........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

 

a

   குறுந்தொடர் கதை

கடல்

வாசுகி நடேசன்

7. யேசு... என்ற தம்பி யேசு...!

1998 வன்னியில்

பரந்து விரிந்த வன்னிப் பிரதேசம்...

இன்று தமிழர் தாயகத்தின் இதயமாக விளங்கி வருகிறது... எனினும், அதன் வளம்...?வன்னி பொதுவாகவே மழை வீழ்ச்சி குன்றியது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டமிட்ட புறக்கணிப்புக் காரணமாகப் பண்டைய மன்னர்களால் வெட்டப்பட்ட குளங்களும் நீர்நிலைகளும் தூர்ந்து போய் அங்கு வறட்சி ஆட்சி செய்தது.

வடக்கிலும் கிழக்கிலும் போர் தொடங்கிய போது வன்னியின் நிலமை மேலும் மோசமானது. அரசாங்கத்தின் பொருளாதாரத் தடை வன்னி மக்களின் பொருளாதார முயற்சிகளை முடக்கிப் போட்டிருந்தது. இத்தனையும் போதாதென்று அரச ஆக்கிரமிப்புப் படையின் செல் வீச்சுக்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மக்களைச் சொல்லொணாத் துன்பதுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தன.
இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே 1995, 96 களில் யாழ்ப்பாணத்திலிருந்து கணிசமான மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து சென்றனர்.

சூசையின் குடும்பமும் யாழ்ப்பாணத்திலிருந்து எத்தனையோ அவலங்களுக்கிடையே கிளிநொச்சியை வந்தடைந்திருந்தது. கிளிநொச்சியிலிருந்து பத்துக் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இராமனாதபுரம் இவர்கள் வசிப்பிடமாயிற்று.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட பிளாஸ்ரிக் விரிப்புக்கள் உள்ளூரில் கிடைத்த காட்டுத்தடிகள் ஓலைகள் கொண்டு எப்படியோ ஓர் குடிசையை அமைத்து விட்டார்கள். இடம் பெயர்ந்த மக்கள் பலரின் முக்கிய பிரச்சனையான வேலையின்மை இவர்களது வாழ்க்கையையும் தினடிக்கச் செய்தது. மீன்பிடித் தொழிலையே நம்பியிருந்த இவர்களால் லேசில் இங்கு தொழில் வாய்ப்பைப் பெறமுடியவில்லை.

மரியம்மா தலைச் சுமையைக் குடிசை வாசலில் இறக்கி வைக்கிறாள். தலையில் விறகுச் சுள்ளிகள் அண்டாதவாறு வைத்த துண்டை எடுத்து வழியும் வியர்வையைத் துடைத்தவள் தன்னை சுவாசப் படுத்துவதற்காகக் குடிசை வாசலில் உள்ள சிறிய திண்ணையில் அமருகிறாள்.

அவளையறியாது மன வெப்பியாரம் பெருமூச்சாக எழுகிறது. கண்களில் நீர்த் துளிகள் வருவதா வேண்டாமா என்று எட்டிப்பார்க்கின்றன.

“போனவளை நினைச்சு இப்பிடி இடிஞ்சு போய் இருந்தா குடும்பத்தை ஆர் பார்க்கிறது.”

வெறும் தேத்தண்ணியை உறிஞ்சியபடி எதிர்த் திண்ணையில் சூசை வந்து அமருகிறான்.

“கவலை கவலை எண்டு நீர் குடிச்சுக் கொண்டிருந்தால் மட்டும் குடும்பம் உறுப்படுமாக்கும்.” மனத்தில் கணவன் மீது ஏற்பட்ட எரிச்சல் நெருப்புத் துண்டமாய் வார்த்தைகளில் வந்து தெறிக்கிறது.

“அம்மோய் நிவாரண அரிசியும் முடிஞ்சு போட்டுதனை. மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்யிறது”. ரெமி வெறுந் தேத்தண்ணியை நீட்டியபடி தாயிடம் வினவுகிறாள்.

“கொப்பரக் கேள் அவர்தான் பதில் சொல்லுவார்.” அற்றாமை அவள் குரலில் தொனிக்கிறது.

இதற்கு பதில் கூறினால் மனைவியின் வசைக்கு மேலும் மேலும் உள்ளாக நேரிடும் என்பதைச் சூசை உணர்ந்தவனாய் மகளை நோக்குகிறான்.

“இந்தா பிள்ளை ரெமி உந்த மீன் பறியையும் தூண்டிலையும் எடுமோனைஸகுளத்திலை ஏதும் கிடைக்குதோ எண்டு பாப்பம்.”

“குளத்தில கிடைக்கிறதை வித்துப் போட்டுப் பேந்தும் கசிப்புக் குடிக்கப் போயிடாதையும் யேசுதாசனுக்கும் காய்ச்சலாக் கிடக்குது. ஆஸ்பதிரிக்குப் போகக் பஸ் காசும் வேணும்.”

“கடலில் மீன் பிடிச்ச எங்களைக் குட்டையில மீன்பிடி அண்டால் என்னத்தைப் பிடிக்கிறது. வருகிற ஒண்ட ரெண்டையும் விக்கிறதுக்கு ஐஞ்சாறு மைல் சைக்கிள் உளக்க வேண்டியிருக்குது. களைப்பு வந்தால் எப்பவாவது குடிப்பன்”.

சூசையின் பதில் மரியம்மாவின் கோபத்தைத் தூண்டிவிடுகிறது.

“ஒம்....ஒம்...ஒருக்காக் களைப்பெண்டு குடியும். பேந்து மகள் இயக்கத்துக்குப் போட்டாள், மகன் காணாமல் போட்டான். கவலை பொறுக்க முடியேல்லை எண்டு குடியும் பேந்து வன்னியில இடம் பெயர்ந்து கஸ்டப்படுகிறம் எண்டு குடியும். உமக்குத்தான் குடிக்கிறதுக்கு ஆயிரம் காரணம் கிடைக்குமே...”

வறுமையால் வாடும் இவர்களிடம் ஏதோ ஒருவகையில் இந்தக் குடிப்பழக்கமும் ஒட்டிக் கொள்கிறது. தங்களை வாட்டும் துன்பங்களில் இருந்து தற்காலிகமாக விடுபட இவர்கள் கைக்கொண்ட பழக்கம் எல்லை மீறும் பொழுது இவர்கள் குடும்பத்தை எவ்வளவு சீரழிக்கிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

“உண்மையில இவள் மேரி எவ்வளவு பொறுப்பான பிள்ளை. இவள் இப்படி இக்கத்துக்குப் போவாள் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்ல...” கதையை மாற்றும் பொருட்டு இப்படி ஒரு கருத்தை முன் வைக்கிறான் சூசை. அதில் மகள் பற்றிய அவனது வேதனையும் புலப்படாமல் இல்லை.

“அக்கா பொறுப்பான பிள்ளை யெண்டதாலதான் இயக்கத்துக்குப் போனவ”. தமக்கையின் செயல் முற்று முழுதாக சரியானது என்பது ரெமியின் முடிந்த முடிவு. ரெமி தானும் இயக்கத்துக்குப் போக எத்தனையோ முறை எண்ணியிருக்கிறாள். ஆனால் எதோ ஒன்று அவளை அவ்வாறு செய்யாமல் தடுத்து வந்தது.

“ம்... ...தமையனை ஆமி பிடித்தத அவளால பொறுக்க முடியேல்லை. இந்த அகதி அவல வாழ்க்கையும் அவங்களாலதானே...அதுதான் போட்டாள்.”

மரியம்மாவால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடரும் அவலங்கள் உறுதியான அவள் மனதைக்கூட ஆட்டங்காண வைத்து விட்டன.

“சரி சரி ... விடியகாத்தால அழாதை ... நான் போட்டுவாறன். தா பிள்ளை அந்தப் பறியை... ரெமி பறியையும் தூண்டிலையும் கொடுக்கச் சூசை வெளியேறுகிறான்.

மனப்பாரம் அழுத்தச் சிறிது நேரம் செயலற்று இருக்கிறாள் மரியம்மா... அங்கு அசூசையான மௌனம் நிலவுகிறது. அவள் சிந்தை வேரொன்றில் தாவுகிறது. மனப்பாரம் மேலும் அழுத்துகிறது. இனம் புரியாத பயம் அவள் மனதைப் பிசைகிறது.

யேசுதாசன்... மரியம்மா, சூசயின் கடைசி மகன். செல்லமகன். அவன் ஐந்தாறு நாளாய் காய்ச்சலால் அவதிப்படுகிறான். மரியம்மாவும் தனக்குத் தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து விட்டாள். ஆனால் இன்னும் குணம் எற்பட்டபாடில்லை. இன்று அவனை எப்படியும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டுவதென்று தீர்மானிக்கிறாள்.

போசாக்கான் உணவு கிடைக்காமை, நுளம்பின் பெருந்தாக்கம் என்பன இடம் பெயர்ந்து சுகாதாரக்கேடுகளுக்கிடையே வாழும் மக்களை மேலும் வாட்டி வதைத்து வருகிறது. பலர் நிமோனியா டெங்குக் காய்ச்சல்களால் இறந்திருக்கிறார்கள். மரியம்மாவின் பயத்துக்கு நியாயம் இல்லாமல் இல்லை.

“எங்க பிள்ளை இவன் யேசு ? காய்ச்சலோட விளையாடப் போட்டானே...? “

“இல்லையம்மா அவன் விடியத் தொடக்கம் முனகிக் கொண்டு கிடந்தவன். தேத்தண்ணி கொடுத்தன். அதையும் சத்தியெடுத்துப் போட்டான்.”

மகளின் பதில் மரியம்மாவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

“அதையேன் எனக்கு முன்னமே சொல்லெல்ல?” குற்றம் சாட்டுவது போல அவசரம்மாய்க் கேட்கிறாள் அவள்.

“விடிய எழும்பி விறகு பொறுக்கப் போட்டு இப்பத்தானே இதில வந்து இருக்கிறாய். வந்தோன அப்புவோட சண்டை.”

“சரி சரி இப்பவே அவனை கூட்டிக் கொண்டு ஸ்பத்திரிக்குப் போறன். பத்துமணி பஸ்ச விட்டால் பேந்து இரண்டு மணிக்குத்தான் பஸ். பத்து மைல் போகவேணும். இந்தப் பிஞ்சு தாங்குமோ என்னமோ...?”

வன்னியில் பஸ் சேவை என்பது ஒழுங்காக நடைபெறுவதில்லை. பொருளாதாரத் தடை காரணமாகப் பல பஸ்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டன. ஓடும் இரண்டு மூன்று பஸ்களும் உடைந்து சிதலமாய்ப் போன ரோடுகளிலேயே பயணம் செய்ய வேண்டி இருந்தமையால் அடிக்கடி பஞ்சராகி நடுரோட்டில் நின்று விடுகின்றன. நிவாரண விடயமாய் ரவுனுக்குப் போகப் பஸ்சுக்காகக் காத்திருந்து அது கிடைக்காததால் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு மரியம்மா உள்ளாகியிருக்கிறாள். பல மணி நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் தகிக்கும் வெய்யிலிலோ மழையிலோ நோயோடு தள்ளாடி நடக்கும் சீவன்களை அங்கு மிகச்சாதாரமாகப் பார்க்கலாம். தானும் கொளுத்தும் வெய்யிலில் நோயால் வாடும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்க நேரிட்டால்...? நினைப்பதற்கே மரியம்மாவுக்குப் பயமாக இருக்கிறது.

“அம்மா அவனுக்குக் குளிருதெண்டு அழுதான். உன்ற சீலையாலதான் போர்த்து விட்டனான். எல்லா இடமும் மலேரியா.”

“நீ போய் கமலமக்காட்ட அரிசி கடன் வாங்கிக் கஞ்சிவை. நான் அவனத் தூக்கிறன்.”

மகனத் தூக்கியவள் ஒருகணம் பதறித் துடித்துப் போகிறாள்.

“இங்க பார் ரெமி. இவனுக்கு அனலாய் உடம்பு கொதிக்குது.. எனக்கென்னமோ பயமாக் கிடக்குது... கொப்பரக் கூப்பிடுவமே...”

“பயந்து என்ன செய்யிறது...கெதியில் ஆஸ்பத்திரிக்கு வெளிக்கிடு. அப்புவ இப்ப நான் எங்கஎண்டு தேடிறது...?”

மரியம்மா தனது சீலையொன்றால் யேசுதாசனை நன்கு போர்த்தி அவன் தலையில் வெய்யில் சூடு படாதவாறு பார்த்துக்கொள்கிறாள். தூக்கிய போது காய்ச்சல் மயக்கத்தால் முனகிய யேசு தாயின் இதமான அணைப்பில் மீண்டும் சோர்ந்து அவள் தோளில் சாய்ந்து கொள்கிறான்.

மரியம்மா படலையை தாண்டும் வரை அவளையும் யேசுவையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு உள்ளே செல்கிறாள் ரெமி.

“தம்பி பாவம் யேசப்பா...! அவனுக்குக் கெதியில சுகம்வர நீர்தான் உதவ வேணும்...ஆமென்.” கருணையே உருவாய் அவளையே நோக்கியிருந்த யேசு படத்தின் முன் நின்று மனம் உருகப் பிரார்த்திக்கிறாள் ரெமி.

ரேமிக்குப் பதினான்கு வயது மட்டுமே ஆகிறது. அனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் மரியம்மா களை பிடுங்க, நாற்று நட எனக் கூலி வேலைக்குச் சென்று விடுவதனால் வீட்டு வேலைகள் ரெமியின் தலையில் விழுந்து விடுகின்றன.

சூசை குடும்பத்திலேயே ரெமிக்குத்தான் படிப்பில் ஆர்வமும் திறமையும் அதிகம் இருந்தது. அனால் இடம் பெயர்ந்த இந்த இரண்டு வருடத்தில் அவள் படிப்பும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. அரசாங்கம் புத்தகங்களை இலவசமாக வழங்கியிருந்தாலும் கொப்பி இதர கல்வி உபகரங்களை வாங்கிக் கொடுக்கும் நிலையில் அவள் குடும்பம் இருக்கவில்லை. இதனால் அவள் கல்வி ஊசலாடிக் கொண்டிருந்தது. மழைக்கு ஒதுங்குவது போல அவளும் இன்னும் ஏதோ பள்ளிக்கூடம் சென்று வருகிறாள். ஆரம்பத்தில் அவளது வரவின்மைக்கு ஆசிரியர்கள் கண்டித்தாலும் அவளைப் போன்ற மாணவர்களின் அவல நிலையை அறிந்திருந்ததால் வரும் அளவுக்கு வரட்டுமே என்று விட்டுவிட்டார்கள். தனது படிப்புப் பாதிக்கப்படுவதற்காக வருந்துவதைத் தவிர ரெமியாலும் என்னதான் செய்யமுடியும்...?

ரெமி தனது சிறிய குடிலை அழகாகக் கூட்டிவிட்டு முத்தத்தில் ஒரு பகுதியைக் கூட்டுகிறாள். நேரம் பதினொன்றைத் தொட்டுவிட அப்புவும் தேவதாசனும் பசியால் வருவார்களே என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு பக்கத்து வீடு நோக்கிச் செல்லுகிறாள்.

பக்கத்து வீட்டு கமலம் மாமியிடம் எத்தனை தடவைகள்தான் அரிசி, சீனி, மாவு என்று கடன் வாங்குவது...? பல சமயங்களில் வாங்கிய கடன் திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை. இப்பொழுது அவ்விடம் கடனுக்குப் போக ரெமிக்குக் கூச்சமாக இருக்கிறது. அனால் இன்று உலை வைப்பதற்குக் கடன் வாங்குவதுதவிர வேறு வழியில்லை.

ரெமி தயங்கியபடி மாமியின் வீட்டு வாசலில் போய் நிற்கிறாள்.

கமலம் மாமிக்கு கிளிநொச்சி இராமனாதபுரம்தான் சொந்த இடம். அவவின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊரில் ஓரளவு பசையுள்ள குடும்பமும் கூட. மாமியின் இயல்பான இரக்க சுபாவம் காரணமாக முகம் சுழிக்காமல் தன்னாலான சிறிய உதவிகளை செய்து வருகிறா... அல்லாமலும் கமலம்மாமியின் வயல் வேலைகளுக்குக் கூலியாக அவ கூப்பிடும் போதெல்லாம் மறுக்காமல் மரியம்மா போவதுண்டு. அவளின் வீட்டில் அரிசி இடித்தல், நெல் குற்றிப் பிடைத்தல், புழுங்கள் அவித்தல் என நீளும் வேலைகளைச் செய்யும் நிரந்தர வேலையாளாக மரியம்மா திகழ்ந்தமையும் மாமியின் உதவிகள் நீடிப்பதற்கான மற்றுமொரு காரணமாய் இருந்து வருகிறது.

“மாமி...மாமி...

மிக மெதுவாக ரெமி உட்பக்கம் பார்த்துக் கூப்பிடுகிறாள்.

வெளியில் வெளிக்கிட்டுக் கொண்டிருந்த மாமி கண்ணாடியில் பார்த்துப் பொட்டைச் சரி செய்கிறா. பின் முந்தானையை இழுத்துச் சொருகிய வண்ணம் குரல் வந்த திக்கை நோக்கி வருகிறா.

ரெமியின் தயக்கத்தைப் பார்த்தவுடனையே அவள் தன்னிடம் ஏதோ எதிர்பார்த்து வந்திருப்பதைப் புரிந்துகொள்கிறா...

“என்ன ரெமி ஏதும் வேணுமே...?”

“ஓம் மாமி...கொஞ்சம் அரிசி வேணும்...நிவாரணம் வந்தோன தாரம்...”

“ம்... கொப்பர் பொறுப்பில்லாமல் நடக்கிறார்... கொம்மா கூலிக்கு போறா... அது என்னத்தைக் காணும்...? இதில இரு பிள்ளை...அரிசி எடுத்திட்டு வாறன்.”

வெளிவிறாந்தையில் இருந்த கதிரையை ரெமிக்குக் காட்டிவிட்டு உள்ளே சென்று ஒரு கொத்து அரிசியுடன் வெளியே வருகிறா...

“உன்ற அம்மா எங்க...? கூலிக்கே போட்டா...?”

“இல்லை மாமி தம்பிக்குச் சுகமில்லை.அவனக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போட்டா.”

“நானும் ஸ்பத்திரிக்குத்தான் போறன். தம்பியிண்டறக்க்றர் றவுனுக்குப் போகுது. மினக்கடாமப் போகலாம். மரியம்மா போறதெண்டா கூடிக்கொண்டு போயிருக்கலாம்.”

ரெமி அரிசியை வாங்கியபடி எழுந்து கொள்கிறாள்.மாமி நான் போட்டு வாரன்.”

“ஓம் பிள்ளை.. எனக்கும் நேரம் ஆகுது.” கூறியபடியே கேற்றை நோக்கி ரெமியுடன் மாமியும் நடக்கிறா...

ரெமி வீட்டுக்கு வந்து அடுப்பை மூட்டி உலையைக் கொதிக்க வைக்கிறாள். அரிசி கடன் வாங்கியாகி விட்டது. அனால் சோறு காய்ச்சினால் கறிக்கு எங்கு போவது. இடம் பெயர்வுக்கு முன் மீனும் நண்டும் எனச் சுவையாகச் சாப்பிட்ட நாவு இப்பொழுது வெறும் இலை குலைகளைச் சாப்பிட்டுச் செத்து விட்டது. இன்றைக்கு முருங்கையிலைக் கஞ்சிதான். தீர்மானித்தவளாய் வெளியில் வந்து முருங்கையிலையை ஆய்ந்து சுத்தம் செய்கிறாள்.

கொதிக்கும் உலையில் அரிசியை போட்டுவிட்டு தேங்காய் துருவி பாலைப் பிழிகிறாள். அரிசி வெந்து வர முருங்கையிலை. தேங்காய்ப்பால் உப்பு ஆகியவற்றைப் போட்டுத் துலாவி விடுகிறாள். சிறிது நேரம் கொதிக்கவிட்ட பின்னர் கஞ்சி தயாராகி விடுகிறது.

சமையல் முடித்துப் பாத்திரங்களைச் சுத்தம் செய்து முடித்த போது நேரம் இரண்டைத் தொடுகிறது.

“நேரம் ரெண்டாகுது... அம்மா இன்னும் ஏன் வரெல்லை...” இனம் புரியாத சங்கடம் மனதை நெருடுகிறது... சிந்தனையோடு திண்னையில் படுத்தவள் சற்றுக் கண்ணயர்ந்து போகிறாள்.

“சின்னக்கா பசிக்குது... என்ன கிடக்குது...?”

தேவதசன் சத்தமாகக் கேட்டுக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவன் புத்தகப் பையை ஒரு மூலையில் எறிகிறான்.

தேவா வந்த அரவத்தில் எழும்பிய ரெமி ஒரு தடவை உடம்பு வளைத்துச் சோம்பல் முறிக்கிறாள்.

“பிரபு வந்திட்டார்... கண்ட கண்ட இடங்களில விளையாடுகிறது... கை கால் கழுவிட்டு சாப்பிட வாடா...” உள்ளே சென்று தட்டொன்றில் கஞ்சியை வார்த்து வைக்கிறாள் ரெமி.

“சின்னக்கா என்ன சாப்பாடு ?” அவசரமாகக் கைகால்களை அலம்பி விட்டு வந்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டவுடன் சுருங்கிப் போகிறது.

“என்னனை இண்டைக்கும் கஞ்சியே...? தொட்டுச் சாப்பிட மாசிச் சம்பலாவது வைச்சிருக்கலாமே...?”

“ஓம்... ஓம்... அப்பு இரண்டு மூண்டு மீன் பிடிக்கும்....அதையும் வித்துப் போட்டுக் கசிப்புக் குடிக்கும்... இந்த லட்சணத்தில உமக்கு மீனும் இறைச்சியும் கேக்குதோ...? இனி நிவாரணம் வரும்வரை இதுதான் சாப்பாடு...”

சொல்லியபடி தானும் ஒரு தட்டை எடுத்துக் கஞ்சியை வார்க்கிறாள். ஒரு வாய் வாயில் வைக்கு முன் கமலம் மாமி அவளை கூப்பிடுவது கேட்கிறது. அவசரமாகக் கையைக் கழுவிக் கொண்டு வெளியே வருகிறாள். அவளை தேவாவும் தொடர்கிறான், மாமியின் முகம் வழமைக்கு மாறாக இறுகி இருக்கிறது.

ரெமியால் அதன் காரணத்தை ஊகிக்க முடியவில்லை...

“என்ன மாமி ஒரு மாதிரியிருக்கிறியல்..? ஏதும் பிரச்சினையே...?”

“நான் ஆஸ்பத்திரியில உங்கட அம்மாவக் கண்டனான்... யேசுதாசனுக்குக் கொஞ்சம் கடுமையாகக் கிடக்குதெண்டு அந்தரப்பட்டுக்கொண்டு நிண்டவ...

நடந்துவிட்டதை அந்தப் பிள்ளைகளிடம் பக்குவமாய்ச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையும் கவனமும் மாமியிடம் இருக்கிறது...

ரெமி பதில் ஏதும் கூறாமல் மாமியின் முகத்தைப் பாக்கிறாள்... அவள் இதயம் பயத்தால் வேகமாகத் துடிக்கிறது.

“யேசுவுக்கு நிமோனியா வந்திருக்கு... கொழும்புக்கு உடன கொண்டு போக வேணும் எண்டு டொக்ரர் சொன்னதாச் சொன்னவ...

“கொழும்புக்கோ?” அதிர்ச்சியடைந்தவளாய் கேட்கிறாள் ரெமி.

நாடு இன்று இருக்கும் நிலையில் கொழும்புக்குப் போவது என்பது லேசான காரியம் இல்லை என்பது ரெமிக்குப் புரிந்திருந்தது.

“இப்படித்தான் கொம்மாவும் அதிர்ச்சியோட இருந்தா... ஆனால் ஒரு மணி போல யேசு... உண்மையை அந்தச் சிறுவர்களிடம் எப்படிப் போட்டு உடைப்பது என்று தெரியாமல் தாடுமாறுகிறா கமலம் மாமி...

“அம்மாவும் யேசுவும் எங்க மாமி கொழும்புக்குப் போகப் போயினமே...?”

தேவாவின் கேள்விக்கு பதில் கூற முடியாது சிறிதி நேரம் மௌனம் சாதிக்கிறா மாமி. அவளின் கண்கள் கலங்குகின்றன.

“ஏன் பேசாமல் இருக்கிறியல். அம்மா எங்க... யேசு எங்க...

கேட்கும் போதே அழுகை பொத்துக் கொண்டு வருகிறது ரெமிக்கு...

“யேசுவிண்ட சீவன் ஒரு மணிக்குப் போட்டுது... அம்மா உடம்பை எடுத்திட்டு வாரதுக்கு ஆஸ்பத்திரியில நிக்கிறா... கொப்பருக்கும் வழியில சொன்னனான். அவரும் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டார்.”

கமலம் மாமி உண்மையை ஒருமாதிரி போட்டு உடைத்து விடுகிறா...

“என்ற யேசு... என்ற தம்பி யேசு... ரெமியும்... தேவாவும் குழறி அழுகிறார்கள். இப்பொழுது மாமியும் வாய்விட்டு ஒப்பாரி வைக்கிறா... இவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அங்கு ஓடி வருகிறார்கள்.

( தொடரும்)

பகுதி-6                                                                                                                                                                      பகுதி-8

 
                                                                                                                                                                                                                 முகப்பு