........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-3

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

3. தாராளமாகப் புகழ்ந்து தள்ளுங்கள்!

யாருக்கும் அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை உயர்வாகச் சொல்லிவிட்டால் போதும், அவர்களுக்கு உச்சி முதல் பாதம் வரை குளிர்ந்து போய் விடுகிறது. அந்த குளிர்ச்சியில் நனைந்து விட்டவர்கள் அடுத்தடுத்து அதை எதிர்பார்க்கத் துவங்கி விடுவார்கள். கூடவே எதைக் கேட்டாலும் அதைத் தாராளமாக அள்ளி வழங்கியும் விடுவார்கள்.

இந்தப் புகழ்ச்சிக்கு சாதாரண குழந்தைகள் முதல் அரசர்கள் வரை ஏன் இறைவன் கூட அடிமையாகிப் போய் விடுகிறார்கள். மன்னர்களைப் புகழ்ந்துபாடி பரிசுகள் பெறுவதும், இறைவனைப் புகழ்ந்துபாடி வேண்டிய வரம் பெறுவதுமான நம் நாட்டு வரலாற்றுக்கதைகளும், புராணக்கதைகளும்தான் இதற்கு மிகப்பெரிய உதாரணங்கள்.

நான் நகராட்சித் தலைவராக இருந்த ஒருவரிடம் உதவியாளராக இருந்தேன். அவர் நான் புகழ்ச்சிக்கு அடிபணிய மாட்டேன் என்று வாயில் சொல்வாரே தவிர அவரைப் புகழ்ந்து பேசக்கூடிய சில நகர்மன்ற உறுப்பினர்கள் எப்பொழுது வருவார்கள் என்று காத்துக் கிடப்பார். அவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கு போன் செய்து வரச்சொல்வார். அவர்கள் தங்களுக்கு வேறு வேலை இருக்கிறது, வரமுடியாது என்று சொன்னாலும் கூட இவர் விட மாட்டார். தன்னைப் பற்றி மக்கள் எப்படிப் பேசிக் கொள்கிறார்கள்? என்று போனில் விசாரிப்பார். அவர்களும் இவரின் குணமறிந்து பொய்யைத் தாராளமாக அள்ளி வீசிவிடுவார்கள். இவர் அதையெல்லாம் உண்மைதான் என்று நம்பிக்கொண்டு அவரைப் பார்க்க வருகிறவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி அடைவார்.

ஒரு நாள் அந்த நகராட்சித் தலைவர், நகராட்சி ஆணையாளருடன் சேர்ந்து நகராட்சிப்பணி குறித்து பேசுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அலுவலகத்தில் நான் மட்டும் தனியாக அம்ர்ந்திருந்தேன்.

நகர்மன்ற உறுப்பினராயிருந்த ஒருவர், அந்த நகராட்சித் தலைவரிடம் தனக்கு ஆண்குழந்தை பிறந்த தகவலைச் சொல்ல வந்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவருடையக் குழந்தைக்கு சோதிடர் த தி து என்று ஆரம்பிக்கும் எழுத்துக்களில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதாகவும் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து திர்ஷன் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சொன்னார்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அந்த நகராட்சித் தலைவர் அங்கே வந்து விட்டார்.

அங்கு வந்த அவர் நகர்மன்ற உறுப்பினரைப் பார்த்து, என்னப்பா, உனக்கு ஆண்குழந்தை பிறந்திருக்குதாமே? என்று விசாரிக்க அவரும் ஆமாம் சார். என்னோட குழந்தைக்கு நீங்கதான் சார் பேர் வைக்கனும் என்றார்.

மகிழ்ந்துபோன அவர் அப்படியா, ரொம்ப சந்தோஷம் நல்ல பெயராக வைத்திடுவோம் என்றார்.

அந்த நகர்மன்ற உறுப்பினர், குழந்தைக்கு சோதிடர் த தி து என்று ஆரம்பிக்கும் எழுத்துக்களில்தான் பெயர் வைக்க வேண்டுமாம். அந்த எழுத்தில் துவங்கும் நல்ல பெயரா சொல்லுங்க சார்! என்று சொல்ல,

உடனே அவரும் த, தி, து என்கிற எழுத்தில் துவங்கும் பெயர்களாக சுமார் நூறு பெயர்கள்வரைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த நகர்மன்ற உறுப்பினர் தனது குழந்தைக்கு தான் தேர்வுசெய்து பெயர் வைத்துவிட்ட விஷயத்தைச் சொல்லாமல் அத்தனை பெயரையும் அமைதியாகவும் ஆர்வமாகவும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

நானும் வேறு வழியில்லாமல் அவர்களது உரையாடலைப் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

கடைசியாக அந்த நகர்மன்ற உறுப்பினர் சார், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது... நான் என்னோட குழந்தைக்கு உங்களோட பெயரைத்தான் வைக்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சோதிடர்தான் த, தி, து என்கிற எழுத்தில் துவங்கும் பெயர் வைக்கனும்னு சொல்லிட்டார். அவர் க எனும் எழுத்தில் துவங்கும் பெயர் மட்டும் வைக்கனும்னு சொல்லியிருந்தால் உங்கள் பெயரைத்தான் வைத்திருப்பேன். என்று ஒரு பெரிய ஐஸ்கட்டியையே அவரின் தலையில் தூக்கி வைத்து விட்டார்.

க வில் துவங்கும் பெயருடைய அந்த நகராட்சித் தலைவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அந்த சந்தோஷத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த பலருக்கும் அன்று பெரிய அசைவ ஓட்டல் ஒன்றில் மதிய சாப்பாடு அவருடைய செலவில் வழங்கப்பட்டது.

சாப்பிட்டுவிட்டு ஓட்டலிலிருந்து வெளியே வந்த நான் தனியே அந்த நகர்மன்ற உறுப்பினரிடம் உங்கள் குழந்தைக்குப் பெயரைத் தேர்வு செய்து வைத்து விட்டதாக என்னிடம் சொன்னீர்களே, அப்புறம் ஏன் இப்படி தேவையில்லாமல்...? என்று மெதுவாகக் கேட்டேன்.

அவரும், சார்! நம்ம சேர்மன் இந்த மாதிரி பேசுறதைத்தான் ரொம்ப விரும்புகிறார். அதனால்தான் அப்படியே அவர் போக்கில் அவரைக் கொண்டு போனேன். என்றார்.

நான் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்களே என்று நினைத்துக் கொண்டிருந்த போது, சார் இதையெல்லாம் கண்டுக்காதீங்க... இன்னும் இரண்டு நாள் கழித்துப் பாருங்க... நான் ஏற்கனவே என் குழந்தைக்கு வைத்திருக்கிற பெயரைச் சொல்லி, நீங்க சொன்ன பெயரையே வைத்துவிட்டேன் சார், என்று சொல்லிவிடுவேன்." என்றார்.

இப்படி பல நகர்மன்ற உறுப்பினர் அவரை வெறுமனேப் புகழ்ந்து பேசியே அவரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். அவரும் இவர்களெல்லாம் நம்மேல் அதிகமான பாசம் உடையவர்கள் என்று நினைத்துக் கொள்வார்.

இந்த நகராட்சித் தலைவரைப் போல் பலரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும் தன்னைப்பற்றி அடுத்தவர்கள் புகழ்ந்து பேசுவதை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். நாமும் சில சமயம் இந்தச் சூழ்நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் நாமும் அவர்களுக்குத் தகுந்தபடி புகழ்ந்து பேசலாம். தாராளமாகப் புகழ்ந்து தள்ளுங்கள்... நல்ல பெயரையும் வாங்கிக் கொள்ளுங்கள். பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை, பேசுபவர்களைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் நமக்குள்ள நல்ல பெயரை இழக்க வேண்டி வரும்.

(வழிமுறைகள் வளரும்)

வழிமுறை-2                                                                                                                வழிமுறை-4

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு