........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1 பகுதி-4

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

4. ஒட்டுண்ணிகளா? ஒதுங்கி விடுங்கள்...!

அரசியலாக இருந்தால் தலைவர்களைச் சுற்றியும், அலுவலகமாக இருந்தால் அதிகாரிகளைச் சுற்றியும், ஒவ்வொரு இடத்திலும் முக்கியமானவர் என்று கருதப்படும் ஒவ்வொருவரைச் சுற்றியும் இந்த ஒட்டுண்ணிகள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். இந்த ஒட்டுண்ணிகளுக்கு "அல்லக்கை", "கையாள்", "எடுபிடி", "காக்கா" என்று இடத்திற்குத் தகுந்தபடி எத்தனையோ பெயர்கள் வழக்கத்தில் இருக்கிறது.  இந்த ஒட்டுண்ணிகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு கையும் ஆடாது, காலும் ஓடாது. அந்த அளவிற்கு இந்த ஒட்டுண்ணிகள் தாங்கள் ஒட்டிக் கொண்டிருப்பவரை மற்றவர்கள் நெருங்க விடாமல், ஏதாவது ஒரு வலையை விரித்து அதற்குள் சிக்க வைத்து இருப்பார்கள். இந்த ஒட்டுண்ணிகள் ஆபத்தானவர்கள்தான். இருப்பினும் முக்கியமான பலரும் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள்.

இந்த ஒட்டுண்ணிகள் முதலில் தங்கள் புகழ்ச்சியான பேச்சில் முக்கியமானவர்களை மூழ்க வைத்து விடுகிறார்கள்.  அதன் பின்பு அந்த முக்கியமானவர்களின் பலவீனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்டு, அதன் மூலம் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். பின்பு அனைத்து அதிகாரத்தையும் அவர்கள் தங்கள் வழியே மட்டும் செய்கிற நிலைக்கும் கொண்டு வந்து விடுவார்கள். இந்த ஒட்டுண்ணிகளிடமிருந்து ஒதுங்க முடியாமல் முக்கியப் பிரமுகர்கள் பலரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தவிப்பது இருக்கட்டும். இந்த ஒட்டுண்ணிகளிடமிருந்து நாம் தப்பிப்பது எப்படி? அந்த இடத்தில் நாம் நல்ல பேர் வாங்குவது எப்படி? 

நாம் முக்கியமானவர்களைச் சந்திக்க விரும்பும் போது இந்த ஒட்டுண்ணிகள் அவர் கோபமாக இருக்கிறார், அவருக்கு மூடு சரியில்லை, இப்பொழுது உங்களைப் பார்த்தால் மேலும் டென்சனாகி விடுவார் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நம்மை அவரைப் பார்க்க விடாமல் தடுக்க முயற்சிப்பார்கள். நாமும் பயந்து போய் பின்வாங்கி விடக்கூடாது. அதே சமயம், ஒட்டுண்ணிகளை ஒதுக்கி விடவும் முடியாது. மீறும் நிலையில், ஒட்டுண்ணிகள் அந்த முக்கியமானவரிடம் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நம்மைப் பற்றி தவறான கருத்துக்களை விதைத்து விடுவார்கள். அந்த முக்கியமானவர் நம்மை நன்கு அறிந்தவராக இருந்த போதும், நாம் நல்லவர்தான் என்று தெரிந்திருந்த போதும், நம்மை தவறாக நினைக்க வைத்து விடும் ஆற்றல் இந்த ஒட்டுண்ணிகளுக்கு அதிகமாக இருப்பதால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ஒட்டுண்ணிகளிடம் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் சாதாரணமாகச் சொல்லும் ஒரு சில வார்த்தைகளை பன்மடங்காக்கி முக்கியமானவர்களிடம் ஊதி விட்டு விடுவார்கள். அவரும் நம்மை விரோதியாகப் பார்க்கத் துவங்கி விடுவார். அப்புறம் அவ்வளவுதான் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் எதையாவது சொல்லி எரிந்து விழுந்து கொண்டிருப்பார். நாம் எதையும் எடுத்துச் சொல்ல முடியாமல் எச்சிலை விழுங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

இந்த ஒட்டுண்ணிகள் எந்த வேலைகளையும் செய்யாமல் நம்மை மட்டுமில்லாமல் அந்த முக்கியமானவரையும் ஏமாற்றிக் கொண்டு அலைந்து கொண்டிருப்பார்கள். ஒட்டுண்ணிகளை விட நாம்தான் பெரிய பதவியில் இருக்கிறோமே என்று அவர்களை ஏதாவது ஒரு வேலை சொல்லி விட்டால் போதும் அடுத்து அந்த வேலை மட்டுமில்லாது மேலும் பல வேலைகள் நம் தலையில் வந்து விழும். நாம் மறுக்கும் போது நம் வேலைக்கும் ஆப்பு வைத்து விடுவார்கள்.

இந்த ஒட்டுண்ணிகள் முக்கியமானவருக்கு அடுத்த பதவிகளில் இருப்பவர்களை  தங்கள் சொல்படி எல்லாம் ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். முக்கியமானவர் சொல்லாமலே அவர் சொன்னதாகச் சொல்லிக் காரியத்தை முடித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அதை மறுக்கும் போது முக்கியமானவர்களிடம் வேறு விதமாகச் சொல்லி நம்மைக் குற்றவாளியாக நிற்க வைத்து விடுவார்கள்.

முக்கியமானவர்களிடம் தாங்கள் நெருக்கமாக இருப்பதை வைத்துக் கொண்டு அலுவலகத்தில் தினசரி உபயோகத்தில் இல்லாத, என்றோ ஒருநாள் பயன்படும் விலை மதிப்புடைய பொருட்களை இலகுவாக எடுத்துச் சென்று விடுவார்கள். சில நாட்கள் கழிந்ததும் நல்ல பிள்ளை போல் அந்தப் பொருளைக் காணோம் என்று முக்கியமானவரிடம் போட்டும் கொடுத்து விடுவார். முக்கியமானவரும் அலுவலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் திருடனாக்கித் திட்டித் தீர்த்து விடுவார். ஒரு சில நேரத்தில் சிலரது வேலைகள் பறிக்கப்படலாம்.

இந்த ஒட்டுண்ணிகளால் நல்ல பதவியிலிருப்போருக்கும், நல்லவர்களுக்கும் இது போன்று எதிர்பாராத பல அவப்பெயர்கள் வருவதுண்டு. இவர்களால் முக்கியமானவர்களுக்கு இழப்புகள் அதிகமானாலும் ஒட்டுண்ணிகளை இழக்கவோ அவர்கள் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளவோ முடியாத  நிலையில் அவர்கள் காலம் கடத்த வேண்டியிருக்கும். இந்நிலையில் சூழ்நிலைக்குத் தகுந்தபடி இந்த ஒட்டுண்ணிகளிடமிருந்து முதலில் நாம் ஒதுங்கிக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் எப்படி வேலை செய்கிறோம் என்பதை விட வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த ஒட்டுண்ணிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒட்டுண்ணிகளிடம் மாட்டிக்கொண்டு அவர்களால் அவதிப்பட்ட பின்பு நம்மை மாற்றிக் கொள்வதை விட முன்பே சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இதற்கு இங்கே ஒரு குட்டிக்கதையைச் சொல்லலாம்.

இனிமையாகக் கூவும் குயில் ஒன்று கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்தது.

பகலில் அது கூவாது. இரவில் மட்டும்தான் அது கூவும்.

அந்தக் குயிலின் விந்தையான வழக்கத்தை வவ்வால் ஒன்று பார்த்தது.

"குயிலே! நீ ஏன் பகலில் கூவாமல் இரவில் மட்டும் கூவுகிறாய்?" என்று கேட்டது.

"நான் ஒருநாள் பகலில் இனிமையாகக் கூவிக் கொண்டிருந்தேன். பறவையைப் பிடிக்கும் வேடன் ஒருவன் என் குரலைக் கேட்டு அங்கு வந்து என்னைப் பிடித்து விட்டான். நான் மட்டும் கூவாமல் இருந்திருந்தால் அவனிடம் சிக்கியிருக்க மாட்டேன். இந்தக் கூண்டில் இப்படி சிறைப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அதனால்தான் நான் இப்பொழுது பகலில் கூவுவது இல்லை. இரவில் மட்டும்தான் கூவுகிறேன். " என்றது அந்தக் குயில்.

சிரித்த வவ்வால், "நீ இப்பொழுது பகலில் கூவாவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. வேடனிடம் சிக்கும் முன் நீ இப்படி நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும்." என்றது.

இந்தக் கதையில் வரும் குயிலைப் போல் காலம் கடந்து சிந்திப்பதை விட ஒட்டுண்ணிகளிடம் சிக்கிக் கொள்ளும் முன்பு நாம் சிந்தித்து நடந்தால் நம்மையும் நம் பெயரையும் காப்பாற்றிக் கொள்ளலாம். முக்கியமானவர்களும் ஒட்டுண்ணிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

ஒட்டுண்ணிகளா? ஒதுங்கிப் போய் விடுங்கள். இல்லையென்றால் ஒதுக்கப்பட்டு விடுவீர்கள்.

(வழிமுறைகள் வளரும்)

வழிமுறை-3                                                                                                                 வழிமுறை-5

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு