........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-48

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

48. சுயநலத்துடன் செயல்படுவது சரியா?

இந்த உலகில் வாழும் மனிதர்களில் பலர் சுயநலத்துடன் நடந்து கொள்கின்றனர். தன்னுடைய செயலால் பிறருக்கு எந்த வழியிலும் பயன் போய் விடக் கூடாது என்று எண்ணுவதுடன் அதற்கான தவறான வழிகளையும் கையாளுகின்றனர். சுயநலவாதிகளின் இந்தத் தவறான செயல்பாடு பிறருக்குப் பயன் கிடைக்கக் கூடாது என்கிற ஒரே எண்ணத்தில் இருப்பதால் தனக்கு வரும் துன்பங்களையோ, கெட்ட பெயரையோப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால் சுயநலமுடையவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் சுயநலத்துடன் பிறர் உழைப்பையும், பிறர் பொருளையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தவறான நோக்கத்திலும் செயல்படத் தொடங்குகின்றனர். இவர்களுக்குப் பொதுவாக நல்ல பெயர் என்பதே கிடைப்பதில்லை.

பிறர் பொருளை அபகரித்துக் கிட்டும் இன்பம் நிலையற்ற சிற்றின்பமே. நல்ல பெயருடன் நல்ல நிலையில் நாம் வாழ  வேண்டும் எனும் உயர்ந்த எண்ணம் கொண்ட நல்லறத்தோர் இது போன்ற தரமற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள். ஆனால், சுயநல நோக்கமுடையவர்கள் பிறர் உழைப்பிலும் பொருளிலும் தான் பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் தவறுகளையே தொடர்ந்து செய்து தவறானவர்களாகவே ஆகிவிடுகின்றனர்.

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள். அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள்.

ஆனால் அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள். அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக் குழாய்க்கு பொறுத்தி விட்டாள்.

இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது. இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம். இது போன்ற செயல்களால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கப் போவதில்லை. புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-47                                                                                                                            வழிமுறை-49 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு