........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-1

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

நம்மைத் தேடி வருமா?

ஒன்றும் தெரியாத கூமுட்டைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பலர் எளிதில் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நம்மைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்த நாம் எல்லோரையும் பகைத்துக் கொண்டு ஏமாளி என்று பெயர் வாங்கியதுதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீட்டில் மனைவி மக்கள் எல்லோரும் சேர்ந்து நம்மை ஒன்றுக்கும் உதவாதவன் என்று முத்திரையிட்டு உதறித் தள்ளும்போது நம்மால் மட்டும் நல்ல பெயர் வாங்க முடியவில்லையே என்று சலித்துக் கொள்ளும் நாம் நல்ல பெயர் வாங்குவதற்கான வழிமுறைகள் தெரியவில்லையே என்று புலம்ப வேண்டியிருக்கிறது.

அலுவலகத்தில் நாம் எவ்வளவு திறமையைக் காண்பித்து வேலை செய்தாலும் அதிகமான வேலைகளைக் கொடுத்து நம்மைக் கழுதையைப் போல் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வைத்து விடுகிறார்கள். வேலையே செய்யாமல் இருக்கும் சிலர் எப்படியோ நல்ல பெயர் வாங்கி பதவி உயர்வும் பெற்று விடுகிறார்கள். நம்மால் அப்படி வரமுடியவில்லையே என்று தவிக்க வேண்டியிருக்கிறது.

உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கூட நம்மால் பெரிதாக நல்ல பெயர் வாங்க முடியவில்லை. நம்மை ஏளனமாகப் பார்க்கும் அவர்கள் மத்தியில் வலம் வரக் கூச்சப்பட்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கும் நாமும் நல்ல பெயருடன் வர என்ன செய்வது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இப்படி வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, வெளிவட்டாரத்திலும் சரி நம்மால் நல்ல பெயரை வாங்க முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டுக் கொள்கிறார்கள். இந்த வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்த வருத்தம் போக்கும் மருத்துவம் ஏதாவது வேண்டியிருக்கிறது.

“ஏதோ ஒன்றிரண்டு பேர்களிடம் நல்ல பெயரை வாங்கி விடலாம். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடியுமா? அது எவ்வளவு கஷ்டம்...?” என்று பயந்து ஒதுங்கத் தேவையில்லை... நல்ல பெயர் வாங்குவது மிகவும் சுலபம். அதற்கு காசு பணம் தேவையில்லை. நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்து கொண்டால் போதும்... நம்மை நல்ல மனுசன்... என்றும் அவரைப் போல ஒருத்தரைப் பார்க்க முடியுமா? என்றும் எல்லோரையும் சொல்ல வைத்து விடலாம்.

இங்கே சொல்லப்போகும் சில வழிமுறைகளை மட்டும் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பாருங்கள்... நல்ல பெயரை நீங்கள் தேடிப்போக வேண்டாம், அது உங்களைத் தேடி வந்துவிடும்.

******

m
m

1. முதலில் ஆமாம் போடலாம்.

தங்கள் பேச்சுக்கு எல்லோரும் தலையாட்ட வேண்டும் என்கிற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்ளும் இவர்கள், தாங்கள் சொல்லும் கருத்துக்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லாவிட்டாலும் அதை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களிடம் நாம் அந்தப் பேச்சில் தவறு தெரிகிறதே என்று குறை சொல்லி நம்முடைய கருத்துக்களுடன் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கெட்ட பெயரை வாங்குவதை விட, “ஆமாம்” என்கிற வார்த்தையை மட்டும் அவர்களுக்கு ஆதரவாகச் சொல்லிப் பாருங்கள். அவர்கள் உங்கள் பெயரை உச்சிக்கு ஏற்றிவிடுவார்கள்.

சிலருக்குத் தான் சொல்வதே சரி, தான் செய்வதே சரி என்கிற எண்ணம் இருக்கிறது. இவர்கள் தங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் பிறர் “ஆமாம்” போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவர்களிடம் ஆமாம் மட்டும் போட்டு விட்டால் போதும் அவர்கள் நம்மிடம் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்து விடுவார்கள். “ஆமாம்” என்று சொல்லி விட்டால் போதும் அத்தனையும் நம்மைத் தேடிவந்து சேரும். ஆமாம் இது அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தச்சொல். இந்தச் சொல்லில் ஈர்க்கப்பட்டவர்கள் இதற்காக எதையும் இழக்கத் தயாராகி விடுவார்கள்.

பொதுவாக ஆமாம் போடுபவர்கள் பலரும் இந்த ஒரே வார்த்தையில் நல்ல பெயரை வாங்குவதோடு தாங்கள் நினைத்த காரியத்தையும் எளிதாகச் சாதித்துக் கொண்டு விடுகிறார்கள்.

மகாபாரதத்தில் வரும் ஒரு சிறு சம்பவம் இது.

ஸ்ரீ கிருஷ்ணனும் அர்ச்சுனனும் காலாற நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ண பகவான், சற்றே தொலைவில் பறக்கும் ஒரு பறவையைக் காட்டினார்.

“அர்ச்சுனா, அதோ தெரிகிறதே ஒரு பறவை, அது காகம்தானே?” என்று கேட்டார்.

அர்ச்சுனன் சற்றும் தாமதிக்காமல், “ஆமாம் கிருஷ்ணா காகம்தான்!” என்றான்.

கிருஷ்ண பகவான் விடவில்லை. “இல்லை அர்ச்சுனா, அப்பறவை காகம் இல்லை. புறா போல தெரிகிறதே!” என்றார்.

அர்ச்சுனன், “ஆமாம் கிருஷ்ணா, புறாதான்” என்றான்.

கிருஷ்ண பகவான் மீண்டும், “அர்ச்சுனா, இது காகமும் இல்லை, புறாவும் இல்லை. கழுகு மாதிரி இருக்கிறது” என்றார்.

அர்ச்சுனன், உடனே “ஆமாம் கழுகுதான்” என்றான்.

கிருஷ்ணர் சிரித்தார். “அர்ச்சுனா, நான் சொல்கிற பறவையே நீயும் சொல்கிறாயே... ஏன்?” என்றார்.

அர்ச்சுனன், “பகவானே! நான் கண்களால் பார்ப்பதை விட உன் வார்த்தையில் நம்பிக்கை அதிகம் உள்ளவன். உன்னால் எந்தப் பறவையையும் மாற்ற முடியும். எனக்கு உன் வார்த்தையில் முழு நம்பிக்கை இருக்கிறது.” என்றான்.

இன்று ப(ண)லமுடைய பலர் தங்கள் வார்த்தைக்கு அடுத்தவர் ஆமாம் போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பைத் தகர்ப்பது போல் இல்லை என்கிற இன்னொரு வார்த்தையைச் சொல்லி இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவுவரை செல்வதை விட, காசா, பணமா ஒன்றுமில்லை! வெறுமனே ஒரே ஒரு வார்த்தை, ஆமாம். இந்த ஒரு வார்த்தையில் அவர் மயங்கிப் போகிறார், மகிழ்ந்தும் போகிறார். நாமும் அவர்களிடம் நல்லவராகி விடுகிறோம்.

(வழிமுறைகள் வளரும்)

                                                                                                                                      வழிமுறை-2

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு