........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
2 |
|
a |
குறுந்தொடர் கதை கடல்
வாசுகி நடேசன் 8. குழந்தையைக் காப்பாத்துங்க!
குடத்தனை மருத்துவ முகாமுக்கு ஒரு தாய் தன் குழந்தையைக் கொண்டு வருகிறாள். அந்தக்குழந்தைக்குக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு. பேரலையின் தக்கத்தால் உடற் காயம். குழந்தை வீறிட்டுக் கத்துகிறது. அதனைச் சமாதானப்படுத்தத் தாயும், அதன் உறவினர்களும் படாதபாடு படுகின்றனர். மரியம்மாவின் இன்னுமொரு காயத்தில் நெருப்புத் துண்டொன்று வந்து விழுகிறது. அவள் காதுகளில் குழந்தை ஒன்றின் அழுகுரல்... இல்லை அவள் குழந்தை யேசுதாசனின் அழுகுரல்... அவள் சட்டென குழந்தையைத் துக்குகிறாள்... அதனை மார்போடு அணைக்கிறாள். அதன் நெற்றியில் கை வைத்துப் பார்க்கிறாள். நெற்றி அனலாய்ச் சுடுகிறது. “இங்கவந்து பார் ரெமி... என்ற பிள்ளைக்கு நெற்றி அனலாய்ச் சுடுகுது. மலேரியா வந்திட்டுப்போல...” “ ஐயோ..! என்ற பிள்ளை கைகால் அசைக்க முடியாமல் கிடக்குது...” உடல் முழுவதையும் தடவுகிறாள். “என்ற பிள்ளையைக் காப்பாத்த ஆரும் இல்லையோ...?” அவள் சிந்தனையில் ஒரு மின்னல். உடனே அதைத் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுகிறாள். “டாக்டர் இவனைப் பாருங்கோ... இவனுக்கு என்னமோ செய்யுது... யமன்... யமன்.. கொண்டு போக முன்னம் காப்பாத்துங்கோ...டாக்டர்.” டாக்டரின் கையைப் பற்றியவாறு கெஞ்சுகிறாள். மரியம்மாவின் கையில் சிக்கியிருந்த குழந்தையோ அன்னியப் பெண்ணின் பரிசத்தாலும் அவளின் அதிரடி நடவடிக்கையாலும் பயந்து வீறிட்டு அழுகிறது. அவசர கருமமாக வெளியே போய் திரும்பிய அக்குழந்தையின் தாய் தன் குழந்தை மரியம்மாவிடம ் சிக்கிப் படும்பாட்டைக் கண்டு பதறிப் போகிறாள். அவள் போட்ட கூக்குரலில் முகாமே சில கணப் பொழுது அல்லோலகல்லோலப்படுகிறது. மருத்துவப் பணியாளருக்கு மரியம்மாவிடம் இருந்து குழந்தையைப் பிரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. டாக்டர் மரியம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறார். மருத்துவப் பணியாளரின் உதவியுடன் அவளுக்கு வலுக்கட்டாயமாக நித்திரை மருந்து ஊசி மூலமாக ஏற்றப்படுகிறது. மரியம்மாவின் நோய்க்கு இது நிரந்தரமான தீர்வு ஆகாது என்பது டாக்டருக்கு நன்கு தெரியும். ஆனாலும் உடனடி நிவாரணமாக இதைத் தவிர வேறு எதையும் அவராலும் செய்யமுடியாதுதான். ( தொடரும்)
|
முகப்பு |