களில் அழியாத கோலங்களாய் நிலைத்து விட்டார்கள். தாய்மைத் தவம் இன்னும் தொடர்கிறது. மரியம்மா இன்று காணாமல் போனவர்களுக்கான அன்னையர் முன்னணியின் அங்கத்தவள். அவள் தேடுதல்கள் முடியாத தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அப்பாவிகளான தன் உறவுகளுக்குக் கடல் நடுவே நிகழ்ந்த கோரம் மேரியின் உள்ளத்தைக் குமுற வைத்தது. அவள் கடற்புலியாய்க் களம் நோக்கிச் சென்று எட்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது. அவளது திறமை இன்று அவளை கடற்புலி அணியொன்றின் கப்றனாக மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் போர்... சூசயின் குடும்பத்தில் தன் கோரப்பல்லை ஆழமாகப் பதித்து விட்டது. வறுமை விரக்தி இவற்றுக்கெல்லாம் மேலாக யேசுதாசனின் திடீர் மறைவ... சோதனை மேல் சோதனையை எதிர்கோண்டதால்தான் என்னமோ உழைப்பினால் உரமேறிய இவர் உடம்பு போல உள்ளமும் வைரித்துப் போயிற்று. காலந்தான் எவ்வளவு பெரிய மருத்துவன்... அவனால் ஆற்றப்படாத புண்கள்தான் உண்டோ...? ஆனால் பத்துமாதம் பத்தியமிருந்து... ஐந்து பிள்ளைகளைப் பெற்ற மரியம்மாவின் புண்கள் மட்டும் மேலுக்குக் காய்ந்து போனாலும் உள்ளே குமைந்து கொண்டு அடிக்கடி வலியை ஏற்படுத்தத் தவறவில்லை. அதற்காக.... இறந்தவற்றுக்காக நிகழ்காலத்தைப் பலிகொடுக்க அவள் விரும்பவில்லை. உள்வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள அவளும் தயாராகி விட்டாள். சூசை தொழிலுக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்... கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களில் மூழ்கி நேற்றைய பொழுது மகிழ்ச்சியாகப் போய்விட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை... பூசை என்று தேவாலயத்துக்குப் போய்விட்டால் வரும் வருடப் பிறப்புக்குப் பிள்ளைகள் விரும்புவதை வாங்கிக் கொடுக்க முடியாது போய் விடும். ஆண்டவரைச் சில நிமிடங்கள் உளமாறப் பிரார்த்திக்கிறான்.அத்துடன் அவனது வைதிகக் கடமைகள் முடிந்து விடுகிறது. கதியால்களில் உலரப் போட்டிருந்த வலையை இழுத்தெடுத்து ஒழுங்கு செய்வதில் அவன் கவனம் குவிந்திருக்கிறது.
“தரை மேல் பிறக்க வைத்தான்,,, பெண்களைக் அவனை அறியாது அவன் வாயிலிருந்து சினிமாப் பாட்டொன்று உரக்கப் பிறக்கிறது. “பாட்டெல்லாம் பலமாக் கிடக்குது...?” கேள்வியுடன் டானியல் அவன் வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான். “ சொந்த இடத்திலே வந்து குந்தினோன பழைய ஞாபகம்.” சூசை தனது வேலையிலிருந்த கவனத்தைத் திருப்பாமலே சொல்லுகிறான். “ம்... இடம் பெயர்ந்து போய் காம்பிலையும் ரோட்டிலையுமெண்டு வாழ்க்கையே சலிச்சு போட்டுது...போனகாலத்தை நினைத்துப் பார்க்கவே டானியலுக்குப் பயம் ஏற்படுகிறது.” “அதுமட்டுமே ...என்ற பிள்ளையைப் பறிகொடுத்தன். குளத்திலையும் குட்டையிலையுமெண்டு மீன் பிடிச்சு என்னத்தை வாழுறது...? தந்த நிவாரணமும் ஒழுங்காக் கிடைக்காம நாங்கள் பட்ட துன்பம் எல்லாத்தையும் அந்த ஆண்டவன்தான் அறிவான்.” “ம்... இங்க வந்தும் என்ன...? எல்லாம் புதுசாத்தான் தொடங்க வேண்டிக் கிடக்குது.” டானியலின் வார்த்தைகளில் சலிப்பு. “அது சரி டானியலஸஸ. நீ புதிசா ஒரு போட் வாங்கப் போறாயெண்டு கதையடிபடுகுது.” “ஓம் சூசை...என்ற மருமகன் வெளிநாட்டில இருந்து அனுப்பின காசை என்ற மகன் லாரன்சுக்கு ஒரு முதலா ஆக்கிப் போடலாமெண்டு பாக்கிறன் .அவனோட நானும் ஒத்தாசையாக இருக்கலாம். வயசும் போகுது. என்னாலையும் தனிச்சு நிண்டு தொழில் செய்யேலாதுதானே...?” வெளிநாட்டுத் தொடர்பு இவர்கள் சமூகத்திலும் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்தது. வெறும் குடிசைகள் இன்று கல் வீடுகளாக மாறி வருகின்றன. சம்மட்டிமாரின் போட்டுகளில் தொழில் செய்து கூலிமட்டும் பெற்று வாய்க்கும் வயித்துக்கும் போதாதாய் வாழ்ந்த நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்று இளைஞர்கள் சிலர் புதிதாக மெசின் போட்டுக்கள் வாங்கித் தொழில் செய்யத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் வாழ்விலும் ஒளிக்கீற்றுக்கள் தென்படத்தான் செய்கிறது. ஆனாலும் அங்கும் இங்குமாய்ப் படையினரின் அடாவடித்தனங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போதாதென்று ஆழ்கடலில் பிற பகுதி மீனவர்களினாலும் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடுகிறது. அவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதோடல்லாமல் அவர்களது றோலர் படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளும் சேதப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால்... வெளிநாட்டுத் தொடர்புகள் இல்லாத சூசை போன்றவர்களின் வாழ்வு என்றும் மாறாத பழையநிலையிலேயே தொடர்கிறது “அது நல்லம் டானியல். எத்தனை நாள்த்தான் நாங்களும் இந்தச் சம்மட்டிமாருக்கு உழைச்சு உழைச்சு உடம்பு தேயிறது.. ம்... கபரியிருந்தால் கடன்பட்டாவது ஒரு போட்டை வாங்கிப் போடுவன்.” சூசையின் பேச்சில் ஆதங்கம் இழையோடுகிறது. இவ்விருவருக்கும் தேத்தண்ணியைக் கொண்டு வந்த மரியம்மாவும் இவர்கள சம்பாசனையில் இணைந்து கொள்கிறாள். “போனகிழமை நடந்த காணாமல் போனவையிண்ட கூட்டத்தில உயிரோட இருக்கிற பத்து இளைஞர்கள வருகிற ரெண்டாந்தி கதி அரசு வெளியில விடுகிறதாச் சொன்னவ. யேசுவே! சுவாமி இதிலயாவது என்ற பிள்ளையும் இருக்க வேணும்... “ மனமுருகி வேண்டி நிற்கிறாள் மரியம்மா. “இப்படியே அங்க விடுகிறாங்கள்...இங்க விடுகிறாங்கள் எண்டு முழுசா பத்து வருசம் ஓடிட்டுது.” சூசையின் குரலில் அவநம்பிக்கை தொனிக்கிறது. ஆனால் ஒரு நூலிழையிலாவது நம்பிக்கையிருக்குமானால் அதை விட்டுவிட மரியம்மா தயாரில்லை. பலமான அந்த நம்பிக்கைதான் அவள் புண்ணை ஆற்றும் மருந்தாகவும் இருந்து வந்தது. “எனக்கு நம்பிக்கையிருக்கு என்ற பிள்ளை உயிரோட இருப்பான்.” “சரி நான் தொழிலுகுப் போக நேரமாச்சுது. சாப்பாட்ட எடுத்து வை.” மரியம்மா கபரியேல் பற்றிக் கதைக்கத் தொடங்கினால் அதற்கு முடிவு இருக்காது என்பது சூசைக்குத் தெரியும். எனவே அந்தக் கதைக்ககு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவன் சொல்லுகிறான். மரியம்மா உள்ளே சென்று சாப்பாட்டுப் பார்சலையும் தண்ணீரையும் கொண்டு வந்து கணவனிடம் கொடுக்கிறாள். “ஒண்டுக்கும் யோசியாதை தங்கச்சி...நம்பினவைய ஆண்டவன் கைவிட மாட்டான். அப்ப நாங்கள் போட்டு வாறம்.” டானியல் ஆறுதல் கூறியபடி விடைபெறுகிறான். “தேவதாசனை ஊர் சுற்றாமல் ஞாயிறு ஆராதனைக்குப் போகச் சொல்லு. அப்பிடியே யோசப்புப் பாதிரியாரிட்ட கோயிலில எதாவது வேலை போட்டுத்தரச் சொல்லிக் கேக்கச் சொல்லு.” தேவதாசன் கடலுக்கு வர ஆசைப்பட்டாலும் அதைச் சூசை அனுமதிப்பதில்லை. கபரிபோல இவனையும் இழக்க சூசை விரும்பவில்லை. ஒ.எல் வரை படித்த அவனை எதாவது சின்ன வேலையிலாவது அமர்த்திவிட வேண்டுமென்று துடித்தான் சூசை. “அதையெல்லாம் நான் பார்க்கிறன். நீங்கள் கவனமாய்ப் போட்டு வாங்கோ..” அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு அவர்கள் போவதையே கண் கொட்டாமல் சிறிது நேரம் பார்த்து நின்றாள் மரியம்மா..அவர்களுடன் கபரியும் போவது போல ஒரு பிரமை தட்டுகிறது. தலையை உலுக்கி அந்த நினைவுகளில் இருந்து வலுக்கட்டாயமாக விடுபட முயன்றவளாய் குடிசையுள்ளே வருகிறாள். ரெமி படுக்கையிலிருந்து எழாதவளாய் கதைப் புத்தகம் ஒன்றில் ஆழ்ந்திருக்கிறாள். மரியம்மாவுக்கு ரெமியைப் பார்க்கும் போது பெருமைதான். எத்தனையோ கஸ்டங்களுக்கிடையே அவள் ஏ,எல் கலைத்துறைப் பரீட்சையில் இரண்டாவது தடவையில் சித்தியெய்திவிட்டாள். பல்கலைக்கழகம் போகப் புள்ளிகள் போதாவிட்டாலும் யாழ்ப்பாணக் கல்வியியல் கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைத்து விட்டது, நாளை அவள் ஆரம்பக் கல்வி ஆசிரியையாக வெளியேறுவாள்... தங்கள் வாழ்வு போல இல்லாமல் அவள் வாழ்வு ஒளிமயமாகத் திகழப்போகிறது. மரியம்மாவின் உள்ளம் ஈன்ற பொழுதிலும் பூரிப்படைகிறது.. இந்த நேரத்தில் மரியம்மாவால் யோசப்புப் பாதிரியாரை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அவரது பண உதவியும் ஊக்கமுமே ரெமியின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என எண்ணியவள் அவருக்கு மனசார நன்றி கூறுகிறாள். ஆனாலும் விடியற் பொழுதில் வேலைகளை விட்டுவிட்டு ரெமி கதைப்புத்தகத்தில் ஆழ்ந்திருப்பது சற்று எரிச்சலையே தருகிறது. “நேற்றைக்கு முழுக்க இந்தப் புத்தகத்தோட கிடந்தது பத்தாம இப்பவும் தொடங்கிட்டியே படிக்க...”
“ராத்திரியில தலமாட்டில விளக்கு வைச்சு படிக்கக் கூடாதெண்டா இப்பவும்
விடமாட்டியே...?” சுவாரசியாமான பகுதியை
வாசிக்கும் வேளையில் தாய் தன்னைக் குழப்பியது ரெமிக்கு எரிச்சலைத் “கதையை விட்டுட்டு மாதா கோயிலுக்கு வெளிக்கிடுகி வெலையைப் பாரு. பூசை தொடங்கப் போகுது.” புத்தகத்தைப் போட்டுவிட்டு பாயைச் சுருட்டி பரணில் வைத்தவளுக்குத் தீடீரென்று தமக்கை நாளை வருவதாகச் சொல்லியது ஞாபகம் வருகிறது. அவள் உள்ளம் பூரிப்பால் மலர்கிறது. “அம்மோய் அக்கா நாளைக்கு வாறதெண்டு சொன்னவளில்லை.” “இப்பத்தான் ஞாபகம் வருகுதோ..? அவளுக்குப் பிடிச்ச கறி வாங்க நான் சந்தைக்குப் போக வேணும். தலக்கு மேல வேலை கிடக்குது. நீ ஒரு ஒத்தாசையும் செய்யாமல் புத்தகம் வாசிக்கிறா...” “ஏன் நான் விடியச் சமையலுக்கு உதவி செய்து போட்டுத்தானே புத்தகம் வாசிச்சனான். நானும் இண்டைக்கு றவுனுக்குப் போக வேணும். அக்காவுக்குப் பிறந்தநாள் வருகுதில்லை...” அவர்கள் சம்பாசனையைக் குழப்பியபடி அந்தத் திடீர்ச் சத்தம்... முன்று பெரும் வெடிச்சத்தம்... இதுவரை அவர்கள் கேட்டிராத பேரோசை... கிபீர் விமானம் சீறி வந்து குண்டு மழை பொழிகிறதா...? அவர்களால் சரியாக ஊகிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் சில கணப்பொழுது திகைத்து நிற்கிறார்கள். “என்னடி பிள்ளை சத்தம்...பேந்தும் சண்டை தொடங்கிட்டோ...?” மரியம்மாவின் குரல் கிலியில் நடுங்குகின்றது. ரெமி பதிலேதும் கூறாது வெளியில் ஓடி வருகிறாள். அவளை மரியம்மாவும் தொடர்கிறாள். அவர்கள் முன்னே பெரிய வெடிச் சத்தத்துடன் சீறிக்கொண்டு அலை உயர்ந்து வருகிறது. தெளிந்த நீர் இல்லாமல் கழிவு நீர் போல எழுந்த அலைக் கூட்டத்தை எதிர்த்து என்ன செய்வது என்று அறியாதவராய் விறைத்து நிற்கையிலே வெளியில் சென்றிருந்த தேவதாசன் சைக்கிளோடு இழுபட்டு உள்வரவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் அலையால் அலைக்கழிக்கப் படுகிறான். “ஐயோ காப்பாத்துங்கோ...அலை இழுக்குது...” அவன் குரல் ஒலியின் வேகத்திலும் அசுர வேகத்தில் வந்த அலை எதிர்த்து ஒடாதவாறு கடலை நோக்கி மூவரையும் இழுத்துச் செல்லுகிறது. “ஐயோ.. என்ர பிள்ளை... கத்தியவள் ரெமியின் கையை இறுகப் பற்றி இழுக்க முயற்சி செய்தபடி அலை இழுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறாள். ஆனால் ரெமி அவள் கையில் இருந்து விலகி சில கணங்கள் சென்றிருந்தன. தெவதாசனை அலை மூடி அவன் மரியம்மாவின் கண்களில் இருந்து மறைந்து விட்டான். “அம்மா என்னை பிடியணை... ஐயோ... அலை என்ன மூடுது.” ரெமியின் குரல் மட்டும் மரியம்மாவின் செவிப்பறையில் அவலமாய் ஒலிக்கிறது. மரியம்மாவையும் அலை மூழ்கடிக்கத் தொடங்குகிறது. “ஐயோ யேசப்பா...! என்ற பிள்ளைகளைக் காப்பாத்தும்.” அவள் கைகளை உயர்த்தி ஆண்டவனை இரஞ்சுகிறாள். பாஞ்சாலிக்குக் கண்ணனால் மானங்காக்கப் புடவை கிடைத்தது போல இவள் கைகளுக்கும் பெரிய மரக்கொப்பொன்று அகப்படுகிறது. ஆழ்கடல் நடுவே தத்தழிக்கும் போது துரும்பைக் கூடப் பற்ற மனம் விழைவது மனித இயல்பு. தன்னிச்சையான செயல். மரியம்மாவும் அந்த இயல்பூக்கத்தால் உந்தப்பட்டு அந்த மரக்கிளையை இறுகப் பற்றிக் கொள்கிறாள். கடல் நீர் அவள் நாசிவரை வந்து மூச்சுத் தினறலை ஏற்படுத்தவே தன்னையறியாது உந்தி மரக்கிளையில் ஏறிக்கொள்கிறாள். கிளைகள் நிறைந்த அந்தத் தேக்கு மரம் இன்று மரியம்மாவின் உயிரைக் காத்து விட்டது. அவள் மரத்தில் இருந்து பார்க்கையிலேயே பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படுகின்றனர். சில நிமிடங்களில் நீர் மெல்ல மெல்ல வடிந்து செல்கிறது. ஆண்டவன் மரியம்மாவின் பிரார்த்தனையை ஏற்று அவள் பிள்ளைகளைக் காக்கவில்லை. மண்டையில் இருந்து தொடங்கிய விறைப்பு அவள் உடல் எங்கும் பரவுகிறது. அவளது இயலாமை, உள்ளத்தைக் கண்டதுண்டமாய்க் குதறியெறிகிறது. அலை வந்த வேகத்தில் திரும்பிச் சென்று கடலோடு சங்கமித்து விடுகிறது. மரியம்மாவையும் தொண்டர்கள் சிலர் முகாமில் சேர்த்து விட்டார்கள். அவள் உடலுக்குக் காப்புக் கொடுத்தாகி விட்டது, ஆனால் அவள் உள்ளத்துக்கு... ... ...? ( தொடரும்)
|
| முகப்பு |