........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-5 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
5. கோபத்தைத் தூக்கி எறியுங்கள்!
கோபம் வருகிறதா? முதலில் உங்களுக்கு வரும் கோபத்தைத் தூக்கி எறியுங்கள். நியாயமில்லாமல் சிலர் பேசும் போதும் செயல்படும் போதும் நம்மை அறியாமல் கோபப்பட்டு விடுகிறோம். இந்தக் கோபம் கூட இல்லாவிட்டால் நம்மைத் தவறாக நினைத்து விடுவார்களே... இது போன்ற சமயங்களில் கோபப்படாமல் இருக்க முடியுமா? என்று நினைக்கலாம். உங்கள் நினைப்பிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. எப்போதாவது கோபப்படுகிற விஷயம் எல்லோருக்கும் இருப்பதுதான். எப்பொழுதுமே கோபப்படும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படியிருந்தாலும் கோபம் என்பது ஆபத்தான விஷயம்தான். சிலர் சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டுத் தங்களைக் கோபக்காரர்களாக்கி பிறரிடம் முசுடு, சிடுமூஞ்சி என்று பெயர் வாங்கி விடுகிறார்கள். பெரும்பாலும் தான் எதிர்பார்த்தது நடக்காத போதும், தனக்குப் பிடிக்காததை பிறர் செய்யும் போதும் இவர்களுக்குள் கோபம் எட்டிப் பார்த்து விடுகிறது. இப்படிக் கோபத்தால் எரிந்து விழும் இவர்கள் தங்கள் வீட்டிலும், வெளியிடங்களிலும் கோபக்காரர்களாக வலம் வருவதால் மற்றவர்களுடனான உறவுகளில் விரிசல் விழுந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் நல்ல பெயர் மற்றும் நல்ல நிலை என்பது கேள்விக்குறியாகி விடுகிறது. முதலில் கோபம் என்பது கட்டுக்குள் அடங்காமல் பெருத்த சப்தத்துடன் வெளியேறத்தான் விரும்புகிறது. கோபத்தில் கொதித்தெழுபவர்களுக்கு உடல் முழுவதும் உஷ்ணம் மட்டுமல்ல இரத்த அழுத்தமும் சேர்ந்தே ஏறுகிறது. இந்தக் கோபத்தில் அவர்களுக்கு அதுவரை வந்திராத பலமும் கூட வருகிறது. அப்போது அவர்கள் முகம் கூட அஷ்ட கோணலாக மாறிப் போய் விடுகிறது. மொத்தத்தில் கோபப்படும் மனிதன் மனிதனாக இருப்பதில்லை. கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்று ஒரு சில பெரியவர்கள் சொல்கிறார்கள். கோபமடைந்தவரின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாகச் சில பெரியவர்கள் இப்படிச் சொல்லி சமாளிக்கலாமே தவிர, உண்மையில் கோபமடைபவர்களின் குணம் நல்லதாக இருப்பதில்லை. தான் விரும்பியபடியே எல்லாம் நடக்க வேண்டும், தனக்கு மட்டும்தான் அனைத்தும் தெரியும், தனக்குக் கீழுள்ளவர்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பது போன்ற தன் சுயநலத்தை வெளியில் தெரியாமல் மனதிற்குள் அழுத்தி வைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டமாக நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுடைய ஒரு சிலர்தான் அதிகமாகக் கோபமடைபவர்களாக இருக்கிறார்கள். கோபக்காரர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தன்னை விட தாழ்வானவர்களிடம்தான் தங்கள் கோபத்தை அதிகமாகக் காட்டுகிறார்கள். இவர்கள் தன்னை விட உயர்வான நிலையில் இருப்பவர்களிடம் தங்கள் கோபத்தைக் காட்டிக் கொள்வதில்லை. இந்த வேறுபாடு ஏன்?. தனக்குக் கீழானவர்களிடம் அடக்க முடியாமல் வரும் இந்தக் கோபம் உயர்ந்தவர்களிடம் மட்டும் வெளிப்படுத்த முடியாமல் அடங்கிப் போவது ஏன்? சுற்றிலுமுள்ள சூழ்நிலைகள்தான் கோபத்தை மாற்றியமைக்கின்றன. கோபம் வராமல் தடுத்துக் கொள்ளத் தகுந்த சூழ்நிலையை நாம் ஏன் உருவாக்கிக் கொள்ளக் கூடாது? நமக்கு இருக்கும் முசுடு, சிடுமூஞ்சி என்கிற பெயர்களை மாற்றி நல்ல பெயரை வாங்கி நாமும் நம்மை ஏன் உயர்த்திக் கொள்ளக் கூடாது? என்கிற நல்ல சிந்தனை நமக்கு வந்து விட்டாலே போதும். இந்த கோபம் நம்மை விட்டு ஓடியேப் போய்விடும். கோபத்தைக் கட்டுப்படுத்த நாம் கீழ்காணும் சில பயனுள்ள முறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
இது பொதுவான சில குறிப்புகள்தான்... மற்றவைகளை ஒவ்வொருவரும் அவர்களுடைய அனுபவத்தில்தான் உணர வேண்டியிருக்கும். ஒரு அரசனின் தாய் எப்பொழுதும் எரிந்து விழுவாள். கோபமாகப் பேசுவாள். அவளிடம் பேசவே அரண்மனைப் பணியாளர்கள் பயந்தனர். தன் கொடிய சொற்களால் அடுத்தவர் மனம் புண்படுமே என்று ஒரு நாள் கூட நினைத்ததில்லை. அரசனும் தன் தாயை எப்படித் திருத்துவது? மகன் தன்னைக் குறை சொல்கிறானே என்று அவர் வருந்தக் கூடாது. ஆனால் அவரிடம் மென்மையாக எப்படிச் சொல்வது என்று சிந்தித்தான். ஒரு முறை அவன் தன் தாயுடன் பலர் சூழ்ந்து வர அருகிலுள்ள மற்றொரு நகரத்திற்குப் புறப்பட்டான். போகிற வழியில் கழுதை ஒன்று பயங்கர சத்தத்துடன் அவர்களுக்கு குறுக்கே ஓடியது. அதன் குரலைக் கேட்ட பலரும் "இந்தக் கழுதை இப்படிக் கத்தி எரிச்சல் ஏற்படுத்துகிறதே..." என்று குறை சொல்லியபடி சென்றார்கள். சிறிது தொலைவு சென்ற அவர்களுக்கு ஒரு மரத்திலிருந்த குயிலின் இனிமையான குரல் காதில் வந்து விழுந்தது. அவர்கள் குயிலின் குரலைக் கேட்டதும், "ஆஹா, என்ன அருமையான குரல், சங்கீதம் போல் இருக்கிறது. இந்த சங்கீதத்தை சிறிது நேரம் இங்கே அமர்ந்து கேட்டுச் செல்லலாம் போலிருக்கிறதே..." என்றனர். உடனே அரசன் தன் தாயிடம், "அன்னையே, இந்தக் கழுதையின் குரல் நம் எல்லோருக்கும் எரிச்சல் ஏற்படுத்தியது. ஆனால் இந்தக் குயிலின் குரல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தந்ததுடன் இருந்து கேட்டு விட்டுச் செல்வோமே என்று ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்தியது." என்று சொன்னான். அவளும், "மகனே, நீ சொல்வது உண்மைதான். நாம் கோபப்பட்டுக் கத்தினால் நம்மை எல்லோரும் வெறுத்து விடுவார்கள். பிறருக்கு வெறுப்பு ஏற்படும்படி இனி பேசக் கூடாது என்பதை இங்கே நானும் உணர்ந்து கொண்டு விட்டேன்." என்றாள். இன்று முதல் நீங்களும் உங்கள் கோபத்தை விட்டுவிடுங்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொட்டு விடுங்கள். (வழிமுறைகள் வளரும்)
|
முகப்பு |