........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-2

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

2. உண்மையை எப்படிச் சொல்லலாம்?

உண்மை பல இடங்களில் நம்மை மாட்டி விட்டுவிடுகிறது. பலருக்கும் உண்மையை அப்படியே சொல்வதால் நம்மேல் கோபப்பட்டு நம்மை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். நாம் சொல்ல வேண்டிய உண்மையை அவர்களுக்கு ஏற்றபடி சிறிது மாற்றி சொன்னால் போதும் அவர்கள் அசந்து விடுவார்கள்.

இந்த உண்மை தெரியாமல்தான் பலரும் தவிக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன் என்று அவர்களுக்கு அவர்களே குழியைத் தோண்டிக் கொள்கிறார்கள். உண்மையே பேசிய அரிச்சந்திரன் கதையைப் படித்து, அவன் பட்ட கஷ்டங்களை எல்லாம் அறிந்தும் நம்மை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. நம்மை மாற்றிக் கொள்ள வேண்டாம். ஆனால் அந்த உண்மையை வேறு விதமாக மாற்றிச் சொல்லலாமே?

அரசர் ஒருவர் கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் அவர் பற்கள் ஒவ்வொன்றாக விழுகின்றன. பற்களே இல்லாமல் பொக்கை வாயுடன் காட்சி தந்தார் அவர்.

அரசவைக்கு வந்த அவர் சோதிடரை அழைத்து தான் கண்ட கனவைச் சொல்லி, “என் கனவிற்கு என்ன பலன்? சொல்லுங்கள்” என்று கேட்டார்.

“அரசே! நெருங்கிய உறவினர்கள் அனைவரும் தங்கள் கண் முன்பே ஒருவர் பின் ஒருவராக இறக்கப் போகிறார்கள். நீங்கள் அவர்கள் எல்லோரும் சாகப் போவதைப் பார்க்கப் போகிறீர்கள். அதைத்தான் உங்கள் கனவு சொல்கிறது” என்று விளக்கமளித்தார் அந்த சோதிடர்.

“நெருங்கிய உறவினர்கள் என்றால்?” என்று கேட்டார் அரசர்.

“உங்கள் மனைவி, மக்கள், சகோதர-சகோதரிகள்” என்றார் சோதிடர்.

“என் மனைவி, மக்கள், சகோதர-சகோதரிகள் இறப்பதைப் பார்த்தும் நான் உயிரோடு இருப்பேனா? பொய்யான சோதிடம் சொன்ன உம்மை என்ன செய்கிறேன் பார்” என்று கோபத்துடன் கத்தினார் அரசர்.

அரசரின் கோபத்தைக் கண்டு நடுங்கிப் போனார் சோதிடர்.

அங்கிருந்த அமைச்சர், “அரசே! தங்கள் கனவின் பலனை நான் சொல்கிறேன். உங்கள் மனைவி, மக்கள், சகோதர-சகோதரிகளை விட நீங்கள் நீண்ட காலம் வாழப் போகிறீர்கள். இந்த நாட்டைச் சிறப்பாக ஆளப் போகிறீர்கள்” என்றார்.

இதைக் கேட்ட அரசர் மகிழ்ந்தார்.

“அரசே! இந்த சோதிடருக்குச் சோதிடம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்றுதான் தெரியவில்லை. இவர் சொன்னதைத்தான் நான் வேறு விதமாகச் சொன்னேன்” என்றார் அமைச்சர்.

இந்தக் கதையிலிருக்கும் சோதிடரைப் போல் சிலர் உண்மையைச் சொல்கிறேன் என்று அப்படியே சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் முன்பு அந்தக் கேள்வியைக் கேட்டவர் விருப்பம் அறிந்தும், இடத்திற்குத் தகுந்தபடியும் மாற்றிப் பதில் சொல்லப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் அவர்களிடம் கெட்ட பெயர் வாங்குவது மட்டுமில்லை. சில சமயம் பெரும் இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கலாம்.

சிறு மாற்றம்தான், இதனால் நமக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அப்புறமென்ன இதனால் நமக்கும் நல்ல பெயர்தான்.

(வழிமுறைகள் வளரும்)

வழிமுறை-1                                                                                                                 வழிமுறை-3

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு