........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
 

      a

தொடர் கட்டுரை-1. பகுதி-47

  நல்ல பெயர் வாங்கலாம்.

-தேனி.எம்.சுப்பிரமணி.

 

47. நன்னடத்தைகளே நல்ல வழிமுறை

இந்த உலகில் மனிதனின் எண்ணங்கள் பலவாறாக இருக்கின்றன. ஒருவருக்கு நல்லதாகத் தெரியும் சில செயல்கள் மற்றவர்களுக்கு கெட்டதாகத் தோன்றுகிறது. சிலருக்கு அது தேவையில்லை என்பதாக இருக்கிறது. சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பற்றுதல் கொண்டுள்ளவற்றைச் சார்ந்திருக்கும் செயல்கள் மட்டுமே பிடிக்கிறது. மற்ற செயல்கள் அவன் விரும்பத்தகாததாக இருக்கிறது. இந்நிலையில் அனைவரிடமும் நாம் நல்ல பெயரை எதிர்பார்த்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.

இருப்பினும் நாம் செய்யும் செயலினால் பிறருக்குப் பாதிப்பு ஏதுமில்லாமல் இருப்பதும், அந்தச் செயல் சிலருக்காவது பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நம் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துவிட வேண்டும். இந்த எண்ணம் நம்மை நல்வழியில் நடத்திச் செல்லும். நம் நன்னடத்தையே நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.

தனது குரு, எப்போதும் கடவுள் திருப்பெயரை மட்டுமே சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன். வேறு மந்திரம் ஏதும் அவர் சொல்வதேயில்லை. தன் சந்தேகத்தைக் குருவிடமே கேட்டான்.

பதில் சொல்லாத குரு, அவனிடம் ஒரு கல்லைத் தந்து அதன் மதிப்பைக் கேட்டு வரச் சொன்னார்.

சீடன் எடுத்து வந்த கல்லுக்கு கால்வீசை கத்தரிக்காய் தருவதாகச் சொன்னான் ஒரு வியாபாரி.

பளபளப்பாக இருப்பதால், நூரு ரூபாய் தருவதாகச் சொன்னான் பணக்காரன் ஒருவன்.

பட்டை தீட்டப்படாத வைரம் என்று ஆயிரம் ரூபாய் அளிப்பதாகக் கூறினான் நகை வியாபாரி.

ரத்தினங்கல் விற்கும் ஒருவன் அதைப் பார்த்து விட்டு "மிகமிக அபூர்வமான வைரம் இது... பத்தாயிரம் ரூபாய் தருகிறேன்!" என்றான்.

நடந்ததைக் குருவிடம் சொன்னான் சீடன்.

இப்போது குரு சொன்னார்...." இப்படித்தான் இறைநாமத்தின் மதிப்பும்... அதனை உணர்ந்தோரால் மட்டுமே அறிய முடியும்..."

இறை நாமம் மட்டுமில்லை. ஒருவருடைய உண்மையான தகுதி என்ன என்பதையும் அந்தத் தகுதியுடையவரால் மட்டுமே அறிய முடியும். நம்முடைய நன்னடத்தைகள் நமக்கு வைரத்தைப் போல் நாம் சந்திப்பவர்களிடத்தில் அவர்களுடைய தகுதிக்குத் தகுந்தபடி நமக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.

(வழிமுறைகள் வளரும்.)

வழிமுறை-46                                                                                                                            வழிமுறை-48 

                                                                                                                                                                                                  

 
                                                                                                                                                                                                                 முகப்பு